Friday, December 5, 2008

வேட்டையன்


நான் ஒரு காட்டுமிராண்டி. வனங்களை நேசிப்பவன். சிறு வயதில் ஜிம் கார்பெட்டும் கென்னெத் ஆண்டர்சனும்தான் என் ஆதர்ச எழுத்தாளர்கள். அடிப்படையில் நான் ஒரு கோழை. நாயையும் பூனையையும் பார்த்தாலே பயம். பைக் வாங்கி கொஞ்ச காலம் மட்டும் ஓட்டிவிட்டு பிறகு நமக்கு பஸ்ஸும் பின் சீட்டும்தான் சரி என்று வாழ்பவன். ஆனால் அடர்ந்த காடுகளில் சுற்றுவது எனக்கு பிரியமான ஒன்று. பல வனவிலங்குகளை அருகாமையில் பார்திருக்கிறேன். இந்த தீபாவளியன்று, பந்திப்பூர் காட்டில் ஒரு யானையை புகைப்படம் எடுக்க முயல, அது என்னை துரத்த , கிட்டத்தட்ட 200 அடி தூரம் ஓடி உயிர் தப்பினேன்.

நான் சொல்லப்போகும் விஷயங்கள் ஏற்கனவே வேறொரு இழையில் எழுதியிருக்கிறேன். ஆனாலும் இந்த சந்தர்ப்பத்தை விட தயாராயில்லை. திருட்டு வேட்டைக்கு அடிக்கடி போகும் ஒரு வக்கீல் கவுண்டர் என் நண்பர். முதுமலைக்காடுகளிலும் சுற்றுப்புறஙளிலும் சுற்றோ சுற்றென்று சுற்றி, மூன்று வேளையும் காட்டுப்பன்றி இறைச்சி தின்று கழித்த நாட்கள். குழுவின் அதிகாரபூர்வமான போட்டோகிராபர் நான். மூணார் போகும் வழியில் சின்னாறு பகுதியில் வரையாடு அடிக்கலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர். நாங்கள் துரைமார்கள் 5 பேர். சாமான் செட்டு எல்லாம் சுமந்துவர அடிமைகள் 5 பேர். வழிகாட்டிகளாக இருளர்கள் 2 பேர். ஆப்ரிகன் சபாரி கெட்டது போங்கள்.

மூன்று பகலும் இரவும் அலைந்தோம் திரிந்தோம். வரையாடும் பார்க்கவில்லை , வரிக்குதிரையும் பார்க்கவில்லை. அடிமைகள் சமைத்து தரும் ரசம் சோற்றை தின்பதற்க்காகவா காடு ஏகினோம்? ஒரு இரவில் காட்டெருமைகள் சூழ்ந்துகொண்டு பயமுறுத்தின. ஒன்றை அடித்தாலும் மிச்சத்தை எங்கே புதைப்பது, நாஙள் வனக்காவலர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று தடுத்துவிட்டனர் இருளர்கள்.

கவுண்டர் சிந்தித்தார், முடிவெடுத்தார், இறைச்சி திங்காமல் வெளியெ போவது நம் குலப்பெருமைக்கே அவமானம்... துப்பாக்கியை இருளனிடம் கொடுத்தார். 'எதையாவது அடிச்சு கொண்டாடா, இல்லை தோலை உறிச்சுடுவேன்' என்று உத்தரவு பறந்தது. ரசத்தை கரைத்து குடித்துவிட்டு மரத்துக்கு அடியில் இளைப்பாரினோம் நாங்கள். ரொம்ப நேரம் கழித்து ஒரு வேட்டு சத்தம். ஆஹாவென்றெழுந்தோம். ரெடி பண்றா மசாலாவை என்று உறுமினார் லவ்டேலில் படித்த எங்கள் இங்கிலீஷ் கவுண்டர். எல்லோரும் ஆவலுடன் பார்த்திருக்க, வேட்டையுடன் வந்து சேர்ந்தனர் அவர்கள். சுடப்பட்டு கிடந்தது ஒரு மந்தி. 'எண்றா கிரகம் இது, சரி, சரி, தோல உறி' என்று ஆணை பிறந்தது.

அது ஒரு பெண் குரங்கு. முலையெல்லாம் ஒரு பெண்ணைப்போல் இருந்தது. நர மாமிசம் உண்பவர்களைப்போல் உணர்ந்தோம். அங்கு நீண்ட மவுனம் நிலவியது. ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டோம். கவுண்டரே மவுனத்தை கலைத்தார் - 'நீங்களே எடுத்துட்டு போங்கடா , எங்களுக்கு வேண்டாம் '!

காட்டை விட்டு வெளியேறினோம். பிறகு இறைச்சிக்கு நாஙள் என்ன செய்தோம் என்று சொன்னால் வெட்கக்கேடு.

July 07


2 comments:

பாலா.R said...

haha !ஜிம் கார்பெட்டைப்போல் புலியை நேருக்குநேர் சந்தித்திருப்பீர்கள் என நினைத்தேன் , கடைசியில் மந்தியை அதுவும் பெண்மந்தியை..ஒன்றும் சொல்வதற்கில்லை..நானும் வேட்டைக்குப் போயிருக்கிறேன். மஞ்சணத்தி மரத்தில் அடையும் முத்துக் குயிலை சுட வரும் கும்பலோடு சுற்றியிருக்கிறேன்.

Mohanraj KARUPPANAN ACHARI said...

அந்த ''வெட்கக்கேடு'' என்னால் யூகிக்க
முடிகிறது. அனைவரும் அசைவ
உணவகம் சென்று ஒரு பிடி பிடித்து
இருப்பீர்கள்

சரியா சார் என் யுகம்.....?