Monday, May 4, 2009

சைக்கிள் நாட்கள்


அவ்வப்போது மனிதனின் கண்டுபிடிப்புக்களை குறித்து ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிடுவேன்.

சைக்கிள் என்றும் என் பிரியத்திற்குரிய விஷயம். இரண்டு சக்கரங்கள், ஒரு பெடல், ஒரு பிரேமை வைத்து என்னமாய் கண்டுபிடித்திருக்கிறான் பாருங்கள். வேஷ்டி கட்டியவன், காலை முன்னால் தூக்கி அமர்கிறான், பேன்ட் போட்டவன் காலை அலேக்காக தூக்கி பின்னால் போடுகிறான். சைக்கிள் ஓட்ட பழகுவதற்கு முன்பே ஒரு குட்டி சைக்கிள் விபத்தில் சிக்கியவன் நான். ஐந்தாம் வகுப்பு விடுமுறையில் பூதப்பாண்டியில் இருந்து திட்டுவிளை செல்லும் பாதையில் என் சித்தப்பாவுக்கு பின்னால் அமர்ந்திருந்தவன், காலை சக்கரத்துக்குள் விட்டுவிட்டேன். இன்றும் அந்த பெரும் காயத்தின் தழும்பு என் காலில் உள்ளது.
பிறகுதான் சைக்கிள் விட கற்றுக் கொண்டேன். அது ஒரு நீண்ட நாள் பயிற்சியாக நீண்டது. பல ஆசிரியர்கள், பல உத்திகள் . இருவது இன்ச் வாடகை சைக்கிள் எடுக்கவேண்டியது, அதை குருநாதர்கள் கையில் ஒப்படைக்கவேன்டியது, அவர்கள் அனுபவித்தது போகத்தான் சிஷ்யனான எனக்கு. நகரின் மத்தியில் நெரிசலான இடத்தில் வாழும் எங்களுக்கு பக்கத்து யூனியன் பள்ளி மைதானமும் சிட்டி முனிசிபல் பள்ளி மைதானமும்தான் பயிற்சி களங்கள். எப்போதும் கால்பந்து விளையாடும் மைதானங்கள் அவை. அப்போது கிரிக்கெட் பைத்தியம் அவ்வளவாக இல்லாத காலம். பசங்கள் கால்பந்து விளையாடாத நேரமாக பார்த்து போகவேண்டும். பின்னால் ஒருவர் சீட்டை பிடித்துக்கொண்டே ஓடிவரும்போது பேலன்சுடன் ஓட்ட இயலும். அவர் விட்டு விட்டார் என்று தெரிந்தால் அவ்வளவுதான் .விழுந்துவிடுவேன். ஆனாலும் பேலன்ஸ் கை வந்தபோது கிடைத்த சந்தோசம் இருக்கிறதே, அதை வர்ணிக்க இயலாது.காலை வேளையில், இளஞ்சூரிய வெயிலில் அகண்ட மைதானத்தில் சைக்கிள் காற்றை கிழித்து பறக்கும் சுகம், விமானப் பயணத்திலும் கிடைக்குமா? சந்தேகம்தான்.

பிறகு அட்வான்ஸ் பயிற்சிகள். குருநாதர் இரண்டு கற்களை ஒரு அரையடி வித்தியாசத்தில் வைத்துவிடுவார். அந்த இடைவெளியில் லாவகமாக செலுத்தவேண்டும். ஒரு சர்க்கஸ் வீரனுக்குரிய பெருமை அதை செய்தால் கிடைக்கலாம். மேலும் டபுள்ஸ், ட்ரிபிள்ஸ், கைகளை விட்டு ஓட்டுதல் போன்ற போஸ்ட் டிப்ளமா பயிற்சிகளையும் கடந்த பின் சாலையில் வெள்ளோட்டம். பல தர வாகனங்களுக்கு இடையில் சைக்கிளை பெருமையுடன் ஓட்டும்போது அடடா என்ன சுகம்.

என் முதல் சைக்கிள் ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போதுதான் கிடைத்தது.செகண்ட் ஹேண்ட் இருவது இன்ச் சைக்கிள். அதை பள்ளிக்கு ஓட்டிச்சென்ற முதல் நாள் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நண்பர்களிடம் அதை காட்டி காட்டி பெருமையில் பூரித்துக்கொண்டு இருந்தேன். அவர்களிடம் பெரும்பாலும் இருந்தது அப்போது புகழ் பெற்றிருந்த பி எஸ் ஏ ஸ்போர்ட்ஸ் சைக்கிள்கள் மற்றும் உறுதியான ராலே, ஹெர்குலெஸ், அம்பர் வகையறாக்கள். என்னிடம் இருந்ததோ ரீபெயிண்ட் செய்த ஒரு டப்பா வண்டி. ஆனாலும் அது ஒரு பொன் குஞ்சு அல்லவா! முதல் நாள் பள்ளி விடும் மணி அடிக்கிறது. பகல் முழுவதும் சைக்கிள் ஞாபகமாகவே இருந்த எனக்கு அது ஒரு விடுதலை சங்கு. பாய்ந்து சைக்கிள் ஸ்டாண்டிற்கு வருகிறேன். வண்டியை தள்ளிக்கொண்டு ரோட்டுக்கு வருகிறேன். அங்கு என் சக மாணவர்கள் டிராபிக் ஒழுங்கு படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சாலையில் வந்துகொண்டிருக்கும் வண்டிகளை நிறுத்தி எங்களுக்கு வழி விடுகிறார்கள். எல்லோரும் என்னையும் என் சைக்கிளையும் பார்ப்பது போல் எனக்கு ஒரு குறுகுறுப்பு. பெடலில் கால் வைக்காமல் தாவி ஒரு டைவ் அடித்து சைக்கிளில் ஏறி பறக்கிறேன். கிக்கானி பள்ளி மாணவர்கள் அனைவரும் என்னை துரத்தி வருவது போன்ற உணர்வு.

பள்ளி நாட்களில் சைக்கிள் ஒரு பெருமையான விஷயம்தான். கொஞ்ச நாட்களில் இருவது இன்ச் சலித்துப்போய் பெரிய சைக்கிள் வேண்டுமென்று என் தந்தையை நச்சரிக்க தொடங்கிவிட்டேன். மீண்டும் ஒரு செகண்ட் ஹேண்ட் ராலே வண்டி வாங்கித்தரப்பட்டது. அப்போது சைக்கிளை அலங்கரித்துவைத்துக்கொள்வது ஒரு பெரிய பேஷன். சிலர் ஹேண்டில் பாரில் நீள நீளமான குஞ்சங்களை இணைத்துக்கொள்வர். பிரேமிலும் குஞ்சங்கள் தொங்கும். டைனமோ திருட்டு போகாமல் இருக்க அதற்க்கு ஒரு சங்கிலி, டூம் விளக்கிற்கு கிழவர்கள் மப்ளர் அணிவது போல் ஒரு துண்டு துணி, சக்கரத்து போர்க் கம்பிகளில் பாசி மணிகள், அலங்காரமான சைட் பெட்டிகள் , விதவிதமான எக்ஸ்ட்ரா பிட்டிங்குகள் , க்ரோம் ப்ளேட்டிங் செய்த மட் கார்டுகள், என்று சிலர் சைக்கிளை அலங்காரமாக வைத்திருப்பார்கள். எங்களது ஆர்ட்ஸ் கடையில் சைக்கிளில் விதவிதமான படங்களை வரைவதற்காகவே நிறைய வாடிக்கையாளர்கள் வருவதுண்டு. எனக்கும் இந்த பைத்தியம் பிடித்தது. எனது சைக்கிள் சைட் பெட்டியில் விதவிதமான ஓவியங்கள் இடம்பெறும். காமிக்ஸ் பாத்திரங்கள், மண்டை ஓடுகள் என்று பள்ளியிலும், பின்னர் அரிவாள் சுத்தியல் போன்ற புரட்சி வடிவங்களும் கல்லூரி நாட்களிலும் இடம் பெற்றன. மிச்ச இடங்களில் விதவிதமான ஸ்டிக்கர்கள் வேறு.

டிவி இல்லாத அந்த நாட்களில் நகர்ப்புற மக்களுக்கு சினிமா முக்கிய பொழுதுபோக்கு.தியேட்டர்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். அப்போது கோவையில் ஒவ்வொரு தியேட்டரிலும் சைக்கிள் டிக்கட் என்று ஒரு பிரிவு இருக்கும். மிதிவண்டிகளை முதல் நாள் இரவே தியேட்டரில் க்யூவில் நிறுத்திவிடுவார்கள். டிக்கட் கொடுக்கும் நேரத்தில் சைக்கிள்களை வரிசையாக தள்ளிக்கொண்டு செல்வார்கள். ராயல் , ராஜா, சென்ட்ரல், ரெயின்போ போன்ற தியேட்டர்களில் சிவாஜி, எம்ஜியார், ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு கிலோமீட்டர் கணக்கில் இந்த சைக்கிள் வரிசை நீண்டிருக்கும். இப்போது இவை எல்லாம் பழைய கதை.

கோவில் திருவிழாக்களை விட்டால் அப்போது இன்னொரு பொழுதுபோக்கு, வீதிகளில் கொஞ்சம் அகலமான இடம் இருந்தால், ஒரு வாரம் விடாமல் சைக்கிள் விடும் சாகசங்கள்தாம். நான் சின்ன பையனாக இருக்கும்போது இத்தகைய சாகசங்களை வாயை பிளந்து கொண்டு பார்த்திருக்கிறேன். பள்ளியை விட்டு வந்தவுடன் பையை தூக்கி எறிந்து விட்டு ஓடிவிடுவேன். சைக்கிள் வீரர் கால்கள் ஏழு நாட்களுக்கு தரையில் படாது என்பதுதான் சிறப்பு. கையை விட்டுவிட்டு ஓட்டுவார், தலைகீழாக ஓட்டுவார், பானைகளில் நீர் எடுத்து ஓட்டிக்கொண்டே குளிப்பார், உடை மாற்றுவார். எப்போது சிறுநீர் மலம் கழிப்பார் என்பது மட்டும் புரியாத புதிர். மாலை நேரங்களில் சினிமா பாடல்களுக்கு சைக்கிளில் இருந்தபடியே நடனம் ஆடுவார், கூடவே ஒரு கவர்ச்சி கன்னியும், காமெடியனும் இருப்பார்கள். 'ஆடப்பிறந்தவளே ஆடிவா...', 'கண்டவர் கண்ணு படும் செல்லாத்தா,'நான் தென்ன மரத்துல குந்தியிருப்பதை சின்ன பாப்பா' போன்ற சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இவர் எப்போது ஆடுவார் என்று அனைவரும் காத்துக்கொண்டிருப்பார்கள். அப்போதுதான் கலெக்ஷனும் தூள் பறக்கும்.

பள்ளி விட்டு வரும்போது, இதே சாகசங்கள் தொடரும். புரூக் பாண்ட் ரோட்டில் மாணவ மாணவியர் நடந்து சென்று கொண்டிருப்பார்கள். சில ஆசிரியர்களும் மெதுவாக சைக்கிளில் போய்க்கொண்டிருப்பார்கள். அவர்கள் பின்னால் சென்று கண கணவென்று மணியடிப்பதும், ஹேண்டில் பாரில் வயிற்றை ஊன்றி நின்று கொண்டு செல்வதும், தலை வாரிக்கொண்டே சைக்கிள் ஓட்டுவதும் மாணவர்களின் முக்கியமான சாதனைகள். அந்த கால கட்டங்களில், நகராட்சி, மற்றும் பஞ்சாயத்துக்களில் சைக்கிளுக்கு வரி கட்டி ஒரு பாஸை பிரேக்கிலோ அல்லது சீட்டுக்கு அடியிலேயோ இணைத்துக்கொள்ளவேண்டும். அது பெரும்பாலும் ஒரு இரும்புத்தகடு. யாரும் இதை ஒழுங்காக கட்ட மாட்டார்கள். திடீரென்று ஒரு வதந்தி கிளம்பும். 'பெரியாஸ்பத்திரி பக்கத்தில், முனிசிபாலிடிகாரன் பாஸ் புடிக்கிறானாம்' என்று யாராவது கிளப்பி விடுவார்கள், அவ்வளவுதான், சைக்கிள் பார்ட்டிகள் அனைவரும் அந்த இடத்தை தவிர்ப்பதற்காக சந்து பொந்துகளுக்குள் புகுந்து பறப்பார்கள்.

கல்லூரியில் என் சைக்கிள் தொலைந்து போன கதையை நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அப்போது சினிமா சொசைட்டி பைத்தியம் பிடித்து ஆட்டியது. ஸ்ரீபதி தியேட்டரில் அரவிந்தனின் 'தம்பு' பார்த்துவிட்டு அங்கிருந்து நாலைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கணபதி வேலன் தியேட்டருக்கு கே.ஜி.ஜியார்ஜின் ' ஸ்வப்னாடனம்' பார்க்க வெயிலில் சைக்கிள் மிதித்த காலங்கள். தொய்ந்து போன பிலிம் சொசைட்டியை புத்தாக்கம் செய்கிறேன் என்று 'சாருலதா' படம் போட, ஒவ்வொரு உறுப்பினர் வீட்டுக்கும் சைக்கிளில் சென்று அறிவித்த காலம்...சட்டக்கல்லூரியில் படிக்கும் வரை சைக்கிள்தான். பின் ஏனோ அதை ஓட்டுவது ஏதோ அவமானகரமான செயல் போல் கோவை நகரத்தில் நிகழ ஆரம்பித்தது. பெரும்பாலும் அனைவரும் மொபெட் அல்லது ஸ்கூட்டர் வாங்க ஆரம்பித்தனர். ஆனாலும் பிற நகரங்களில் சைக்கிள் நீண்ட நாட்கள் கழித்துதான் அழிய ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். கடலூர், விருத்தாச்சலம் போன்ற நகரங்களில் வக்கீல்கள் கோட்டும் கவுனும் அணிந்து சைக்கிளில் பறப்பார்கள். சென்னையில் கூட சென்ற நூற்றாண்டின் இறுதியில் மூக்கையா, சூசைராஜ் போன்ற பெரும் ஓவியர்கள் சர்வ சாதாரணமாக சைக்கிளில் பயணிப்பதை பார்த்திருக்கிறேன். என்ன கொடுமை என்றால், என் தந்தையுடன் சைக்கிளில் பயணம் செய்திருக்கிறேன், தனியாகவும், டபுள்சிலும். ஆனால் என் குழந்தைகள் நான் சைக்கிள் ஓட்டுவதை கூட கண்டதில்லை . இப்போதெல்லாம் எங்கள் சாலைகளில் சைக்கிள்களை அபூர்வமாகத்தான் காணமுடிகிறது. தினமும் , மன நலம் குன்றிய ஒருவர் தன் பழைய சைக்கிளில் ஏராளமான குப்பைகளை மூட்டையாக கட்டிக்கொண்டு , காற்றில்லாத சக்கரங்களை உருட்டிக்கொண்டு இலக்கில்லாமல் சென்று கொண்டிருப்பதை மட்டும் தவறாமல் பார்க்கிறேன்.

20 comments:

தமிழ் ஸ்டுடியோ said...

சைக்கிளோடு வாழ்ந்து இருக்கிறீர்கள்.. எப்போது நினைவுகள் நம்மை புதுப்பிக்கின்றன.. மிக அழகாக உங்கள் நினைவுகளை இங்கே பதிந்துள்ளீர்கள்.. தொடர்ந்து எழுதினால் பலருக்கும் பயனுள்ளதாக, பலர் மனம் பண்பட உறுதுணையாக இருக்கும்.

சித்ரன் said...

Enakkum ithu ponru cycle anubavangal niraiya undu. Cycle-il light illaamal senru policekaaranidam maattinathu uLpada.
Nalla pathivu. Rasithu padithen.

Kumar_Surya Graphics said...

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது ஒரு சைக்கிள் என்பதே கனவாக இருந்தது. அடுத்த வருடம் அது கைகூடியது. ஆட்கள் மிதித்துக் கொண்டு போகும் போது பெடல் ராடின் அழகில் சொக்கிப் போவதுண்டு. கீழே விழுந்தால் கழன்று போகும் செயினை மின்னல் வேகத்தில் மாட்டும் உத்தி உடனே கைவசமானது.
சைக்கிளை கனவு காணும் ஒருவனது சிங்களப் படம் அப்போது ரூபவாஹினியில் பார்த்தது நினைவுக்கு வருகிறது.
உங்களது சைக்கிள் ஓவியம் மிக அருமை.

Grace said...

உண்மையில் சைக்கிளை விட அது குறித்த உங்களது எண்ண ஓட்டங்கள் மிக அருமை ஜீவா

என்னுடைய தம்பிக்கும் ஒரு சைக்கிள் இருந்தது. இதே சொல்லப் பட்ட பகுதிகளில் ஓட்டி மகிழ்ந்த்திருக்கிறான். இதே போல மிகவும் ரசித்து அலங்கரிக்கப் பட்ட ரதம் போன்ற ஒன்று. ஆனாலும் நீங்கள் சொன்னது போல மிக குறுகிய காலத்திலேயெ பழைய மார்கெட்டுக்கு போனது ஒரு சுசுகியின் வரவால்.

என் தம்பியிடம் கேட்டால் அவனும் இதை போல ஒரு நினைவலையை பதித்து வைத்து இருப்பானோ என்னவோ.

ரசிக்கத்தக்க பதிவு. அருமையான ஓட்டை சைக்கிள் படமும் கூடவே...

seetha said...

jeeva i learnt cycling when we were in kk dist. since there wer eno small cycles for girls my father got em a big one. but i still went to school in that. korangu pedal na ippovum sirippu varudhu.muttila niraya thazumbu iruuk.vuzhundhu ,vuzhundhu padiccen!!!!!

anna said...
This comment has been removed by the author.
anna said...

உங்களது சைக்கிள் பயணம் என்னுடைய சைக்கிள் வாழ்க்கையை நியபாகம் படுத்தியது.....மிகவும் புத்துணர்வு கொடுத்தது உங்களுது எதார்த்தமான நடையில் நீங்கள் சொன்ன வரிகள்......இன்று கூட நான் சொல்வேன் சைக்கிள் பயணத்தில் கண்ட இன்பங்கள் வேறு எதிலும் காணமுடியுமா சந்தேகம் தான்.........மிகவும் அருமை ஜீவா சார்!!!!!!!!

Ramesh said...

nice...

ATHEIST said...

என்னை பல வருடங்களுக்கு முன்னால் இழுத்து சென்றது இந்த பதிவு. Cricket ground போக‌ 'நாப்பிள்ஸ்' அடித்தது, பெரிய வண்டி இடக்கால் போட்டு ஓட்டி பல முறை 'சில்லரை' வாரியது, ஒரு ஆளில்லா முடுக்கில் 5 Duthie school girls human chain உருவாக்கி என் சைக்கிளை தடுக்க முனைந்தது என்று எத்தனை எத்தனையோ 'இனிமையான' அனுபவங்கள் இந்த சைக்கிள் மூலம்! நிறைய பழைய விஷயங்களை ஞாபகப்படுத்தியிருக்கிறீர்கள் இந்த பதிவில், நன்றி! நானும் வியந்ததுண்டு அந்த‌ 24/7 சைக்கிள் ஓட்டுபவர்களை பார்த்து.

p.s: i've posted this in GN too.

Arvind E said...

:-), Ultimate One!!

சுரேஷ்.... said...

கல்லூரி படிப்பு முடித்து வேலையில் சேர்ந்து சில ஆண்டுகள் வரையிலும் சைக்கிள் ஓட்டிய அனுபவம் எனக்கு. இந்த நீண்ட நாள் சாதனையை இதுவரை எந்த வாகனமும் தொட்டதில்லை. உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு நில்லாமல் எங்களை எங்களின் தொலைந்து போன வாழ்க்கையோடு அசைபோட வைத்தது தான் தங்கள் எழுத்தின் வெற்றி

Rama Sethu Ranga Nathan said...
This comment has been removed by the author.
Rama Sethu Ranga Nathan said...

//மேலும் டபுள்ஸ், ட்ரிபிள்ஸ், கைகளை விட்டு ஓட்டுதல் போன்ற போஸ்ட் டிப்ளமா பயிற்சிகளையும் கடந்த பின் சாலையில் வெள்ளோட்டம். பல தர வாகனங்களுக்கு இடையில் சைக்கிளை பெருமையுடன் ஓட்டும்போது அடடா என்ன சுகம்.//
உண்மையில் சைக்கிளை குறித்த உங்களது எண்ண ஓட்டங்கள் மிக அருமை !!!

shivaaji said...

ஜீவா,சைக்கில் நமது வாழ்கையில் ஒரு பகுதி என்றும் மாறாதவை,மற்க்காதவை.

shivaaji said...

ஜீவா,சைக்கில் நமது வாழ்கையில் ஒரு பகுதி என்றும் மாறாதவை,மற்க்காதவை.

Parvadha Vardhini said...

I was longing to have a cycle from my 8th std. I learnt to ride cycle in my dad's cycle (big sized one - I can't reach my legs to the ground in it) and then thru rented cycles. Have tried atleast one round in each of friend's, relatives' cycles... My wish to own a cycle came true only after I finished my college, while doing articleship...

You have brought back my memories... Thank you :-)))

//காலை வேளையில், இளஞ்சூரிய வெயிலில் அகண்ட மைதானத்தில் சைக்கிள் காற்றை கிழித்து பறக்கும் சுகம், விமானப் பயணத்திலும் கிடைக்குமா? சந்தேகம்தான்.// Very true words!!!

lalli said...

apdiye ennoda pazhaya ninaivuhalukku poitten Jeeva Sir..:) ipdi thaan enge appa kitte kenji koothadi 2nd hand ladies cycle vaangi..pakkathule(ippo apartments ayiduchi)kaali groundla kalankathale ottrathukku kathindu..sss aaha ..ippo thirumbavum atha natkalukku poidalam pola irukkuthe..!!! but ippo enn paiyen(7th std)putham pudhusu vaangi thanthuttaru Venkat..avan adhe mathiri early morning ridekku ponum mummy seekiram ezhuppi vidunu solra pothu..sirichikkiren naan..:) History repeats thaan!!!!

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு சார். அப்போது பள்ளிக்கு சைக்கிள் கொண்டு வருவது பெரிய கௌரவம். தெருவுக்கு ஒரு வீட்டில் தான் சைக்கிள் இருக்கும்.
மகிழ்ச்சி. நன்றி சார்.

Dr. S.Dorairaj said...

It is indeed a fabulous narration of your cycling life. This write up had kindled my nostalgic memories of my life with the cycle.
After my brother's cycle theft @ VOC park central library, where I used to go in the week ends, I used to hire the cycle from Geetha cycle works situated in front of Sowdamman Koil.
I used to hire it on every week end around 10 AM and return it only in the evening after 6 PM. We all Devanga school friends used to go picnic on doubles to as far off places as Marudamalai, Airpot, Perur, Anuvavvi subramanian koil, Saibaba koil, etc., whether is is Raining or in Scarching heat. These experiences of my life is still pleasent in my memoirs and enjoy the beauty of life ( to think about past life experiences).
The cycle shop, used to charge me 10 paise per hour and as a regular customer he take Re.1/= per day.Also, every evening after school / college, I used to go to Raju's (owner) cycle shop for reading Malai Murasu, sitting near his Cashier table area. I used to log-in and log-out cycles in the ledger and receive cash from customers.It was indeed nice to see him over-hauling the cycles in the evenings and chat even though he was a young marries man at that time.
I think that he had a roaring business until mid 80s and closed the shop. Now he is running a Xerox shop.
Jeeva, thanks for kindling my sub-conscious thoughts of my child wood days ( the incidence I spoke about is between the years-1970~1980.)

Have a Great Day.

பாலகிருஷ்ணன் said...

நான் ஓட்டிய சைக்கிள் முன் சக்கரம் ஓடும்போது அடைந்த சந்தோஷம் நீங்கள் படித்த யூனியன் பள்ளியில்தான்!