தூசி தட்டி ஒரு சம்பவத்தை எடுத்துவிட்டேன். கொட்டாவிகள் தவிர்க்கவும்.
எண்பதுகளில் மாலன் ஆசிரியராக இருந்த 'திசைகள்' இளைஞர் இதழில் நிருபர்களாக பணியாற்றிக்கொண்டிருந்தோம். நான் தீவிரமாக பங்காற்றிக்கொன்டிருந்த ஓவியர் அமைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி தர சென்னையிலிருந்து பிரபல ஓவியர் ஆதிமூலத்தை அழைத்திருந்தோம். அவரை திசைகளுக்காக நவீன ஓவியம் குறித்த ஒரு பேட்டி எடுக்க சொன்னார் மாலன். அப்போதுதான், திரு ஆதிமூலத்தின் நவீன ஓவிய கோட்பாடுகளை கடுமையாக தாக்கி நான் எழுதிய ஒரு கடிதம் கணையாழியில் வெளியாகியிருந்தது. அரைவேக்காட்டுத்தனமாக எழுதியிருந்தேன். (இப்போதும் அப்படித்தானே)
நாங்கள் நான்கு பேர். இரண்டு பி எஸ் ஜி பொறியியல் மாணவர்கள் , ஒரு சட்டக்கல்லூரி மானவன், ஒரு ஆங்கில எம் ஏ மாணவி. ஆதி, என் பெயரை கேட்டவுடனேயெ சரியாக யூகித்து விட்டார்.. கணையாழி விவகாரம் குறித்து கேட்டார்.. நான் பாதி செத்து போய்விட்டேன். பேட்டி ஒரு வழியாக முடிந்தது. போட்டோ எடுக்க காமெரா இல்லை. எங்கும் இரவலும் கிடைக்கவில்லை. ஆதியே ஒரு யோசனை சொன்னார் - 'தம்பி, நான் போஸ் கொடுக்கிரேன், நீ என்னை கோட்டோவியமாக வரைந்துவிடு, புதுமையாக இருக்கும்'!
ஏற்கனவே அசடு வழிந்துகொண்டிருந்த நான் இன்னும் குறுகிப்போய்விட்டேன். அந்த மகா கலைஞன் போஸ் கொடுக்க, இந்த பொடியன் அவரை வரைய..என் வாழ்வின் உன்னத நிமிடங்கள்! அந்த படம்தான் பேட்டியுடன் பிரசுரமானது.என்னுடைய சக நிருபர்கள் ஸிகாகோவில் வாழும் சந்திரகுமார், இன்றைய பாண்டிச்சேரி டெலிகாம் ஜி.எம் மார்ஷல் ஆண்டனி லியோ, எழுத்தாளரும் பேச்சாளருமான பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகியோர்.
அன்று முதல் ஆதி எனக்கு ஓவிய காட்பாதராக திகழ்கிறார்.வள்ளுவர் கோட்டத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டிருக்கும் குரளோவியங்களில் முதலாம் அதிகாரத்திற்க்கு அவர் ஓவியம் தீட்டியிருக்க, ஆறாம் அதிகாரத்திற்க்கு நான் ஒவியம் வரைந்திருக்கிறேன். பெருமையுடன் பூரிக்கிறேன்.
July 2007
3 comments:
ஜீவா சார், வணக்கம். இணையப் பெருவெளியில் நீந்திக்கொண்டிருந்தபோது தற்செயலாக கண்டுபிடித்தேன் உங்களது வலைப்பூவை.ஆதிமூலம் அவர்கள் மறைந்த ஓரிரு வாரத்திற்குள் மணா எழுதிய 'ஆதிமூலம் அழியாக்கோடுகள்' என்ற நூலை அவரது இரங்கல் கூட்டத்தில் வெளியீட்ட்டார்கள். அப்போது சென்னையில் இருந்தேன். வாகன வசதி இல்லாமல் ஐந்து கிலோமீட்டர் நடந்து சென்று அக்கூட்டத்தில் கலந்துகொண்டேன். கமலஹாசன், ஜெயகாந்தன், சிவக்குமார், நாசர், மாலன், சமகால ஓவிய ஆளுமைகள் என எண்ணற்றோர் குழுமி இருந்த சபையில் ஜெயகாந்தன் சொன்னார் "ஆதிமூலம் ஒரு கோடு கிழித்தால் அது ஓவியம் ஆகிவிடும்"
ஓவியம் குறித்து எந்த அடிப்படையும் தெரியாது என்றபோதும் ஒவியர்கள் மீதும் ஓவியங்கள் மீதும் ஏதோ ஓர் ஈர்ப்பு இருந்துகொண்டே இருக்கிறது.
அப்புறம் வள்ளுவர் கோட்ட ஓவியங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். சமீபத்தில் வள்ளுவர் கோட்டம் சென்றிருந்தபோது ஓப்பற்ற ஓவியர்கள் வரைந்த அற்புதச் சித்திரங்களெல்லாம் பராமரிப்பு ஏதுமின்றி மழையில் நனைந்து சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது. மனம் பொறுக்காமல் தமிழக முதல்வருக்கு ஒரு மனுவாக எழுதிப் போட்டேன். குடும்ப பிரச்சனைகளில் ஆழ்ந்திருக்கிறார். இதற்கெல்லாம் நேரம் இருக்குமா என்ன?!
மேற்படி ஓவியங்களில் பல பேர் உங்கள் நண்பர்களாகத்தான் இருப்பார்கள். நீங்கள் ஒன்றுகூடி ஒரு கோரிக்கையை தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லலாமே?!
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
நானும் கேள்விப்பட்டேன் செல்வேந்திரன். ஒவ்வொரு ஓவியங்களும் தமிழகத்தின் சிறந்த ஓவியர்களால் மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கப்பட்டவை. அவற்றின் நிலை கண்டு வருந்துகிறேன். அவற்றை நிறுவிய கலைஞரின் ஆட்சியிலேயே இந்த கதி என்றால் வரப்போகும் ஆட்சியில் என்னாவது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்து தீர்வு ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு ஓவியர்களின் கையில் இருக்கிறது. ஆனால் கொடுமை என்னவென்றால் பொறுப்புள்ள ஓவியர்களில் சீனியர்கள் யாரும் உயிருடன் இல்லை. சென்னை, கும்பகோணம் ஓவியக்கல்லூரிகளின் நிலையோ சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஒரே ஊழலும் சிரத்தையற்ற கல்வியும் என்று கேள்விப்பட்டேன்.
ஓவியர்களின் ஒற்றுமையை சென்னையிலிருந்துதான் பாதுகாக்கமுடியும். அதுவே வீக் .
என்னால் முடிந்த அளவு அவர்களை தொடர்பு கொண்டு ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கவேண்டும்.
Interestingly narrated - your writing is as engrossing as your paintings
Post a Comment