Monday, August 24, 2009

சுற்றுலா போகலாம் வாங்க!

பள்ளி நாட்களில் கல்விச்சுற்றுலா என்பது மறக்க முடியாதது. வாழ்க்கையில் பார்க்கமுடியாத பல விஷயங்களை பள்ளியில் படிக்கும்போது சர்வ சாதாரணமாக பார்த்திருக்கிறோம் என்பது சாதாரண விஷயமா? நம்மில் எத்தனை பேர் சட்டை பொத்தான் தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் போயிருக்கிறீர்கள்? HMT வாட்ச் உருவாகுவதை பார்த்திருக்கிறீர்களா? அட மைசூர் சாண்டல் சோப் தொழிற்ஸாலைக்குள்ளாவது போயிருக்கிறீர்களா? இதையெல்லாம் நான் பள்ளி நாட்களிலேயே சாதித்துவிட்டேன்.

சுற்றுலா குறித்து நோட்டீஸ் போர்டில் பார்த்தவுடனேயே பரபரப்பு தொற்றிக்கொள்ளும்..பணத்தை கட்டி முன்பதிவு செய்யவேண்டும். ஒரு வேளை இடம் கிடைக்காவிட்டால்...? புறப்படும் தினத்தன்று அதிகாலையிலேயே பெட்டியுடன் பள்ளிக்கு ஓடிச்சென்று, டிரைவர் இருக்கைக்கு மிக அருகில், முன்சீட்டை பிடிக்க வேண்டும்..அப்போதுதான் சாலைக்காட்சிகள் நன்றாக காணக்கிட்டலாம்.

பள்ளி சுற்றுலா உண்மையிலேயே ஒரு அற்புதமான அனுபவம். பெற்றோர்களை பிரிந்து இருக்கும் நான்கு நாட்கள். ஆசிரியர்களின் அரவணைப்பு. வகுப்பு தோழர்களுடன் உல்லாசம். ஜூனியர் சீனியர் மாணவர்களுடன் நட்பு..ஓட்டல் சாப்பாடுகள், எல்லாவற்றுக்கும் மேலாக புதுப்புது இடங்கள். சில சிரமங்களும் இருந்தன. குளியல், நம்பர் டூ போதல் போன்ற விஷயங்களுக்கு அந்த சிறு வயது, நம்மை சரியான நேரத்திற்கும் கூட்டத்துடன் அனுசரிக்க கற்று கொடுக்காததால் தடுமாறச்செய்யும்.

பள்ளி சுற்றுலா நினைவுகள் சாகும் வரை கொஞ்சம் கூட மங்காமல் நம்மை தொடர்ந்து வருவது ஒரு அற்புதம். ஒரு முறை நான்கு நாட்களுக்கு செலவுக்கு என் தந்தை கொடுத்த இருபது ரூபாயில் பத்தை தொலைத்துவிட்டேன். அறுபதுகளின் இறுதி ஆண்டுகள். மூன்றாவது நாள், சாப்பிட காசு இல்லை. காரைக்காலில் ஒரு ஓட்டலில் சக மாணவர்களும் ஆசிரியர்களும் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் வாசலில் பிச்சைக்காரனை போல நின்று கொண்டிருக்கிறேன். கையை துடைத்துக்கொண்டு வெளியே வந்த ஆசிரியர், எங்களால் புளியோதரை, நடையன் என்றெல்லாம் அழைக்கப்பட்டவரும், கையில் விரல்களால் ஊசியை போல வலிக்கும்படி கிள்ளக்கூடியவருமான அவர் என்னிடம் ஏண்டா வெளியில் நிற்கிறாய் என்று உறுமுகிறார். பசியும் ஆற்றாமையும் அழுகையாய் வெடிக்கிறது. பணம் தொலைஞ்சு போச்சு சார் என்று கதறுகிறேன். கொடுங்கோலன் என்னை அன்புடன் உள்ளே அழைத்து சென்று நான் சாப்பிட்டு முடிக்கும் வரை உடன் இருந்து பில்லுக்கும் பணம் கொடுத்து விட்டு, என்னிடமும் ஒரு பத்து ரூபாய் தாளை திணிக்கிறார். ஊருக்கு திரும்பியவுடன், பெட்டியை முழுவதும் காலி செய்து பார்க்கும்போது ஒழுகிய தேங்காய் எண்ணையில் ஊறிப்போய் கிடக்கிறது அந்த தொலைந்து போன பத்து ரூபாய்!

அந்த வயதில் பார்த்த இடங்கள்தான் எத்தனை! திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், கல்லணை, தஞ்சை பெரிய கோவில், காரைக்கால், வேளாங்கண்ணி, நாகூர், சென்னையில் மூர் மார்கெட், ரயில் நிலையத்துக்கு அருகே இருந்த மிருகக்காட்சி சாலை, மவுண்ட் ரோட், அங்கேயிருந்த பிரம்மாண்டமான சினிமா பேனர்கள் , என் அபிமான சிவாஜியின் சாந்தி தியேட்டர், மெரீனா பீச், பிற்பாடு நான் படிக்கப்போகும் மாநிலக்கல்லூரி, பெங்களூர், மைசூர், பிருந்தாவனம், HMT வாட்ச் பாக்டரி, சந்தன சோப் தொழிற்சாலை, மாண்டியா சர்க்கரை ஆலை, மதுரை கோவில், அழகர் கோவில், திருப்பரங்குன்றம், நாயக்கர் மஹால்.....அடடே பதினைந்து வயதுக்குள் எத்தனை இடங்கள்!

சரி, உங்களில் எத்தனை பேர் சினிரமா படங்கள் பார்த்திருக்கிறீர்கள்? மூன்று ப்ரோஜெக்டர்கள் வழியாக பிரம்மாண்டமான திரையில் ஒரே உருவமாக , அதாவது மூன்று பாகங்களின் ஒரே உருவமாக காட்டப்படுவதுதான் சினிரமா. இதன் சிறப்பம்சம் துல்லியம் மற்றும் பிரம்மாண்டம். தென்னாட்டில் இரண்டே தியேட்டர்களில் மட்டுமே திரையிட முடியும்..அவை பெங்களூரில் உள்ள கபாலியும் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் பைலட்டும் தான். நான் ஒன்பதாவது படிக்கும்போது பெங்களூர் சுற்றுலாவில் ஒரு சினிரமா படத்தின் போஸ்டர்களை பார்த்தேன். 'The Seven wonders of the World' என்பது படத்தின் பெயர். அப்போதே நான் சினிமாவை ஒரு கலை என்று உணர்ந்த ரசிகன். எப்படியாவது அந்த படத்தை பார்க்காவிட்டால் மண்டை உடைந்துவிடும் என்ற நிலை. பகல் முழுவதும் ஆசிரியர்களை நச்சரித்து..கடைசியில் வெற்றி எனக்கு. இரவுக்காட்சியில் கபாலியின் குளிர்ந்த திரையரங்கில் பிரம்மாண்டமான் திரையில் அந்த படத்தை வாயை பிளந்து அத்தனை மாணவர்களும் பார்த்தோம். அதற்கு பிறகு இந்தியாவில் சினிரமா படங்கள் வரவேயில்லை, அந்த வகைப்படங்களும் அழிந்து போயின!

முதன் முதலாக திரைப்பட ஷூட்டிங்கை பார்த்ததும் பள்ளி சுற்றுலாவில்தான். மகாபலிபுரத்தில் கமலா மூவீசின் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு. கே.பாலசந்தர் இயக்கிக்கொண்டிருக்கிறார். தினத்தந்தி சினிமா செய்திகளை படித்தே தமிழறிஞரான நான், அதன் நாயகன் சிவாஜியை தேடுகிறேன்...என்ன ஏமாற்றம், ஒரு பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்தது சிவகுமாரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும். எல்லா பசங்களும் ஆட்டோகிராப் வாங்க துடித்துக்கொண்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர் எம்.ஆர்.சந்தானம் , வாங்கப்பா, நான் ஆட்டோகிராப் போடுகிறேன் என்று கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்....இந்த படம் வரவேயில்லை. வா ராஜா வாவின் ஷூட்டிங் இன்னொருபுறம். இதை இயக்கிக்கொண்டிருந்தவரோ அருட்செல்வர் ஏபிஎன். குழந்தை பருவத்தில் இதை விட சந்தோஷங்கள் என்ன வேண்டும்!

இப்போது இத்தகைய கல்வி சுற்றுலாக்கள் உள்ளனவா? பெரும்பாலும் இல்லை என்பதே அந்த அதிர்ச்சி தகவல்கள். என் பள்ளி பருவத்தில் நான் பார்த்த இந்த இடங்களை என் குழந்தைகள் பார்த்ததில்லை! நமது பாரம்பரிய பெருமைகள் பள்ளி நாட்களில் குழந்தைகளுக்கு போய் சேர்வதில்லை. இப்போதெல்லாம் கல்வி சுற்றுலா என்பது பல நூறுகள் செலவழித்து, கேளிக்கை பூங்காக்களுக்கு போய் சுகாதாரமற்ற நீர் விளையாட்டுக்களில் ஆட்டம் போடுவதுதான். கொச்சின், பெங்களூர் வரை தாவளம் போட்டிருக்கும் இத்தகைய கேளிக்கை மையங்களின் முகவர்கள் பள்ளி முதல்வர்களை சந்திக்கின்றனர். பெரும் பரிசுகள் கை மாறுகின்றன . முதல்வர்களின் குடும்பத்தினருக்கு வேறு தேதிகளில் அங்கு பெரும் உபசாரங்கள் காத்திருக்கின்றன. ஒரு பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் என்றால், அத்தனை பெரும் வெவ்வேறு தேதிகளில் ஒரே இடத்துக்கு பயணித்து, ஊசிப்போன பிரைட் ரைசையும் தின்று , உடம்பையும் கெடுத்துக்கொண்டு திரும்பி வருகிறார்கள். பயனடைவது இத்தகைய சுற்றுலா தளங்களை கட்டி சம்பாதிப்பவர்களும், இந்த பள்ளி முதல்வர்களும். இழப்பவர்கள் அற்புதமான அனுபவங்களையும் ,பண்பாட்டு செல்வங்களையும் மறுக்கப்பட்ட பாவம் மாணவர்கள்தாம்.