Tuesday, December 9, 2008

ஜோதிடம்

ஜோதிடர்களை நான் மிகவும் ரசிப்பேன். மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவர்கள். பிரச்சினைகளுக்கு தீர்வும் சொல்பவர்கள். வீடு வீடாக வந்து கிளி ஜோதிடம் சொல்லும் சில நபர்களை அடிக்கடி சந்திப்பேன். நான் எங்கள் கடையில் வரைவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். பேச்சு கொடுப்பேன். 'எங்க சார், முன்ன மாதிரி வருமானம் இப்ப இல்லை. எங்கேயாவது கிராமத்திலே திருவிழா நடக்கும்போதுதான் வருமானம். முன்ன எல்லாம், பெண்கள் ஜோசியம் பார்ப்பாங்க, ஒரு பொம்பள பாத்தா போட்டிக்கு பக்கத்து வீட்டு பொம்பளையும் பார்ப்பா. இப்ப வாசல்ல நின்னு, கிளி ஜோசியம்ன்னு குரல் கொடுத்தாலே உள்ள இருந்தே வள்ளுன்னு விழறாங்க. எப்ப பாத்தாலும் டிவிலே சீரியல் ஓடுது. நாங்க கூப்பிட்டாலே அவங்களுக்கு எரிச்சல் வருது' என்று ஒருவர் புலம்பினார். அடடா, இந்த சீரியல்கள் யாரையெல்லாம் பாதித்திருக்கிறது !

ஊமை ஜோதிடர்கள் என்று ஒரு குரூப் வரும். ஜாடையிலும் எழுத்து மூலமும் உங்களுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர், என்ன தொழில், என்ன பிரச்சினை என்று புட்டு புட்டு வைப்பார்கள். இவர்கள் ஊமைகள் இல்லை என்றாலும் சிறந்த நடிகர்கள். குறைந்த கட்டணம் என்றாலும் பரிகாரம் என்று சொல்லி ஒரு பிட்டை போடுவார்கள். ஒரு குட்டி தேவாங்குடன் வண்ண வண்ண கயிறுகளை விற்றுக்கொண்டு ஒரு பெரியவர் வருவார். இவரை நான் ஓவியமாக கூட தீட்டியிருக்கிறேன். சீரியல்கள் இவர்களை கூட ஒதுக்கித் தள்ளிவிட்டன.

எங்கள் கடையில் ஒரு ரெசிடென்ட் ஜோதிடர் இருந்தார். அதாவது எங்கள் ஓவியக்கூடத்தின் ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு கேக் மாஸ்டர். பிரபல பேக்கரியில் பணிபுரிந்தது போக மீதி நேரத்தை இங்கே ஓட்டுவார். வெற்றிலையில் மை தடவி ஜோதிடம் சொல்வது இவர் ஸ்பெஷாலிடி. இந்த சையது பாயை தேடி ஏகப்பட்ட கஸ்டமர்கள் வருவதுண்டு. எருமையை காணோம், காதல் வசியங்கள் போன்ற தலை போகும் விஷயங்களை கஞ்சா போதையுடன் நிவர்த்தி செய்வதுண்டு. இவரது கஸ்டமர்கள் எனக்கும் நண்பர்களாகிபோயினர். பிளாட்பாரத்தில் அரும்பு மீசை, டை, மற்றும் பெரிய பூத கண்ணாடியுடன் அனாயாசமாக கைரேகை பார்க்கும் டிப் டாப் ஜோதிடரை இவர் வாய் பிளந்து பொறாமையுடன் பார்க்கும் காட்சியையும் கண்டிருக்கிறேன்.

சூலூர் ஜோதிடர் இன்னும் பிரபலமாக இருந்தவர். ஒரு முறை பக்கத்து வீட்டில் ரொட்டி அடுப்பு வைத்துக்கொண்டிருந்த நீலகண்ட பிள்ளையின் அடுக்கு டிபன் பாக்ஸ் காணாமல் போய்விட்டது. எங்கள் கடையில் வேலை பார்த்து வந்த மலையாள காக்காவின் மீது இவருக்கு சந்தேகம். என்ன ஆனாலும் சரி, சூலூர் ஜோசியரை பார்த்துவிடுவது என்று சூழுரைத்து சென்றார். அரை டிராயர் பொடியனான நான் துணைக்கு. சூலூர் ஜோசியர் நாஸ் தியேட்டருக்கு பக்கத்து மாடியில் இருந்தார். ஒரு தலைப்பா, அங்கவஸ்திரம், கோட்டு என்று பழைய படத்து அப்பா போல இருப்பார். நம் பிரச்சினைகளை சொல்லக்கூடாது. அவரே கண்டுபிடிப்பார். அதுதான் இவரிடம் போவதில் உள்ள த்ரில்.

பேக்கரி தாத்தாவை உற்று பார்த்தார். ஜன்னலுக்கு வெளியே பார்த்தார். 'புறா வளர்க்கிறது ஒரு கேந்தி இல்லை ?' என்று வினவினார். பயபக்தியுடன் ஆமோதித்தோம்.
திடீரென்று இல்லாத தாடியை உருவுவது போல் பாவனை செய்து கண்ணடித்தார்.
விழித்தோம்.
'துலுக்கன்' என்று உரக்க அறிவித்தார்.
'அவன்தான் உங்க டிபன் பாக்சை திருடியிருக்கிறான்.'

அன்று ஏற்பட்ட சூலூர் ஜோசியர் பைத்தியம் என்னை பற்றிக்கொண்டது. எத்தனை முறை மற்றவர்களுடன் போயிருப்பேன். என் அப்பாவின் ஜெர்மன் ஜியாமெட்ரி பாக்ஸை திருடியது யார், ரவி பப்ளிசிட்டி வாசலில் கிடந்த மந்திரித்த தகடுகளை போட்ட சதிகாரன் யார் என்று பலப்பல சரித்திர பிரசித்தி பெற்ற துப்புகளை அவர் அனாயாசமாக துலக்கியபோது பக்கத்தில் இருந்த பொடியன் என்று பெயர் பெற்றேன்.



எனக்காக நானே அங்கு போவேன் என்று நினைத்ததேயில்லை, என் சைக்கிள் திருட்டு போகும் வரை. வளர்ந்து கல்லூரிக்கு போகும் பருவத்தில், புரட்சிகர சிந்தனைகளுடன் சைக்கிளில் ஏகப்பட்ட சிவப்பு வடிவங்களை தீட்டி அழகுற வைத்திருந்தேன். கல்லூரி வளாகத்திற்குள் எவனோ கம்யூனிச எதிர்ப்பாளன் சைக்கிளை லவட்டிக்கொண்டு போய்விட்டான். காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு கடைக்கு வந்தேன். என் தந்தையிடம் இதை எப்படி சொல்வது என்ற பயத்தில் தேம்பி அழுதுவிட்டேன். அனைவரும் கலந்தாலோசித்தனர். 'சூலூர் ஜோசியரிடம் போ ' என்று அறிவுறுத்தல்கள்.
ஒரு புரட்சியாளன் ஜோதிடரிடம் போவதா என்று ஏகப்பட்ட மனக் குழப்பங்களுடன் தனியாக சென்றேன்.

பல வருடங்கள் கடந்திருக்கின்றன. அதே மாடி, அதே தூசி படிந்த அறை. ஜோதிடர் மட்டும் மாறியிருக்கிறார். அவர் மகன். அதே பாணி.

திரு திரு என்று விழித்துக்கொண்டிருந்த என்னை கடுமையாக பார்த்தார். திருடனை போல நான் உணர்ந்தேன்.
'வாகனம்'!
ஒற்றை வார்த்தை.
கண்களில் நீர் கோத்துக்கொண்டது.
'சரி, போ, போ, கிடைக்காது, வேறே வாங்கிக்கோ.'

அதற்க்கு பிறகு நான் எந்த ஜோதிடரையும் பார்த்ததில்லை.

2 comments:

Arvind E said...

Your Sister Read it :)!! She told "I See", as she has not been aware of all these things till today.. Nice One uncle!!

Shan Nalliah / GANDHIYIST said...

greetings!