Sunday, March 20, 2011

நினைவிருக்கிறதா, அவசர நிலையை?

முப்பது வருடங்களுக்கு மேலாயிற்று...அந்த கொடிய காலங்களின் ஆட்டங்கள் நிகழ்ந்து!!!
அப்போது நான் மாணவன் . திடீரென்று அந்த செய்தி வந்தது. 'அவசர நிலை பிரகடனம்'....! அப்படி என்றால் என்னவென்பதே பலருக்கு தெரியாது. இதற்கு முன் ஒரு போரின்போது இது அறிவிக்கப்பட்டதாக சிலர் சொன்னார்கள். தேர்தல் முறைகேடுகளால், இந்திராகாந்தி பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை , நாட்டுக்கே ஆபத்து என்று திரித்து, அவசர நிலை பிரகடனம் செய்தார் அம்மையார்! அப்போதைய ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியான பக்ருதீன் அலி அகமது இந்த சட்டத்தையும், பின்னால் வந்த பல அவசர சட்டங்களுக்கும் மறுப்பேதும் சொல்லாமல் கையெழுத்து போட்டு தள்ளிக்கொண்டிருந்தார்! என்ன ஏது என்று புரிவதற்குள் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டனர். ஆயிரக் கணக்கான தொண்டர்களும் சிறையில்.. பலர் தலைமறைவானார்கள்! அப்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி. காங்கிரசுக்கு எதிரான நிலை. தலைவர்கள் பலர் தமிழகத்தில் தலைமறைவாக தஞ்சம் புகுந்தனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் கோவை பேரூரில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்தார் என்றெல்லாம் நண்பர்கள் சொன்னார்கள்! போராட்டங்கள் தடை செய்யப்பட்டன. வீராதி வீர சூராதி சூர தொழிற்சங்க தலைவர்கள் எல்லோரும் கப்சிப். நேரத்துக்கு ரயில்கள் ஓடின...காலை பத்து மணிக்கெல்லாம் அவரவர் சீட்டில் அரசு ஊழியர்கள் பவ்யமாக அமர்ந்தனர்! யாரை வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உதைக்கலாம், கைது செய்யலாம், சித்ரவதை செய்யலாம், கொலை கூட செய்யலாம் என்ற நிலை உருவானது. அடக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்பட்டன. எதிர்த்து குரல் கொடுத்த பெரும் தலைவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபளானி, மொரார்ஜி, சரண்சிங் போன்ற தலைவர்கள் எந்த காரணமும் இன்றி கைது செய்யப்பட்டனர். பல அமைப்புக்கள் தடை செய்யப்பட்டன. ஆர்.எஸ் .எஸ். இவற்றில் ஒன்று. சில கட்சிகள் எதிர்த்து குரல் கொடுத்தன..மார்க்சிஸ்ட் கட்சியும் திமுகவினரும் இதில் அடங்குவர். இவர்களின் தலைவர்களும் தொழிற்சங்க வாதிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்களை முடக்கிய சட்டமான 'மிசா'வையே பலர் பின்னாளில் பட்டமாக அணிந்து கொண்டனர்.

இந்த கொடிய அடக்குமுறைக்கு ஒரு பட்டுக்குஞ்சலம் கட்டினர் இந்திரா காந்தியும் அவருடைய ஆலோசகர்களும்...இருபதம்ச திட்டம் என்ற பெயரில்! நாட்டு நலனுக்கு என்று இருபது திட்டங்களை அறிவித்து இருபத்தி நாலு மணிநேரமும் இதன் பஜனை பாடினார்கள். ‘Be Indian, Buy Indian’ என்பது இதில் ஒன்று. இதன்படி அந்நிய பொருட்களுக்கு தடை என்ற வதந்தி கிளம்பியது. அப்போது கடத்தல் என்பது பெரும் தொழில் அல்லவா! அந்நிய வாட்சுகள், அந்நிய டேப் ரிக்கார்டர்கள் என்று இந்தியாவுக்கு கடத்தப்பட்ட பொருட்கள்தான் பரவலாக நம் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த செய்தி கேட்டதும் அனைவரும் இவற்றை வீட்டுக்குள் மறைத்து வைத்த காமெடிகளும் நடந்தன. திடீரென்று ஒரு வதந்தி கிளம்பும்...'மேம்பாலத்துல கஸ்டம்ஸ் செக்கிங் பண்ணி பாரீன் வாட்சுகளை பிடிக்கிறாங்களாம்' என்று...அவ்வளவுதான்...அனைவரும் தத்தமது சீக்கோ, ரீக்கோ வாட்சுகளை உள்ளாடைக்குள் மறைத்து வைக்காத குறையாய் ஒளித்து வைத்து நடமாடுவார்கள்!

கோமாளி இளவரசனைப் போல் சஞ்சய் காந்தியின் கொடூரங்கள் பிரபலமாயின. குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை பலவந்தமாக குடிசைவாசிகள் மீது பிரயோகப்படுத்தினார். தில்லியை அழகுபடுத்துகிறேன் பேர்வழி என்று துர்க்மான் கேட் குடிசைகள் மீது புல்டோசர்களை ஏவினார். அவசர நிலையை கேலி செய்து எடுக்கப்பட்ட 'கிச்சா குர்சி கா' படத்தின் நெகடிவ்களை கைப்பற்றி கொளுத்தினார். காங்கிரஸ்காரர்களின் அட்டகாசம் அதிகரித்தது...தங்களுக்கு வேண்டாதவர்களை உள்ளே தூக்கி போட அவசர நிலை அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக ஆயிற்று! கல்லூரி விடுதிகளுக்குள்ளும் காவல் துறை நுழைந்தது. புரட்சிகர சிந்தனை மிக்க மாணவர்கள் இழுத்து செல்லப்பட்டனர்.கேரளத்தில் ராஜன் என்ற மாணவன் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று வரை அவன் உடலுக்கு என்ன ஆயிற்று என்ற தகவல் இல்லை. எதிர்ப்பு குரல் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் காவல் நிலையங்களில் தொங்க விடப்பட்டு உதைக்கப்பட்டனர்..உருளைக்கட்டை சிகிச்சைகள் செய்யப்பட்டு நடக்க முடியாதவர்கள் ஆனவர் பலர். இயல்பாகவே ஆதரவுக்குரல் கொடுப்பவர்களும் உருவாயினர். 'இந்திராதான் இந்தியா' என்ற டி.கே.பருவாவின் புகழ் பெற்ற ஜால்ரா வார்த்தையை சிரமேற்க்கொண்டு தமிழகத்தில் இலக்கியங்கள் உருவாகின. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட இந்திராவின் மக்கள் தொடர்பாளராகவே மாறி, இந்தோ சோவியத் கழகம் சார்பில் பல கருத்தரங்கங்கள் நடத்தியது. இன்றும் நினைவிருக்கிறது...முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு இருபதம்ச திட்டத்தின் புகழ் பாடும்போது சொன்ன வரி...காஷ்மீர் ஆப்பிளை இங்கே இருப்பவனும் வாங்கி திங்க பயன்படுகிறது இந்த திட்டம் என்று. ஒரு இழவும் புரியவில்லை அப்போதும் இப்போதும்! வினோபா பாவே, அன்னை தெரசா, குஷ்வந்த் சிங் போன்றவர்கள் பகிரங்கமாக அவசர நிலையை ஆதரித்தனர் என்று சொல்வார்கள். எம்.எப்.உசைன் என்ற ஓவியரின் அடிவருடித்தனம் உச்சமானது. அவர் இந்திராவை ஒரு துர்கையாக சித்தரித்து ஒரு மாபெரும் ஓவியத்தை காட்சிக்கு வைத்தார்.

பத்திரிக்கை தணிக்கை அப்போது கொடி கட்டி பறந்தது. ஹிந்து போன்ற பத்திரிகைகள் கப்சிப் ஆயின. எதிர்ப்புக்குரல் இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக் போன்ற பத்திரிகைகளில் இருந்து மட்டும் வந்தன. அதிகாரிகளுக்கு ஒரு செய்தி பிடிக்கவில்லை என்றால் நீக்கப்பட்ட பின்புதான் அச்சுக்கு போயின. அப்போதைய பத்திரிகைகளில் பல பத்திகள் காலியாகவும் வெள்ளையாகவும் இருப்பதை பார்க்கலாம். துக்ளக்குக்கு பயங்கர டிமாண்டு, பல பக்கங்கள் வெள்ளையாய் இருந்தும்! ஒரு இதழில் எம்ஜியார் நடித்த 'சர்வாதிகாரி' படத்தின் வசனங்களை பல பக்கங்களுக்கு அச்சடித்திருந்தார் சோ! வானொலியை திருப்பினால் எப்போதும் 'இருபதம்ச திட்டம்...ஆஹா...இது இந்திராவின் சட்டம்...ஓஹோ' என்ற கண்றாவி பாட்டை கேட்க வேண்டியது தலைவிதியானது! திரைப்படத் தணிக்கைகளும் தடைகளும் இன்னும் பிரபலம். குடிப்பது போன்ற காட்சிகளும், வன்முறைச்சண்டைகளும் கத்திரிக்கு பலியாயின. அரசை விமர்சிப்பது போல காட்சிகள் வந்தால் அம்போதான்! திரைப்பட பிரபலங்களை பந்தாடினர் அதிகாரிகளும் மந்திரிகளும்.

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி ஒரு நாள் பிரகடனப்படுத்தப்பட்டது! பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின், முரசொலி மாறன் போன்றவர்கள் உள்ளே! மக்கள் மத்தியில் குமுறல்கள் உருவாகத் தொடங்கின. நான் அப்போது சென்னை மாநிலக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். சிறையில் சிட்டிபாபு அடித்து கொல்லப்பட்டார் என்று தகவல் பரவியது. அவரது உடல் திருவல்லிக்கேணியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு குழுமிய மக்களின் உணர்வுகள் இன்றும் பசுமையாக மனதில் பதிந்திருக்கிறது!
சிறைக் கொடுமைகள் பற்றிய பல தகவல்கள் பரவின. அதே நேரத்தில் முரசொலி அடியார் போன்ற சிலர் சிறை ஒரு உல்லாசக்கூடம் என்பது போன்ற தகவல்களையும் பரப்பினர். ஜால்ரா அடித்துக்கொண்டிருந்த பொதுவுடமைக்கட்சியில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் வரத்தொடங்கின. அதில் முக்கியமானவரான ராஜேஸ்வர ராவுக்கு மாநிலக்கல்லூரி மாணவர்கள் சார்பாக நாங்கள் மாலை அணிவித்தோம். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரவேண்டுமல்லவா. 1977ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை கண்டது. இந்திரா, சஞ்சய் போன்றவர்கள் கூட அவர்கள் தொகுதியில் தோற்றனர்! மக்களும் சகஜ நிலைக்கு திரும்பினர்!

அப்போது ஒரு நாள் ஜனாதிபதி இறந்ததால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒரு மனிதரின் மறைவுக்கு மாணவர்கள் மத்தியில் அப்படி ஒரு மகிழ்ச்சி ஆரவாரம் எழும்பியதை நான் பிறகெப்போதும் கண்டதில்லை!

Monday, March 14, 2011

'நாங்க மன்னரும் இல்லே......'


வாங்க! வாங்க !!
டீ கூட சாப்பிடலை ..அதுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் வேஸ்ட்....
அட்டடே.. வாங்க
உக்காருங்க...
எங்க...ஊருக்கா?
இல்ல...ஊரிலிருந்து வர்றேன்....
டிராவல்ஸ் பஸ்ஸா?
இல்லை...ரயிலு..!...
வீடு அதே வீடுதானே?
ஆமா..மாடிலே ஒரு வீடு அங்கே போக்கியத்துக்கு இருக்கு..அருவதாயிரம்...!
அப்படி ஒண்ணும் இல்லையே..
அந்த வீட்டுக்காரம்மா கூட தீப்புடிச்ச மாதிரி இருப்பாங்க....
ஆமா ஆமா...
முடிச்சிரலாமா?
வேண்டாங்க..எனக்கு இது போதும்..ஆயிரத்தி ஐநூறு தான் வாடகை...தனி ஆளுதான்! போதும்!
சார்...இந்த மூட்டைப்பூச்சிக்கு என்ன மருந்து சார் பெஸ்ட்? சனியன் என்ன பண்ணினாலும் போகமாட்டேங்குது..வீட்டுக்காரம்மாவுக்கு விடிய விடிய என்ன வேலைங்குறீங்க...மூட்டைபூச்சியை பிடிக்கவேண்டியது...மக்கிலே தண்ணிலே போடவேண்டியது....நமக்கு பெட்டு வாசல்லதான்...பன்னெண்டு மணியிருக்கும் ..டக்குன்னு எந்திரிச்சி பாக்குறேன்..கழுத்து பூரா மூட்டைபூச்சி...ஏன் கேக்குறீங்க...எஸ்.வி.லாண்டரிலே ஒரு மருந்து அடிச்சாராம்...அறுவது ரூவாயாம்...இன்னைக்கி வாங்கீர வேண்டியதுதான்.

எங்க சார் பில்டிங் எல்லாம் இப்ப கட்ட முடியாது போல...பத்து வருசத்துக்கு முன்னாலே நம்ம ஹோட்டல்காரர் 22 லச்சத்துக்கு வீடு கட்டுனாரு...இப்ப வாடகையே...வருசத்துக்கு 4 லச்சம் வருது....ஹூம்...!
தங்கம் பாருங்க என்ன விலை விக்குது...! நெருங்க முடியுமா? இவரு எப்படி சம்பாரிச்சாருன்னு நினைக்கிறீங்க?

எவரு?
அட அவருதாங்க.....(ஒரு கிசுகிசுப்பு)
பாம்பேக்கு போகவேண்டியது....நல்ல தண்ணியடிக்கனும்... வெள்ளை தோல்காரிங்க கூட கூத்தடிக்கணும்....சேட்டு பொம்பளைங்கள.........டாராமா!!! இங்கேயிருந்து ஒரு கோஷ்டியே கூட போகும்....எல்லாம் அழுக்குபசங்க... ஒருத்தன் பக்கத்திலே போமாட்டான்! குடும்பத்தோட அன்ரிசர்வ் பொட்டிலே வருவானுங்க...பைக்குள்ள தங்க பிஸ்கட் இருக்கும்னு ஒருத்தனுக்கும் தெரியாது. அல்வா மாதிரி பிஸ்கட் இங்க வந்திரும்....ஒரு ஐயாயிரம் கொடுத்தா ஒரு மாசத்துக்கு சந்தோசமா ஆடுவானுங்க....இப்பதான் தங்க கட்டுப்பாடே இல்லையே!!!

சார், அம்பது ரூபா சார் இப்ப, சங்கத்திலே தீர்மானம் போட்டாச்சு.. பாருங்க அட்டை கூட மாட்டியிருக்கேன்.

ஓயாத பேச்சு, சதா இயங்கும் கைகளைப் போல ! சலூன்கள்தான் எப்படிப்பட்ட உலகங்கள்! சிறுவயது முதல் எவ்வளவு தடவைகள் இங்கு விஜயம் செய்திருக்கிறோம். தகர டப்பா சலூன் முதல் ஏசி பந்தா அழகு நிலையம் வரை எவ்வளவு ரகங்கள்...! நம் நாட்டில் ஆணாய் பிறந்த எவருக்கும் மறக்க இயலா உலகம் இந்த சலூன் கடைகள்...தலையை பிடித்து அமுக்கி, வெள்ளை துணி போர்த்தி , உம்மென்று முகமெல்லாம் மயிர்த்துகள்கள் ஊறிக்கிடக்கும் சிறுவர் முகங்கள் முதல் கடு கடு வென்று பீடி நாற்றம் கமழும் முகங்கள் வரை எத்தனை முகங்களை இந்த கடைகள் பார்த்திருக்கும்! உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அலசப்படும் அரங்கம். அனல் வீசும் அரசியல் வாதப் பிரதிவாதங்களை, வரிசையில் இருந்தும் கண்டுக்கப்படாத சிறுவர்களாய் நாம் எத்தனை முறை கேட்டிருப்போம். எத்தனை லோக்கல் கிசுகிசுக்கள் அலசப்பட்டிருக்கும்! சரக்கென்று உயரும் கைகளின் நடுவே அக்குளுக்குள் கத்தி சுரண்டும்போது...இது எப்ப நமக்கு என்று ஆவென்று எங்கும் சிறுவர்கள்...!

எத்தனை விதமான கடைகள்....தரையிலிருந்து ஒரு அடி உயரத்துக்கு மேல், கள்ளிப்பெட்டியினால் உருவாக்கப்பட்ட சிங்கிள் சேர் கடைகள், இயற்கை காட்சிகள், சினிமா போஸ்டர்கள், கவர்ச்சி கன்னிகளின் படங்களுக்கு நடுவே முகம் பார்க்கும் கண்ணாடிகளும் பதிக்கப்பட்ட சுவர்கள், மட்ட ரக பவுடர்களுக்கே உரிய மணம், சலூன்களுக்கே உரிய பிரத்யேக பிராண்டு கிரீம்கள், லோஷன்கள், கத்தியை சாணை பிடிக்க தொங்கும் ஒரு பெல்ட், சடாரென்று உதறப்பட்டு கபக்கென்று போர்த்தப்படும் 'வெள்ளை' சலவை துணிகள், மயிர் துண்டுகளை சேகரிக்க மூலையில் ஒரு டப்பா, கசங்கி கிடக்கும் தினத்தந்தி தாள்கள், நாளை கிழிக்கப்பட்டு கத்தி மீது படர்ந்து கிடக்கும் சோப்பை வழிக்க பயன்படலாம் அவை...., கத்திரிக்கோல், சீப்பு, கடக் கடக் என்று தலையில் பயணம் செய்யும் கிராப் வெட்டி என்று அழியாத கோலங்கள்! இன்று காலங்கள் மாறிய பிறகும் இவையெல்லாம் இன்னும் இருக்கின்றன பெரும்பாலான கடைகளில்.! நான் போகும் கடையில் கிராப் வெட்டிக்கு மின்சார இணைப்பு ஒரு கூடுதல் வசதியாக இப்போது தென்படுகிறது.

இலக்கியங்களில் இவர்களை பற்றி ஏதேனும் குறிப்புகள் உண்டா? நாஞ்சில் நாடன், தோப்பில் முகமது மீரான், நாகராஜன் படைப்புகளில் இவர்களை சந்தித்ததுண்டு. திரைப்படங்களில் அபூர்வம். பழைய 'கடவுளை கண்டேன்' படத்தில் எம்.ஆர்.ராதா பார்பர் ஷாப்காரராக வந்து 'நாங்க மன்னரும் இல்லே, மந்திரி இல்லே, வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்,' என்று பாடலுக்கு நடித்த காட்சி இருக்கிறது. பொய்க்கால் குதிரை, வறுமையின் நிறம் சிவப்பு, கிழக்கே போகும் ரெயில், இது நம்ம ஆளு, மாயக்கண்ணாடி, குசேலன் என்று சில சித்தரிப்புக்கள் இருந்தன. மலையாளப்படங்களில் சீனிவாசன் போன்ற நடிகர்கள் பல படங்களில் இத்தகைய வேடங்களையும் சூழல்களையும் உருவாக்கியிருக்கின்றனர்.

பொருளாதார நிலைகளில் உயர்ந்திருக்கும் சலூன் கடைக்காரர்களையும் சந்தித்திருக்கிறேன். எங்கள் ஏரியாவில் பல கடைகளுக்கும் வீடுகளுக்கும் உரிமையாளர் ஒரு சலூன் அதிபர். காலையில் ஆறு மணிக்கெல்லாம் இவர் கடை திறந்து தொழில் செய்வதை பார்க்கலாம். எனக்கு ஒரு கோடீசுவரன் தான் முடி வெட்டுகிறார் என்று நண்பர்களிடம் விளையாட்டாக சொல்வதுண்டு. இன்று சலூன் கடைகள் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் தொழிற் களமல்ல. அழகு நிலையம் என்ற பெயரில் இன்று பிராமணப் பெண்கள் கூட முடி வெட்டுகின்றனர்! ஏசி வசதிகள், தலை கழுவ வாஷ் பேசின்கள் , டிரையர்கள், முடி வெட்ட ஆயிரக்கணக்கில் என்று சலூன்களில் வசதிகள் பெருகி விட்டாலும்...இன்றும் நான் எங்களது சந்தில் சின்ன கடை வைத்திருக்கும் நண்பருக்காக அவர் கடை வாசலில் காலை ஆறு மணிக்கே காத்து கிடக்கிறேன். ..சைக்கிளில் வந்து அவர் கடையை திறந்து கூட்டி பெருக்கி, இலவச டிவியையும் ஆன் பண்ணி அழைக்கிறார்...
'வாங்க'!!

Friday, March 11, 2011

ஓவியம் வரைந்தால் போதுமா?


நான் முதலில் பார்த்த ஓவிய கண்காட்சி எனது பன்னிரண்டு வயதில். ஆர்.எஸ்.புரம் லேடீஸ் கிளப்பில் யூசுப் புராவும் பிரகாஷ் சந்திராவும் நடத்திய நவீன ஓவிய கண்காட்சி . என்னை விட நான்கு வயது இளைய தம்பியும் நானும் தனியாக சென்றோம். ஒரு ரூபாய் நுழைவு கட்டணம்...அது கூட கையில் இல்லை...திரு திரு என்று நின்று கொண்டிருந்த எங்களை பரிதாபமாக பார்த்த பிரகாஷ்ஜி இலவசமாக அனுமதித்தார். ஆர்வமுடன் பார்த்த எங்களிடம், எப்படி இருக்கின்றன ஓவியங்கள் என்று ஆங்கிலத்தில் வினவினார். 'ஒன்றுமே புரியவில்லை' என்று பதிலளித்த என்னை பார்த்து வெடிச்சிரிப்பு சிரித்தார்...'வயதானால் புரிந்துவிடும்' என்று சொல்லி தட்டிக் கொடுத்தார்!!!

வயதானது...புரிந்துவிட்டதா என்ன?

கல்லூரி பருவத்தில் அதே பிரகாஷ் சந்திராவும் நண்பர்களும் ஆரம்பித்த சித்ரகலா அகாடமியில் மாணவ உறுப்பினராக இணைந்தேன் . ஓரிரு வருடத்தில் செயலாளர், பின் உதவி தலைவர், பின் தலைவர் என பொறுப்புகள் என் தலையில்....அவர்தான் என் நவீன ஓவிய குருவாக திகழ போகிறார் என்று குழந்தை பருவத்தில் நிச்சயமாக நினைத்திருக்க மாட்டேன். எத்தனை எத்தனை ஓவியக்காட்சிகள்...எத்தனை ஓவியர்கள் என் வாழ்க்கை பாதையில் ! நவீன ஓவியங்கள் குறித்து பல அன்பர்கள் 'புரியவில்லை', 'ஏமாற்று வேலை' என்றெல்லாம் விமர்சிக்கும்போது எனக்கு மிகவும் கோபம் வரும். இப்போதெல்லாம் வருவதில்லை என்பது ஒரு நல்ல விஷயம்! ஏனென்றால் எனக்கும் இந்த சந்தேகங்கள் வந்துவிட்டன. ஓவியங்களை ரசிக்கும்போது நான் பார்ப்பவை ஓவியரின் உத்திகள், வண்ணங்களின் பயன்பாடு, ஓவியத்தின் உள்ளடக்கம் மட்டுமே. ஓவியங்கள் பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரு ஊடகம் என்பதில் எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு. அவனை அது தொடவில்லை என்றால் அந்த படைப்பு ஒரு தோல்வி என்றும் திடமாக எண்ணுகிறேன். சில அதி நவீன ஓவியர்களுடன் ஏற்படும் சூடான விவாதங்களில் காரசாரமாக பேசியிருக்கிறேன். ஓவியம் என்பது அவர்களின் சொந்த மன வெளிப்பாடு என்று சொல்லிக்கொண்டு கன்னா பின்னா என்று வரைந்து வைத்த ஓவியர்களிடம்..அப்ப இதை எதுக்கய்யா எங்கள் பார்வைக்கு வைக்கிறீர்கள், உங்கள் வீட்டுக்குள்ளேயே வைக்க வேண்டியதுதானே என்றெல்லாம் சண்டை போட்டிருக்கிறேன். இப்படி ஒரு சண்டையை ஆதிமூலம் அவர்களுடன் போட்டவுடன்தான் என் ஞானக்கண்ணை அவர் திறந்து வைத்தார்! பிறகு திறந்த மனதுடன் நவீன ஓவியங்களை ரசிக்க தொடங்கினேன். அவருடைய மனவெளி ஓவியங்களில் மனதை பறி கொடுத்தேன். மருதுவின் வீச்சுகள் எனக்கு வீரம் கொடுத்தன...கான்வாஸில்!
முப்பத்தி மூன்று வருடங்கள் ஓவிய கண்காட்சி அனுபவங்களுக்கு பிறகும் அரூப ஓவியங்கள் கைகூடாததில் இன்னும் வருத்தம் ஓயவில்லை!!! எது என்னை தடுக்கிறது ?

என் வளர்ப்பு முழுக்க முழுக்க சினிமா பேனர் பின்னணியில். என் தந்தை முறையாக ஓவியம் படித்ததுபோல் நான் பயிலவில்லை.புகைப்படத்தை போல தத்ரூபமாக ஓவியமும் திகழவேண்டும் என்ற பாரம்பரிய மன ஓட்டமே என்னையும் நடத்தி சென்றது. உருவங்களை சிதைத்து புதிய பாணியை உருவாக்கிய பிக்காசோவுக்கு இளமைக்காலம் இப்படித்தானே! பணிக்கர் முதல்வரான பிறகுதானே, சென்னை ஓவியக்கல்லூரியிலிருந்து இத்தகைய கலைஞர்கள் உருவானார்கள்! பிரகாஷ் சந்திரா போன்ற கலைஞர்களின் தொடர்பு என்னை மனமாற்றத்திற்கு உள்ளாக்கியது! சினிமா பேனர்களில் புதிய உத்திகளை கையாள தொடங்கினேன், என் தந்தையின் எதிர்ப்பை மீறி....புது வண்ண க்கலவைகள், பாரம்பரிய வண்ண பூச்சுகளில் மாற்றம் என்று உருவாக்கியபோது அதற்கும் ரசிகர்கள் உருவானார்கள். வேறு வழியில்லை...தந்தை பச்சை கொடி காட்டினார்! ஓவியக் கண்காட்சிகளிலும் முயற்சித்தேன்....முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்!!!

ஓவிய காட்சிகளில் பல வகையான ஓவியங்களை பார்க்கிறேன். என் நண்பர் நெடுஞ்செழியன் எப்போதுமே பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுபவர். உத்திகளில் எப்போதும் அதீத ஈடுபாடு. அசுர உழைப்பாளி. முன்னாள் சென்னை ஓவிய கல்லூரி முதல்வர் பாஸ்கரன் பூனைகளை அதிகம் வரைந்தால் இப்போதைய கும்பகோணம் ஓவியக்கல்லூரி முதல்வர் மனோகரனின் ஓவியங்களில் வித விதமான உயிர்ப்புள்ள ஆடுகள் அதிகமாக மேயும் . ரஞ்சித் துணிகளின் சுருக்கத்தில் ஆழ்ந்து விடுவார். சந்தான கிருஷ்ணனுக்கு கதவுகளின் மீது காதல் . புகைப்படங்கள் எடுத்து அதை அப்படியே தத்ரூபமாக வரைவது இளையராஜா போன்ற இளைய ஓவியர்களின் உத்தி! இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்!!!! தாந்திரீக ஓவியங்கள் என்று ஒரு சப்ஜெக்டை எடுத்து கொண்டு அதில் மிதப்பவர்கள் ஒரு வகையினர். தஞ்சாவூர் ஓவியர்கள், கண்ணாடி ஓவியர்கள், மண்கூஜா ஓவியர்களை எல்லாம் நான் இதில் சேர்க்கவில்லை!!!
Installations என்று ஒரு வகை...ஓவிய அறையின் ஒரு பகுதியை தரை முதல் குறிப்பிட்ட அளவு வரை பொருட்களை வைத்து நிறைக்கும் ஒரு கலை என்று நான் சொன்னால் கொச்சையாக இருக்கும். ஒரு முறை ஒரு ஓவியர் தரையில் பெரிய கான்வாசை விரித்து வைத்து அதில் குழைய குழைய விலை உயர்ந்த வண்ணங்களை பூசி அதன் மேல் உள்ளாடை மட்டும் அணிந்து யோகாசன முத்திரைகள் புரிந்தார்..கான்வாஸின் மீது அவர் கரங்கள், கால்கள், புட்டங்கள் பதிந்த பகுதிகள் ஓவியமாக வெளிப்பட்டன! Newsprint காகிதத்தின் மீது கரியையும் எஞ்சின் ஆயிலையும் குழைத்து பூசி விவான் சுந்தரம் வைத்திருந்த ஓவிய கண்காட்சியையும் பார்த்திருக்கிறேன். நடிகர் சிவகுமார், பழநிசாமியாக இருந்தபோது ஸ்தலத்திலேயே போய் அமர்ந்து வரைந்த ஓவியங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

வடக்கிலிருந்தும் நிறைய ஓவியர்களின் கண்காட்சிகள் இப்போதெல்லாம் காணக்கிடைக்கின்றன. ஓவியங்களை காட்சிக்கு வைப்பதே ஒரு பெரும் வியாபார உத்தியாக கையாண்டு வெற்றி காண்பவர்கள் இருக்கின்றனர். எங்களை போன்றவர்களின் ஓவியங்கள் அதிக பட்சமாக பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கும் . கஸ்தூரி சீனிவாசன் ஓவிய காலரி போன்ற சேவை மனப்பான்மை மிக்கவர்கள் இருப்பதாலேயே எங்களால் ஓவியங்களை காட்சிக்கு வைக்க முடிகிறது. ஆனால் சென்னை போன்ற நகரங்களில் இன்று தனியார் அரங்கங்கள் இரண்டு வாரத்திற்கு ஒன்றரை லட்சம் அளவிற்கு வாடகையே கொடுக்க வேண்டும் என்ற நிலை. அப்போது ஓவியங்களையும் அதிக விலைக்கு விற்க வேண்டும். உடனே வாங்கி விடுவார்களா என்ன? விலை உயர்ந்த அழைப்பிதழ்கள், காக்டெயில் பார்ட்டிகள், ஓவியரின் இமேஜை உயர்த்தும் உடை அலங்காரங்கள், ஆங்கில பத்திரிக்கை பேட்டிகள், விமர்சனங்கள் என்று பல சாமக்கிரியைகள் உண்டு. நல்ல ஓவியர்களுக்கே இந்த நிலை என்றால் அரை வேக்காடு ஆசாமிகள் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்..வடக்கு ஓவியர்களின் ஓவியங்கள் பிரம்மாண்டமான அளவில் பெரும்பாலும் வருகின்றன. பல சமயங்களில் தரமும் இருப்பதில்லை . விலையும் லட்சங்களில் ஓடும். அப்படிஎன்றால் யார்தான் இவற்றை விலைக்கு வாங்குகிறார்கள்?

Buyers அனைவரும் ஓவிய ரசனை மிக்கவர்களா? நிச்சயம் சில சதவிகிதத்தினர் உள்ளனர். அவர்கள் ஓவியங்கள் சில ஆயிரங்களில் கிடைத்தால், நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கும், சொந்த உபயோகத்திற்கும் , தங்கள் நிறுவனங்கள் சார்ந்த கட்டிடங்களில் வைப்பதற்கும் வாங்குவார்கள். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குபவர்கள் யார்? ஓவியங்களை முதலீடாக கருதுபவர்கள்…..
இன்று வாங்கி நாலு வருடம் கழித்து விற்றால் பல மடங்கு போகும் என்று கருதும் வியாபாரிகள். ஒரு உசைன் ஓவியத்தையோ, ஒரு ஆதிமூலம் ஓவியத்தையோ இப்படி வாங்கினால் ஒரு நியாயம் இருக்கும்...ஆனால் இன்று மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து ஓவியர்களின் படைப்புக்களையும் இப்படி விற்க முடியுமா?
பெரும்பாலும் தரமற்ற ஓவியங்களும் இத்தகைய காட்சிகளில் வைக்கிறார்கள். நான் சமீபத்தில் பார்த்த ஒன்றில் குறைந்த விலையே 75,000ல் ஆரம்பித்து ஐந்தரை லட்சம் வரை விலையிட்டு இருக்கிறார்கள். யானையை குருடர்கள் கண்டது போல ரசிப்பவர்களும் உண்டு. நிர்வாணமாக போன அரசனின் இல்லாத உடையை ரசித்தவர்கள் போல இத்தகைய ஓவியங்களை ரசித்து பாராட்டினால்தான் நமக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று பாராட்டி மகிழ்பவர்களும் உண்டு. இத்தகைய களேபரங்களில் ஒரு சில போலி ஓவியர்கள் சத்தமில்லாமல் வறிய ஓவியர்களிடமிருந்து ஓவியங்களை வாங்கி, அதில் தங்கள் கையெழுத்தும் இட்டு காட்சிக்கும் வைத்து விலைக்கும் வைக்கிறார்கள்...புத்திசாலிகள்!
இனி உங்கள் ஏரியாவில் ஓவிய கண்காட்சி நடந்தால் தவறாது சென்று வாருங்கள் நண்பர்களே, குறைந்த விலைக்கு கிடைத்தால் கட்டாயம் ஒரு ஓவியமாவது வாங்கி வையுங்கள்!!!! யார் கண்டது, ஒரு நாள் அது அதிக விலைக்கு போகலாம்!