Sunday, December 14, 2008

'என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்'

குறும்படங்கள் ஒரு தனி ஜாதி.
யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்று ஆன பிறகு, எக்கச்சக்கமான படங்கள் பார்க்க கிடைக்கிறது. அரை வேக்காடு , முழு வேக்காடு என்று தரம் பிரித்து பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
இப்போது பார்த்த படம் 'என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்'. பிரதீபன் இயக்கியது.
தொழில்நுட்ப கலைஞர்கள் பெயர் பட்டியல் படத்தை பார்க்க தூண்டுகிறது.
வெறும் பதினொன்று நிமிடங்கள் ஓடும் இந்த படம் நேரிடையாக கதை சொன்னாலும் ஒரு abstract தோற்றத்தை கொண்டிருப்பது இதன் சிறப்பு.

இரண்டு பெண்குழந்தைகளும் ஒரு சிறுவனும் பள்ளிக்கு சென்று திரும்புகிறார்கள். நாளை பள்ளிக்கு விடுமுறை என்று இராணுவம் அறிவித்திருக்கிறது என்று அவர்கள் பேசிக்கொள்ளும்போதே, கதை நடப்பது இலங்கையில் என்று புரிந்துகொள்கிறோம். இவர்கள் கைகளில் மாங்கன்றுகள்.சிறந்த முறையில் வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் இருக்கலாம். பாதை இரண்டாகப்பிரிகிறது. ஒருத்தி ஒரு பாதையிலும் மற்றவர்கள் மறு பாதையிலும் பிரிகிறார்கள்.

சாலை ஓரத்தில் ஜீப்பை நிறுத்தி சிறுநீர் கழிக்கிறான் ஒருவன். செல்லும்போது கூட்டாளியிடம் தான் ஒரு வயதான பெண்ணிடம் இன்பம் துயித்தது பற்றியும், அவள் கணவன் விளக்கு பிடித்தது பற்றியும் பெருமையாக சொல்லுகிறான். உரையாடல் சிங்கள மொழிக்கு மாறுகிறது.

சாலையில் தனித்து செல்லும் சிறுமி அருகில் அந்த ராணுவ ஜீப் நிறுத்தப்படுகிறது.
மாலை வெயிலின் ஒளிச்சூட்டில் ஜீப்பின் நிழலில் நிற்கிறாள் அவள்.

மறுபாதையில் சென்ற சிறுமியையும் தம்பியையும் வழிமறிக்கிறது ஒரு குரல்.
'தங்கச்சி, எங்களுடன் வருகிறேன் என்றாயே, இப்போது வா,
தம்பி, நீ வீட்டுக்கு போ', என்று ஆணையிடுகிறது.

இரவு.

சாலையோரத்தில் குழி தோண்டி ராணுவ ஜீப்பிலிருந்து இறக்கப்பட்ட சிறுமியின் பிணமூட்டையை புதைக்கிறான் சிங்களவன்.

பகல்

மணல் மூட்டைகள் மேல் நிறுத்தப்பட்ட எந்திரத்துப்பாக்கி . பக்கத்தில் இந்த பெண். தனிமையில் தரையில் ஒரு வீட்டை குச்சி கொண்டு வரைந்துகொண்டிருக்கிறாள்.

வெடிச்சத்தம்.

அண்மை காட்சியில் மாங்கன்று பை கிழிந்து குச்சியும் மண்ணும் தரையில் உதிர்ந்து கிடக்கின்றன-வெவ்வேறு இடங்களில்.

சிறுவன் தனியாக நடந்து வருகிறான். பாதைகள் அங்குதான் பிரிகின்றன.

இந்த குட்டி படம் சொல்லும் செய்தி தெளிவானது. சொல்லிய விதம் அருமை. படபடக்கும் புல்வெளிகள், பனைமரங்கள் அடர்ந்த நிலவெளி மற்றும் பின்னணியில் சேர்க்கப்பட்ட ஒலிக்கலவைகள் மட்டுமே ஒரு பயங்கரத்தின் மவுன சாட்சிகளாக நமக்கு தென்படுகின்றன. அற்புதமான ஒளிப்பதிவு . ஏற்கனவே இலங்கை பின்னணியில் 'மண்' படத்தை ஒளிப்பதிவு செய்த சி.ஜெ.ராஜ்குமார், தமிழகத்தின் சிறந்த கலை இயக்குனர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி, புகழ் பெற்ற எடிட்டர் சுரேஷ் அர்ஸின் மகன் ராகவா எஸ். அர்ஸ் போன்றோரின் கைவண்ணம் மிகவும் உயர்தரமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மிகக்குறைந்த நேரமே ஓடக்கூடிய ஒரு படத்தை எப்படி சிறந்த முறையில் அளிக்கமுடியும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பவர்கள் அவசியம் காணவேண்டிய படம் இது.

Tuesday, December 9, 2008

ஜோதிடம்

ஜோதிடர்களை நான் மிகவும் ரசிப்பேன். மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவர்கள். பிரச்சினைகளுக்கு தீர்வும் சொல்பவர்கள். வீடு வீடாக வந்து கிளி ஜோதிடம் சொல்லும் சில நபர்களை அடிக்கடி சந்திப்பேன். நான் எங்கள் கடையில் வரைவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். பேச்சு கொடுப்பேன். 'எங்க சார், முன்ன மாதிரி வருமானம் இப்ப இல்லை. எங்கேயாவது கிராமத்திலே திருவிழா நடக்கும்போதுதான் வருமானம். முன்ன எல்லாம், பெண்கள் ஜோசியம் பார்ப்பாங்க, ஒரு பொம்பள பாத்தா போட்டிக்கு பக்கத்து வீட்டு பொம்பளையும் பார்ப்பா. இப்ப வாசல்ல நின்னு, கிளி ஜோசியம்ன்னு குரல் கொடுத்தாலே உள்ள இருந்தே வள்ளுன்னு விழறாங்க. எப்ப பாத்தாலும் டிவிலே சீரியல் ஓடுது. நாங்க கூப்பிட்டாலே அவங்களுக்கு எரிச்சல் வருது' என்று ஒருவர் புலம்பினார். அடடா, இந்த சீரியல்கள் யாரையெல்லாம் பாதித்திருக்கிறது !

ஊமை ஜோதிடர்கள் என்று ஒரு குரூப் வரும். ஜாடையிலும் எழுத்து மூலமும் உங்களுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர், என்ன தொழில், என்ன பிரச்சினை என்று புட்டு புட்டு வைப்பார்கள். இவர்கள் ஊமைகள் இல்லை என்றாலும் சிறந்த நடிகர்கள். குறைந்த கட்டணம் என்றாலும் பரிகாரம் என்று சொல்லி ஒரு பிட்டை போடுவார்கள். ஒரு குட்டி தேவாங்குடன் வண்ண வண்ண கயிறுகளை விற்றுக்கொண்டு ஒரு பெரியவர் வருவார். இவரை நான் ஓவியமாக கூட தீட்டியிருக்கிறேன். சீரியல்கள் இவர்களை கூட ஒதுக்கித் தள்ளிவிட்டன.

எங்கள் கடையில் ஒரு ரெசிடென்ட் ஜோதிடர் இருந்தார். அதாவது எங்கள் ஓவியக்கூடத்தின் ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு கேக் மாஸ்டர். பிரபல பேக்கரியில் பணிபுரிந்தது போக மீதி நேரத்தை இங்கே ஓட்டுவார். வெற்றிலையில் மை தடவி ஜோதிடம் சொல்வது இவர் ஸ்பெஷாலிடி. இந்த சையது பாயை தேடி ஏகப்பட்ட கஸ்டமர்கள் வருவதுண்டு. எருமையை காணோம், காதல் வசியங்கள் போன்ற தலை போகும் விஷயங்களை கஞ்சா போதையுடன் நிவர்த்தி செய்வதுண்டு. இவரது கஸ்டமர்கள் எனக்கும் நண்பர்களாகிபோயினர். பிளாட்பாரத்தில் அரும்பு மீசை, டை, மற்றும் பெரிய பூத கண்ணாடியுடன் அனாயாசமாக கைரேகை பார்க்கும் டிப் டாப் ஜோதிடரை இவர் வாய் பிளந்து பொறாமையுடன் பார்க்கும் காட்சியையும் கண்டிருக்கிறேன்.

சூலூர் ஜோதிடர் இன்னும் பிரபலமாக இருந்தவர். ஒரு முறை பக்கத்து வீட்டில் ரொட்டி அடுப்பு வைத்துக்கொண்டிருந்த நீலகண்ட பிள்ளையின் அடுக்கு டிபன் பாக்ஸ் காணாமல் போய்விட்டது. எங்கள் கடையில் வேலை பார்த்து வந்த மலையாள காக்காவின் மீது இவருக்கு சந்தேகம். என்ன ஆனாலும் சரி, சூலூர் ஜோசியரை பார்த்துவிடுவது என்று சூழுரைத்து சென்றார். அரை டிராயர் பொடியனான நான் துணைக்கு. சூலூர் ஜோசியர் நாஸ் தியேட்டருக்கு பக்கத்து மாடியில் இருந்தார். ஒரு தலைப்பா, அங்கவஸ்திரம், கோட்டு என்று பழைய படத்து அப்பா போல இருப்பார். நம் பிரச்சினைகளை சொல்லக்கூடாது. அவரே கண்டுபிடிப்பார். அதுதான் இவரிடம் போவதில் உள்ள த்ரில்.

பேக்கரி தாத்தாவை உற்று பார்த்தார். ஜன்னலுக்கு வெளியே பார்த்தார். 'புறா வளர்க்கிறது ஒரு கேந்தி இல்லை ?' என்று வினவினார். பயபக்தியுடன் ஆமோதித்தோம்.
திடீரென்று இல்லாத தாடியை உருவுவது போல் பாவனை செய்து கண்ணடித்தார்.
விழித்தோம்.
'துலுக்கன்' என்று உரக்க அறிவித்தார்.
'அவன்தான் உங்க டிபன் பாக்சை திருடியிருக்கிறான்.'

அன்று ஏற்பட்ட சூலூர் ஜோசியர் பைத்தியம் என்னை பற்றிக்கொண்டது. எத்தனை முறை மற்றவர்களுடன் போயிருப்பேன். என் அப்பாவின் ஜெர்மன் ஜியாமெட்ரி பாக்ஸை திருடியது யார், ரவி பப்ளிசிட்டி வாசலில் கிடந்த மந்திரித்த தகடுகளை போட்ட சதிகாரன் யார் என்று பலப்பல சரித்திர பிரசித்தி பெற்ற துப்புகளை அவர் அனாயாசமாக துலக்கியபோது பக்கத்தில் இருந்த பொடியன் என்று பெயர் பெற்றேன்.எனக்காக நானே அங்கு போவேன் என்று நினைத்ததேயில்லை, என் சைக்கிள் திருட்டு போகும் வரை. வளர்ந்து கல்லூரிக்கு போகும் பருவத்தில், புரட்சிகர சிந்தனைகளுடன் சைக்கிளில் ஏகப்பட்ட சிவப்பு வடிவங்களை தீட்டி அழகுற வைத்திருந்தேன். கல்லூரி வளாகத்திற்குள் எவனோ கம்யூனிச எதிர்ப்பாளன் சைக்கிளை லவட்டிக்கொண்டு போய்விட்டான். காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு கடைக்கு வந்தேன். என் தந்தையிடம் இதை எப்படி சொல்வது என்ற பயத்தில் தேம்பி அழுதுவிட்டேன். அனைவரும் கலந்தாலோசித்தனர். 'சூலூர் ஜோசியரிடம் போ ' என்று அறிவுறுத்தல்கள்.
ஒரு புரட்சியாளன் ஜோதிடரிடம் போவதா என்று ஏகப்பட்ட மனக் குழப்பங்களுடன் தனியாக சென்றேன்.

பல வருடங்கள் கடந்திருக்கின்றன. அதே மாடி, அதே தூசி படிந்த அறை. ஜோதிடர் மட்டும் மாறியிருக்கிறார். அவர் மகன். அதே பாணி.

திரு திரு என்று விழித்துக்கொண்டிருந்த என்னை கடுமையாக பார்த்தார். திருடனை போல நான் உணர்ந்தேன்.
'வாகனம்'!
ஒற்றை வார்த்தை.
கண்களில் நீர் கோத்துக்கொண்டது.
'சரி, போ, போ, கிடைக்காது, வேறே வாங்கிக்கோ.'

அதற்க்கு பிறகு நான் எந்த ஜோதிடரையும் பார்த்ததில்லை.

Sunday, December 7, 2008

திலகங்கள்நான் வசிப்பது ஒரு பிசியான சாலையில். அக்கம் பக்கம் கடைகள். பக்கத்து
சந்துகளில்தான் மக்கள் வசிப்பது. நகரின் முக்கியமான சாலை என்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல். இதை தட்டச்சு செய்யும்போது கூட, ஆட்டோவில் இருந்து புஷ்பவனம் குப்புசாமி இறங்கி, பாட்டு புத்தகம் வாங்க எதிர் கடைக்கு போகிறார். ஞாயிறு மட்டும் சாலையில் ஒரு ஆளை பார்க்கமுடியாது. வெடிகுண்டுக்கு முன் எப்போதும் ஊர்வலங்கள், அது இது என்று ஜெ ஜேவென்று இருக்கும். பிறகு போலீஸ் கெடுபிடியினால் அதெல்லாம் இல்லை என்றாகிவிட்டது. தேர்தல் சமயங்கள் விதிவிலக்குகள். பெரிய பெரிய தலைவர்கள் முதல் குண்டு கல்யாணம், ஹாஜா செரீப் வரை கையெடுத்து கும்பிட்டுக்கொண்டு செல்வார்கள். பக்கத்து மைதானங்களில் பொதுக்கூட்டங்கள் நடக்கும். இப்போதெல்லாம் அந்த நேரங்களில் சீரியல்கள் பரபரப்பாக இருப்பதால் பொதுக்கூட்டங்களுக்கு ஆட்கள் வருவதில்லை. கூட்டங்களும் இல்லாமல் போய்விட்டன.

ஒருமுறை சிவாஜி எங்கள் சாலை வழியாக வேனில் பிரச்சாரம் செய்து கொண்டு வருவார் என்று அறிவிக்கப்பட்டது. அன்று ஞாயிறு. சிவாஜி என் உயிர் என்பதால் ஒரே பரபரப்பாக இருந்தேன். மதியம் சாலையில் ஈ காக்கா இல்லை. நடிகர் திலகம் வந்துகொண்டிருக்கிறார் என்று ஒரு மைக் செட் ஆட்டோ கூவிக்கொண்டு பறந்தது.
வாசலுக்கு வந்து காத்திருந்தேன். திறந்த ஜீப்பில் சிவாஜி கும்பிட்டுக்கொண்டே வந்தார். எனக்கு உடலெல்லாம் புல்லரிப்பு. பதைபதைப்புடன் கைகளை தூக்கி ஆட்டுகிறேன். துள்ளி குதிக்கிறேன். (மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் நினைவில் கொள்க)
சிவாஜி கண்டு கொள்ள வேண்டுமே. யாருமே இல்லாத சாலையில் எதையோ பார்த்து கும்பிட்டுக்கொண்டே போகிறார்.

சீ என்றாகிவிட்டது.

அடுத்த வாரம் எம்ஜியார் வருகிறார். அன்று வேலை நாள்தான். எங்கும் ஒரே பரபரப்பு. சாலையெங்கும் மக்கள் காத்திருக்கின்றனர். சந்துகள் சாலையில் சேரும் இடங்களில் பெண்கள் கூட்டம். எம்ஜியாரின் வேன் ஒரு வழியாக வந்தது. சந்து முனை பெண்கள் வரை உற்சாக ஆரவாரம் . அவர் அவர்களை பார்த்து கும்பிட்டார். கடைகளை பார்த்து கையசைத்தார். 'போய்யா, கிழவா' என்று மனதினில் திட்டிக்கொண்டு கடு கடு என்று என் வீட்டு வாசலில் நின்றிருந்த என்னை பார்த்து பெரிதாக சிரித்தார். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஆம். என்னைத்தான் இன்னும் பார்க்கிறார். அசடு வழிந்துகொண்டு இறுக்கமாக கட்டிக்கொண்டிருந்த கைகளை பிரித்து அவரை நோக்கி அசைத்தேன்.

அரை நிஜார் பருவத்தை கடந்தபோதுதான், அரசியலில் எம்ஜியாரின் வெற்றியின் ரகசியமும் சிவாஜியின் தோல்விக்கான காரணங்களும் கொஞ்சம் புரிந்தது.

ஆனாலும் சிவாஜி ரசிகன் என்ற நிலைப்பாட்டிலிருந்து நான் மாறவேயில்லை.

Saturday, December 6, 2008

கமுகர

பயணம் செல்லுபோது எந்த ஊரை கடந்தாலும் அந்த ஊருடன் சம்பந்தப்பட்ட பிரபலமானவரின் பெயர் சட்டென்று மனதில் உரைக்கும். கொத்தமங்கலம் என்ற பெயரை கேட்டவுடன் சுப்பு என்று மனம் சொல்கிறதல்லவா? அதுவும் கேரளா என்றால் கேட்கவே வேண்டாம். அடூர் கோபாலகிருஷ்ணன், மாளா அரவிந்தன், பரவூர் பரதன், கைதப்புரம் தாமோதரன் நம்பூதிரி என்று சடசடவென்று பெயர்கள் மரத்திலிருந்து பழம் போல வீழும்.

ஒருமுறை எங்கள் கடைக்கு ஒரு வாட்ட சாட்டமான மலையாளி வந்தார். ஒரு காகித டீலர் கம்பெனிக்கு போர்டு செய்ய வேண்டும். அவர் கேரளத்திலிருக்கும் அந்த கம்பெனியின் தலைமை நிர்வாகி. விசிட்டிங் கார்டை தந்தார். அதில் அவரது வீட்டு முகவரி கமுகர என்ற ஊரில் இருப்பதாக இருந்தது. உடனே எனக்குள் இருந்த 'ஊரும் பேரும்' ரசிகன் விழித்துக்கொண்டான்.
'கமுகர புருஷோத்தமன்"
சென்ற தலைமுறையின் பிரபல பின்னணி பாடகர். வித்தியாசமான குரல் படைத்தவர். நிறைய பாடல்களை கேட்டிருக்கிறேன்.

வாட்ட சாட்ட பேர்வழியிடம் 'கமுகரவில் நானறிந்த ஒரு பிரபலம் இருக்கிறாரே'
என்று ஆரம்பித்தேன்.
'யார் அவர்' என்று அவர் வினவினார்.
'கமுகர புருஷோத்தமன், பிரபல பாடகர், அவர் பாட்டை கேட்டிருக்கிறேன்' என்றேன்.

அவர் முகத்தில் ஆச்சரியம். தமிழ்நாட்டில் ஒரு கடையில் உட்கார்ந்து கொண்டு டைப் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தமிழனிடம் இதை எதிர்பார்த்திருக்கமாட்டார் என்று வெற்றி பெருமிதத்துடன் நான் அவர் முகத்தை நோக்கினேன்.

'அவர் எனது தந்தை' என்று அவர் சலனமில்லாமல் சொன்னார். மகிழ்வை மெதுவாக வெளிப்படுத்தினார். சந்தேகத்துடன் 'இப்ப அவர் இருக்கிறாரா' என்று வினவினேன்.
'இல்லை, இருந்தால் இப்படி கோயம்புத்தூரில் ஒருவர் தன்னை விசாரித்தார் என்று தெரிந்து மகிழ்ந்திருப்பார்'.

அன்று முழுவதும் நான் நானாக இல்லை.

உபசாரம்

எங்கள் வீட்டுக்கு பின்புறம் தேவேந்திர வீதி. அவர்களுக்கென்றே ஒரு மாரியம்மன் கோவில் இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பூசாரி மாறிவிடுவதுண்டு. அதில் ஒருவர் மிகவும் அடக்கமானவர். வருடாவருடம் கோவிலுக்கு பெயின்ட் அடிக்க என்னிடம் நன்கொடை வாங்குவதுண்டு. அவரிடம் பூசை முறைகளை பற்றி நான் விசாரிப்பதுண்டு. கருவறைக்குள் எல்லோரும் வரலாமா என்றவுடன் கோவித்துக்கொண்டார். ஒரு பயலை உள்ளே விடமாட்டேன், அப்புறம் நான் எதுக்கு அங்கே பூசாரி என்று பொருமினார். (கருவறைக்குள் பார்ப்பனர்கள்தாம் மற்றவரை நுழைய விடாமல் தடுக்கிறார்கள் என்று சொல்பவர்கள் கவனிக்க)

இவர் ஒரு நகராட்சி ஊழியர். மின்மயானம் அமைந்த பிறகு அங்கே வாட்ச்மேன் டியூட்டி போட்டுவிட்டார்கள். நெற்றியில் பெரிய பட்டை அடித்துக்கொண்டு சிவப்பழமாக மயானத்தில் காட்சி அளிப்பார். மயானத்திற்கு எப்போதாவது ஏதாவது சாவுக்கு நான் போனால், எனக்கு ராஜ உபசாரம் நடக்கும். எனக்கே கூச்சம் வரும் அளவிற்கு உபசரிப்பார். சுடுகாட்டில் என்னடா உபசரிப்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதாவது நானே ஒதுங்கி நின்றாலும் என்னை தர தர என்று இழுத்து ஸ்பெஷல் தரிசனத்திற்கு இரும்பு ஷட்டர் தாண்டி உள்ளே அழைத்து சென்று விடுவார். உற்றார் உறவினரெல்லாம் வெளியே நிற்க, சடலம் பக்கென்று பற்றிக்கொள்ளும் காட்சியை விசேஷமாக என்னை பார்க்கவைக்கிறாராம்.

இதற்காகவே நான் இப்போதெல்லாம் மயானம் செல்வதை தவிர்த்துவிடுகிறேன்.
திடீரென்று காலையில் ஒருநாள் இவரிடம் சிக்கிக்கொண்டேன்.
'என்ன சார், பாக்கவே முடியவில்லை, சுடுகாட்டுக்கும் வர்றதேயில்லை..'

கடுப்பாகி விட்டது.'
'நிச்சயமா வருவேனுங்க, எங்க செத்தாலும் ஆத்துப்பாலம் சுடுகாடுதான்னு உயிலே எழுதி வெச்சுட்டேன்'

அவருக்கு என்னவோ போலாகிவிட்டது.
எனக்கும்தான். ஒரு நல்ல மனிதரை புண் படுத்திவிட்டேனோ என்று.

Friday, December 5, 2008

தொலைந்து போனவர்கள்

அந்த பையனை அவன் அப்பா என்னிடம் அழைத்துவந்தபோது அவனுக்கு வயது 17. பிளஸ் 2 முடித்திருந்தான். ஓவியக்கல்லூரியில் சேர்ந்து பயில வேண்டும் என்பது ஆசை. அதற்கான பயிற்ச்சிக்களம்தானே எங்கள் கடை. பிரமாதமாக வரைவான். நல்ல பயிற்ச்சி எடுத்த பின் நுழைவுத்தேர்வுக்கு அனுப்பி வைத்தோம். முற்பட்ட வகுப்பில், நெல்லை சைவப்பிள்ளையாய் பிறந்ததினால் சீட் கிடைக்கவில்லை. விடவில்லை, மீண்டும் ஒரு வருடம் பயிற்ச்சி. அடுத்த வருடம் மீண்டும் கஜினி முகம்மது.

அவன் தந்தை ஒரு புகைப்பட ஆர்வலர், மில்லில் குமாஸ்தா. பையனுக்கும் புகைப்பட ஆர்வம் தொற்றிவிட்டது. எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏன் இவனை திரைப்படக்கல்லூரிக்கு அனுப்பக்கூடாது, என் தம்பி அப்போதுதான் படிப்பை முடிக்கிறான். பையனின் மாமா நடிகர் சிவகுமாருக்கு நண்பர். எப்படியோ திரைப்பட்க்கல்லூரியில் மெரிட்டிலேயே இடம் கிடைத்தது. தங்க பதக்கத்துடன் வெளிவந்தான்.

படிக்கும்போதே சா.கந்தசாமியின் 'தொலைந்து போனவர்கள்' தொலைக்காட்சி தொடரிலும் சிறுவனாக நடித்து புகழ் பெற்றான். என் தம்பியின் முதல் படமான 'அதர்மத்தில்' துணை ஒளிப்பதிவாளராக சேர்த்துவிட்டேன். இன்னொரு சிஷ்யன் மணிராஜுக்கும் இதுதான் அறிமுகப்படம்.

நீண்ட நாட்கள் கழித்து அவன் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டான், கஸ்தூரிமான், திருவிளையாடல், மருதமலை, மலைகோட்டை என்று அவன் பணி புரியும் படங்களின் பெயரை சொன்னான். மிகவும் மகிழ்ந்தேன்.

வைத்தி தன் சொந்த சிக்கல்களில் இருந்து மீண்டு, மீண்டும் கலை பயணத்தை தொடர வேண்டும் என்பது என் பேராவல்.

Nov 07

ஷேர் மார்க்கட்டும் நானும்

இலக்கிய நண்பர்கள் எப்போதும் எனக்கு ஏராளம். எண்பதுகளில் கோவையில் ஒரு கோஷ்டிக்கு,புதிதாக தொழில் தொடங்கவேண்டும் என்று ஒரு பேரார்வம் தோன்றியது. கம்யூனிஸ்ட் மற்றும் தி.க அனுதாபிகள்; எல்லோரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள். முன்னணியில் ஒரு நாலு பேர்- இயக்குனர்கள் . பப்ளிக் லிமிடட் கம்பெனி. பங்குகள் விற்றார்கள். என்னை போல், இஞ்சினீயர் கந்தசாமி போன்றவர்கள் எல்லாம் அப்போது ஆளுக்கு 5,000 போட்டோம். எங்கள் உயிர் நண்பரும் பொலம்பல் பொங்கியண்ணன் என்று அன்பாக அழைக்கப்பட்ட வக்கீல் பாலு தன் தோட்டத்தையெல்லாம் விற்று பெரும் பங்குகள் வாங்கி இயக்குனரானார்.

என்ன தொழில் என்று சொல்லவேயில்லையே. ஊசி மருந்தை அடைப்பார்கள் அல்லவா , ஒரு சிறிய கண்ணாடி ஆம்பியூல், அதை தயாரிப்பதுதான். தென்னாட்டிலேயே எங்கும் அது தயாரிக்கப்படவில்லை என்று சர்வேய் முடிவுகள் தெரிவித்ததனால் எல்லோரும் உற்சாக்மாக இருந்தனர். அரசு நிறுவனமான டிக்கில் 10 லட்சம் லோன் கிடைத்தது.
கவிஞர்கள் இளையவனும் பாதசாரியும் வேனிலும் தலைமை பொறுப்பு எடுத்துக்கொண்டனர்.

இலக்கிய பெரும் தலைகள் கலந்து கொண்ட அற்புதமான திறப்பு விழா. இயந்திரத்தை இயக்குவதற்க்கென்றே, கல்கத்தாவிலிருந்து ஒரு முதியவரை கொண்டு வந்திருந்தனர். அவர் என் அபிமான இந்தி பாடகர்களில் ஒருவரான மன்னாடேயின் உறவினர் என்றவுடன் எனக்கு அவர் மேல் தனி பாசம் பொங்கி விட்டது. என் இந்தியை கூர் தீட்ட ஒரு ஆளும் வேண்டுமில்லையா! என் நண்பர்கள் நிறைய பேர் பங்குகள் வாங்கினர். இயக்குனர்களும் பெரும் கடன் வான்கியிருந்தனர்.

ஆர்டர்களுக்காக அலைந்தனர், திரிந்தனர். ஒன்றும் தேறவில்லை . இயந்திரமும் இயக்க வந்தவரும் வெட்டியாக உறங்கினர் . தொழிற்சாலையில், எப்போதும் இலக்கிய/ அரசியல் சர்ச்சைகள், வடையும், பீரும், டீயும் சிகரெட்டும் கரைந்தன.

கடன்கள் அடைக்கபடவில்லை. மூடுவிழா நடந்தது. டிக் வழக்கு தொடர்ந்து இயந்திரத்தை பறிமுதல் செய்தது. பாக்கி தொகைக்காக வழக்கும் நடந்தது. தோழர்கள் உடைந்து சிதறிப்போனார்கள்.

இவர்களுக்காக வழக்கை நடத்தியவர், இளையவனின் உறவினரும் என் வகுப்பு தோழருமான ஒருவர். டிக்கின் சட்ட அதிகாரியும் என் வகுப்பு தோழிதான். காலம் எல்லோரையும் புரட்டி போட்டது. 'பள்ளிக்கூடம்' படத்தில் வருவது போல் இவர்கள் என்ன ஆனார்கள்?

பாதசாரியின் திருமணம் முறிந்து, மன நிலை பாதிக்கப்பட்டு, பின்னர் 'காசி' என்ற அற்புதமான சிறுகதையை எழுதினார். இரண்டாவது திருமணம் நடந்து பொறுப்புள்ள கணவனாக இப்போது ஏதோ ஒரு சிறிய பத்திரிகையில் நிருபராக இருக்கிறார். கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டார்.

வேனில் அடிபட்டு உதைபட்டு இப்போது ஒரு அச்சகம் நடத்துகிறார். ஏராளமான கவிஞர்களுக்கு கடனுக்கு புத்தகம் அடித்து கொடுத்துவிட்டு, அவர்கள் இவருக்கு போட்ட நாமத்துடன் உலா வருகிறார்.

பாலு, வக்கீல் தொழிலை விட்டு சட்ட அதிகாரியாக வேலைக்கு போனார். சம்பாதித்த பணத்தில் திடீரென்று எங்காவது நிலம் வாங்குவார். வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயம் செய்வார். நஷ்டம் ஏற்பட்டவுடன் மீண்டும் வேலைக்கு போவார். இப்போது மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் ஒரு பெரிய கம்பெனியில் கூலிக்கு மாரடிப்பதாக சொல்லிக்கொள்வார். கந்தசாமி, இப்போது உள்ளூர் டாட்டா பிராஜெக்ட்ஸின் தலைமை மேலாளர். நான் மட்டும் அப்படியே இருக்கிறேன்.

அடடா, ஒருவரை விட்டுவிட்டேனே! எம்.எல்.அனுதாபியான இனியவன் குடும்பத்தை விட்டு எங்கோ போய்விட்டார். அலைந்து திரிந்து காஷாயத்துடன் திரும்பி வந்தார். ஜோதிடம், நாடி என்று ஏதோ செய்துவந்தார். திடீரென்று ஒரு நாள் முழு நீள சாமியாராக மாறிவிட்டார் . அவர் மனைவியும் மாதாஜியாக மாற, ஒரே மகன் இளைய பட்டமாக, ஒரு பீடத்தை அமைத்துவிட்டார். பெரும் செல்வந்தர்கள் அவர் பக்தர்கள். ஒரு கோவிலையும் கட்டி, யோகா வகுப்புகளும் நடத்தி ஒரு லெவெலுக்கு வந்துவிட்டார். ஆனால் ஜக்கிக்கு அடித்த அளவிற்க்கு அதிர்ஷ்டம் அடிக்காததால், குடத்திலிட்ட விளக்காக திகழ்கிறார் எங்கள் லோகல் ஜகத்குரு!

Oct 07

பொன் விலங்கு


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு என் மாணவர்களுக்கு ஒரு ஓவியப்போட்டி வைத்திருந்தேன். மிக சிறப்பாக வரைந்திருந்தார்கள். இவர்களை ஊக்குவிக்க ஏதாவது செய்யவேண்டுமே என்று யோசித்தபோது, முதல் மூன்று பரிசு பெற்றவர்களுக்கு வாட்டர் கலர் செட் ஒன்றும், மற்ற 9 ஆறுதல் பரிசு பெற்றவர்களுக்கு பென்சில் செட் ஒன்றும் பரிசாக கொடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது. அதிகாரிகளிடம் கேட்டேன். காந்தி ஜெயந்தி அன்று விழா இருக்கிறது. அன்று வைத்து கொள்வோம் என்றனர். சொல்ல மறந்துவிட்டேனே. என் மாணவர்கள் அனைவரும் கொலைக்குற்றத்திற்க்காக ஆயுள் தன்டனை பெற்ற சிறைவாசிகள். கைக்காசு போட்டு பரிசுப்பொருட்களை வாங்கிக்கொண்டு போனோம்.

சிறை விழாக்கோலம் பூண்டிருந்தது. ஒர்க் ஷாப்பில்தான் விழா. எலுமிச்சம்பழத்துடன் 'இல்லவாசிகளின்' வரவேற்பு. திடீரென்று ஒரு பெரும் கூட்டம் வந்தது. முழு சூட் உடையுடன் ஆண்களும் லிப்ஸ்டிக் பெண்களும், லயன்ஸ் , ரோட்டரி குழுவினர். மேடையில் பேனர்கள் கட்டப்பட்டன. புகைப்படக்காரர்களும் வந்தனர். சிறையில் சேவை செய்யும் பணியாளர்களுக்கும், வெளியாட்களுக்கும் 'சிறை செம்மல்'(?) விருதும் பொன்னாடையும் வழங்கும் வைபவம். யோகா, எய்ட்ஸ் விழிப்புணர்வு, இசை, நடனம் மற்றும் எல்லோரும் இந்த விருதை பெற்று சென்றுவிட்டனர். பொன்னாடைக்காக தினவெடுத்த தோள்களுடன் காத்திருந்தேன். யாரும் கூப்பிடவில்லை.

லயன்ஸ் கிளப்பினர் கொண்டுவந்திருந்த பரிசுகளை பார்த்து மலைத்து என் அவல் மூட்டை ஒளிந்துகொண்டது. பிரம்மான்டமான பிளாஸ்டிக் குப்பை வாளிகள், பக்கெட்டுகள் முன்னே என் கலர் பாக்ஸ் எந்த மூலைக்கு! குறைந்த மின்விசிறிகள் கொண்டது அந்த அரங்கம். கோட்டு போட்ட லயன்ஸ் வியர்வை மழையில் நெளிந்து கொண்டு பிளாஷ் ஒளியில் ஒரு வழியாக 'ஓட்டப்பந்தயம், தாண்டி குதித்தல்' போன்ற விளையாடு போட்டிகளுக்கு பரிசளித்துவிட்டு வியர்வையை துடைத்துவிட்டு வெளியேறிவிட்டனர். ஓவிய போட்டி பற்றி பேச்சு மூச்சே காணோம். பாவம், என்னுடைய மாணவர்கள் வெகுண்டெழுந்து வெல்பேர் ஆபீசரிடம் முறையிட்டவுடந்தான், அவர்களுக்கு நினைவே வந்தது போலும்.

பிளாஷ் வெளிச்சங்கள் இல்லாத அந்த அரங்கில் இப்போது மேடையில் நானும் அதிகாரிகளும் கீழே இல்லவாசிகள் மட்டுமே. பரிசுகளை வழங்கினேன் . எங்கிருந்தோ அவர்கள் வரைந்த ஓவியங்கள் மேடைக்கு வந்தன. டி.ஐ.ஜி, சூப்பெரின்டெண்டெண்ட், ஜைலர் அனைவரையும் பென்சிலில் அற்புதமாக வரைந்து அவர்களுக்கே பரிசளித்தனர்.
அதிகாரிகள் முகத்தில் அப்போதுதான் புன்னகை மலர்கிறது. கைதிகளின் கரகோஷம் , காலையிலிருந்து முதன் முதலாக அரங்கில் கலகலப்பு. பெருமையுடன் (பொன்னாடையில்லமலும்) வெளியெறினேன்.
'சார், சாப்பாடெல்லாம் ரெடி, எங்களோடு சாப்பிடுங்கள்' என்றனர் மாணவர்கள்.
'என்னப்பா ஸ்பெஷல் இண்ணக்கி?'
'தக்காளி சாதம்'
'அட போஙப்பா, ஜெயில்ல சிக்கன் எல்லாம் போட்ராங்கண்ணு சொன்னாங்க ?'
என்று கிண்டலடித்தேன்.
'சார், இண்ணக்கி காந்தி ஜெயந்தி'.

சாப்பிடாமல் விடைபெற்றேன்.
Sep 07

புட் போர்டில்

புட்போர்டில் வைரமுத்துவுடன்....

இதுவும் தூள் தலைப்பு! சாவி நடத்திக்கொண்டிருந்த 'திசைகள்' இளைஞர் இதழுக்கு மாலன் ஆசிரியர். இப்போதைய பிரபலங்கள் எல்லாம் அப்போது சின்னப்பசங்களாக, மாணவர்களாக, அதில் எழுதிக்கொண்டிருந்தனர். என் நண்பர் மார்ஷல் (இன்றைய பாண்டிச்சேரி தொலை தொடர்பு பொது மேலாளர்) ஒரு தொடர்கதை எழுதிக்கொண்டிருந்தார்; கதையின் தலைப்பு-'மென்மையாக கொலை செய்'! (அவர் எழுதியதை நிறுத்தியதில் எனக்கு பெரும் பங்கு உண்டு)அதற்க்கு நான் ஓவியம் வரைந்துகொண்டு இருந்தேன். சில சமயம் அமிஞிக்கரையிலுள்ள பத்திரிகை அலுவலகத்திற்க்கு செல்வதுண்டு. அங்கு லே அவுட் ஓவியராக கங்கன் என்ற இலைஞரும் அவருக்கு உதவியாக அரஸ் என்ற இலைஞரும் இருப்பார்கள். கங்கன் என் ஓவியங்களை கடுமையாக விமர்சிப்பார். அரஸ் அமைதியாக இருப்பார். இன்று அரஸ் ஒரு பெரும் புகழ் பெற்ற ஓவியர்.

ஒரு நாள் திருவல்லிக்கேணியிலுருந்து 27 ஈ பஸ்ஸில் கிளம்பினேன். பயங்கர கூட்டம். புட்போர்டில் பயணம். நுங்கம்பாக்கத்தில் ஒருவர் பஸ்ஸில் ஏறினார். கையில் ஒரு பைல். கறுத்த முகம்,டக் செய்த பேண்ட், மெல்லிய மீசை, இரு முனைகள் மட்டும் கொஞ்ஜம் பெரிதாக. வைரமுத்துதான். சில பத்திரிகைகளில் புகைப்படம் பார்திருக்கிறேன். ஓரிரு வாரங்களுக்கு முன்தான் 'நிழல்கள்' வெளியாயிருக்கிரது. புட்போர்டில் தொங்கிகொண்டெ அமிஞ்ஜிக்கரையில் இறஙினேன். அவரும் அதே ஸ்டாப்பில் இறங்கினார் . சாவி அலுவலகத்திற்க்கு போனேன். அவரும் பின் தொடர்ந்தார். அங்கிருந்து 'விசிட்டர்' பத்திரிகையும் வெளிவந்து கொண்டிருந்தது. அனந்து அறைக்குள் வைரமுத்து போய்விட்டார். அப்போது விசிட்டரில் தொடர்ந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தர்.

'....திரைப்படத்தை
சின்ன தீக்குச்சிக்கு
தின்ன கொடுப்போம்'

என்ற திரைப்படங்களுக்கெதிரான புகழ் பெற்ற வரிகள் அதில்தான் பிரசுரமாகின. அலுவலகத்தில் வழக்கம் போல கங்கனிடம் அர்ச்சனைகள், புன்முறுவலுடன் அரஸ், கடுகடுவென்றிருந்த நகைச்சுவையாளர் சாவி, பக்கத்து டேபிளில் பரபரப்பாக எழுதிக்கொண்டிருந்த பாலகுமாரன்....போன வேலையை முடித்துவிட்டு வெளியே வந்தேன். பஸ்ஸுக்கு காத்திருந்தபோது வைரமுத்துவும் வந்தார். மெதுவாக பேச்சு கொடுத்தேன். 'அது ஒரு பொன்மாலை பொழுது' பற்றித்தான் நிறைய பேசினோம். பஸ் வந்தது. மீண்டும் புட்போர்ட். அதிலும் பேசிக்கொண்டே வந்தோம். இறங்கும்போது சொன்னேன். 'மறந்துடாதீங்க, என் பெயர் ஜீவா'.
பதிலுக்கு கூவினார்- 'மறக்க முடியுமா ஜீவா என்ற பெயரை'. அவர் சொன்னது தோழர் ஜீவாவை.

அதற்க்கு பிறகு பல விழாகளில் அவரை அருகே பார்த்திருக்கிறேன். பேசியதேயில்லை. .

Aug 07

ஏழாவது மனிதன்


எங்கள் வீடும் தொழிலும் டவுன் ஹால் 5 முக்கு பகுதியில் உள்ளன. இங்கு ஓட்டல் மனோகரா என்ற புகழ் பெற்ற பிரியாணி ஓட்டல் இருந்தது. இதன் உரிமையாளர் மைனர் நாராயணன். வீடும் எங்கள் ஏரியாவில்தான். இவரது மகன் வேலாயுதன் நாயர்; எம்.ஜி.யார் போன்ற தோற்றம். இன்னொரு புகழ் பெற்ற சென்ட்ரல் பிரியாணி கடையின் முதலாளியான வேலாயுதம் நாடாருடன் தொழில் பங்குதாரராக இருந்து நிரைய திரைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இன்னொரு சுவாரசியம்-இவர்களுடைய திரைப்படங்களுக்கு பேனர் கட் அவுட் வரைந்து கொடுப்பவர் வேலாயுதம் பிள்ளை (அட, எங்கப்பா! என்ன பொருத்தம்)

நாயருக்கு ரெயின்போ தியேட்டருக்கு எதிரில் இன்னொரு ஓட்டல்/டீக்கடை இருந்தது. ரெயின்போவுக்கு ஆங்கிலப்படம் பார்க்க வரும் எந்த அறிவு/அறிவில்லாத ஜீவியும் இங்கே ஒரு டீயும் தம்மும் அடிக்காமல் போகமாட்டார்கள். இவரது மகன் ஒல்லியாக எங்கள் பகுதியில் சுற்றிக்கொண்டிருப்பான். ஒரு நாள் எங்கள் கடைக்கு ஒரு கவருடன் வந்தான்(ர்). ஏதோ அவருடைய அப்பா கொடுத்துவிட்டிருக்கிறர் என்று நினைத்து, என்ன என்றேன்.
'நான் நடிச்ச படம் ஒண்ணு இந்த வாரம் ராயல் தியேட்டரில் ரிலீசாகுது, காந்திபுரத்தில் பெரிய ஹோர்டிங் வெக்கணும், இந்த ஸ்டில்லை வைத்து கொஞ்சம் முகத்தில் ஆக்ஷனோடு வரையணும்'.
எனக்கு ஒன்றும் புரியவில்லை, இந்த பையன் நடிக்கிறானா..
'படம் பேரு?'
கேட்டவுடன் மகிழ்ச்சியடைந்தேன், நானும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படம்தான். இயக்குனர் பூனே இன்ஸ்டிடியூட் மாணவர் ஆயிற்றே!
'உங்கப்பா சொல்லவேயில்லையே, சரி செய்துடறேன்.'
வரைந்து வைத்தேன். அவரும் உடன் இருந்தார். கல் வீசினால் விழும் தூரம்தானெ தாத்தா வீடு.
படம் ரிலீசன்ரு தியேட்டரில் ஆளே இல்லை. என்னைப்போன்ற தீவிரவாதிகளும், அவர்களுடைய ஓட்டல் சப்ளையர்களும்.

அவர் எங்கோ போய்விட்டார்.இப்போது தன் வயதுக்கு மீறிய தோற்றத்துடன் காணப்படுகிறார். எனக்கு அவருடைய நடிப்பு மிகவும் பிடிக்கும். அதற்க்கு பிறகு சந்தித்ததில்லை.

படம் : ஏழாவது மனிதன்
நடிகர் : ரகுவரன்.

இப்போது அவர் இல்லை என்பதை நம்ப முடியவில்லை.

தகடு தகடு


வாழ்க்கையில் நிறைய பேரை கடந்து வருகிறோம். வெகு சாதாரணமாக பார்த்த ஆட்கள், பிரபலங்களானவுடன், அட எப்படி இருந்த இவன் எப்படி ஆயிட்டான் என்று பெருமூச்சு விடுவதில்லையா, நம் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும், அப்படி சில பேரை சொல்லட்டுமா?

கோவை அரசு கலை கல்லூரியில் சீனியர் ஒருவர், எப்போதும் கல்லூரி மதில் சுவர் மேலே அமர்ந்திருப்பார். படு ரகளை பார்ட்டி. ஒரு முறை கல்லூரி மாணவர்களுக்கும் ரயில்வே தொழிலாளர்களுக்கும் நடந்த கலவரத்தில், சம்பந்தமில்லாமல் ஒரு கோஷ்டி அக்கம் பக்கத்து ஹோட்டல்களிலிருந்து ஜாம் டின்கள், பிஸ்கட் ஜாடிகள் போன்ற அரிய பொருட்களை 'களவாடி ஓடிய அரிய பொழுதுகள்'..மற்றும் பல நிகழ்வுகளில் இந்த மாணவர் இருப்பதை பார்த்திருக்கிறேன். பெரிய இடத்து பிள்ளை.தந்தை சுத்த தமிழ் இனிஷியல் போட்ட பிரபல டாக்டர். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும் 'வசந்த மாளிகை' வசனத்தை நண்பர்களிடம் உரத்த குரலில் முழங்குவதுண்டு .

நான் பிறகு சென்னையில் படிக்கும்போது, மதியம் கலைவாணர் அரங்குக்கு அடிக்கடி படம் பார்க்க போவேன். குறைந்த கட்டணம், 'யாருக்காக அழுதான்', 'திக்கற்ற பார்வதி' போன்ற தரமான படங்கள், தியேட்டரில் யாருமே இருக்க மாட்டார்கள். அப்போது இந்த நபரை அங்கு அடிக்கடி பார்ப்பேன். பேச்சுவார்த்தை இல்லை. பிறகு ஒரு நாள் ஒரு கமல் படத்தில் இவரை வில்லனாக பார்த்தேன். அட, சென்னைக்கு இதுக்குத்தான் வந்தீரா என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். கொஞ்ச காலம் கழித்து, இவர் கோவையில் எங்கள் கடையில் ஒரு கட் அவுட்டுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறர். அதாவது சொந்த ஊரில் ஒரு பெரிய கட் அவுட் வைத்து, மாலையெல்லாம் போட்டு பார்ப்பதில் ஒரு சந்தோஷம். படம் பெயர் 'அவசரக்காரி'. படம் ஊத்தல். கட் அவுட் செய்தவர்கள், போஸ்டர் ஒட்டியவர்கள் அனைவருக்கும் நோ பேமெண்ட். யாராவது அந்த ஏரியாவில் இருந்தால்தானே! ரொம்ப வருடங்கள் கழித்து ஒரு பேட்டியில் கூட அவர் இதை மறைக்காமல் தெரிவித்திருந்தார்.

அன்றைய ரங்கராஜ், இன்றைய சத்யராஜ்!

Jul 07

ஒரே ஆள்


என்னிடம் அடி வாங்கிய ஒரே ஆள் (சூபர் தலைப்பு)

நான் கல்லூரியில் படிக்கும் காலத்து ஒரு முறை சொந்த ஊரான பூதப்பாண்டிக்கு போயிருந்தபோது,எஙள்ள் கடை வேலைக்காக என்னுடன் ஒரு தச்சு ஆசாரியை அனுப்பி வைத்தார்கள். அவன் அய்யப்பன். என்னை விட நாலைந்து வயது பெரியவன். அட்டை கருப்பு. ப்ரூஸ் லீயை போல் உடல் வாகு. என்னை அண்ணா என்றுதான் அழைப்பான். நானும் அவ்வாறுதான் அழைப்பேன். கொஞ்ச நாள் ஒழுங்காக இருந்தான். குடிக்க ஆரம்பித்தான். என் தந்தை இறந்தவுடன், பயம் விட்டு போய், அதிகமாக ஆட ஆரம்பித்துவிட்டான். எங்களுக்கோ வேறு வழியில்லை. தொழிலை ஒழுங்காக நடத்தவேண்டும் என்ற பயத்தில் இருக்கும்போது, இது வேறு பிரச்சினை. முக்கியமான வேலைகள் இருக்கும்போது முழு போதையில் வந்து அட்டகாசம் செய்வான். இதில் பெண் தொடர்புகள் வேறு. அம்மா மகள் என்று இரன்டு பேருடன் ஜாலி. சரி கல்யாணம் செய்து வைக்க அவன் உறவினர்கள் முடிவு செய்து ஒரு அப்பாவி பெண்ணையும் குமரி மாவட்டத்திலிருந்து கொண்டு வந்தனர். இந்த திருந்தாத கேஸ் , மேலும் ஆட்டம் போட்டது. தீபாவளி போன்ற சமயங்களில் எல்லா தியேட்டர்களிலும் ஒரே நேரத்தில் படம் மாற்றுவதால், எஙளுக்கு கடும் வேலைகள் இருக்கும். பேனர்கள், கட் அவுட்களை நிறுவ வேன்டும். அந்த சமயத்தில் முக்கியமான ஒரு பணியாள் , முழு போதையில் சாக்கடையில் கிடந்தால் எனக்கு எப்படி இருக்கும்?

மணி என்ற ஒரு சிறுவன், பத்தாம் கிளாஸ் பெயிலாகி, பல அட்டம்ப்டுகள் அடித்து என்னிடம் ஓவியப்பயிற்சி பெற்று வந்தான். மலையாளி, மிகவும் ஏழை. சென்னை ஓவியக்கல்லூரியில் அவனை சேர்க்கவேண்டும் என்பது எங்களை போன்றவர்களின் ஆசை. அவனை இவனுக்கு ஏனோ பிடிக்காது. 'எடா கஞ்சி ' என்றுதான் அழைப்பான். ஒரு நாள் நான் வரைந்துகொண்டிருந்தேன். போதையுடன் அய்யப்பன் இன்னொரு கொட்டகையில் கத்திக்கொண்டிருந்தான். மணியை ஒரு வேலையாய் அங்கு அனுப்பினேன். திடீரென்று ஒரு மரணக்கூச்சல்..மணியிடமிருந்து. அய்யப்பனின் சத்தம் வேறு. எல்லோரும் பதறி ஓடினோம், என் கையில் தூரிகை .

அங்கு கண்ட காட்சி. மணி படுத்து கிடக்கிறான். அவன் வயிற்றின்மீது அமர்ந்திருக்கிறான் அய்யப்பன். கையில் ரம்பம். அதைக்கொண்டு சிறுவனின் கழுத்தில் வைத்து அறுக்கும் முயற்ச்சி. ஒரே களேபரம். எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தூரிகையை வீசினேன். 'டேய்' என்று அலறினேன். சன்னதம் வந்தது போல் அந்த ப்ரூஸ் லீயின் முடியை கொற்றாகப்பற்றி தூக்கி, விட்டேன் ஒரு குத்து. பத்தடி பறந்து விழுந்தான் அய்யப்பன். என் வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக நான் ஒரு மனிதனை அடித்த அடி!

அதற்கு பின் அய்யப்பன் கொஞம் அடங்கினான். குடித்திருக்கும்போது மட்டும் என்னிடம் 'அந்த மலையாளத்துக்காரனுக்காக என்னை அடித்துவிட்டீர்களே' என்று புலம்புவான். ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு பிறகு, ஒரு நாள் ரம்மில் பாலிடாலை கலந்து குடித்துவிட்டான். என் தந்தைக்கு கொள்ளி வைக்க மறுத்த 'பகுத்தறிவுவாதியான' நான், ஊரிலிருந்து உறவினர்கள் வர தாமதமானதால், இவன் உடலுக்கு கொள்ளி வைத்தேன் .

சரி, மணி என்ன ஆனான்.. கடும் சிரமங்களுக்கிடையே சென்னை ஓவியக்கல்லுரியில் படித்து,திரையுலகில் இப்போது ஒரு புகழ் பெற்ற கலை இயக்குனராக திகழ்கிறான். 'அதர்மம்' தொடங்கி 'தில்', 'தூள்', கில்லி' போன்ற படங்களின் டைட்டில்களில் மணிராஜ் என்ற பெயரை பார்க்கலாம்.

Aug 07

ரகசிய ஓவியன்

இப்போது கருத்தில் எனக்கு வைத்திருக்கும் ஓவியப்போட்டியை பார்க்கும்போது, காவல் துறையுடன் எனக்கு இருந்த ஓவியத்தொடர்பு நினைவுக்கு வருகிறது. 22 வயது எனக்கு. அப்போது அரசாங்கமே பொருட்காட்சிகளை நடத்தும் புதிய முறை அமுலுக்கு வந்தது. காவல் துறை வழக்கம் போல ஒரு ஸ்டால் அமைக்கிறது. அப்போது புதிய மாவட்ட காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்தவர். புதுமையாக ஏதாவது செய்ய ஆசைப்பட்டார். கோவை நகரில் ஓவிய நிறுவனம் நடத்தும் அத்தனை பேரையும் அழைக்க உத்தரவிட்டார். என் தந்தையோ கூச்ச சுபாவி. போலீஸ் என்றவுடன் ஒரு பயம். நைசாக என்னை தள்ளிவிட்டார்.
'படிச்சிருக்கையில்லே, போய் இங்க்லீஷ் பேசி சமாளி , இதுக்கெல்லாம் நீதான் போணும்' என்றர். நான் அதை விட பயந்தாங்கொள்ளி . வேறு வழியில்லாமல் போனேன்.

அதிகாரி அறையில் நாங்கள். எல்லோரும் தொழிற்துறை ஓவிய ஜாம்பவான்கள். நானோ கல்லூரியிலுருந்து வெளி வந்திருக்கும் ஒரு பச்சா. காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் உள்ள நட்புறவை சித்தரிப்பது போல் ஸ்டால் அமைய வேண்டும் , உடனே கருத்துக்களை சொல்லுங்கள் என்றார். எல்லோரும் பேய் முழி முழித்துக்கொண்டிருந்தனர். ஒரு படத்தை பிரதி எடுத்து கொடுப்பதில் வல்லவர்களுக்கு, சுயமாக ஆலோசனை சொல்வதில் சிக்கல்...எனக்குள் இருந்த வீர இளைஞன் விழித்துக்கொண்டான்.

'சார், ஒரு பேப்பர் கொடுங்க' என்றேன்.
சர சர என்று ஒரு ஸ்கெட்ச்..ஸ்டாலின் முகப்பை வரைந்து, நுழைவாசலுக்கு மேல் இரன்டு உருவங்கள் கை குலுக்குகின்றன. ஒரு போலீஸ்காரனும் ஒரு பொதுஜனமும்..கைகளுக்கு கீழே மக்கள் நுழையும் வழி. வெகு சாதாரண ஐடியா, ஆனால் நான் வரைந்த விதமும் வேகமும் அதிகாரியை கவர்ந்திருக்க வேண்டும். 'இந்த பையந்தான் இந்த ஸ்டாலை செய்யப்போகிறான். மற்ற அனைவரும் போகலாம்' என்றர்.

அந்த இனிமையான, தலையில் நிறைய முடியுடைய அதிகாரிதான் தார்குண்டே, கலைஞர், தெஹல்கி புகழ் முகம்மது அலியாக பின்னாளில் உருவெடுப்பார் என்று சத்தியமாக தெரியாது.

ஒரு பத்து ஆண்டுகளுக்கு, அதாவது கணிணியில் புகைப்படங்களை தொகுக்கும் காலம் வரை, எங்கள் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத குற்றவாளிகளை பிடிக்க ஒரு சினிமா பாணி உத்தியை கடைப்பிடித்தார்கள். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளை என்னிடம் அழைத்து வருவார்கள். அவர்களிடம் விசாரித்து அந்த உருவத்தை அப்படியே கற்பனையில் வரைந்து கொடுப்பேன். இதை வைத்து அசல் குற்றவாளிகளையும் பிடித்தனர். ஒரு கட்டத்தில் இது எனக்கும் என் சீனியர் வக்கீலுக்கும் பெரிய தலைவலியாக மாறியது , நல்ல வேளை, கணிப்பொறியில் முகத்தின் பல பாகங்களை இணைத்து ஒரு புதிய வடிவம் கிடைக்க செய்யும் மென்பொருளை காவல் துறை இணைத்தது.

August 07

இன்குலாப் ஜிந்தாபாத்

'பொலம்பல் பொங்கியண்ணன்' என்று நெருங்கிய நண்பர்களால் (!) அன்பாக அழைக்கப்பட்ட்ட என் நண்பர் பாலு ஒரு மார்வாடிக்காக ஒரு வழக்கில் ஆஜரானார். கேரளாவில் ஓடிக்கொண்டிருந்த ஒரு ரூட் பஸ்ஸிற்கு கடன் கொடுத்திருந்தான் மார்வாடி. ஒரு பைசா கடனும் வட்டியும் வரவில்லை. பஸ்ஸை வேறு கை மாற்றியும் விட்டனர். கோவை கோர்ட்டில் வண்டியை பறிமுதல் செய்ய உத்தரவு ஆகியது. நீதிபதியின் சார்பாக ஒரு கமிஷனர் நியமிக்கபட்டு வண்டியை ஜப்தி செய்யும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது . எங்கள் நண்பர் 'மாமாஜி'தான் கமிஷனர். கொச்சிக்கு புறப்பட்டோம் அனைவரும். வழக்கம் போல் வெட்டி ஆபீசரான நான் துணைக்கு.தலைமை தாங்கியவர் பாலக்காட்டை சேர்ந்த வக்கீல் ஹரிஹரன்.கொச்சியில் இரண்டு குண்டர்கள் துணைக்கு.

கொச்சி போலீஸ் கமிஷனர் எங்களுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். சட்டப்படி செய்ய வேண்டியதை செய்துகொள்ளுங்கள், நாங்கள் தலையிடமாட்டோம் என்று மட்டும் கூறினார். பஸ்ஸின் இப்போதைய உரிமையாளர்கள் மார்க்ஸிஸ்ட் யூனியனை சேர்ந்த இரண்டு டிரைவர்களும் கண்டக்டர்களும்தான். பஸ் டெர்மினஸ்ஸான கொச்சி யூனிவெர்சிடியில் பஸ்ஸை மடக்கினோம். மாமாஜி உத்தரவை காட்டினார். திகைத்துபோனவர்கள் முதலில் மறுத்தனர். அல்லது விடு ஸ்டேஷனுக்கு என்றவுடன் வண்டி கலமச்சேரி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த காவல் நிலையம் அப்போது இருந்தது ஒரு மேட்டின் மேல். ஒரே ஒரு வண்டி மட்டும் போகமுடிந்த பாதை. பஸ்ஸை அங்கு நிறுத்தியாயிற்று. ஆய்வாளருடன் பேசிக்கொன்டிருக்கும்போதே எங்கிருந்தோ வந்து சேர்ந்து விட்டனர் 50 60 சி.ஐ.டி.யூ உறுப்பினர்கள். எங்கள் காரும் பஸ்ஸும் முற்றுகையிடப்பட்டன. ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட்களை பகைத்துகொள்ள ஆய்வாளருக்கு என்ன பைத்தியமா? அவர் அறைக்குள் சென்றுவிட்டார். நாங்கள் திகைத்து நின்றோம். பஸ்ஸுக்குள் எங்கள் டிரைவரும் வக்கீல் உடையில் மாமாஜியும் . காருக்குள் நாங்கள். காம்பவுண்டுக்கு வெளியே ஒரே கூச்சல் . டேய் பாண்டி என்று எஙளை வாழ்த்தி முழக்கங்கள்! சில மணி நேரங்கள் அப்படியே இருந்தோம்.

அந்த நேரத்தில் வெளியிலிருந்து ஒரு போலீஸ் வேன் உள்ளே வந்தது. குறுகிய வழி என்பதால் கொஞ்சம் குழப்பம். ஆட்கள் கலைய, எங்கள் பஸ் ரிவர்ஸ் எடுக்க, அந்த வேன் உள்ளெ வர, திடீரென்று எங்கள் டிரைவர் பஸ்ஸை வெளியே கிளப்பி விட்டான். பதற்றத்துடன் ஆட்கள் விலகி ஓட, எங்கள் கார் பின் தொடர, சட சட என்று கார் தாக்கப்பட்டது. கதவுக்கு வெளியே ஆவேசமான முகங்கள், சிலீரென்று கண்ணாடி உடைந்தது. நாங்கள் பயந்து அலற, ஹரிஹரன் காரை கிளப்பி விட்டார். பெரும் கூச்சலுடன் ஆட்கள் பின் தொடர்ந்து ஓடி வந்தனர்.

தேசிய நெடுந்சாலையில் சினிமாவில் மட்டுமே நான் பார்த்து மகிழ்ந்த ஒரு கார்சேஸ். தடதடக்கும் இதயத்துடன் நாங்கள். முன்னால் பஸ், பின்னால் எங்கள் கார், எங்களை துரத்தி வரும் ஜீப்கள். எங்கள் டிரைவர் கில்லாடி. மாமாஜியை சாலக்குடியில் ஹரிஹரனுக்கு பரிச்சயமான ஒரு இடத்தில் இறக்கி விட்டு பறந்துவிட்டான். இருள் சூழ்ந்த நேரத்தில் சாலக்குடியை அடைந்தோம். காரை ஒரு சந்தில் ஒளித்துவைத்துவிட்டு, சாப்பிட்டோம். ஆம் ,காலையிலிருந்து பட்டினி. பிறகு ஒரு தியேட்டரில் இரவுக்காட்சி. எங்கள் உடமைகள் எர்ணகுளத்தில் அல்லவா இருக்கின்றன. காரை இங்கேயே நிறுத்திவிட்டு டாக்ஸியில் சென்றோம். வழியில் எந்த ஜீப்பை பார்த்தாலும் பயம். லாட்ஜில் கதவை ரூம் பாய் தட்டினாலும் நடுங்கினோம். அடுத்த நாள் பகலில் கிளம்பினோம். யாரை பார்த்தாலும், நேற்று பார்த்த முகம் போலிருக்கிறது.

வளர்ப்பானேன். அதற்க்கு பிறகு, வண்டி ஜப்தி என்றால் மரியாதையுடன் விலகி விடுவோம்.
August 07

அக்னிபுத்திரன்


என் லட்சியமான சினிமா ஆசையை, என் தம்பியின் மீது திணித்த கதை இது. என் தந்தை இறக்கும்போது அவன் எட்டாவதுதான் படித்துக்கொண்டிருந்தான். தந்தையோடு கல்வி போகும் என்ற பழமொழியை பொய்யாக்க விரும்பினேன். +2 முடித்தவுடன் திரைப்படக்கல்லூரிக்கு விண்ணப்பித்தோம். எங்கள் குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு. ஏற்கனவே அவனுக்கு எனக்கு தெரிந்த காமெரா நுட்பங்களில் பயிற்ச்சி கொடுத்திருந்தேன். ஒளிப்பதிவாளருக்கான நேர்முகத்தேர்வுக்கு அவனுடன் நான் செல்லமுடியாததால் எங்கள் அத்தான் துணைக்கு சென்றார். சிறப்பாக அதையும் முடித்தவுடன், அங்கிருந்த ஒரு மாணவன் என் அத்தானை அணுகி, 'வாருங்கள், ஒருவரிடம் அழைத்து போகிறேன், அவர் நினைத்தால் உங்களுக்கு சீட் நிச்சயம்' என்று கூற, இந்த அப்பாவியும் போயிருக்கிறார். அந்த பெரிய மனிதர் (மறைந்துவிட்டார்) ஒரு தலை சிறந்த பேச்சாளர், எல்லா கட்சிக்கும் போய் வந்த அரசியல்வாதி, ஒரு வாரப்பத்திரிகையின் ஆசிரியர். யூகித்திருப்பீர்களே! போனவுடன் பல ஆயிரங்களை கேட்டார் . பணிவுடன் மறுத்துவிட்டு வந்துவிட்டது எங்கள் தரப்பு. ரேன்க் படி என் தம்பிக்கு தேர்வு வரிசையில் முதலிடம் கிடைத்தது. கல்லூரியில் சேர்த்துவிட்டோம். சில நாட்களுக்கு பிறகு 17 வயதேயான அவனுக்கு மிரட்டல்கள் வரத்தொடங்கின. நாங்கள்தான் இந்த சீட்டை ஏற்பாடு செய்தோம் , மரியாதையாக பணத்தை கொடுக்காவிட்டால் நடப்பதே வேறு என்ற ரீதியில் சிலர் மிரட்ட தொடங்கினார். இதை கேட்டு நான் பெரிதும் கலங்கினேன். எனக்கு யாரை தெரியும் , சில கம்யூனிஸ்ட் தோழர்களைத்தவிர? அவர்களால் நிச்சயம் இந்த விஷயத்தில் உதவ முடியாது.

இந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக வந்தார் என் தடாலடி நண்பர் இரவிச்சந்திரன். நேராக சென்னைக்கு போனோம். அந்த நபர் ஆசிரியராக இருந்த பத்திரிகை அதிபரை நேரில் சென்று பார்த்தோம். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் அப்புதான் அவர்! முறையிட்டார் இரவி. தொலைபேசியில் உத்தரவுகள் பறந்தன. அன்றிலிருந்து சங்கு மவுனமாகியது. என் தம்பி பிறகு தங்க பதக்கத்துடன் வெளியே வந்தான்.

நண்பர் வேலு ஒரு திரைப்பட வினியோகஸ்தர் என்பதை சொல்ல மறந்துவிட்டேன். அவருடன் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சென்னை போவேன். பிரசாத் ஸ்டுடியோவில் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். அங்குள்ள பிரீவியூ தியேட்டரில் அமர்ந்து ரஷ்களும், சில சமயம் பின்னணி இசையில்லாமல் முழுப்படமும் பார்துக்கொண்டிருப்போம். யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள். ஒருமுறை 'அக்னிபுத்திரன்' என்ற திரைப்படத்தின் ரஷ்கள் ஓடிக்கொண்டிருந்தன. கார்த்திக் நடித்திருந்தார். ஒளிப்பதிவு அற்புதமாக இருந்தது. பக்கத்தில் இருந்தவர்தான் ஒளிப்பதிவாளர் என்றும், இது அவருடைய முதல் படம் என்றும் என் நண்பர் சொன்னார். பிரசாத்தில் இருந்து அமெரிக்கா சென்று ஸ்டெடிகாம் பயிற்சி எடுத்தவர், பிரபல பாடகியின் மகன் என்றும் பெயர் ராஜீவ் மேனன் என்றும் அறிந்தேன்.

அவருடன் உடனே அறிமுகம் செய்து கொண்டு அறுத்து தள்ளிவிட்டேன். எல்லாம் உலக சினிமா விஷயங்கள்தான். தம்பியையும் அறிமுகம் செய்து வைத்தேன். அப்துல் ரகுமானிடம் உதவியாளராக இருக்கிறான் என்றவுடன் ஆதரவாக பேசி, எஙளுக்கு அவருடைய பியட் காரில் ஏ.வி.எம். வரை லிப்டும் தந்தார்.

ஆண்டுகள் கடந்தன. பின்னர் என் தம்பி மேனன், மற்றும் அவர் மனைவி இயக்கிய நிறைய விளம்பரப்படங்களுக்கு பணியாற்றி கொண்டிருக்கிறேன் . ஒரு நாள் அவனிடம் கேட்டேன் , உனக்கு அவரை அறிமுகம் செய்தது யார், நினைவிருக்கிறதா?
விழிக்கிறான், பாவம் மறந்து போச்சு.

பி.கு.இலங்கை தமிழர்களால் தயாரிக்கப்பட்ட அக்னிபுத்திரன் படம் பாதியிலேயே நின்று போய்விட்டது.

July 07


அன்புக்கடி

வேலு என் இனிய நண்பர்(பெயரை மாற்றி விட்டேன்). சிறு வயது முதல் எங்களை இணைத்தவர் சிவாஜி . நான் மிதவாதி. படம் பார்ப்பதோடு சரி. ஆனால் அவர் மன்ற மறவர். மாவட்ட அளவில் மன்ற பதவிகள் வகித்தவர். திருமணம் நிச்சயமானவுடன் சிவாஜிக்கு பத்திரிகை கொடுத்தே ஆகவேன்டும் என்று சென்னைக்கு கிளம்பியவர். நானும் கூட போனேன். அது தனிக்கதை.

வேலு ஒரு முன்கோபி. எவருடனும் சட்டென்று சன்டைக்கு கிளம்பி விடுவார். கை சில சமயம் நீண்டுவிடும். இவருக்கு பெண் கொடுத்தவர் ஒரு அரசு உயர் அதிகாரி. மிகவும் படித்த குடும்பம். திருமணத்தன்று முதலே இவருக்கும் மாமனாருக்கும் ஏதோ ஈகோ பிரச்சனை. நம்ம ஆள் அடிக்கடி உறுமிக்கொண்டு இருப்பார். மனைவி கருவுற்றார். ஒரு பிரபல மருத்துவமனையில் அழகிய மகன் பிறந்தான்.

அடுத்த நாள் , கோர்ட்டிலிருந்து திரும்பியிருந்தேன். வேலுவின் தம்பியும் மானேஜரும் ஓடி வந்தனர்- 'பி 2 ஸ்டேஷனுக்கு உடனே வாருங்கள், அண்ணன் உள்ளே இருக்கிறார், வெளியே எடுக்கணும்'. ஸ்டேஷனில் லாக்கப் அறையில் எனது இனிய நண்பன்! சட்டை கிழிந்திருக்க, மேலே ரத்தத்துளிகள்! அதிர்ந்து திரும்பினேன். ஒரு பென்ச்சில் மாமனார். அதே கிழிசல் சட்டை, ரத்தம், ஆனாலும் அதிகமாக, கை காலெல்லாம் காயங்கள். விசாரித்ததில் தெரிந்தது, மருத்துவமனையில் ஏதோ அற்ப காரணங்களுக்காக வாக்குவாதம் ஆரம்பித்து வார்தை தடிக்க, நம்ம ஆள் அவர் வேலையை காட்டிவிட்டார். உயர் அதிகாரி மாமனாரோ தன் பல்லை ஆயுத்மாக பயன்படுத்தி மருமகனை அன்புக்கடி கடிக்க, இளமை முறுக்கு மாப்பிள்ளை பதிலுக்கு மாமனாரின் பொன்மேனியில் ஆங்காங்கே பல் பதிக்க, கட்டில், தொட்டில் எல்லாம் பறக்க, மருத்துவமனையிலிருந்து இவர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டனர். மாமனார் தரப்பு போலீசில் மருமகன் மேல் புகார் கொடுக்க, கிளைமாக்சில் நான் என் சக வக்கீல்கள் சகிதம் ஆஜராகும் அரிய காட்சி.

ஆய்வாளருடன் பேசினேன் 'சார், குடும்ப பிரச்சினை, இண்ணைக்கி அடிச்சுக்குவாங்க, நாளக்கி சேர்ந்துக்குவாங்க , பைசல் பண்ணி அனுப்பிடுங்க'. புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டால் துரத்திவிட அவரும் தயார்தான். மாமனார் தரப்பு விடுவதாயில்லை. ரத்தக்காயங்கள் அவர்களை உசுப்பேத்திவிட்டன. என்னையும் சபிக்க தொடங்கினர். சரி, கடைசி அஸ்திரத்தை எடுத்தேன். இன்னொரு புகார் தயாரித்தேன். கதையை அப்படியே உல்டா செய்து , மாமனாரை வில்லனாக சித்தரித்த புதிய திரைக் கதை..'நீங்களும் புகார் கொடுங்க, நாங்களும் கொடுக்கிறோம், எல்லோரும் கோர்ட்டுக்கு வந்துதானெ ஆகணும், அப்ப காட்டுறோம் எங்க வேலையை' என்று சவால் (சவடால்) விட்டேன். எல்லோரும் கூடிப்பேசினர். புகார்கள் வாபஸ் ஆயின. எல்லோரும் கலைந்து போக, ஒரு பைசா வருமானமில்லாத இந்த கேஸ் தொலைந்ததே என்று காவலர்கள் பெருமூச்சுவிட, நாங்கள் எங்கள் வழியே திரும்பினோம். நண்பரும் நானும் உணர்ச்சிப்பெருக்கில் 2கி.மீ நடந்தே எங்கள் கடைக்கு வந்தோம். கிழிந்த சட்டை, ரத்தத்துடன் வந்த அவரை பார்த்து எல்லோரும் திகைத்து நிற்க, அவர் சாவகாசமாக ஒரு குண்டூசி கேட்டார். இது யாரை குத்த என்று யோசித்துக்கொண்டே ஒரு பின்டாக்ஸ் ஆணி கொடுத்தேன். பல்லிடுக்கில் நுழைத்து தோண்டி துருவி, ஒரு பெரும் இறைச்சி போன்ற துணுக்கை வெளியெ எடுத்தார்.

அது மாமனாரின் சதைத்துணுக்கு! அடப்பாவி நரமாமிசபிரியா என்று அலறியது ஒன்றுதான் பாக்கி.

பஞ்சாயத்தும் நாங்கள்தான் செய்து, ஒரு வருடம் கழித்து பிரிந்த தம்பதிகளை சேர்த்துவைத்தோம். வேலுவின் மகன் இன்று கல்லூரியில் படிக்கிறான். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் . ஆனால் மாமனார் தரப்பு இன்றும் கடுப்புடன் என்னை பார்க்கிறது . என்ன கொடுமை சார் இது!

July 07

வேட்டையன்


நான் ஒரு காட்டுமிராண்டி. வனங்களை நேசிப்பவன். சிறு வயதில் ஜிம் கார்பெட்டும் கென்னெத் ஆண்டர்சனும்தான் என் ஆதர்ச எழுத்தாளர்கள். அடிப்படையில் நான் ஒரு கோழை. நாயையும் பூனையையும் பார்த்தாலே பயம். பைக் வாங்கி கொஞ்ச காலம் மட்டும் ஓட்டிவிட்டு பிறகு நமக்கு பஸ்ஸும் பின் சீட்டும்தான் சரி என்று வாழ்பவன். ஆனால் அடர்ந்த காடுகளில் சுற்றுவது எனக்கு பிரியமான ஒன்று. பல வனவிலங்குகளை அருகாமையில் பார்திருக்கிறேன். இந்த தீபாவளியன்று, பந்திப்பூர் காட்டில் ஒரு யானையை புகைப்படம் எடுக்க முயல, அது என்னை துரத்த , கிட்டத்தட்ட 200 அடி தூரம் ஓடி உயிர் தப்பினேன்.

நான் சொல்லப்போகும் விஷயங்கள் ஏற்கனவே வேறொரு இழையில் எழுதியிருக்கிறேன். ஆனாலும் இந்த சந்தர்ப்பத்தை விட தயாராயில்லை. திருட்டு வேட்டைக்கு அடிக்கடி போகும் ஒரு வக்கீல் கவுண்டர் என் நண்பர். முதுமலைக்காடுகளிலும் சுற்றுப்புறஙளிலும் சுற்றோ சுற்றென்று சுற்றி, மூன்று வேளையும் காட்டுப்பன்றி இறைச்சி தின்று கழித்த நாட்கள். குழுவின் அதிகாரபூர்வமான போட்டோகிராபர் நான். மூணார் போகும் வழியில் சின்னாறு பகுதியில் வரையாடு அடிக்கலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர். நாங்கள் துரைமார்கள் 5 பேர். சாமான் செட்டு எல்லாம் சுமந்துவர அடிமைகள் 5 பேர். வழிகாட்டிகளாக இருளர்கள் 2 பேர். ஆப்ரிகன் சபாரி கெட்டது போங்கள்.

மூன்று பகலும் இரவும் அலைந்தோம் திரிந்தோம். வரையாடும் பார்க்கவில்லை , வரிக்குதிரையும் பார்க்கவில்லை. அடிமைகள் சமைத்து தரும் ரசம் சோற்றை தின்பதற்க்காகவா காடு ஏகினோம்? ஒரு இரவில் காட்டெருமைகள் சூழ்ந்துகொண்டு பயமுறுத்தின. ஒன்றை அடித்தாலும் மிச்சத்தை எங்கே புதைப்பது, நாஙள் வனக்காவலர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று தடுத்துவிட்டனர் இருளர்கள்.

கவுண்டர் சிந்தித்தார், முடிவெடுத்தார், இறைச்சி திங்காமல் வெளியெ போவது நம் குலப்பெருமைக்கே அவமானம்... துப்பாக்கியை இருளனிடம் கொடுத்தார். 'எதையாவது அடிச்சு கொண்டாடா, இல்லை தோலை உறிச்சுடுவேன்' என்று உத்தரவு பறந்தது. ரசத்தை கரைத்து குடித்துவிட்டு மரத்துக்கு அடியில் இளைப்பாரினோம் நாங்கள். ரொம்ப நேரம் கழித்து ஒரு வேட்டு சத்தம். ஆஹாவென்றெழுந்தோம். ரெடி பண்றா மசாலாவை என்று உறுமினார் லவ்டேலில் படித்த எங்கள் இங்கிலீஷ் கவுண்டர். எல்லோரும் ஆவலுடன் பார்த்திருக்க, வேட்டையுடன் வந்து சேர்ந்தனர் அவர்கள். சுடப்பட்டு கிடந்தது ஒரு மந்தி. 'எண்றா கிரகம் இது, சரி, சரி, தோல உறி' என்று ஆணை பிறந்தது.

அது ஒரு பெண் குரங்கு. முலையெல்லாம் ஒரு பெண்ணைப்போல் இருந்தது. நர மாமிசம் உண்பவர்களைப்போல் உணர்ந்தோம். அங்கு நீண்ட மவுனம் நிலவியது. ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டோம். கவுண்டரே மவுனத்தை கலைத்தார் - 'நீங்களே எடுத்துட்டு போங்கடா , எங்களுக்கு வேண்டாம் '!

காட்டை விட்டு வெளியேறினோம். பிறகு இறைச்சிக்கு நாஙள் என்ன செய்தோம் என்று சொன்னால் வெட்கக்கேடு.

July 07


இரவிசந்திரன்


என் வாழ்க்கையில் ரொமான்சுக்கு இடம் இருந்ததில்லை. சிறு வயதிலேயே ஒரு சினிக் ஆக பரிமாணித்துவிட்டேன். எல்லாமே நண்பர்கள்தான். கல்லூரி வாழ்க்கையின்போது நண்பர் சந்திரகுமார் அவசரமாக கூப்பிட்டார்-'விஜயா பதிப்பகத்திற்க்கு இரவிச்சந்திரன் வந்திருக்கிறார். போய் பார்க்கலாம்'. இரவி அப்போது தமிழில் பரபரப்பான எழுத்தாளராக உருவாகியிருந்தார். நகைச்சுவையும், சரளமும் கலந்த எழுத்து. சுஜாதாவின் வலது கரம், நேரடி சிஷ்யன் என்றெல்லாம் பேச்சு. விஜயா பதிப்பகம் அப்போது ஒரு பலசரக்கு கடை. அண்ணாச்சி ஒரு மூலையில் புத்தகங்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தார். இரவியை சந்தித்தோம். எங்களை விட நாலைந்து வயது அதிகம். குள்ள உருவம். சுறுசுற்ப்பான பேச்சு . நட்பு பற்றிக்கொண்டது.

நானும் அவரும் மிக நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். தினமும் விசித்திர வாசகங்கள் அடங்கிய தபால் கார்டுகளை எல்லோருக்கும் அனுப்புவது அவரது வழக்கம். நினைத்தால் பெங்களூர் போவேன். மல்லேஸ்வரத்திலுள்ள அவருடைய அறையில் வாசம். சுஜாதவுடனும் நட்பு. ஒரே லூட்டிதான். ஒரு முறை ஐ.ஏ.எஸ். நுழைவுத்தேர்வு எழுத பெங்களூரை மைய்யமாக தேர்ந்தெடுத்து போனேன். தேர்வு எழுதாமல், அலுவலகத்தில் இருந்த சீனியர் எழுத்தாளர் ராஜேந்திரகுமாரையும் இழுத்துக்கொண்டு சினிமாவுக்கு போனோம். படம் முடிந்தவுடன், இருவரும் பைக்கில் சுஜாதா வீட்டுக்கு போனோம். வழியில் ஒரு சிறு விபத்து. சட்டையெல்லாம் கிழிந்து ரத்தம் ஒழுக வரும் எங்களை பார்த்து சுஜாதா குடும்பமே பதறி விட்டது.

சுவாரசியங்கள் மிகுந்தவர் இரவி. சுப்ரமணிய ராஜூ போன்றவர்களையெல்லாம் அறிமுகம் செய்து வைத்தார். எப்போதும் டை கட்டியிருப்பார் . என்ன வேலை செய்கிறர் என்று யாருக்கும் தெரியாது. தடாலடியாக யாரிடமும் பேசுவார். பயங்கரமாக புளுகுவார். ஒரு நாள் என்னை தேடி எங்கள் அலுவலகத்திற்க்கு வந்தவர், எனது சீனியரிடம் கர்நாடக முதல்வர் குண்டுராவின் பி.ஏ. வந்திருக்கிறேன், ஒரு முக்கியமான விஷயமாக ஜீவாவை பார்க்க சொல்லியிருக்கிறர் என்று அவிழ்த்துவிட, ஒரு கோஷ்டியே என்னை கோர்ட் வளாகம் முழுக்க தேடியது . எனக்கு கல்யாணமான புதிதில் ,ஒரு புதுமுக நடிகையின் புகைப்படத்தை இணைத்து எனக்கு ஒரு வாழ்த்து , அவள் எழுதியதுபோல் அனுப்பியிருந்தார். 'அடுத்த பிறவியிலாவது நம் காதல் வெல்லட்டும்', நல்ல வேளை, இவரது கையெழுத்து என் மனைவிக்கு தெரியும் என்பதால் தப்பித்தேன். இன்னும் சொல்லிக்கொண்டெ போவதற்க்கு நிறைய காமெடிகள் இருக்கின்றன.

ஒரு வழியாக, ஆந்திர பெண் ஒருவருடன் இவருக்கு திருமணம் நிச்சயமானது.மிகவும் நல்ல பெண். அதற்க்கு பிறகு இவரது வாழ்க்கையே மாறிப்போனதன் மர்மம்தான் இன்னும் புரியவில்லை. பொருளாதார நெருக்கடியா இல்லை வேறு ஏதாவதா, யாருக்கும் சொல்லவில்லை, குடிப்பழக்கம் தொற்றிக்கொண்டது. ஊரெல்லாம் கடன், நண்பர்கள் அஞ்சி ஓடினர். ஒரு மனிதன் இவ்வளவு தலைகீழாக மாற முடியுமா என்ற அளவிற்க்கு..ஒரு முறை சென்னை திரைப்படக்கல்லூரி விடுதியில், என் தம்பியை சந்திக்கப் போனவர், கடும் போதையில் நினைவிழந்து விட்டார். என்ன செஇவது என்று அறியாமல், பக்கத்தில் குடியிருந்த எங்கள் எழுத்தாள நண்பர் உஷா சுப்ரமணியத்திடம் சென்று உதவி கேட்டு, கடைசியில் மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர். ஏற்கனவே வெளியான ஒரு சிறுகதையை, மீண்டும் விகடனுக்கு அனுப்பி வைக்க அவர்களும் பிரசுரித்துவிட்டனர். விஷயம் தெரிந்தவுடன், விகடனில் இவரை கட்டம் கட்டி, மீண்டும் இவரது படைப்புகளை பிரசுரிக்கமட்டோம் என்று அறிவித்தும் விட்டனர்.

அவரை கடைசியாக பார்தது, கிழிந்த சட்டையுடன் சாராய மணத்துடன் என்னை பார்க்கவந்தபோதுதான். அவரது ஆசிரியர் கவிஞர் புவியரசுவும் நானும் பணம் கொடுத்து அனுப்பி வைத்தோம். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், கடைசியாக ஹைதராபாத் வீதியொன்றில் இரவியை பார்த்ததாக சொன்னார். பத்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. இரவிச்சந்திரன் உயிரோடு இருந்தால் எப்படியும் ஒரு முறையாவது என்னை பார்க்க வந்திருப்பார் என்பது எனது நம்பிக்கை.

July 2007

ஆதிமூலம்


தூசி தட்டி ஒரு சம்பவத்தை எடுத்துவிட்டேன். கொட்டாவிகள் தவிர்க்கவும்.

எண்பதுகளில் மாலன் ஆசிரியராக இருந்த 'திசைகள்' இளைஞர் இதழில் நிருபர்களாக பணியாற்றிக்கொண்டிருந்தோம். நான் தீவிரமாக பங்காற்றிக்கொன்டிருந்த ஓவியர் அமைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி தர சென்னையிலிருந்து பிரபல ஓவியர் ஆதிமூலத்தை அழைத்திருந்தோம். அவரை திசைகளுக்காக நவீன ஓவியம் குறித்த ஒரு பேட்டி எடுக்க சொன்னார் மாலன். அப்போதுதான், திரு ஆதிமூலத்தின் நவீன ஓவிய கோட்பாடுகளை கடுமையாக தாக்கி நான் எழுதிய ஒரு கடிதம் கணையாழியில் வெளியாகியிருந்தது. அரைவேக்காட்டுத்தனமாக எழுதியிருந்தேன். (இப்போதும் அப்படித்தானே)

நாங்கள் நான்கு பேர். இரண்டு பி எஸ் ஜி பொறியியல் மாணவர்கள் , ஒரு சட்டக்கல்லூரி மானவன், ஒரு ஆங்கில எம் ஏ மாணவி. ஆதி, என் பெயரை கேட்டவுடனேயெ சரியாக யூகித்து விட்டார்.. கணையாழி விவகாரம் குறித்து கேட்டார்.. நான் பாதி செத்து போய்விட்டேன். பேட்டி ஒரு வழியாக முடிந்தது. போட்டோ எடுக்க காமெரா இல்லை. எங்கும் இரவலும் கிடைக்கவில்லை. ஆதியே ஒரு யோசனை சொன்னார் - 'தம்பி, நான் போஸ் கொடுக்கிரேன், நீ என்னை கோட்டோவியமாக வரைந்துவிடு, புதுமையாக இருக்கும்'!
ஏற்கனவே அசடு வழிந்துகொண்டிருந்த நான் இன்னும் குறுகிப்போய்விட்டேன். அந்த மகா கலைஞன் போஸ் கொடுக்க, இந்த பொடியன் அவரை வரைய..என் வாழ்வின் உன்னத நிமிடங்கள்! அந்த படம்தான் பேட்டியுடன் பிரசுரமானது.என்னுடைய சக நிருபர்கள் ஸிகாகோவில் வாழும் சந்திரகுமார், இன்றைய பாண்டிச்சேரி டெலிகாம் ஜி.எம் மார்ஷல் ஆண்டனி லியோ, எழுத்தாளரும் பேச்சாளருமான பேராசிரியை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகியோர்.

அன்று முதல் ஆதி எனக்கு ஓவிய காட்பாதராக திகழ்கிறார்.வள்ளுவர் கோட்டத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டிருக்கும் குரளோவியங்களில் முதலாம் அதிகாரத்திற்க்கு அவர் ஓவியம் தீட்டியிருக்க, ஆறாம் அதிகாரத்திற்க்கு நான் ஒவியம் வரைந்திருக்கிறேன். பெருமையுடன் பூரிக்கிறேன்.

July 2007