Saturday, July 3, 2010

தமிழ் படிக்காத தமிழ் எழுத்தாளர்.


எப்படி அவருக்கு அப்படி ஒரு எண்ணம் தோன்றியது? ஒரு சேட்டு பையன் ஆங்கிலம், இந்தி, தமிழ் என்று மூன்று மொழிகளில் பிளந்து கட்டுவதை பார்த்தவுடன் தாளவில்லை. தன் பையனும் அவன் படிக்கும் காண்வென்ட்டில்தான் படிக்கவேண்டும் என்று முடிவு கட்டி, வறுமையிலும் அங்கு சேர்த்துவிட்டார். நானும் அங்கு சேர்ந்து மும்மொழி திட்டம் இல்லாததால் ஆங்கிலமும் இந்தியும் மட்டும் படிக்க தொடங்கினேன். கான்வென்ட் சூழலுக்கு ஒவ்வாத தோற்றம்தான் , ஆனாலும் படிப்பில் சோடையில்லை. தமிழ்மொழி என்னை விடவில்லை. பள்ளிக்கு நடந்து செல்லும்போதே..ஆற அமர சினிமா போஸ்டர்களின் தலைப்பை எழுத்துக்கூட்டி படிக்கத்தொடங்கினேன். அடுத்தது பத்திரிகைகளின் வால் போஸ்டர்கள், ஜனசக்தி, தினத்தந்தி , ஆனந்தவிகடன் என்று புரொமோஷன் கிட்டியது. அம்புலிமாமாவில் விக்ரமாதித்தன் கதை, பரோபகாரி பழனி கதைகள் , கண்ணன் பத்திரிக்கை என்று பயணம் தொடர்ந்தது. ஆறாம் வகுப்பு முதல் குஜராத்திகள் நடத்திய பள்ளிக்கு மாற்றம்.

என் தந்தை கம்யூனிஸ்ட் கொள்கைகளில் பிடிப்புள்ளவராக இருந்ததால் அவர் செல்லும் அனைத்து கூட்டங்களுக்கும் கருத்தரங்கம், பட்டிமன்றம் என்று எங்கே நடந்தாலும் என்னையும் அழைத்து சென்றுவிடுவார். பெரும்பாலும் கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய நிகழ்ச்சிகள். இப்போதைய்ய கெக்கே பிக்கே பட்டிமன்றங்களை போல இல்லை. பல பிரபலங்களை நேரில் காணும் வாய்ப்பும், அவர்கள் பேசுவதை கேட்கும் வாய்ப்பும் அந்த குழந்தை பருவத்திலேயே கிடைத்தது. ஜீவா, குன்றக்குடி அடிகளார், தா.பாண்டியன், ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி என்று சொல்லிக்கொண்டே போகலாம். நியூ சென்சுரி நிறுவனத்தின் மலிவுப்பதிப்பு குழந்தை நூல்கள் அத்தனையும் என் வசம் இருந்தன. படிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. ஆங்கில, இந்தி புத்தகங்களுடன் , தமிழ் காமிக்ஸ், குமுதம் என்று பல பட்டறையாக உருவானேன்.

புதிய பள்ளியில் எனக்கு நெருக்கமானவர் யாரென்று யூகித்து இருப்பீர்கள்! நூலகர்தான். ஒன்பதேகால் மணிக்கு தொடங்கும் பள்ளியில் தனியாளாக எட்டு மணிக்கே இந்த ஜீவன் காத்துக்கிடக்கும். லொங்கு லொங்கென்று சிங்கானல்லூரிலிருந்து வடகோவைக்கு சைக்கிளை மிதித்து வருவார் அந்த நல்ல மனிதர். 'ஏண்டா, காலையிலேயே உயிரை வாங்குறே' என்று செல்லமாக திட்டிவிட்டு கதவை திறந்துவிடுவார். அவ்வளவுதான், மாத, வார பத்திரிகைகள் முதல் கிடைத்த புத்தகங்களை எல்லாம் பள்ளி மணி அடிக்கும் வரை கரைத்துக்குடிப்பது என் அன்றாட வேலை. இந்தி மாணவனாக இருந்தாலும் என் ஆர்வத்தை கண்டு தமிழாசிரியர்களே வியந்து போயினர். அவர்களே படிக்காத நாவல்களை , நீல பத்மநாபன் எழுதிய 'தலைமுறைகள்', கே.பி.கேசவதேவ், எம்.டி.வாசுதேவன் நாயர் மொழிபெயர்ப்புக்கள் என்று நூலகத்தில் அனாதையாக கிடந்த புத்தகங்கள் என்று அத்தனையையும் வெறியுடன் படிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்தியிலும் சோடை போகவில்லை. உச்சரிப்புக்காகவே இந்தி நாடகத்தில் ஒரு சாமியார் வேடத்தில் நடிக்க வைக்கப்பட்டேன்.
சினிமா பைத்தியம் என்னை பீடிக்க ஆரம்பித்ததும் பள்ளி நாட்களில்தான். பள்ளிக்கு அந்த பக்கம் சென்ட்ரல் தியேட்டர், இந்த பக்கம் ஸ்ரீனிவாஸ் தியேட்டர்...ஸ்டில்களையும் போஸ்டர்களையும் வெறித்து பார்த்துக்கொண்டிருப்பது பெரும் பொழுதுபோக்கு. வீட்டுக்கு பக்கத்திலேயே தென்னகத்தின் முதல் தியேட்டராக உருவெடுத்து வெரைட்டி ஹால் என்ற பெயரிலிருந்து டிலைட் என்ற பெயரில் இயங்கிய இந்திப்பட தியேட்டர். மேலும் என் தந்தையின் தொழிலே திரைப்படங்களுக்கு பேனர் வரைவதுதான் என்னும்போது கேட்கவா வேண்டும்...அயல்மொழித்திரைப்படங்களின் பைத்தியம் ஆனேன். ஸ்கிரீன், பிலிம்பேர் பத்திரிகைகளை கரைத்து குடித்து வரப்போகும் படங்களின் கதை, நடிகர்கள் என்று நிரல் நுனித் தகவல்களுடன் நடமாடினேன்.

டிலைட் தியேட்டர் முதலாளி அப்போது ராம் சொரூப் சேட்டு. இந்தி திரைப்பட உலகின் பெரும் புள்ளிகளுடன் நெருக்கமானவர். ஓவ்வொரு வாரமும் இந்திப்படங்கள் மாறும். பம்பாயிலிருந்து போட்டோ கார்டுகள் வந்துவிட்டால் தியேட்டரிலிருந்து என் தந்தையை அழைக்க ஆள் வரும். சில சமயம் என்னை அனுப்பிவிடுவார். அலுவலக அறையில் மேஜை நாற்காலி இருந்தாலும், சேட் தரையில் ஒரு பெரிய மெத்தை விரித்து , திண்டுகள் சகிதம் படுத்துக்கொண்டிருப்பார். புகைப்படங்களை கொடுத்து யாரை பெரிதாக வரையவேண்டும்...யாரை வரையத்தேவை இல்லை என்றெல்லாம் உத்தரவிடுவார். அவர் சொன்னதை இந்த அதிகபிரசங்கி கேட்டதேயில்லை. எனக்குத்தான் அந்த படங்களின் கதை தெரியுமே. அவர் சொன்னதை மறுத்து..இந்த நடிகருக்குத்தான் கதையில் முக்கியத்துவம்...ஆகவே அவரைத்தான் பெரிதாக போடவேண்டும், இதில் நாயகிக்குத்தான் நல்ல பெயர்..அவரை பெரிதாக வரையலாம் என்று விளக்குவேன். சேட்டுக்கு எப்போதும் இது ஒரு ஆச்சரியம். ஒன்று..அவரை யாரும் மறுத்து பேசுவதில்லை. இரண்டு இந்த கருப்பு நிற பொடியன் இந்தி படங்களை பற்றி இவ்வளவு தெரிந்திருக்கின்றானே என்று.

அவருக்கு என் மீது தாளா அன்பு பிறந்துவிட்டது. பிரத்தியேகமான வண்ண இந்தி திரைப்பட பாட்டு புத்தகங்களை ஒவ்வொரு பட ரிலீசின்போதும் என்னை அழைத்து கொடுப்பார். என் தந்தையை அங்கு வரக்கூடாது என்று உத்தரவிட்டு விட்டார். 'இனிமேல் ஆர்டர் வாங்க அவன்தான் வரவேண்டும்' என்று உத்தரவு. ' அவன் காலேஜ் முடிக்கட்டும், பம்பாயில் ராஜ்கபூரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேர்த்துவிடுகிறேன்' என்று வேறு யாரும் கேட்காமலேயே வாக்களித்துவிட்டார். என் தந்தைக்கு பிடித்தது கிலி. பின்னே கலெக்டராக வரவேண்டிய மகன் சினிமா இயக்குனராவதா என்று பயந்து எம்.ஏ.படிக்க சென்னைக்கு துரத்திவிட்டுவிட்டார். இப்படி சினிமா ஆசை மொட்டிலேயே கருக, சென்னை புதிய வாசல்களை திறந்துவிட்டது. காவலாளியே இல்லாத விக்டோரியா விடுதி வாசம், ஏராளமான நண்பர்கள், தினமும் திரைப்படங்கள், படிக்க நிறைய நூல்கள், நூலகங்கள், இலக்கிய கூட்டங்கள் என்று படிக்க போன அரசியல் அறிவியலை தவிர ஏகப்பட்ட வேலைகளில் மூழ்கி தெளிந்தேன்.

கோவைக்கு ஒரு அரைகுறை சினிமா அறிஞனாக மீண்டு வந்தேன். திரைப்பட ஆர்வலர்களின் ஜோதியில் கலந்தேன். அப்போது அங்கு பணியில் இருந்த அம்ஷன்குமார், அமரநாதன், ஞானி, புவியரசு, கவிஞர் சுகுமாரன் போன்றோர் அமைத்த திரைப்பட சங்கங்களில் ஆர்வத்துடன் பங்கெடுத்து மெருகேறினேன்(!)

உச்சகட்டமாக ஒரு இலக்கிய கூட்டத்தில் நான் திரைப்படங்களை பற்றி பேசியதை கேள்விப்பட்ட நண்பர் மரபின் மைந்தன் முத்தையா அப்போது ஆரம்பிக்க இருந்த 'ரசனை' மாத இதழில் மாதம் ஒரு கட்டுரை எழுதச்சொன்னார். தமிழ் படிக்காத நான் எப்படி எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது நண்பர்கள் ஊக்குவித்தனர். அப்போது ஆரம்பித்து இன்னும் ஐந்து வருடங்களாக எழுதிக்கொண்டே இருக்கிறேன். முத்தையாவின் அடுத்த ஊக்குவிப்பில் கட்டுரைகள் ஒரு நூலாகவும் வந்துவிட்டது, 'திரைச்சீலை' என்ற பெயரில்.

தமிழ் படிக்காமல் தமிழ்நாட்டில் பட்டதாரியாக மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளராகவும் உருவெடுக்கலாம்!!!!