Sunday, December 14, 2008

'என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்'

குறும்படங்கள் ஒரு தனி ஜாதி.
யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்று ஆன பிறகு, எக்கச்சக்கமான படங்கள் பார்க்க கிடைக்கிறது. அரை வேக்காடு , முழு வேக்காடு என்று தரம் பிரித்து பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
இப்போது பார்த்த படம் 'என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்'. பிரதீபன் இயக்கியது.
தொழில்நுட்ப கலைஞர்கள் பெயர் பட்டியல் படத்தை பார்க்க தூண்டுகிறது.
வெறும் பதினொன்று நிமிடங்கள் ஓடும் இந்த படம் நேரிடையாக கதை சொன்னாலும் ஒரு abstract தோற்றத்தை கொண்டிருப்பது இதன் சிறப்பு.

இரண்டு பெண்குழந்தைகளும் ஒரு சிறுவனும் பள்ளிக்கு சென்று திரும்புகிறார்கள். நாளை பள்ளிக்கு விடுமுறை என்று இராணுவம் அறிவித்திருக்கிறது என்று அவர்கள் பேசிக்கொள்ளும்போதே, கதை நடப்பது இலங்கையில் என்று புரிந்துகொள்கிறோம். இவர்கள் கைகளில் மாங்கன்றுகள்.சிறந்த முறையில் வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் இருக்கலாம். பாதை இரண்டாகப்பிரிகிறது. ஒருத்தி ஒரு பாதையிலும் மற்றவர்கள் மறு பாதையிலும் பிரிகிறார்கள்.

சாலை ஓரத்தில் ஜீப்பை நிறுத்தி சிறுநீர் கழிக்கிறான் ஒருவன். செல்லும்போது கூட்டாளியிடம் தான் ஒரு வயதான பெண்ணிடம் இன்பம் துயித்தது பற்றியும், அவள் கணவன் விளக்கு பிடித்தது பற்றியும் பெருமையாக சொல்லுகிறான். உரையாடல் சிங்கள மொழிக்கு மாறுகிறது.

சாலையில் தனித்து செல்லும் சிறுமி அருகில் அந்த ராணுவ ஜீப் நிறுத்தப்படுகிறது.
மாலை வெயிலின் ஒளிச்சூட்டில் ஜீப்பின் நிழலில் நிற்கிறாள் அவள்.

மறுபாதையில் சென்ற சிறுமியையும் தம்பியையும் வழிமறிக்கிறது ஒரு குரல்.
'தங்கச்சி, எங்களுடன் வருகிறேன் என்றாயே, இப்போது வா,
தம்பி, நீ வீட்டுக்கு போ', என்று ஆணையிடுகிறது.

இரவு.

சாலையோரத்தில் குழி தோண்டி ராணுவ ஜீப்பிலிருந்து இறக்கப்பட்ட சிறுமியின் பிணமூட்டையை புதைக்கிறான் சிங்களவன்.

பகல்

மணல் மூட்டைகள் மேல் நிறுத்தப்பட்ட எந்திரத்துப்பாக்கி . பக்கத்தில் இந்த பெண். தனிமையில் தரையில் ஒரு வீட்டை குச்சி கொண்டு வரைந்துகொண்டிருக்கிறாள்.

வெடிச்சத்தம்.

அண்மை காட்சியில் மாங்கன்று பை கிழிந்து குச்சியும் மண்ணும் தரையில் உதிர்ந்து கிடக்கின்றன-வெவ்வேறு இடங்களில்.

சிறுவன் தனியாக நடந்து வருகிறான். பாதைகள் அங்குதான் பிரிகின்றன.

இந்த குட்டி படம் சொல்லும் செய்தி தெளிவானது. சொல்லிய விதம் அருமை. படபடக்கும் புல்வெளிகள், பனைமரங்கள் அடர்ந்த நிலவெளி மற்றும் பின்னணியில் சேர்க்கப்பட்ட ஒலிக்கலவைகள் மட்டுமே ஒரு பயங்கரத்தின் மவுன சாட்சிகளாக நமக்கு தென்படுகின்றன. அற்புதமான ஒளிப்பதிவு . ஏற்கனவே இலங்கை பின்னணியில் 'மண்' படத்தை ஒளிப்பதிவு செய்த சி.ஜெ.ராஜ்குமார், தமிழகத்தின் சிறந்த கலை இயக்குனர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி, புகழ் பெற்ற எடிட்டர் சுரேஷ் அர்ஸின் மகன் ராகவா எஸ். அர்ஸ் போன்றோரின் கைவண்ணம் மிகவும் உயர்தரமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மிகக்குறைந்த நேரமே ஓடக்கூடிய ஒரு படத்தை எப்படி சிறந்த முறையில் அளிக்கமுடியும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பவர்கள் அவசியம் காணவேண்டிய படம் இது.

8 comments:

Unknown said...

A number of people write about good short documentaries/movies. Where to get CDs of such movies?

deesuresh said...

இன்று தான் சார் உங்க பிளாக் பார்க்கக் கிடைத்தது. நீங்கள் அனுப்பிய மெயில் மூலம், ஜெயமோகன் பக்கங்களில் இருந்து உங்கள் பிளாக்கிற்கு விஜயம் செய்தேன்.

அருமையான வர்ணனை. அந்த ஷார்ட் பிலிம் சிடி, அல்லது யூ ட்யூப் இணைப்பு கிடைக்குமா சார்..???

ஜீவா ஓவியக்கூடம் said...

இந்த சிடி விரைவில் விலைக்கு வரும் என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறினர்.

சேகர் said...

ஹாய் ஜீவா அண்ணா உங்க எழுத்து நடை நல்லா இருக்குதுங்க.......

இந்த குறும்படத்தை பத்தி எழுதி இருக்கிறத படிக்கும்போது படம்பார்த்த அனுபவம் மட்டும் இல்லை அந்த படத்தின் காட்சிகள் கண்முன்னால நிக்கிதுங்க..........

ஆடுமாடு said...

வணக்கம்.

நண்பர் ராஜ்குமாரின் அறையில் இந்த குறும்படத்தைப் பார்த்தேன். பெரும் கட்டுரைகளும், கவிதைகளும் சொல்லிவிடமுடியாத வலியையும் போர்ச்சூழலையும் கண்முன் நிறுத்தியிருந்தது படம். இன்னும் கணத்துக்கொண்டிருக்கிறது மனது.
நல்ல விரிவாக்கம். நன்றி

Suresh said...

Mr. Jeeva,

Migavum arumaiyana pathivu, ungaloda vimarsanam ennai antha padathai parka thundiyathu thaivu seithu antha padam eduthavargal minanjal irunthal tharungal antha puniya manithargal oda pesalam

manjoorraja said...

இன்று தான் உங்கள் வலைப்பதிவை பார்க்கிறேன்.
நன்றி ஜெயமோகன்.

ஒரு சில பதிவுகளையும் படித்தேன். நல்ல எழுத்து.

உங்கள் எழுத்துக்களின் மூலம் உங்களிடம் நல்ல திறமை ஒளிந்திருக்கிறது என தெரிகிறது. விரைவில் அது வெளிவரும் என எதிர்ப்பார்க்கிறேன்.

வாழ்த்துகள்.

Unknown said...

ஜெமோ பக்கங்களில் இருந்து இன்றுதான் உங்கள் ப்ளாகிற்கு வந்தேன். முதலில் வாசிக்கக் கிடைத்தது குறும்படத்தைப் பற்றி. தேர்ந்த எழுத்து நடை -அப்படத்தை கண்முன் காட்சிப்படித்திவிட்டீர்கள் எங்கு கிடைக்கும் என்று சொல்வீர்களானால் வாங்கிப் பார்க்கிறேன். நல்ல பதிவு. இனி உங்கள் வலைத்தளத்திற்கு அடிக்கடி வருவேன்..வாழ்த்துக்கள் தோழர். நன்றி