Saturday, February 27, 2010

டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்

எப்படி என் தந்தைக்கு அப்படி ஒரு சிந்தனை வந்ததென்ற தெரியவில்லை. ஒன்பதாவது படிக்கும்போதே என்னை சுறுக்கெழுத்து பயில ஒரு பயிற்சி நிலையத்தில் சேர்த்துவிட்டார். அவருடைய நண்பர்களிடம் என் பையன் இப்பவே ஷார்ட்ஹேண்டில் புகுந்து விளையாடுகிறான் என்று சொல்வதற்காகவோ என்னவோ! எலிக்குஞ்சு போல இருப்பேன். ஆர்வம் இருந்தாலும் சக மாணவர்களின் பொறாமை மற்றும் ஏளனப்பார்வை என்னை வாட்டியது. எல்லாம் எனக்கு பெரிசுகள். எனக்கு சுறுக்கெழுத்து மிகவும் பிடித்துவிட்டது. ஆங்கில மொழியின் மீது இருந்த பற்றும் இன்னொரு காரணம். என் ஆசிரியர் ஒரு கறார் பேர்வழி. மலையாள கத்தோலிக்கர். அவருக்கும் அப்போது சின்ன வயதுதான். நேரம் தவறாமை அவரது முக்கிய விதிகளில் ஒன்று. 6 மணி வகுப்புக்கு 5.45க்கு ஆஜராக வேண்டும். 5.46க்கு வந்தாலும் கெட் அவுட்தான். நாளைக்கு வாங்க என்று அனுப்பிவிடுவார். எல்லோரும் அவரை கரித்துக்கொட்டுவார்கள்..ஆனாலும் நகரின் மையப்பகுதியில் இருந்ததாலும் அவருடைய கண்டிப்பு பெற்றோர்களுக்கு பிடித்ததாலும் அங்கு எப்போதும் ஹவுஸ்புல்தான். தட்டச்சு வகுப்புகளுக்கு நமக்கு பிடித்த நேரம் கிடைக்காது. அவர் சொல்லும் நேரம்தான். பெருமழை பொழிவது போல் எந்திரங்களின் சோவென்ற சப்தத்திற்கிடையில் உள்ரூமில் அவர் டிக்டேஷன் கொடுக்கும்போது கவனமாக தொடரவேண்டும். ஹோம் ஒர்க்கிலும் படு கறார். வாரம் ஒரு முறை சுருக்கெழுத்து தியரியில் டெஸ்ட். ஒரு சின்ன தப்பு வந்தாலும் மீண்டும் டெஸ்ட் எழுதிவிட்டுத்தான் அடுத்த பாடம் தொடரப்படும்.

நானோ சின்னப்பையன். ஒரு கட்டத்திற்கு மேல் இந்த கண்டிப்பு தாங்க முடியவில்லை. மெதுவாக வகுப்புகளை கட் அடிக்க ஆரம்பித்தேன். வீட்டிலிருந்து கிளம்ப வேண்டியது. இன்ஸ்டிடியூட்டிற்கு எதிரே உள்ள கோனியம்மன் கோயிலுக்குள் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்து வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு வீடு திரும்புவது வாடிக்கையானது. ஏன் வரவில்லை என்று கேட்கும் ஆசிரியரிடம் பள்ளியில் டெஸ்ட், காய்ச்சல் என்று சொல்லவேண்டியது. ஒரு முறை பள்ளியில் குறைந்த மார்க் வாங்கியவுடன் கண்டித்த என் தந்தையிடம் எல்லாவற்றிற்க்கும் காரணம் சுறுக்கெழுத்துதான் என்று பழியை போட்டு விட்டேன். அன்றோடு சுறுக்கெழுத்து வகுப்புகளுக்கு முழுக்கு. ஆனால் சுறுக்கெழுத்து என்னோடு பசையாக ஒட்டிக்கொண்டது.

பள்ளி இறுதித்தேர்வு முடிந்த கையோடு என்னை மீண்டும் அங்கே சேர்த்துவிட்டார் என் தந்தை. இப்போது கூடவே ஆங்கில தட்டச்சும். கல்லூரி, கம்யூனிஸ்ட் குடும்பத்துக்கே உரிய ருஷ்ய மொழி வகுப்புக்கள், கடையில் ஓவியம் வரைதல், எல்லாவற்றுக்கும் மேலாக விடாமல் சினிமா பார்த்தல் என்ற என்னுடைய அன்றாட அலுவல்களில் தட்டச்சும் சுறுக்கெழுத்தும் சேர்ந்து கொண்டன.

இன்ஸ்டிடியூட்கள் ஒரு தனி உலகம். காலை 6 மணி முதல் ஓயாமல் இயக்கம். ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் 'அட்டையை பார்த்து அடிங்க' என்ற ஆசிரியரின் அசரீரி, ஹால்டா, பேசிட் இயந்திரங்களின் ஓசை, மெக்கானிக்குகளின் பந்தா, டைப்ரைட்டர் விற்பனை பிரதிநிதிகளின் வருகை, தங்கள் நேரத்துக்காக காத்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் என்று எந்நேரமும் கலகலப்பு. இதில் காதல் பறவைகளின் தனி டிராக் வேறு. கையில் சுருட்டிய பேப்பருடனோ நோட்டுப்புத்தகத்துடனோ வரும் பெண்களின் பின்னால் வரும் இளைஞர்கள்.. சிலர் வகுப்புகளில் இதற்காகவே சேர வருவார்கள். அவர்களை ஆசிரியர் சுலபமாக அடையாளம் கண்டு கொண்டு படுத்தும் பாடு இருக்கிறதே…பயங்கர காமடியாக இருக்கும். முதலில் அவர்களுடைய ஆங்கில அறிவை பரிசோதித்து, கேலியும் கிண்டலும் செய்து ஒரு வழியாக்கி ஓடவிட்டுவிடுவார். என்னுடன் படித்த நிறைய பேர் காதல் கணைகளில் சிக்கி தவித்தனர்…சிலர் திருமணம் கூட புரிந்தனர்.
கறுப்பாக, சோடாபுட்டி கண்ணாடியுடன் எலிக்குஞ்சு போல் இருந்த நான் யாரும் சீண்டாததால் தப்பித்து வாழ்ந்தேன்.

தட்டச்சும் சுருக்கெழுத்தும் எனக்கு சரளமாக வந்தன. எந்த சிறு தவறும் இல்லாமல் கீ போர்டை பார்க்காமல் படு வேகமாக நான் டைப் அடிப்பதை பார்க்க ஒரு கூட்டமே கூடும். அதே போல சுறுக்கெழுத்தும். என் ஆசிரியர் என்னை தன் பள்ளியின் சூப்பர் ஸ்டாராக அறிவித்து கொண்டாடத் தொடங்கிவிட்டார். அரசுத் தேர்வு பயிற்சிக்காக என்னை வெளி பள்ளிகளுக்கு தனி பயிற்சிக்காக அனுப்பி வைப்பார். வெவ்வேறு குரல்களுக்கும் ஏற்ற இறக்கங்களுக்கும் தனி கவனம் எடுப்பார். லோயர், ஹையர் என்று இரண்டிலும் முதல் வகுப்பு. 25 வருடங்களாக தமிழ்நாட்டில் யாரும் தேர்வாகவே முடியவில்லை என்று சொல்லப்பட்ட (உண்மையா என்று தெரியவில்லை) லண்டன் சேம்பர் ஆப் காமர்ஸ் தேர்வில் சுறுக்கெழுத்தில் முதலிடம் என்று கலக்கினேன். பல குழுக்கள் நடத்திய தேர்வுகள் எதிலும் சோடை போகவில்லை.

கல்லூரி முதுகலைப்பட்டம் முடித்தவுடன் விளையாட்டாக கோவை ஸ்டேன்ஸ் காபி கம்பெனிக்கு விண்ணப்பித்தேன். சுலபமாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். என் தந்தைக்கு ஒரே மகிழ்ச்சி . ஸ்டேன்ஸ் முதலாளி ஒரு காலத்தில் ஸ்டெனோவாக இருந்தவராம். காலையில் டிக்டேஷன். இரண்டு கடிதங்களை டைப் செய்தேன். மதியம் சாப்பிட்டு வருவதாக சொல்லி வீட்டுக்கு வந்தேன். வேலைக்கு நான் போகமாட்டேன் என்று என் தந்தையிடம் சொன்னேன். காரணம் கேட்டார். யாரோ ஒருவர் டிக்டேட் செய்ய நான் எழுதுவது எனக்கு பிடிக்கவில்லை என்றேன். ஐஏஎஸ் தேர்வுக்கும் தயாராகிக்கொண்டிருந்ததால் என் தந்தை சரியென்று சொல்லிவிட்டார். என் வாழ்க்கையில் நான் வேலைக்கு போன சரித்திர பிரசித்தி பெற்ற அரை நாள் அன்றுதான். ஒரு முறை UPSC ஸ்டெனோகிராபர்ஸ் தேர்வில் அயல்நாட்டு சரவீசுக்கு எழுத்துத்தேர்வில் ஜெயித்து..ஸ்டெனோகிராபி தேர்வுக்கு சென்னைக்கு அழைத்திருந்தனர். நியூ செஞ்சுரி புக் ஹவுசில் இருந்து ஒரு போர்ட்டபிள் எந்திரத்தை இரவல் வாங்கிக்கொண்டு சென்னை சென்றேன். முதலில் சுறுக்கெழுத்து தேர்வு முடிந்தது. அடுத்து அதை தட்டச்சு செய்யவேண்டும். என்னுடைய அசுர வேகம் தாளாமல் தட்டச்சு எந்திரத்திலிருந்து ரிப்பன் தெறித்து வெளியே வந்தது. ஒன்றும் புரியாமல் கொஞ்ச நேரம் விழித்து விட்டு எல்லாவற்றையும் அள்ளி பெட்டியில் திணித்து விட்டு வெளியேறி..எமரால்டு தியேட்டரில் சஞ்சீவ்குமார் நடித்த அர்ஜøன் பண்டிட் பார்க்க போய்விட்டேன்…

என்றுமே ஸ்டெனோ ஆக விரும்பாமல் வெற்றியும் அடைந்து விட்டேன். இப்போதும் எங்கள் இன்ஸ்டிடியூட் இயங்கிக்கொண்டு இருக்கிறது. அந்த பக்கம் போனால் எட்டிப்பார்ப்பேன். அதே வயலட் கலர் இங்க் பேனா, ஒரு பேட், அதே மேஜை, அதே பிட்மேன் புத்தகம், வயதே ஆகாத என் ஆசிரியர் பி.வி.பால் அதே உற்சாகத்துடன் வரவேற்பார். பல சமயங்களில் ஒரு மாணவர் கூட இருப்பதில்லை. சில சமயம் யாராவது ஒரு குட்டிப்பெண் டைப் அடித்துக்கொண்டிருப்பார். உடனே அவளை வரவழைப்பார். .'அப்புறம் அடிக்கலாம்மா.. இங்கே வா..இது யார் தெரியுதா'. என்று ஆரம்பித்து என் சாதனைகளை எடுத்துரைப்பார்.. நெளிந்து கொண்டு கேட்பேன், அந்த பெண்ணின் நிலையும் அதுதான். . அதெல்லாம் ஒரு காலம் என்று மீண்டும் தொடர்வார். 'இவரோட தம்பிங்க கல்யாணசுந்தரம், மணிகண்டன் எல்லோரும் என் சிஷ்யங்க' என்ற ரீதியில் போகும்.. 'சார், இன்னும் ஏன் சார் இதை நடத்திட்டு இருக்கீங்க, ஒரு கம்ப்யூட்டர் சென்டர் ஆரம்பிக்கலாமில்ல' என்ற கேட்டால் பதில் வராது. காலி சேர்களுடன் இருக்கும் தட்டச்சு அறையை ஒரு முறை பார்த்துவிட்டு சத்தமாக சிரிப்பார், எனக்கு நேரம் தவறாமையை போதித்த என் குருநாதர்.

ஒவ்வொரு முறையும் அங்கிருந்து வேதனையோடுதான் வெளியேறுகிறேன்.

Friday, February 5, 2010

எப்பவும் நான் ராஜா!!


விடிந்தால் சென்னைக்கு கல்லூரியில் சேர செல்லவேண்டும்...மாலையில் சிறை அரங்கத்தில் அன்னக்கிளி படத்தின் 58 வது நாள் விழா. சிவகுமார், இளையராஜா என்று பெரிய ஆட்கள் வருகிறார்கள்ஆவலோடு விழாவிற்கு சென்றேன். விழாவுக்கு வந்த கூட்டம் முழுக்க இளையராஜாவுக்கு வந்த கூட்டம். அவருடைய இசை நிகழ்ச்சியும் உண்டு...ஒரு திரைப்படம் வெளியான இந்த குறைந்த நாட்களில் பெரிய ஆள் ஆன அந்த உருவத்தில் சிறிய மனிதனை பார்க்கத்தான் கூட்டம்!
டப்பா படங்களையே வெளியிட்டு வந்த அத்தாணி பாபு இந்த படத்தை வாங்கியிருந்தார். ஸ்டில்களுடன் அந்த படத்தின் பாடல்கள் அடங்கிய ஈபி ரெகார்ட் கவர் ஒன்றையும் கொடுத்தார். வண்ணத்தில் ஒரு கருப்பு மனிதனின் படம்..இசை அமைப்பாளர் என்று வெளியாகியிருந்தது. ஒரு புதிய சகாப்தத்தை படைக்கபோகிறவர் என்ற உணர்வு அப்போது ஏற்படவில்லை. படம் இருதயா தியேட்டரில் வெளியாகி டப்பாவுக்குள் போகும் நிலையில் பாடல்களால் சூடு பிடித்து கிடு கிடு என்று பற்றத்தொடங்கியது...எங்கு பார்த்தாலும் மச்சானை பார்த்தீங்களாதான்!!! படம் ஹிட்..வெற்றிவிழா என்று ஒரே கலக்கல்தான்...மேடையில் பேனர் வரைந்ததற்காக எங்கள் நிறுவனத்திற்கு ஒரு (கேடையம் எதுவும் ஸ்டாக் இல்லாததால்) வாட்ச் பரிசு...இளையராஜா கையால்தான் வாங்குவேன் என்று முதலிலேயே அத்தாணி பாபுவிடம் விண்ணப்பம்..வெள்ளை சட்டையை வெள்ளை பேண்ட்டில் இன் செய்திருந்த அந்த குட்டையான மாமனிதனிடம்..அப்போது அவரை விட குட்டியாயிருந்த இந்த பொடியன் எங்கப்பா சார்பில் இதை வாங்கினான்! மறக்க முடியாத கணங்கள்!!

ஆமாம்..இசையறிவு அப்படி என்னதான் இருந்தது...காலையில் பாடும் ராகம் என்னவோ...என்று தம்பி கேட்டவுடன்...நீளமாக ஆலாபனை செய்து 'பூபாளம்' என்று ராவணன் சொல்லி கேட்டது மட்டும்தான்...எல்லோரையும் போலவே திரைப்பாடல்கள் மட்டுமே இசை ரசனையை கொடுத்தன. டேப் ரிக்கார்டர் அப்போதுதான் பரவிக்கொண்டிருந்தது...மேடைகளில் வணக்கம் பலமுறை சொன்னேன்...என்று தமிழ்ப்பாடலில் சம்பிரதாயமாக ஆரம்பித்து பின்னர் ஷர்மிளியும், யாதோன் கி பாராத்தும், பாபியும் மட்டுமே கேட்கக்கிடைத்த காலம்...! எங்கும் யாவரும் இந்தி பாடல்களையே கேட்டு மகிழ்ந்திருந்தபோது...புறப்பட்டதுதான் ராஜாவின் பயணம்! ஏற்கனவே ஜி.கே.வெங்கடேஷின் பாடல்களை புதிய பாணியில் 'பொண்ணுக்கு தங்க மனசு' போன்ற படங்களில் கேட்டபோது...ஏற்பட்ட சந்தேகம் அவருடைய உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ராஜாவின் பாடல்களை கேட்டபோது தெளிந்தது...பட்டி தொட்டியெல்லாம் மேடையில் கம்யூனிச கானங்களை முழங்கிய பாவலரின் தம்பி என்ற ஹோதா...அதற்க்கு முன்னரே பத்மா சுப்பிரமணியம் குடும்பத்து பெண்கள் வெளியிட்ட தமிழக நாட்டு பாடல்கள் என்ற கேசட்டின் பாடல்கள் அன்னக்கிளியின் மூலத்தை பறைசாற்றின. அந்த கேசட்டும் கவரும் இன்னும் என்னிடம் ராஜாவின் பெயருடன் இருக்கின்றன.

அப்போதும் எம்.எஸ்.வி., கே.வி.எம்., போன்ற இசை அமைப்பாளர்கள் புகழின் உச்சியில் இருந்தாலும்..புதுமுக நடிகர்கள், புதுமுக இயக்குனர்கள் , புதிய பாணி திரைப்படங்கள் என்று கிளம்பி வந்த காலத்தில் உறுதுணையாய் இருந்தது ராஜாவின் இசை. பாமர ரசிகர்கள் கூட பின்னணி இசையின் அனுபவத்தை உணரத்தொடங்கிய காலம். ரீரிக்கார்டிங் சூப்பர் மா என்று யாரை பார்த்தாலும் பேசிக்கொண்டிருந்தது ஒரு ஆச்சரியமான திருப்பம்! பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம் என்று புறப்பட்ட பட்டாளம் இசை இளையராஜா என்ற டைட்டில் கார்டுடந்தான் ஆரம்பித்தனர்..சலீல் சவுத்ரியுடன் ஆரம்பித்த பாலு மகேந்திராவும் இந்த வரிசையில் சேர்ந்தவர்!! ஒரு இசை அமைப்பாளருக்கு கட் அவுட் வைக்கத் தொடங்கியது இவருக்குத்தான். பூஜை, இன்று முதல் விளம்பரங்கள் எல்லாமே நடிகர்களின் படங்களுக்கு ஈடாக இவருடைய போட்டோ, மற்றும் பட்டங்களுடன் வெளியிடத் தொடங்கினர்! இளையராஜாவும் ஒரு சாமியார் தோற்றத்தில் தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார்..கடும் பணிகளுக்கிடையே ஏராளமான படங்களுக்கு பாடல்களையும் பின்னணி இசையையும் தந்தார். எங்கள் கடையில் பேனர் வரையும்போது அவருடைய பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவோம்..இதனால் என் சக சிவாஜி / எம். எஸ்.வி. ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானேன். தியாகம், தீபம் போன்ற படங்கள் வந்தபோது முன்னவர்கள் சமாதானம் ஆனார்கள்.!

ரஜினி, கமல், மைக் மோகன் போன்றவர்களின் படங்களில் இளையராஜா கட்டாயம் ஆனார். ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ராஜாவின் தம்பி கங்கை அமரன் போன்ற அடுத்த தலைமுறையினரின் படங்கள் பாடல்களுக்காகவே ஓடின. பாலசந்தர் போன்ற இயக்குனர்கள் கூட ராஜாவை அணுக நேர்ந்தது அவர்களுக்கே கஷ்டமாக இருந்திருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலமாக இளையராஜா அதிருப்தியாளர்களுக்கு ஒரு புதிய வழி பிறந்தது...அது ரகுமானின் வரவு. பாலசந்தரின் சொந்தப்படமான ரோஜாவுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள இசை அமைப்பாளரான எ.கே.சேகரின் மகனும் விளம்பர ஜிங்கிள்ஸ் இசை அமைப்பாளருமான இந்த இளைஞர் இசை மற்றும் தொழில்நுட்ப கலவைகளை சிறந்த முறையில் உருவாக்கி பெரும் புகழ் பெற ஆரம்பித்தார்...மணிரத்னம், பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்கள் அப்படியே முகாம் மாறினர். ராஜாவுக்கு அப்படியே மாற்றாக தோற்றம் தர ஆரம்பித்தார் ரகுமான். இமேஜ் பில்டிங் , மக்கள் தொடர்பு, எல்லாவற்றிலும் ரகுமான் முன்னிலைபடுத்தப்பட்டார். இவர் பரதேசி கோலம் என்றால் அவர் கார்ப்பரேட் ஸ்டைல்..உடை, சிகையலங்காரம் அனைத்தும் நிபுணர்களாலும் விளம்பர எஜெண்டுகளாலும் முடிவெடுக்கப்பட்டு அவருடைய பயணம் திட்டமிட்டு அமைக்கப்பட்டு இன்று ஆஸ்கார், கிராம்மி வரை சென்று விருதுகளை அள்ளி வருகிறார்.

இளையராஜா, ஒரு முசுடு, கஞ்சன், அல்பம் என்பது போல் ஒரு திட்டமிட்ட சித்தரிப்பு தமிழ் ஊடகங்களில் நிலவி வருகிறது..பலரால் ஒரு கருப்பு தலித் பேர்வழி இவ்வளவு உயரங்களை அடைந்ததை ஜீரணிக்க முடியவில்லை என்றுதான் நான் கருதுகிறேன். அவருடைய இசையை பற்றி ஒரு வரி விமர்சிக்க அருகதை இல்லாதவர்கள் அவருடைய பிற தன்மைகளை கடுமையாக சாடுகிறார்கள். சிலருக்கு அவரை பிராம்மணவாதியாக சித்தரிப்பதில் ஆனந்தம். செம்மங்குடியின் அறையில் உள்ள ஒரே ஒரு புகைப்படம் இளையராஜாவினுடையது என்று ஒரு புலனாய்வாளர் சித்தரிக்கிறார்..ஆயிரக்கணக்கான பாடல்களில் 'கனவு காணும் வாழ்க்கை யாவும்' போன்ற ஒன்றிரெண்டை கண்டுபிடித்து, அவரிடமோ பாலு மகேந்திராவிடமோ கேட்காமல் இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் காப்பியடிக்கப்பட்டவை என்று தீர்ப்பளிக்கிரார்கள் பலர். ஆதாரமில்லாமல் அவர் பேசியதாக எதையோ சொல்லி கடுமையாக சாடுகிறார்கள் சிலர்..ஒட்டுண்ணி எழுத்தாளர்களோ பேட்டி காண வந்த நிருபருக்கு பச்சை தண்ணி கொடுக்க மறுத்த கஞ்சன் என்று புதுக்கதை புனைகிறார்கள். எத்தனை எத்தனை தாக்குதல்கள். என் அபிமான கட்டுரையாளரும் நண்பருமான ஷாஜி கூட அவருடைய குணநலன்களை கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தது ஒரு அதிர்ச்சி..நியாயமான காரணங்களை அவர் கூறினாலும்...மனதுக்கு கஷ்டமாக இருந்தது...என்ன செய்வது...என் மூளைக்குள் எங்கோ ஒரு இளையராஜா ரசிகன் பதுங்கியிருக்கிறானே!.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஆளுக்கு தகுந்த அளவுகோல்களை ஊடகங்கள் வைத்திருக்கின்றனவோ என்பதுதான். பி.ஆர்.வேலைகளில் படு வீக்கான ராஜாவை எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடிப்பவர்கள் பிறரிடம் தாள் பணிந்து நிற்பது காமெடியாக இருக்கிறது. இந்திய திரைப்பட பாடல்கள் ஒப்பீட்டில் ஒரு சாதாரண பாடலான 'ஜெய் ஹோ' இத்தனை விருதுகளை குவிக்கும் அரசியலும் பின்புலமும் , எந்த புலனாய்வு எழுத்தாளர்களாலும் விவாதிக்கப்படுவதில்லை...தேசிய பெருமிதம் தடுக்கும் போலிருக்கிறது. ஒருவருடைய மத நம்பிக்கை மற்றும் செயல்களும் விவாதிக்கப்படும்போது, இன்னொருவரை சவுகரியமாக மறக்கக்கூடிய வசதிகள் இங்கிருக்கின்றன.

சரி எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். 'அதர்மம்' பட பூஜை ஏவிஎம்மில். என் தம்பியின் முதல் படம் என்பதால் போயிருந்தேன். கடும் மழை.. எங்கும் சேறும் சகதியும்...வெள்ளை வெளேர் செருப்பை கழற்றி வைத்துவிட்டு இளையராஜா உள்ளே வந்து வணங்குகிறார். வெளியே வரும்போது நெரிசலில் ஒரு தள்ளு முள்ளு. செருப்பை மாட்ட குனிகிறார். பதட்டப்பட்ட என் நண்பர் ஒருவர் பச்சக் என்று தன் சேற்று காலை செருப்பின் மீது வைக்க..செருப்பு ஒரே கண்றாவியாகிவிட்டது...ராஜாவின் இமேஜ் குறித்து ஒரு வித எண்ணம் கொண்டிருந்த நண்பர் நடுங்கி விட்டார்...வாய் குழற எதோ சொல்ல வந்த அவரை ராஜா சமாதானப்படுத்தி, குனிந்து தேங்கி நின்ற நீரில் செருப்பை அலசி அணிந்து கொண்டு வெளியேறினார்.

அவரை கடைசியாக நேரில் நான் பார்த்தது அப்போதுதான்.