Saturday, July 3, 2010

தமிழ் படிக்காத தமிழ் எழுத்தாளர்.


எப்படி அவருக்கு அப்படி ஒரு எண்ணம் தோன்றியது? ஒரு சேட்டு பையன் ஆங்கிலம், இந்தி, தமிழ் என்று மூன்று மொழிகளில் பிளந்து கட்டுவதை பார்த்தவுடன் தாளவில்லை. தன் பையனும் அவன் படிக்கும் காண்வென்ட்டில்தான் படிக்கவேண்டும் என்று முடிவு கட்டி, வறுமையிலும் அங்கு சேர்த்துவிட்டார். நானும் அங்கு சேர்ந்து மும்மொழி திட்டம் இல்லாததால் ஆங்கிலமும் இந்தியும் மட்டும் படிக்க தொடங்கினேன். கான்வென்ட் சூழலுக்கு ஒவ்வாத தோற்றம்தான் , ஆனாலும் படிப்பில் சோடையில்லை. தமிழ்மொழி என்னை விடவில்லை. பள்ளிக்கு நடந்து செல்லும்போதே..ஆற அமர சினிமா போஸ்டர்களின் தலைப்பை எழுத்துக்கூட்டி படிக்கத்தொடங்கினேன். அடுத்தது பத்திரிகைகளின் வால் போஸ்டர்கள், ஜனசக்தி, தினத்தந்தி , ஆனந்தவிகடன் என்று புரொமோஷன் கிட்டியது. அம்புலிமாமாவில் விக்ரமாதித்தன் கதை, பரோபகாரி பழனி கதைகள் , கண்ணன் பத்திரிக்கை என்று பயணம் தொடர்ந்தது. ஆறாம் வகுப்பு முதல் குஜராத்திகள் நடத்திய பள்ளிக்கு மாற்றம்.

என் தந்தை கம்யூனிஸ்ட் கொள்கைகளில் பிடிப்புள்ளவராக இருந்ததால் அவர் செல்லும் அனைத்து கூட்டங்களுக்கும் கருத்தரங்கம், பட்டிமன்றம் என்று எங்கே நடந்தாலும் என்னையும் அழைத்து சென்றுவிடுவார். பெரும்பாலும் கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய நிகழ்ச்சிகள். இப்போதைய்ய கெக்கே பிக்கே பட்டிமன்றங்களை போல இல்லை. பல பிரபலங்களை நேரில் காணும் வாய்ப்பும், அவர்கள் பேசுவதை கேட்கும் வாய்ப்பும் அந்த குழந்தை பருவத்திலேயே கிடைத்தது. ஜீவா, குன்றக்குடி அடிகளார், தா.பாண்டியன், ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி என்று சொல்லிக்கொண்டே போகலாம். நியூ சென்சுரி நிறுவனத்தின் மலிவுப்பதிப்பு குழந்தை நூல்கள் அத்தனையும் என் வசம் இருந்தன. படிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. ஆங்கில, இந்தி புத்தகங்களுடன் , தமிழ் காமிக்ஸ், குமுதம் என்று பல பட்டறையாக உருவானேன்.

புதிய பள்ளியில் எனக்கு நெருக்கமானவர் யாரென்று யூகித்து இருப்பீர்கள்! நூலகர்தான். ஒன்பதேகால் மணிக்கு தொடங்கும் பள்ளியில் தனியாளாக எட்டு மணிக்கே இந்த ஜீவன் காத்துக்கிடக்கும். லொங்கு லொங்கென்று சிங்கானல்லூரிலிருந்து வடகோவைக்கு சைக்கிளை மிதித்து வருவார் அந்த நல்ல மனிதர். 'ஏண்டா, காலையிலேயே உயிரை வாங்குறே' என்று செல்லமாக திட்டிவிட்டு கதவை திறந்துவிடுவார். அவ்வளவுதான், மாத, வார பத்திரிகைகள் முதல் கிடைத்த புத்தகங்களை எல்லாம் பள்ளி மணி அடிக்கும் வரை கரைத்துக்குடிப்பது என் அன்றாட வேலை. இந்தி மாணவனாக இருந்தாலும் என் ஆர்வத்தை கண்டு தமிழாசிரியர்களே வியந்து போயினர். அவர்களே படிக்காத நாவல்களை , நீல பத்மநாபன் எழுதிய 'தலைமுறைகள்', கே.பி.கேசவதேவ், எம்.டி.வாசுதேவன் நாயர் மொழிபெயர்ப்புக்கள் என்று நூலகத்தில் அனாதையாக கிடந்த புத்தகங்கள் என்று அத்தனையையும் வெறியுடன் படிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்தியிலும் சோடை போகவில்லை. உச்சரிப்புக்காகவே இந்தி நாடகத்தில் ஒரு சாமியார் வேடத்தில் நடிக்க வைக்கப்பட்டேன்.
சினிமா பைத்தியம் என்னை பீடிக்க ஆரம்பித்ததும் பள்ளி நாட்களில்தான். பள்ளிக்கு அந்த பக்கம் சென்ட்ரல் தியேட்டர், இந்த பக்கம் ஸ்ரீனிவாஸ் தியேட்டர்...ஸ்டில்களையும் போஸ்டர்களையும் வெறித்து பார்த்துக்கொண்டிருப்பது பெரும் பொழுதுபோக்கு. வீட்டுக்கு பக்கத்திலேயே தென்னகத்தின் முதல் தியேட்டராக உருவெடுத்து வெரைட்டி ஹால் என்ற பெயரிலிருந்து டிலைட் என்ற பெயரில் இயங்கிய இந்திப்பட தியேட்டர். மேலும் என் தந்தையின் தொழிலே திரைப்படங்களுக்கு பேனர் வரைவதுதான் என்னும்போது கேட்கவா வேண்டும்...அயல்மொழித்திரைப்படங்களின் பைத்தியம் ஆனேன். ஸ்கிரீன், பிலிம்பேர் பத்திரிகைகளை கரைத்து குடித்து வரப்போகும் படங்களின் கதை, நடிகர்கள் என்று நிரல் நுனித் தகவல்களுடன் நடமாடினேன்.

டிலைட் தியேட்டர் முதலாளி அப்போது ராம் சொரூப் சேட்டு. இந்தி திரைப்பட உலகின் பெரும் புள்ளிகளுடன் நெருக்கமானவர். ஓவ்வொரு வாரமும் இந்திப்படங்கள் மாறும். பம்பாயிலிருந்து போட்டோ கார்டுகள் வந்துவிட்டால் தியேட்டரிலிருந்து என் தந்தையை அழைக்க ஆள் வரும். சில சமயம் என்னை அனுப்பிவிடுவார். அலுவலக அறையில் மேஜை நாற்காலி இருந்தாலும், சேட் தரையில் ஒரு பெரிய மெத்தை விரித்து , திண்டுகள் சகிதம் படுத்துக்கொண்டிருப்பார். புகைப்படங்களை கொடுத்து யாரை பெரிதாக வரையவேண்டும்...யாரை வரையத்தேவை இல்லை என்றெல்லாம் உத்தரவிடுவார். அவர் சொன்னதை இந்த அதிகபிரசங்கி கேட்டதேயில்லை. எனக்குத்தான் அந்த படங்களின் கதை தெரியுமே. அவர் சொன்னதை மறுத்து..இந்த நடிகருக்குத்தான் கதையில் முக்கியத்துவம்...ஆகவே அவரைத்தான் பெரிதாக போடவேண்டும், இதில் நாயகிக்குத்தான் நல்ல பெயர்..அவரை பெரிதாக வரையலாம் என்று விளக்குவேன். சேட்டுக்கு எப்போதும் இது ஒரு ஆச்சரியம். ஒன்று..அவரை யாரும் மறுத்து பேசுவதில்லை. இரண்டு இந்த கருப்பு நிற பொடியன் இந்தி படங்களை பற்றி இவ்வளவு தெரிந்திருக்கின்றானே என்று.

அவருக்கு என் மீது தாளா அன்பு பிறந்துவிட்டது. பிரத்தியேகமான வண்ண இந்தி திரைப்பட பாட்டு புத்தகங்களை ஒவ்வொரு பட ரிலீசின்போதும் என்னை அழைத்து கொடுப்பார். என் தந்தையை அங்கு வரக்கூடாது என்று உத்தரவிட்டு விட்டார். 'இனிமேல் ஆர்டர் வாங்க அவன்தான் வரவேண்டும்' என்று உத்தரவு. ' அவன் காலேஜ் முடிக்கட்டும், பம்பாயில் ராஜ்கபூரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேர்த்துவிடுகிறேன்' என்று வேறு யாரும் கேட்காமலேயே வாக்களித்துவிட்டார். என் தந்தைக்கு பிடித்தது கிலி. பின்னே கலெக்டராக வரவேண்டிய மகன் சினிமா இயக்குனராவதா என்று பயந்து எம்.ஏ.படிக்க சென்னைக்கு துரத்திவிட்டுவிட்டார். இப்படி சினிமா ஆசை மொட்டிலேயே கருக, சென்னை புதிய வாசல்களை திறந்துவிட்டது. காவலாளியே இல்லாத விக்டோரியா விடுதி வாசம், ஏராளமான நண்பர்கள், தினமும் திரைப்படங்கள், படிக்க நிறைய நூல்கள், நூலகங்கள், இலக்கிய கூட்டங்கள் என்று படிக்க போன அரசியல் அறிவியலை தவிர ஏகப்பட்ட வேலைகளில் மூழ்கி தெளிந்தேன்.

கோவைக்கு ஒரு அரைகுறை சினிமா அறிஞனாக மீண்டு வந்தேன். திரைப்பட ஆர்வலர்களின் ஜோதியில் கலந்தேன். அப்போது அங்கு பணியில் இருந்த அம்ஷன்குமார், அமரநாதன், ஞானி, புவியரசு, கவிஞர் சுகுமாரன் போன்றோர் அமைத்த திரைப்பட சங்கங்களில் ஆர்வத்துடன் பங்கெடுத்து மெருகேறினேன்(!)

உச்சகட்டமாக ஒரு இலக்கிய கூட்டத்தில் நான் திரைப்படங்களை பற்றி பேசியதை கேள்விப்பட்ட நண்பர் மரபின் மைந்தன் முத்தையா அப்போது ஆரம்பிக்க இருந்த 'ரசனை' மாத இதழில் மாதம் ஒரு கட்டுரை எழுதச்சொன்னார். தமிழ் படிக்காத நான் எப்படி எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது நண்பர்கள் ஊக்குவித்தனர். அப்போது ஆரம்பித்து இன்னும் ஐந்து வருடங்களாக எழுதிக்கொண்டே இருக்கிறேன். முத்தையாவின் அடுத்த ஊக்குவிப்பில் கட்டுரைகள் ஒரு நூலாகவும் வந்துவிட்டது, 'திரைச்சீலை' என்ற பெயரில்.

தமிழ் படிக்காமல் தமிழ்நாட்டில் பட்டதாரியாக மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளராகவும் உருவெடுக்கலாம்!!!!

Tuesday, March 30, 2010

தோல்பாவைகள் இனியும் ஆடும்

பல பழங்கால கலைகளை பற்றி புத்தகங்களில் படித்துத்தான் தெரிந்திருக்கிறோம். நகரச்சூழலில் மட்டுமே வாழ்ந்து வந்ததனால் இழந்தது நிறைய. கணியான் ஆட்டத்தை பள்ளி நாட்களில் எங்கள் ஊர் காளி ஊட்டில்தான் பார்க்க கிடைத்தது. தெருக்கூத்தை நான் முதன் முதலில் பார்த்தது எங்கே என்றால் ஆச்சரியப்படுவீர்கள். எங்கோ கிராமத்தில் அல்ல! சென்னை புரசைவாக்கம் மில்லர்ஸ் ரோடு பவர் மேன்ஷன் வாசலில் இருந்த பேருந்து நிழற்குடையின் கீழ்தான்!! கதகளி ஆட்டத்தை கோவை நகரத்து ஆயுர்வேத நிலையம் ஒன்றில்தான் கோவை ஞானியுடன் பார்த்தேன். இப்படி போய்க்கொண்டிருக்கும் எனது வறண்ட வாழ்க்கையில் சமீபத்தில்தான் முதன் முறையாக தோல்பாவைக்கூத்து என்ற அற்புதக்கலையை நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது. அ.கா.பெருமாள் போன்ற அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் மூலம் இன்னும் சில கலைஞர்கள் குமரி மாவட்டத்தில் வசித்து வருவதாக அறிந்திருக்கிறேன். அங்கிருந்தே கோவைக்கு வந்து ஒரு கலைஞர் ஒரு நிகழ்ச்சியை நிகழ்த்த இருப்பதாக நண்பர்கள் தட்சிணாமூர்த்தி கல்யாணி தம்பதிகள் மூலம் அறிந்தேன்..

'அட்மாஸ்' கோவை நகரத்தின் ஒரு நவீன காபி ஷாப். சுலபத்தில் கண்டுபிடிக்கமுடியாத ஒரு சிறிய சாலையில் இருக்கிறது. அங்குதான் இந்த கூத்து நிகழ்த்த இருப்பதாக அறிந்தேன். நாம் எப்போதுதான் இத்தகைய இடங்களுக்கு செல்வது! புதிய நண்பர்கள் பாலு, பிரபு சகிதம் சென்றேன். அங்கிருந்த வாடிக்கையாளர்களை கண்டு கொஞ்சம் மிரண்டது உண்மைதான். சக்கரை அதிகமாக ஒரு சாயாவை சாலையிலிருந்தே மாஸ்டரிடம் ஆர்டர் கொடுக்கும் ஆசாமியை பிளாக் பாரஸ்ட் கேக்கை நாசுக்காக சுவைத்துக்கொண்டு நீண்ட கோப்பைகளில் குளிர்பானங்களை வைத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் யுவ யுவதிகள் சபையில் விட்டால் எப்படி இருக்கும்! திறந்த வெளியில் மேசைகளுக்கு நடுவில் வீற்றிருக்கும் மரத்தடி துளசி மாடம் அருகில் கட்டப்பட்டு காத்திருந்தது வெள்ளை திரை!

லக்ஷ்மண ராவ் மிக எளிமையான மனிதராய் காட்சி அளித்தார். பல தலைமுறைக்கு முன் மராட்டிய தேசத்திலிருந்து வந்து இப்போது நாட்டின் கடைகோடியில் இருக்கிறார். ஆர்வத்துடன் தன் கையிலிருந்த கோப்பில் இருந்த சான்றிதழ்களை காட்டினார். பெரும்பாலும் உள்ளூர் கழகங்கள் அளித்தவை.. கசங்கிய தாள்கள்..லேமினேட் செய்ய சொன்னேன். தோவாளைக்கு அருகில் உள்ள சிற்றூரில் வசிக்கிறார். நூறு நாட்கள் வேலைத்திட்டத்திற்கு கூலி வேலைக்கு போகிறார், மனைவி சகிதம்.. கால் வயிற்ருக்கஞ்சிதான் உணவு.. அமரவே மறுக்கிறார். அவரை பற்றி குறிப்புக்கள் வந்த கட்டுரைகளையோ நூல்களையோ கேள்விப்பட்டதேயில்லை என்பது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. கலைமாமணி பட்டத்தை கேள்விப்பட்டிருப்பாரோ என்னவோ! அவருடைய தோல்பாவைகளை அவரே வடிவமைத்து வெட்டி, நீர்வண்ணங்களை வஜ்ஜிரம் போன்ற பொருட்கள் கலந்து பூசி தயாரிக்கிறார். திரைக்கு பின் அவரது மனைவி, மகன், குட்டி மகள் அனைவரும் வாத்தியங்களுடன் தயாராக இருக்கிறார்கள். ராமாயணம் போன்ற நிகழ்வுகள் பல இரவுகள் நடக்குமாம்..இன்று பசுமையை காப்பது குறித்து அவரே எழுதிய நாடகம். ஒலிபெருக்கி இல்லை. முன்னுரைக்கு பின் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.

திரையில் விநாயகரின் உருவம் தோன்றிய பிறகு கட்டியங்காரனின் வருகை...லட்சுமண ராவ் என்ற எளிய மனிதன் மாபெரும் கலைஞனாக விஸ்வரூபம் எடுக்கும் நிகழ்வுகளின் ஆரம்பம். வரிசையாக கதாபாத்திரங்கள் தோன்றுகின்றன. மரங்கள், மண்டபங்கள், சோலை வனங்கள் என்று திரையின் ஓரங்களில் காட்சிக்கு ஏற்ப தோன்றி மறைகின்றன. குதிரை மீது மன்னர்கள் வருகின்றனர். கேலிச்சித்திரங்கள் போல தோன்றும் பல வித மனிதர்கள் கூடி பேசுகின்றனர், கேலி செய்கின்றனர், அடித்துக்கொள்கின்றனர். வயிறு வீங்கி பெரிய தொப்புளுடன் கூடிய ஒட்டைப்பல்லன், முன் வழுக்கை விழுந்து பின்னால் காவியேறிய மயிருடன் கூடிய மதினி, பிராமண பாஷை பேசும் அண்ணன் , மரத்தை வெட்டி விற்று திங்க துடிக்கும் தம்பி, ஊர் மக்கள் என்று வித விதமான மனிதர்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை குரல்கள், பேசும் பாணிகள், தனித்தனியாய் துடிக்கும் உடல் பாகங்கள் , வித விதமான நடனங்கள் , பாடல்கள்....சொல்லிக்கொண்டே போகலாம்.

மெதுவாக எழுந்து திரைக்கு பின் செல்கிறேன். அமர்ந்திருக்கும் ராவின் பரபரக்கும் கைகள் படு வேகமாகவும் சாதுர்யமாகவும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.ஒரு கை விரல்களில் சிறு அசைவுகள், பிருஷ்டத்தை ஆட்டும் தடியனின் ஆட்ட வேகத்தை துரிதப்படுத்த, அவனுடன் ஜோடி சேர்ந்து ஆடும் பெண்ணின் இயக்கங்களை இன்னொரு கையின் விரல்கள் ஆட்டுவிக்கின்றன. ஆட்டத்திற்கேற்ப ராவின் குரல் வளைகள் வித விதமான் ஓசைகளை பாவத்துடன் ஒலிக்கின்றன. கால் விரல்கள் ஒரு சிறிய கயிற்றை ஒரு கட்டையுடன் இணைத்து அவ்வப்போது ஒரு பெரும் ஒலியை எழுப்பிக்கொண்டிருக்கின்றன. ஒரு தசாவதானியை இப்போதுதான் பார்க்கிறேன். அவர் குடும்பமே டோலக்கை இசைத்துக்கொண்டு பின் பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றனர்..அவரை சுற்றி தரையில் இறைந்து கிடக்கின்றன...இனி எதிர்காலம் அறியா தோல் பாவைகள்!!!

விளக்குகள் ஒளிர்ந்தன. அந்த கலைஞன் மீண்டும் ஒரு எளிய கிராமவாசியாக மாறி சபைக்கு காட்சியளித்தார். நெகிழ்ந்த நெஞ்சங்களோடு விடை பெற்றோம்...இன்னும் சில நிகழ்ச்சிகளை தட்சிணாவும் யாணியும் 'சிறகுவிரி' சார்பில் ஏற்பாடு செய்யப்போகிறார்கள். அடுத்த நாள் சுமதி நரசிம்மன் வீட்டில் ஒரு நிகழ்ச்சி, பிறகு ஒரு பள்ளியில் நிகழ்ச்சி என்று நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். 'சிறகுவிரி' நிச்சயமாக இந்த கலைஞனையும் கலையையும் கைவிடாது என்ற நம்பிக்கை ஒளிர்ந்தது ..நாமும் துணை நிற்போம்!!

Friday, March 19, 2010

ரசிகன்!


உலகத்திலேயே நம் தென்னிந்தியாவை போல் சினிமா நடிகர் ரசிகர் மன்றங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாக செயல்படுகின்றனவா என்று தெரியாது. எவன் நடிக்க ஆரம்பித்தாலும் ஒரு ரசிகர் நற்பணி மன்ற பேனர் ஒன்று அந்த தியேட்டரில் தொங்குகிறது அவன் படத்துடன்..மற்றும் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஆலோசகர் பெயர்களுடன். இப்போது பிளக்ஸ் அச்சிடும் பணியில் ஈடுபட்டு இருக்கும் என்னை போன்றவர்கள் படும் பாடு தனி கதை.இந்த துக்கடா மன்றங்களுக்கு இந்த ஆரம்ப நிலை நடிகர்களே பைனான்ஸ் செய்கிறார்கள். கொஞ்சம் வளர்ந்த நடிகர்கள் என்றால் உடனே பதிவு எண், மன்றக்கொடி போன்ற காமெடிகளுடன்..முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் அல்லது சிறப்பு காட்சிகளோ உண்டு. பிளாக்கில் விற்பதுதான் இவர்களது முக்கிய சம்பாத்தியம். இப்போதெல்லாம் இவர்களுக்கு போட்டியாக ரோட்டரி சங்கங்கள் போன்ற அமைப்புக்களும் ஈடுபட்டு வருகின்றன.! விஜய், அஜீத், தனுஷ், ஜீவா போன்றவர்களிடம் எதை கண்டு இந்த ரசிகர்கள் மொய்த்து வருகின்றனர் என்றால் புரியவில்லை...சில நடிகர்களை ஜாதி அபிமானத்தோடு கொண்டாடுகின்றனர். தென் மாவட்ட திருமண பிளக்சுகளில் இப்போதெல்லாம் நாடார் வீடென்றால் சரத்குமார், தேவர் என்றால் கார்த்திக், தேவேந்திரர் என்றால் விக்ரம் & பிரசாந்த் (இருவரும் ரத்த உறவுள்ள கசின்ஸ் என்பது நிறைய பேருக்கு தெரியாது) கட்டாயமாக இடம் பெறுகின்றனர். முத்துராமலிங்க தேவரையும் கார்த்திக்கையும் பேனர்களில் ஒன்றாக பார்க்கலாம்!! முதன் முதலில் இங்கு யாருக்கு ரசிகர் மன்றங்கள் அமைந்திருக்கும்? பாகவதர் அபிமானிகளும் சின்னப்பா அபிமானிகளும் இருந்தனர்..ஆனால் மன்றங்கள் இருந்தனவா? ஒரு வேளை எம்ஜியாருக்குத்தான் ஆரம்பித்திருப்பார்களோ! தியோடர் பாஸ்கரன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி போன்ற ஆய்வாளர்களிடம் கூட விசாரித்தேன். ஒரு முன்னாள் கவுன்சிலரிடம் விசாரித்தபோது அவர் சொன்ன ஓர் தகவல் உபயோகமாக இருந்தது. சாமையர் புது வீதியில் பாகவதருக்கு போர்ட் மாட்டி ஒரு மன்றம் இருந்ததாகவும், பின்னர் டி .ஆர்.மகாலிங்கத்துக்கும் அதே ஏரியாவில் ஒன்று அமைக்கப்பட்டதாகவும் சொன்னார். சிவாஜியும் எம்ஜியாரும் சமகாலங்களில் மன்றம் கண்டவர்கள் என்றும் சொன்னார்.

அப்போது மன்றங்களை ரசிகர்களே அமைத்துக்கொண்டனர். நடிகர்கள் அதற்கு பைனான்ஸ் செய்ததில்லை. ரசிகர் மன்ற காட்சிகள், டிக்கட் வாங்கி பிளாக்கில் விற்பது போன்ற வியாபாரங்கள் நுழைந்தவுடன் அரசியலும் தலைமை பீடங்களும் நுழைந்தன. மன்றங்கள் அரசியல் கட்சிகளின் அங்கங்கள் ஆகவும் ஒட்டு வங்கிகளாகவும் மாறின...குறிப்பாக எம்ஜியார், சிவாஜி மன்றங்கள்! கோவையில் மதுரையை போல் எல்லா நடிகர்களுக்கும் மன்றங்கள் இருந்ததில்லை. ஜெமினி கணேசனுக்கு ஒரு மன்றம் இருந்தது.... பள்ளி சிறுவனாக இருந்தபோதே ரசிகர்களின் செயல்பாடுகளை கவனிப்பேன்..எந்த புதிய படம் வருவதாக இருந்தாலும் ரசிகர்கள் எங்கள் கடையில் திரண்டுவிடுவார்கள்...என் தந்தையிடம் படத்தின் ஸ்டில்களை காட்டும்படி கெஞ்சுவார்கள். காட்டியவுடன்..இதை வரையுங்கள், அதை வரையுங்கள் என்று ஆலோசனை தர ஆரம்பித்துவிடுவார்கள். எனக்கு கடுப்பாக இருக்கும்..அப்படி வந்த 'கவுரவம் சிவாஜி மன்ற மறவர்' வேணு என் வாழ்நாள் நண்பர் ஆகிப்போனார்!

வியட்நாம் வீடு படத்திற்கு வாட்சை விற்று ஒரு வீடு செட்டிங்க்சை வண்டியில் வைத்து ஊர்வலமாகப்போன சேகர், இன்றும் சிவாஜிக்கு பேனர் வைக்கிறார், ஒரு முழுநேர கோவில் அர்ச்சகராக இருந்தும். கணபதி சிவாஜி செல்லக்குட்டி எண்பது 'நவரச' பாடல்கள் அடங்கிய சிவாஜி சிடியை தயாரித்து தெரிந்தவர்களுக்கெல்லாம் கொடுக்கிறார். கோவை மேயர் வெங்கடாசலத்திடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்ன செய்தி வியப்பாக இருந்தது. திருவிளையாடல் ரிலீசின்போது சிவன் வேடம் போட்டுக்கொண்டு கழுத்தில் பாம்புடன் ஊர்வலம் போனவர் சாட்சாத் இவர்தானாம்!! இன்னும் இது போல பல பேர். எம்ஜியார் பக்தர்கள் இன்றும் பழைய படங்களுக்கு பேனர் வைத்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடுகிறார்கள். 'உனக்காக நான்' ரிலீசின்போது ஜெமினி ரசிகர்கள் சிவாஜிக்கு இணையாக கட் அவுட் வைக்கவேண்டும் என்று தகராறு செய்தது இன்னும் மறக்க முடியாதது.
யோசித்து பார்க்கும்போது எம்ஜியார் ரசிகர்களாக இருந்தவர்கள் பின்னர் அவரது உதவியால் பெரும் பதவிகளையும் அனுபவித்தனர். சிவாஜி ரசிகர்களுக்கெல்லாம் அவர்களது கட்சியினால் எந்த பிரயோஜனமும் கிடைக்கவில்லை...கோவை குப்புசாமி, ராஜசேகரன் போன்றவர்கள் மட்டும் கொஞ்சம் அதிர்ஷ்டம் செய்தவர்கள்!! ரசிகர்களை வைத்து எம்ஜியார் கட்சி ஆரம்பித்து போன உயரத்தின் கீழ் படியை கூட சிவாஜி ரசிகர் மன்ற கட்சி தொடவில்லை..'என் தமிழ் என் மக்கள் ' என்று ஒரு டப்பா படம் எடுத்ததுதான் மிச்சம்!

நடிகர்களின் முதலமைச்சர் ஆசை இந்த ஜாம்பவான்களிடம் தொடங்கி குஞ்சு குளுவான்களுக்கேல்லாம் பரவி..இன்று ரசிகர் மன்றங்கள் எல்லாம் , தத்தம் தலைவர்களை வருங்கால முதல்வர்களாக கருதி ஆர்ப்பரிக்கின்றன. சமீப காலம் வரை கரை வேட்டிகளுடன் உலவிய விஜயகாந்த் ரசிகர்கள் இன்று சோர்ந்து போயிருக்கின்றனர்.

நான் பார்த்த கேள்விப்பட்ட ரசிகர்கள் பல வகை. கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்த காட்சி இது. அருகருகே இரண்டு வெங்காயக்கடைகள்.ஒன்றின் சுவர் முழுவதும் எம்ஜியார் படங்களின் தினத்தந்தி முழுப்பக்க விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருக்கும். பக்கத்து கடையில் சிவாஜி விளம்பரங்கள். வாடிக்கையாளர்கள் தத்தம் விருப்ப கடைகளில் வெங்காயம் வாங்கலாம். என் ரொம்ப நாள் சந்தேகம் இரண்டு கடைக்கும் உரிமையாளர் ஒருவர்தானோ என்று!! தங்க பட்டறைகளில் தியாகராஜ பாகவதர் படம் கட்டாயமாக மாட்டப்பட்டிருக்கும். பூதப்பாண்டி ஜீவா சிற்றுண்டி நிலையத்தின் உரிமையாளரான என் சித்தப்பா, கடை முழுவதும் சிவாஜி ஸ்டில்களையும் , காலண்டர்களையும் அலங்கரித்து வைத்திருப்பார் . பாதி நேரம் வாடிக்கையாளர்களான எம்ஜியார் ரசிகர்களுடன் சண்டை நடக்கும். தோசைகளும் ரசவடைகளும் காய்ந்து கிடக்கும். என் மூத்த நண்பர் மறைந்த பேராசிரியர் ஆறுமுகம், தன் நாகர்கோவில் வீட்டில் சிவாஜி நடித்த பெரும்பான்மையான படங்களின் வீடியோ காசட்டுகளையும் 16mm பிரதிகளையும் வைத்திருந்தார். அயல் நாடுகளிலிருந்து சேகரிப்புகள்.. அவர் சொல்வது போல சிவாஜி கத்தியால் உப்புமா கிண்டும் 'மருத நாட்டு வீரன்' போன்ற சில சாதாரண படங்களுக்கு கூட நாலைந்து பிரதிகள்! தன் அபிமான இசை அமைப்பாளர்களின் / பாடகர்களின் இசைத்தட்டுக்களை சேகரித்து வைத்து ரசித்துக்கொண்டிருக்கும் அன்பர்கள்...எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பரம பக்தர் கோவை ரவி அவருடைய அனைத்து பாடல்களையும் சேகரித்து வைத்திருக்கிறார்! சங்கீத மேதைகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் பரம ரசிகர்கள் இருக்கிறார்களே. சுஜாதாவை சும்மா பார்க்கவே பெங்களூர் பயணம் செய்த கல்லூரி நண்பர்கள் இருந்திருக்கின்றனர். ஜெயமோகனை கொண்டாடுபவர்கள் இப்போது உண்டு!!

ரசிகர்களை செலுத்துவது எது...அந்த வயதா, இல்லை ஆர்வமா, தன்னை கவர்ந்த ஆளுமை மீதான பற்றா, விடை தெரியாத கேள்விகள்!

Saturday, February 27, 2010

டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்

எப்படி என் தந்தைக்கு அப்படி ஒரு சிந்தனை வந்ததென்ற தெரியவில்லை. ஒன்பதாவது படிக்கும்போதே என்னை சுறுக்கெழுத்து பயில ஒரு பயிற்சி நிலையத்தில் சேர்த்துவிட்டார். அவருடைய நண்பர்களிடம் என் பையன் இப்பவே ஷார்ட்ஹேண்டில் புகுந்து விளையாடுகிறான் என்று சொல்வதற்காகவோ என்னவோ! எலிக்குஞ்சு போல இருப்பேன். ஆர்வம் இருந்தாலும் சக மாணவர்களின் பொறாமை மற்றும் ஏளனப்பார்வை என்னை வாட்டியது. எல்லாம் எனக்கு பெரிசுகள். எனக்கு சுறுக்கெழுத்து மிகவும் பிடித்துவிட்டது. ஆங்கில மொழியின் மீது இருந்த பற்றும் இன்னொரு காரணம். என் ஆசிரியர் ஒரு கறார் பேர்வழி. மலையாள கத்தோலிக்கர். அவருக்கும் அப்போது சின்ன வயதுதான். நேரம் தவறாமை அவரது முக்கிய விதிகளில் ஒன்று. 6 மணி வகுப்புக்கு 5.45க்கு ஆஜராக வேண்டும். 5.46க்கு வந்தாலும் கெட் அவுட்தான். நாளைக்கு வாங்க என்று அனுப்பிவிடுவார். எல்லோரும் அவரை கரித்துக்கொட்டுவார்கள்..ஆனாலும் நகரின் மையப்பகுதியில் இருந்ததாலும் அவருடைய கண்டிப்பு பெற்றோர்களுக்கு பிடித்ததாலும் அங்கு எப்போதும் ஹவுஸ்புல்தான். தட்டச்சு வகுப்புகளுக்கு நமக்கு பிடித்த நேரம் கிடைக்காது. அவர் சொல்லும் நேரம்தான். பெருமழை பொழிவது போல் எந்திரங்களின் சோவென்ற சப்தத்திற்கிடையில் உள்ரூமில் அவர் டிக்டேஷன் கொடுக்கும்போது கவனமாக தொடரவேண்டும். ஹோம் ஒர்க்கிலும் படு கறார். வாரம் ஒரு முறை சுருக்கெழுத்து தியரியில் டெஸ்ட். ஒரு சின்ன தப்பு வந்தாலும் மீண்டும் டெஸ்ட் எழுதிவிட்டுத்தான் அடுத்த பாடம் தொடரப்படும்.

நானோ சின்னப்பையன். ஒரு கட்டத்திற்கு மேல் இந்த கண்டிப்பு தாங்க முடியவில்லை. மெதுவாக வகுப்புகளை கட் அடிக்க ஆரம்பித்தேன். வீட்டிலிருந்து கிளம்ப வேண்டியது. இன்ஸ்டிடியூட்டிற்கு எதிரே உள்ள கோனியம்மன் கோயிலுக்குள் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்து வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு வீடு திரும்புவது வாடிக்கையானது. ஏன் வரவில்லை என்று கேட்கும் ஆசிரியரிடம் பள்ளியில் டெஸ்ட், காய்ச்சல் என்று சொல்லவேண்டியது. ஒரு முறை பள்ளியில் குறைந்த மார்க் வாங்கியவுடன் கண்டித்த என் தந்தையிடம் எல்லாவற்றிற்க்கும் காரணம் சுறுக்கெழுத்துதான் என்று பழியை போட்டு விட்டேன். அன்றோடு சுறுக்கெழுத்து வகுப்புகளுக்கு முழுக்கு. ஆனால் சுறுக்கெழுத்து என்னோடு பசையாக ஒட்டிக்கொண்டது.

பள்ளி இறுதித்தேர்வு முடிந்த கையோடு என்னை மீண்டும் அங்கே சேர்த்துவிட்டார் என் தந்தை. இப்போது கூடவே ஆங்கில தட்டச்சும். கல்லூரி, கம்யூனிஸ்ட் குடும்பத்துக்கே உரிய ருஷ்ய மொழி வகுப்புக்கள், கடையில் ஓவியம் வரைதல், எல்லாவற்றுக்கும் மேலாக விடாமல் சினிமா பார்த்தல் என்ற என்னுடைய அன்றாட அலுவல்களில் தட்டச்சும் சுறுக்கெழுத்தும் சேர்ந்து கொண்டன.

இன்ஸ்டிடியூட்கள் ஒரு தனி உலகம். காலை 6 மணி முதல் ஓயாமல் இயக்கம். ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் 'அட்டையை பார்த்து அடிங்க' என்ற ஆசிரியரின் அசரீரி, ஹால்டா, பேசிட் இயந்திரங்களின் ஓசை, மெக்கானிக்குகளின் பந்தா, டைப்ரைட்டர் விற்பனை பிரதிநிதிகளின் வருகை, தங்கள் நேரத்துக்காக காத்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் என்று எந்நேரமும் கலகலப்பு. இதில் காதல் பறவைகளின் தனி டிராக் வேறு. கையில் சுருட்டிய பேப்பருடனோ நோட்டுப்புத்தகத்துடனோ வரும் பெண்களின் பின்னால் வரும் இளைஞர்கள்.. சிலர் வகுப்புகளில் இதற்காகவே சேர வருவார்கள். அவர்களை ஆசிரியர் சுலபமாக அடையாளம் கண்டு கொண்டு படுத்தும் பாடு இருக்கிறதே…பயங்கர காமடியாக இருக்கும். முதலில் அவர்களுடைய ஆங்கில அறிவை பரிசோதித்து, கேலியும் கிண்டலும் செய்து ஒரு வழியாக்கி ஓடவிட்டுவிடுவார். என்னுடன் படித்த நிறைய பேர் காதல் கணைகளில் சிக்கி தவித்தனர்…சிலர் திருமணம் கூட புரிந்தனர்.
கறுப்பாக, சோடாபுட்டி கண்ணாடியுடன் எலிக்குஞ்சு போல் இருந்த நான் யாரும் சீண்டாததால் தப்பித்து வாழ்ந்தேன்.

தட்டச்சும் சுருக்கெழுத்தும் எனக்கு சரளமாக வந்தன. எந்த சிறு தவறும் இல்லாமல் கீ போர்டை பார்க்காமல் படு வேகமாக நான் டைப் அடிப்பதை பார்க்க ஒரு கூட்டமே கூடும். அதே போல சுறுக்கெழுத்தும். என் ஆசிரியர் என்னை தன் பள்ளியின் சூப்பர் ஸ்டாராக அறிவித்து கொண்டாடத் தொடங்கிவிட்டார். அரசுத் தேர்வு பயிற்சிக்காக என்னை வெளி பள்ளிகளுக்கு தனி பயிற்சிக்காக அனுப்பி வைப்பார். வெவ்வேறு குரல்களுக்கும் ஏற்ற இறக்கங்களுக்கும் தனி கவனம் எடுப்பார். லோயர், ஹையர் என்று இரண்டிலும் முதல் வகுப்பு. 25 வருடங்களாக தமிழ்நாட்டில் யாரும் தேர்வாகவே முடியவில்லை என்று சொல்லப்பட்ட (உண்மையா என்று தெரியவில்லை) லண்டன் சேம்பர் ஆப் காமர்ஸ் தேர்வில் சுறுக்கெழுத்தில் முதலிடம் என்று கலக்கினேன். பல குழுக்கள் நடத்திய தேர்வுகள் எதிலும் சோடை போகவில்லை.

கல்லூரி முதுகலைப்பட்டம் முடித்தவுடன் விளையாட்டாக கோவை ஸ்டேன்ஸ் காபி கம்பெனிக்கு விண்ணப்பித்தேன். சுலபமாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். என் தந்தைக்கு ஒரே மகிழ்ச்சி . ஸ்டேன்ஸ் முதலாளி ஒரு காலத்தில் ஸ்டெனோவாக இருந்தவராம். காலையில் டிக்டேஷன். இரண்டு கடிதங்களை டைப் செய்தேன். மதியம் சாப்பிட்டு வருவதாக சொல்லி வீட்டுக்கு வந்தேன். வேலைக்கு நான் போகமாட்டேன் என்று என் தந்தையிடம் சொன்னேன். காரணம் கேட்டார். யாரோ ஒருவர் டிக்டேட் செய்ய நான் எழுதுவது எனக்கு பிடிக்கவில்லை என்றேன். ஐஏஎஸ் தேர்வுக்கும் தயாராகிக்கொண்டிருந்ததால் என் தந்தை சரியென்று சொல்லிவிட்டார். என் வாழ்க்கையில் நான் வேலைக்கு போன சரித்திர பிரசித்தி பெற்ற அரை நாள் அன்றுதான். ஒரு முறை UPSC ஸ்டெனோகிராபர்ஸ் தேர்வில் அயல்நாட்டு சரவீசுக்கு எழுத்துத்தேர்வில் ஜெயித்து..ஸ்டெனோகிராபி தேர்வுக்கு சென்னைக்கு அழைத்திருந்தனர். நியூ செஞ்சுரி புக் ஹவுசில் இருந்து ஒரு போர்ட்டபிள் எந்திரத்தை இரவல் வாங்கிக்கொண்டு சென்னை சென்றேன். முதலில் சுறுக்கெழுத்து தேர்வு முடிந்தது. அடுத்து அதை தட்டச்சு செய்யவேண்டும். என்னுடைய அசுர வேகம் தாளாமல் தட்டச்சு எந்திரத்திலிருந்து ரிப்பன் தெறித்து வெளியே வந்தது. ஒன்றும் புரியாமல் கொஞ்ச நேரம் விழித்து விட்டு எல்லாவற்றையும் அள்ளி பெட்டியில் திணித்து விட்டு வெளியேறி..எமரால்டு தியேட்டரில் சஞ்சீவ்குமார் நடித்த அர்ஜøன் பண்டிட் பார்க்க போய்விட்டேன்…

என்றுமே ஸ்டெனோ ஆக விரும்பாமல் வெற்றியும் அடைந்து விட்டேன். இப்போதும் எங்கள் இன்ஸ்டிடியூட் இயங்கிக்கொண்டு இருக்கிறது. அந்த பக்கம் போனால் எட்டிப்பார்ப்பேன். அதே வயலட் கலர் இங்க் பேனா, ஒரு பேட், அதே மேஜை, அதே பிட்மேன் புத்தகம், வயதே ஆகாத என் ஆசிரியர் பி.வி.பால் அதே உற்சாகத்துடன் வரவேற்பார். பல சமயங்களில் ஒரு மாணவர் கூட இருப்பதில்லை. சில சமயம் யாராவது ஒரு குட்டிப்பெண் டைப் அடித்துக்கொண்டிருப்பார். உடனே அவளை வரவழைப்பார். .'அப்புறம் அடிக்கலாம்மா.. இங்கே வா..இது யார் தெரியுதா'. என்று ஆரம்பித்து என் சாதனைகளை எடுத்துரைப்பார்.. நெளிந்து கொண்டு கேட்பேன், அந்த பெண்ணின் நிலையும் அதுதான். . அதெல்லாம் ஒரு காலம் என்று மீண்டும் தொடர்வார். 'இவரோட தம்பிங்க கல்யாணசுந்தரம், மணிகண்டன் எல்லோரும் என் சிஷ்யங்க' என்ற ரீதியில் போகும்.. 'சார், இன்னும் ஏன் சார் இதை நடத்திட்டு இருக்கீங்க, ஒரு கம்ப்யூட்டர் சென்டர் ஆரம்பிக்கலாமில்ல' என்ற கேட்டால் பதில் வராது. காலி சேர்களுடன் இருக்கும் தட்டச்சு அறையை ஒரு முறை பார்த்துவிட்டு சத்தமாக சிரிப்பார், எனக்கு நேரம் தவறாமையை போதித்த என் குருநாதர்.

ஒவ்வொரு முறையும் அங்கிருந்து வேதனையோடுதான் வெளியேறுகிறேன்.

Friday, February 5, 2010

எப்பவும் நான் ராஜா!!


விடிந்தால் சென்னைக்கு கல்லூரியில் சேர செல்லவேண்டும்...மாலையில் சிறை அரங்கத்தில் அன்னக்கிளி படத்தின் 58 வது நாள் விழா. சிவகுமார், இளையராஜா என்று பெரிய ஆட்கள் வருகிறார்கள்ஆவலோடு விழாவிற்கு சென்றேன். விழாவுக்கு வந்த கூட்டம் முழுக்க இளையராஜாவுக்கு வந்த கூட்டம். அவருடைய இசை நிகழ்ச்சியும் உண்டு...ஒரு திரைப்படம் வெளியான இந்த குறைந்த நாட்களில் பெரிய ஆள் ஆன அந்த உருவத்தில் சிறிய மனிதனை பார்க்கத்தான் கூட்டம்!
டப்பா படங்களையே வெளியிட்டு வந்த அத்தாணி பாபு இந்த படத்தை வாங்கியிருந்தார். ஸ்டில்களுடன் அந்த படத்தின் பாடல்கள் அடங்கிய ஈபி ரெகார்ட் கவர் ஒன்றையும் கொடுத்தார். வண்ணத்தில் ஒரு கருப்பு மனிதனின் படம்..இசை அமைப்பாளர் என்று வெளியாகியிருந்தது. ஒரு புதிய சகாப்தத்தை படைக்கபோகிறவர் என்ற உணர்வு அப்போது ஏற்படவில்லை. படம் இருதயா தியேட்டரில் வெளியாகி டப்பாவுக்குள் போகும் நிலையில் பாடல்களால் சூடு பிடித்து கிடு கிடு என்று பற்றத்தொடங்கியது...எங்கு பார்த்தாலும் மச்சானை பார்த்தீங்களாதான்!!! படம் ஹிட்..வெற்றிவிழா என்று ஒரே கலக்கல்தான்...மேடையில் பேனர் வரைந்ததற்காக எங்கள் நிறுவனத்திற்கு ஒரு (கேடையம் எதுவும் ஸ்டாக் இல்லாததால்) வாட்ச் பரிசு...இளையராஜா கையால்தான் வாங்குவேன் என்று முதலிலேயே அத்தாணி பாபுவிடம் விண்ணப்பம்..வெள்ளை சட்டையை வெள்ளை பேண்ட்டில் இன் செய்திருந்த அந்த குட்டையான மாமனிதனிடம்..அப்போது அவரை விட குட்டியாயிருந்த இந்த பொடியன் எங்கப்பா சார்பில் இதை வாங்கினான்! மறக்க முடியாத கணங்கள்!!

ஆமாம்..இசையறிவு அப்படி என்னதான் இருந்தது...காலையில் பாடும் ராகம் என்னவோ...என்று தம்பி கேட்டவுடன்...நீளமாக ஆலாபனை செய்து 'பூபாளம்' என்று ராவணன் சொல்லி கேட்டது மட்டும்தான்...எல்லோரையும் போலவே திரைப்பாடல்கள் மட்டுமே இசை ரசனையை கொடுத்தன. டேப் ரிக்கார்டர் அப்போதுதான் பரவிக்கொண்டிருந்தது...மேடைகளில் வணக்கம் பலமுறை சொன்னேன்...என்று தமிழ்ப்பாடலில் சம்பிரதாயமாக ஆரம்பித்து பின்னர் ஷர்மிளியும், யாதோன் கி பாராத்தும், பாபியும் மட்டுமே கேட்கக்கிடைத்த காலம்...! எங்கும் யாவரும் இந்தி பாடல்களையே கேட்டு மகிழ்ந்திருந்தபோது...புறப்பட்டதுதான் ராஜாவின் பயணம்! ஏற்கனவே ஜி.கே.வெங்கடேஷின் பாடல்களை புதிய பாணியில் 'பொண்ணுக்கு தங்க மனசு' போன்ற படங்களில் கேட்டபோது...ஏற்பட்ட சந்தேகம் அவருடைய உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ராஜாவின் பாடல்களை கேட்டபோது தெளிந்தது...பட்டி தொட்டியெல்லாம் மேடையில் கம்யூனிச கானங்களை முழங்கிய பாவலரின் தம்பி என்ற ஹோதா...அதற்க்கு முன்னரே பத்மா சுப்பிரமணியம் குடும்பத்து பெண்கள் வெளியிட்ட தமிழக நாட்டு பாடல்கள் என்ற கேசட்டின் பாடல்கள் அன்னக்கிளியின் மூலத்தை பறைசாற்றின. அந்த கேசட்டும் கவரும் இன்னும் என்னிடம் ராஜாவின் பெயருடன் இருக்கின்றன.

அப்போதும் எம்.எஸ்.வி., கே.வி.எம்., போன்ற இசை அமைப்பாளர்கள் புகழின் உச்சியில் இருந்தாலும்..புதுமுக நடிகர்கள், புதுமுக இயக்குனர்கள் , புதிய பாணி திரைப்படங்கள் என்று கிளம்பி வந்த காலத்தில் உறுதுணையாய் இருந்தது ராஜாவின் இசை. பாமர ரசிகர்கள் கூட பின்னணி இசையின் அனுபவத்தை உணரத்தொடங்கிய காலம். ரீரிக்கார்டிங் சூப்பர் மா என்று யாரை பார்த்தாலும் பேசிக்கொண்டிருந்தது ஒரு ஆச்சரியமான திருப்பம்! பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம் என்று புறப்பட்ட பட்டாளம் இசை இளையராஜா என்ற டைட்டில் கார்டுடந்தான் ஆரம்பித்தனர்..சலீல் சவுத்ரியுடன் ஆரம்பித்த பாலு மகேந்திராவும் இந்த வரிசையில் சேர்ந்தவர்!! ஒரு இசை அமைப்பாளருக்கு கட் அவுட் வைக்கத் தொடங்கியது இவருக்குத்தான். பூஜை, இன்று முதல் விளம்பரங்கள் எல்லாமே நடிகர்களின் படங்களுக்கு ஈடாக இவருடைய போட்டோ, மற்றும் பட்டங்களுடன் வெளியிடத் தொடங்கினர்! இளையராஜாவும் ஒரு சாமியார் தோற்றத்தில் தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார்..கடும் பணிகளுக்கிடையே ஏராளமான படங்களுக்கு பாடல்களையும் பின்னணி இசையையும் தந்தார். எங்கள் கடையில் பேனர் வரையும்போது அவருடைய பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவோம்..இதனால் என் சக சிவாஜி / எம். எஸ்.வி. ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானேன். தியாகம், தீபம் போன்ற படங்கள் வந்தபோது முன்னவர்கள் சமாதானம் ஆனார்கள்.!

ரஜினி, கமல், மைக் மோகன் போன்றவர்களின் படங்களில் இளையராஜா கட்டாயம் ஆனார். ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ராஜாவின் தம்பி கங்கை அமரன் போன்ற அடுத்த தலைமுறையினரின் படங்கள் பாடல்களுக்காகவே ஓடின. பாலசந்தர் போன்ற இயக்குனர்கள் கூட ராஜாவை அணுக நேர்ந்தது அவர்களுக்கே கஷ்டமாக இருந்திருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலமாக இளையராஜா அதிருப்தியாளர்களுக்கு ஒரு புதிய வழி பிறந்தது...அது ரகுமானின் வரவு. பாலசந்தரின் சொந்தப்படமான ரோஜாவுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள இசை அமைப்பாளரான எ.கே.சேகரின் மகனும் விளம்பர ஜிங்கிள்ஸ் இசை அமைப்பாளருமான இந்த இளைஞர் இசை மற்றும் தொழில்நுட்ப கலவைகளை சிறந்த முறையில் உருவாக்கி பெரும் புகழ் பெற ஆரம்பித்தார்...மணிரத்னம், பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்கள் அப்படியே முகாம் மாறினர். ராஜாவுக்கு அப்படியே மாற்றாக தோற்றம் தர ஆரம்பித்தார் ரகுமான். இமேஜ் பில்டிங் , மக்கள் தொடர்பு, எல்லாவற்றிலும் ரகுமான் முன்னிலைபடுத்தப்பட்டார். இவர் பரதேசி கோலம் என்றால் அவர் கார்ப்பரேட் ஸ்டைல்..உடை, சிகையலங்காரம் அனைத்தும் நிபுணர்களாலும் விளம்பர எஜெண்டுகளாலும் முடிவெடுக்கப்பட்டு அவருடைய பயணம் திட்டமிட்டு அமைக்கப்பட்டு இன்று ஆஸ்கார், கிராம்மி வரை சென்று விருதுகளை அள்ளி வருகிறார்.

இளையராஜா, ஒரு முசுடு, கஞ்சன், அல்பம் என்பது போல் ஒரு திட்டமிட்ட சித்தரிப்பு தமிழ் ஊடகங்களில் நிலவி வருகிறது..பலரால் ஒரு கருப்பு தலித் பேர்வழி இவ்வளவு உயரங்களை அடைந்ததை ஜீரணிக்க முடியவில்லை என்றுதான் நான் கருதுகிறேன். அவருடைய இசையை பற்றி ஒரு வரி விமர்சிக்க அருகதை இல்லாதவர்கள் அவருடைய பிற தன்மைகளை கடுமையாக சாடுகிறார்கள். சிலருக்கு அவரை பிராம்மணவாதியாக சித்தரிப்பதில் ஆனந்தம். செம்மங்குடியின் அறையில் உள்ள ஒரே ஒரு புகைப்படம் இளையராஜாவினுடையது என்று ஒரு புலனாய்வாளர் சித்தரிக்கிறார்..ஆயிரக்கணக்கான பாடல்களில் 'கனவு காணும் வாழ்க்கை யாவும்' போன்ற ஒன்றிரெண்டை கண்டுபிடித்து, அவரிடமோ பாலு மகேந்திராவிடமோ கேட்காமல் இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் காப்பியடிக்கப்பட்டவை என்று தீர்ப்பளிக்கிரார்கள் பலர். ஆதாரமில்லாமல் அவர் பேசியதாக எதையோ சொல்லி கடுமையாக சாடுகிறார்கள் சிலர்..ஒட்டுண்ணி எழுத்தாளர்களோ பேட்டி காண வந்த நிருபருக்கு பச்சை தண்ணி கொடுக்க மறுத்த கஞ்சன் என்று புதுக்கதை புனைகிறார்கள். எத்தனை எத்தனை தாக்குதல்கள். என் அபிமான கட்டுரையாளரும் நண்பருமான ஷாஜி கூட அவருடைய குணநலன்களை கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தது ஒரு அதிர்ச்சி..நியாயமான காரணங்களை அவர் கூறினாலும்...மனதுக்கு கஷ்டமாக இருந்தது...என்ன செய்வது...என் மூளைக்குள் எங்கோ ஒரு இளையராஜா ரசிகன் பதுங்கியிருக்கிறானே!.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஆளுக்கு தகுந்த அளவுகோல்களை ஊடகங்கள் வைத்திருக்கின்றனவோ என்பதுதான். பி.ஆர்.வேலைகளில் படு வீக்கான ராஜாவை எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடிப்பவர்கள் பிறரிடம் தாள் பணிந்து நிற்பது காமெடியாக இருக்கிறது. இந்திய திரைப்பட பாடல்கள் ஒப்பீட்டில் ஒரு சாதாரண பாடலான 'ஜெய் ஹோ' இத்தனை விருதுகளை குவிக்கும் அரசியலும் பின்புலமும் , எந்த புலனாய்வு எழுத்தாளர்களாலும் விவாதிக்கப்படுவதில்லை...தேசிய பெருமிதம் தடுக்கும் போலிருக்கிறது. ஒருவருடைய மத நம்பிக்கை மற்றும் செயல்களும் விவாதிக்கப்படும்போது, இன்னொருவரை சவுகரியமாக மறக்கக்கூடிய வசதிகள் இங்கிருக்கின்றன.

சரி எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். 'அதர்மம்' பட பூஜை ஏவிஎம்மில். என் தம்பியின் முதல் படம் என்பதால் போயிருந்தேன். கடும் மழை.. எங்கும் சேறும் சகதியும்...வெள்ளை வெளேர் செருப்பை கழற்றி வைத்துவிட்டு இளையராஜா உள்ளே வந்து வணங்குகிறார். வெளியே வரும்போது நெரிசலில் ஒரு தள்ளு முள்ளு. செருப்பை மாட்ட குனிகிறார். பதட்டப்பட்ட என் நண்பர் ஒருவர் பச்சக் என்று தன் சேற்று காலை செருப்பின் மீது வைக்க..செருப்பு ஒரே கண்றாவியாகிவிட்டது...ராஜாவின் இமேஜ் குறித்து ஒரு வித எண்ணம் கொண்டிருந்த நண்பர் நடுங்கி விட்டார்...வாய் குழற எதோ சொல்ல வந்த அவரை ராஜா சமாதானப்படுத்தி, குனிந்து தேங்கி நின்ற நீரில் செருப்பை அலசி அணிந்து கொண்டு வெளியேறினார்.

அவரை கடைசியாக நேரில் நான் பார்த்தது அப்போதுதான்.