Friday, April 8, 2016

அவரவர் நியாயம்

பல கிளைகள் கொண்ட உணவு விடுதி அது. இப்போது தேய்பிறை போல…  இரவு 9 மணிக்கு நான் சென்றபோது யாருமே இல்லை, என்னை தவிர.    ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தேன். கேஷியருக்கும் ஒரு மூலையும் மேஜையும் இருந்தன.30 வயதுக்குள் இருந்த ஒரு பெண் வந்தார். கேஷியரிடம் பார்சல் ஆர்டர் செய்துகொண்டு இருந்தார். மேஜை துடைக்கும் இளைஞன் அந்த பெண் அருகில் சென்று ஏதோ சைகை காட்டி பேச முயன்று கொண்டிருந்தான். பழக்கமானவன் போல என்று நினைத்துக்கொண்டேன். கேஷியரும் இதை கண்டு கொள்ளவில்லை.  என்னிடம் ஆர்டர் எடுத்த இளைஞன் அவனை விரட்ட முயன்றான். 'உள்ளே போடா...' என்று தள்ள முயன்றான். அந்த பெண் முறைத்துக்கொண்டே அந்த கூடத்தின் இன்னொரு மூலையில்  ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டார். இவன் விர்ரென்று தன் குட்டி வண்டியை தள்ளிக்கொண்டு சென்று அந்த பெண்ணருகே நின்று கொண்டு பல்லிளிக்க ஆரம்பித்தான். பெண் இடம் மாறி இந்த மூலைக்கு ஓடி  வந்து இன்னொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கேஷியரிடம் முறையிட ஆரம்பித்தார். மீண்டும் அந்த இளைஞன் உள்ளே விரட்டப்பட்டான்.


 'என்ன சார் நடக்குது இங்கே, எனக்கு பயமா இருக்கு...எப்படி இப்படி ஒருத்தனை வேலைக்கு வெச்சிருக்கீங்க, பெண்கள் எப்படி தைரியமா இங்கே வந்து சாப்பிடமுடியும் ? நான் எப்படி இங்கே மறுபடியும் வருவேன்'


 'இல்லைம்மா, அவன் ஒரு டைப்பு ...ஒண்ணும் பண்ணமாட்டான் ...தைரியமா இருங்க...'


 'என்ன சார் இப்படி சாதாரணமா சொல்றீங்க... அவன் என்கிட்டே வரலையே... அந்த அம்மா கிட்டேதானே வம்பு பண்றான்.. விவரமான டைப்பு தான் போல ....' இது நான்.


 உடனே கேஷியர் அந்த பெண்ணிடம் தப்பித்து என்னிடம் பேச முயன்றார்.


 'சார், இலை எடுக்கவும், டேபிள் துடைக்கவும் ஆட்களே இல்லை . மேனேஜ்மெண்ட்ல இவனை வேலைக்கு வெச்சிட்டாங்க. நாங்க என்ன சார் பண்ண முடியும்.'


 'இதென்ன சார் அநியாயமா இருக்கு... போலீஸ்ல கம்ப்ளையின்ட் கொடுத்தா உங்க ஓட்டல் பேர் என்னாகறது'....இது அந்த பெண்.


 ;அது ஒண்ணுமில்லை சார், சின்ன வயசில கஞ்சா ரொம்ப அடிச்சிட்டான், இப்படி ஆயிட்டான். மத்தியானம்தான் வருவான்... இப்ப போயிருவான்...வேலைக்கு ஆள் கிடைக்கலைன்னா நாங்களும் என்னதான் சார் பண்றது...'


 பில் வந்தது. அவரவர்க்கு ஒவ்வொரு நியாயம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டே வெளியேறினேன்.

Thursday, January 14, 2016

பொங்கல் வாழ்த்துக்களும் ஒற்றை சீட் காலண்டர்களும்

பொங்கல் வாழ்த்துக்களும் ஒற்றை சீட் காலண்டர்களும் நம் தற்போதைய தலைமுறை அறியாத விஷயங்கள். வருடம் முழுவதும் ஒற்றை சீட் காலண்டரும் பாட்டு புத்தகங்களும் விற்கும் மலர்விழி நிலையம்  டிசம்பர் மாதம் வந்தவுடனேயே மேலும் பிசியாகிவிடும். சிவகாசியிலிருந்து வந்து குவியும் பார்சல்களை பிரித்து அடுக்குவார்கள். அத்தனையும் வித விதமான பொங்கல் வாழ்த்துக்கள் ! வார்னிஷ் மணக்கும் பள பள அட்டைகளில் வண்ணமிகு ஓவியங்கள்! போஸ்ட் கார்டுகளாக ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பும் வாழ்த்து முதல் கவர்களில் வைக்கும் மடிப்பு வாழ்த்துக்களும், விரிக்கும்போது பல வித வடிவம் எடுக்கும் வாழ்த்துக்களுமாக குவிந்திருக்கும். இரவும் பகலுமாக வேலை. காலண்டர் சீசனும் அப்போது இருப்பதால் அதுவும் கூடவே நடக்கும். கெட்டி அட்டையில் ஒட்டப்பட்டு தின தாள்கள் கொண்ட கேக்குகள் இணைக்கப்பட்ட காலண்டர்கள். பின்னால் மினி பஞ்சாங்கமும் ஓட்டப்பட்டிருக்கும். இத்தகைய காலண்டர்கள் இப்போதும் பழக்கத்தில் இருக்கின்றன.
ஒற்றை சீட் காலண்டர்களில்  பெரும்பாலும் ஒரு பெரிய படமும், நிறுவனத்தின் பெயரும், சும்மா பெயருக்கு  ஒரு குட்டி நாட்காட்டியும்  அச்சிடப்பட்டிருக்கும். பெரும்பாலும் நாட்காட்டியின் அச்சு கலங்கி...ஒன்றுமே தெரியாத அளவில்தான் இருக்கும். கொண்டையராஜ் , ராமலிங்கம், ராஜா போன்ற ஓவியர்கள் வரைந்த விதவிதமான கடவுளர் படங்களும் , பிரபல நடிகர்களின் படங்களும், சில சமயம் அரசியல் தலைவர்களின் படங்களும் இடம்பெற்றிருக்கும்! எம்ஜியார்தான் இந்த காலண்டர்களின் நாயகன். பிறகு ராமராஜன் உச்சத்திலிருக்கும்போது அவரும் ஒரு காலண்டர் நாயகனாக திகழ்ந்தார். நிறுவனங்களில்  காலண்டர் ஆர்டர் எடுக்கும் ஏஜெண்டுகள் கையில் ஒரு பெரிய ஆல்பத்துடன்  ஒரு படையாக இயங்குவார்கள்.
டிசம்பரில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வரை அந்த வாழ்த்துக்கள் ஓடும். பிறகு பொங்கல் வாழ்த்துக்கள்  சூடு பிடிக்க துவங்கும். இரவும் பகலும் வாடிக்கையாளர்கள், சில்லறை வியாபாரிகள் எனக் களை கட்ட துவங்கும். பொதுவாக, உழவர்கள் சார்ந்த விஷயங்கள், சினிமா நடிகர்கள், என ஓவியங்களும் புகைப்படங்களும் இந்த வாழ்த்துக்களில் இடம் பெறும். கே.மாதவனின் ஓவியங்கள் மிகப்பிரபலமானவை. குட்டி குட்டி கவிதைகள் வாழ்த்தாக அச்சிடப்பட்டிருக்கும்.
எத்தனை பேருக்கு வேலையளித்தன இந்த வாழ்த்துக்கள். என்னிடம் ஒரு பெரும் தொகுப்பே  இருந்தது... காலம் அவற்றை அழித்துவிட்டது!

அந்த காலகட்டத்தில் தபாலில் வாழ்த்துக்கள் அனுப்பாத நபர்களே கிடையாது. அஞ்சல் அலுவலகங்கள் நிரம்பி வழிந்தன. தபால்காரர்கள் பெரும் மூட்டைகளை சுமந்து கொண்டு டெலிவரி செய்து கொண்டிருப்பார்கள்.

கணிணியும் தொழில்நுட்பமும் அழித்தொழித்த  விஷயங்களில் இந்த வாழ்த்துக்களும் இடம் பெற்றன!

Tuesday, January 5, 2016

ஜனவரி 6 சர்வதேச வேட்டி தினமாமே!நான் 13 வயதிலேயே வேட்டி கட்ட துவங்கிவிட்டேன்.

18 வயது இருக்கும்போது, ஒரு கல்யாணத்திற்கு நாகர்கோவில் கிளம்பினேன். பஸ் பயணம். வேட்டி கட்டிக்கொண்டு கிளம்பிய என்னை பார்த்து என் தந்தைக்கு கடும் கோபம் வந்துவிட்டது. ஒரு பி.ஏ .படிக்கிற  பையன் பேண்ட் போடாமல் வேட்டி கட்டிக்கொண்டு பயணிப்பதா, அதுவும் சொந்த ஊருக்கு என்று கடும் கோபம். வழக்கம்போல அவர் பேச்சை கேட்காமல் புறப்பட்டு சென்று நாகர்கோவிலில் வேட்டியில் சுற்றிக்கொண்டு இருந்தேன்.

கல்லூரிக்கு ஒரே ஒரு நாள் வேட்டி கட்டிக்கொண்டு சென்று, அதை உருவி விட்டு என் நண்பர்கள் செய்த கலாட்டாவினால், பின்னர் அந்த பழக்கம்  தொடரவில்லை.

பின்னர் வேட்டி நெசவுக்கு புகழ் பெற்ற நாகர்கோவில் வடசேரியில் எனக்கு பெண்ணும் பார்த்து அங்கேயே திருமணமும் செய்து வைத்தனர். திருமண மேடையில்  பட்டுவேட்டி கட்டவில்லை... சுயமரியாதை திருமணம். சாதாரண கைத்தறி வேட்டிதான். இன்றுவரை என் இடுப்பில் பட்டு ஏறவில்லை .

எனக்கு லுங்கி பிடிக்காது...பெரும்பாலும் சாயவேட்டியைதான் வீட்டில் உடுத்துவது . நரசிம்மா (மோகன்லால் அந்த  படத்தில் கலர் கலராக வேட்டிகளை உடுத்துவார்) வேட்டி நம்ம பேவரிட்.

சமீப காலங்களில் வேட்டிக்கு அளிக்கப்படும் ஊடக விளம்பரங்கள் என்னை பிரமிக்க வைக்கின்றன. ஜிப், வெல்க்ரோ, பாக்கெட் என்று அசர அடிக்கின்றனர். சமீப காலங்களில் துக்க வீடுகளில் கூட, துணிமணிகள் வழங்கும் சடங்குகளில், பிராண்டட்  வேட்டி பார்சல்களை  பார்க்கிறேன்.


என்னிடமும் கூட ஒரு பிராண்டட் வேட்டி சட்டை இருக்கிறது. என்னுடைய தேசிய விருதுக்கு பிறகு நடந்த பாராட்டு கூட்டங்களில் ஒன்று, கோவை சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் நடைபெற்றபோது , ஒரு நினைவுப்பரிசையும் வழங்கினார்கள். வீட்டில் வந்து பிரித்தபோது இருந்தது ராம்ராஜ் வேட்டியும் சட்டையும்...நான் அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கு இணையேயில்லை. நிச்சயம் அந்த விலை கொடுத்து வாங்க எனக்கு மனம் வராது!

Monday, November 9, 2015

எழுத்தாளர்கள்

நான் என் வாழ்க்கையில் முதன் முதலாக பார்த்த எழுத்தாளர் ஜெயகாந்தனாகத்த்தான் இருக்கும். அடடா என்னவொரு ஆரம்பம். 

கோவையில் நடந்த கலை இலக்கிய பெருமன்றத்தின் முதல் மாநாட்டிற்கு  என் தந்தை எப்போதும் போல, குட்டிப்பையனான என்னையும் அழைத்துச் சென்றிருந்தார். மாநாட்டிற்கான ஓவியப்பணிகளை அவர்தான் செய்திருந்தார். திடீரென்று மேடைக்கு வந்து நினைவுப்பரிசை பெற்றுச் செல்ல என் தந்தை அழைக்கப்பட்டார்.  மேடையில் மீசையில்லாத  ஜெயகாந்தன் பரிசுக்கோப்பையுடன் காத்திருக்கிறார். கசங்கிய ஆடையுடன் இருந்த என் தந்தைக்கு கூச்சமோ கூச்சம் . எல்லோரும் அவரை உற்சாகப்படுத்தி மேடைக்கு அனுப்புகிறார்கள். தன்  ஆதர்ச எழுத்தாளரிடம் , பெருமையும் வெட்கமும் ஒரு சேர என் தந்தை பரிசு பெற்ற காட்சி இன்றும் நினைவில் இருக்கிறது!

எத்தனையோ எழுத்தாளர்களை பிறகு சந்தித்து பழகியபோதும்...சிலரை பற்றி மட்டும் இங்கே பதிவிடுகிறேன்.

கு.அழகிரிசாமியும், தொ.மு.சி.ரகுநாதனும் என் குழந்தை பருவ நினைவுகளில் வந்து போனவர்கள். மாணவப்பருவத்தில், நண்பராகிப்போன எழுத்தாளர் இரவிச்சந்திரனால், சுஜாதாவின் நட்பு கிடைத்தது. அவரது வீட்டிக்கு சென்று சந்தித்ததும் உண்டு. கோவைக்கு அவர் ஒரு முறை வந்தபோது , நண்பர் மார்ஷல் அவரை என் வீட்டிற்க்கு அழைத்து வந்தார். கூட்டம் கூடிவிடும் என்பதாலேயே, சுஜாதா  காருக்குள்ளேயே இருந்து என்னுடன் பேசிவிட்டு சென்றார். ஒரு முறை பெங்களூரில் இரவிச்சந்திரனுடன், ராஜேந்திரகுமாரை  சந்தித்து, அவரது ஆபீசில் பொய் சொல்லவைத்து சினிமாவுக்கு அழைத்து சென்றோம். பின்னர் எனது நல்ல நண்பராகிப்போன எஸ்.சங்கரநாராயணனை பெங்களூரில்தான் முதன் முதலாக இரவிச்சந்திரனுடன் சந்தித்தேன். மாலனின் அறிமுகமும் திசைகள் நாட்களும் அப்போது ஆரம்பமாயின. பாலகுமாரனையும் சுப்ரமண்ய ராஜூவையும் சந்தித்து பேசக்கூடிய வாய்ப்புகளும் அப்போது கிடைத்தன!

எனது மாணவப்பருவத்தில் கோவையில் நடந்த பல இலக்கிய கூட்டங்களில்  தகழி சிவசங்கரன்பிள்ளை, கடம்மனிட்ட ராமகிருஷ்ணன், அய்யப்ப பணிக்கர், வண்ணநிலவன், பூமணி போன்றவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

என் மதிப்புக்குரிய எழுத்தாளர்களான சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், வண்ணதாசன், கலாப்ரியா, இரா.முருகன் , ஜெயமோகன் அனைவருடனும் நெருங்கிப்பழகும் வாய்ப்புகள் பின்னாளில் உருவாயின .

இந்த வரிசைகளில் சேராத ஒரு எழுத்தாளருடன் பழகும் வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கிறது. அவர்தான் பேய்க்கதை மன்னன் நாஞ்சில் பி.டி .சாமி!
எங்கள் வீட்டுக்கு எதிரில் ஒரு புகழ் பெற்ற கடை இருந்தது. பாட்டு புத்தகங்கள், கேலண்டர்கள், படங்கள் வாங்கவேண்டுமென்றால் இங்குதான் வந்தாகவேண்டும். 'மலர்விழி நிலையத்தில்'தான் பேய்க்கதை மன்னனை சந்தித்தேன். நல்ல உயரம், சுருள் கிராப், ஜெமினி கணேசன் மாதிரி மீசை, கிரீம் கலர்  ஜிப்பா, ஜாலியாக பேசுவார். அவர் அப்போது புனித அந்தோணியார் படத்திற்க்கு வசனம் எழுதியிருந்தார். மலர்விழி நிலையத்தில் கதை புத்தக விறபனையில் கொடுக்கல் வாங்கல் உண்டு. பண வசூலுக்கு அடிக்கடி வருவார். கோவையில் அப்போது பிரபலமாயிருந்த, எனக்கும் நன்கு பழக்கமான 'காதொலி சித்தர்'  சாமிகிரி சித்தர் இவருக்கு நட்பானார். இருவரும் ஒரு திரைப்பட தயாரிப்பில் இறங்கினர். பேய்க்கதை  மன்னர்தான் இயக்குனர்!! படத்தின் பெயர் 'பாடும் பச்சைக்கிளி'. மலர்விழி நிலையத்தின் சவுந்தரம் அண்ணாச்சிக்கு கொஞ்சம் கலைத்தாகம் உண்டு. வடக்கன்குளத்தில் மாதா கோவில் திருவிழா நாடகங்களில் வில்லன் வேடத்தில் நடித்து 'சிம்மக்குரலோன்' என்ற பட்டத்தையும் தனக்கு தானே சூடிக்கொண்டிருந்தவர்!! படத்தில் அவருக்கும் ஒரு நகைச்சுவை வேடம் தரப்பட்டிருந்தது. கேட்டிருந்தால் எனக்கு கூட ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கலாம். கொஞ்ச காலம் இந்த திரைப்பட ஷூட்டிங்  அக்கப்போர் ஓடி, ஒரு கட்டத்தில் நின்றும் போய்விட்டது.

பி.டி .சாமி. அதற்க்கு பிறகு  கொஞ்சம் அமைதியாகிவிட்டு மீண்டும் கதை எழுதுவதில் ஈடுபட்டார்!!அவர் இறந்து போன செய்தியையும் பின்னர் அறிந்தேன்.!

Saturday, September 26, 2015

ஒரு புதிய வழக்கு

நீண்ட நாட்களுக்கு பிறகுதான் அவரது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

'உங்களை பார்க்க வரணுமே... ஒரு அவசர ஜோலியா பேசணும் ' என்றார்.!!!

அடுத்த நாள் மீண்டும் ஒரு அழைப்பு...உங்க கடை மறந்து போச்சே....இங்கே வெரைட்டி ஹால் ரோடில் நின்னுகிட்டு இருக்கேன்.... 10 தடவைக்கு மேல் வந்தவருக்கு வழி மறந்து போனது ஏன் என்று யோசித்துக்கொண்டே வழி சொன்னான். ஒரு வழியாக வந்து சேர்ந்தார். கூட 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண். 100 கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து வருகிறார்கள்.

வந்தவுடன் நேராக விஷயத்துக்கு வந்துவிட்டார்.

'என்ற மாப்பிள்ளை செத்து ஆறு மாசத்துக்கு மேலே ஆச்சுங்க. தவணகிரி பக்கத்திலே ஒரு கவர்மெண்ட் பேக்டரிலெ நல்ல போஸ்ட்ல இருந்தாரு. பொண்ணு இங்கே ஒறம்பரைக்கு வந்திருந்தா. திடீர்னு ஒரு நைட் போன் வருது...இறந்துட்டாரு...பாடியை நாங்க கொண்டு வரணுமா... நீங்க வந்து வாங்கிட்டு போறீங்களான்னு....எனக்கு கையும் காலும் ஓடலே . நீங்களே கொண்டு வாங்கன்னு சொல்லிட்டேன். எப்படி செத்தாரு. ஏன் செத்தாருன்னு ஒண்ணுமே யோசிக்க முடியல. அவங்க ஆபீஸ்லே இருந்து ரெண்டு பேரு வந்து பாடியையும், ஹார்ட் அட்டாக்னு சொல்லி மெடிக்கல் ரிப்போர்ட்டையும் கொடுத்திட்டு போனாங்க. அடுத்த நாளு அடக்கம் பண்ணிட்டோம். அப்படியே அடப்பு , சாங்கியம்னு நாளு போயிருச்சு... இப்ப எட்டு மாசம் ஆச்சுங்க'.

சரி....இப்ப என்ன பிரச்சினை. பேக்டரிலெ இருந்து பணம் வரலையா?

அதெல்லாம் இல்லீங்க... இப்ப எங்களுக்கு ஒரு பெருத்த சந்தேகம் வந்திருக்கு. அவரு யோகா, எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி பாடியை டிரிம்மா வெச்சிருந்தார். அப்படி சாகற ஆளும் இல்லே. அதுதான்......

ஓ ...சின்ன வயசு வேறே....

 வயசு 63 ஆச்சுங்க....பாத்தா தெரியாது...

என்னது? 63ஆ?...இவருக்கே 70 கூட ஆயிருக்காதே என்று மனதுக்குள் ஒரு கேள்விக்குறி.

ஆமாங்க..ரிட்டயர் ஆனதுக்கு அப்புறம் ஏதோ ஒரு உத்தரவு கிடைச்சு அவரை அங்கே வேலைக்கு வெச்சிருந்தாங்க... ரொம்ப திறமையானவர்..

சரி..இப்ப என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?

அவரை யாரோ கொண்ணுருக்கணும் ..அப்படி சாகற ஆள் இல்லீங்க.

இங்கே பாருங்க... இப்ப நீங்க புகார் கொடுத்தாலும் யாரும் கண்டுக்க போறதில்லை... எட்டு மாசமா என்ன செஞ்சிகிட்டு இருந்தீங்கன்னு போலீஸ்ல கேப்பாங்க....இந்த அடைப்பு எல்லாம் யாரும் ஒத்துக்க போறதில்லை. அப்புறம் உங்களுக்கு யார் மேலெ சந்தேகம்?

அவருக்கு ரெண்டு வருஷம் முன்னாலே ரெண்டு பேர் ரிட்டயர் ஆயிருக்காங்க. அவங்களுக்கு இந்த புது வேலைக்கு ஸ்பெஷல் பர்மிஷன் கிடைக்கல. அந்த பொறாமைல இன்னொரு ஆளையும் சேர்த்து வெச்சுகிட்டு இவருக்கு விஷம் வெச்சுட்டாங்க.

அவங்க இவரை விட வயசானவங்கன்னு தெரியுது....இதுக்காக கொலை எல்லாம் செய்வாங்களா ?அவங்க பெயர், அட்ரஸ் எல்லாம் தெரியுமா?

 தெரியாதுங்க.. பின்னே எப்படி அப்படி அடிச்சு சொல்றீங்க?

அவரே சொன்னாருங்க..

 யாரு?

எங்க வீட்டுக்காரர்தாங்க.....முதன் முதலாய் அந்த பெண் பேசினாள்.

இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.... எப்படிங்க?

அது நாங்க சாமிகிட்டே பேசினோம்....அவரும் ஆவியா வந்து சொன்னாரு. விஷம் வெச்சு அப்புறம் அடி அடின்னு அடிச்சு கொன்னாங்களாம். ஆனா அவரும் சாதாரணப்பட்ட ஆள் இல்லீங்க... மூணு பேர்ல ஒருத்தனை அவரே தீத்துக்கட்டிட்டாரு ! பேக்டரிலெ கோடவுன் எரிஞ்சு அந்த ஆள் செத்துப் போயிட்டான். கேசை நடத்துங்க... நான் வந்து கோர்ட்டில் சாட்சி சொல்றேன்னு சொல்லிட்டாரு.

அதெப்படிம்மா சாத்தியம்?

அதெல்லாம் அவரு எப்படியாவது செய்வாருங்க…

நீ சும்மா இரும்மா...சாருக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை கிடையாது.

இங்கே பாருங்கம்மா... நம்பிக்கை... நம்பிக்கை இல்லைங்கிறதை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். நான் சொல்றதை பொறுமையா கேளுங்க. உங்க அப்பா எனக்கு அண்ணன் மாதிரி...ரொம்ப வருஷ பழக்கம். உங்க நல்லதுக்குதான் சொல்றேன். இப்படியெல்லாம் சந்தேகம் வந்திருந்தா அப்பவே நீங்க போலீஸ்ல சொல்லியிருக்கணும்.. இப்ப ஆயிரம் கேள்வி வரும். அப்பவேன்னா தோண்டி எடுத்து பார்த்திருப்பாங்க. இப்ப எட்டு மாசம் கழிச்சு அங்கே என்ன இருக்க போகுது. அவ்வளவு அக்கறையா போலீசு இதையெல்லாம் இவ்வளவு நாளைக்கு அப்புறம் விசாரிப்பாங்கன்னு தோணலை. உங்களுக்கு குழந்தைங்க எத்தனை? அவங்களை படிக்க வைக்கிற வேலையை பாருங்க.

எனக்கு ஒரே பையந்தானுங்க... +2 படிக்கிறான். சார். .

அப்ப எனக்கும் ஒண்ணும் புரியல்ல, இவளுக்கும் விவரம் பத்துல . சொந்தக்காரங்க ரெண்டு கான்ஸ்டபிளும் இருக்காங்க... ஒருத்தனும் ஒண்ணும் சொல்லலை. இப்ப ரெண்டுல ஒண்ணு பாக்கனும்னு இவ சொல்றா. நான்தான் கொஞ்சம் பொறுன்னு சொல்லி உங்க கிட்டே இப்ப கூட்டிட்டு வந்திருக்கேன். சிபிஐ ல புகார் கொடுக்கலாமா?

அதெல்லாம் சினிமால...இங்கே பாருங்கம்மா..இதில இறங்குனீங்கன்னா லட்ச லட்சமா நிறைய செலவாகும், நிறைய அவமானம் காத்திருக்கும்...ஊரு விட்டு ஊரு ஒவ்வொரு வாய்தாவுக்கும் அலையணும். நான் சொல்றதை சொல்லிட்டேன்..பையனை நல்லா படிக்க வையுங்க...அப்புறம் மத்ததை பார்க்கலாம்.

அந்த பெண் ஒன்றும் கேட்பதாக தெரியவில்லை. பெரியவர் வழிக்கு வந்துவிட்டார்.

பாரும்மா...சார் சொல்றதுதான் சரி....எனக்கும் வயசாச்சு...அலையவும் முடியாது . சொல்றதை கேளு...

இவனுக்கும் ஒன்றும் புரியவில்லை....சரி இதுக்கு ஒரு முத்தாய்ப்பு வைத்தாகணும்.

'சரிம்மா....நான் ஒரு யோசனை சொல்றேன். 'மறுபடியும் சாமிகிட்டே பேசுங்க. உங்க வீட்டுக்காரர் கிட்டே சொல்லுங்க. இப்படி தெரிஞ்ச வக்கீல்கிட்டே போய் சொன்னோம். அவரு இப்படி சொன்னாரு...அலைய வேண்டாம்னு சொல்றாரு. நீங்க என்ன சொல்றீங்க... அப்படி பழி வாங்கியே தீரணும்னா ... இறங்குறொம்னு சொல்லுங்க. அவரு என்ன சொல்றாரோ அது படி நடக்கலாம். என்னாலே இந்த கேஸ் நடத்த முடியாது...நான் இப்பல்லாம் கோர்ட்டுக்கு போறதில்லை. உங்களுக்கு வேணும்னா எனக்கு தெரிஞ்ச வக்கீல் யாரையாவது ஏற்பாடு பண்ணித்தரேன்...'

 உங்க வீட்டுக்காரர் என்ன சொன்னார்னு எனக்கு போன்ல சொல்லுங்க....

 இப்போதுதான் அந்த பெண்ணின் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. பெரியவரும் ஆசுவாசம் அடைந்தார்.

சரி வர்றோம் சார்....ரொம்ப நல்லது'

விடை பெற்றனர்.

ஐந்து நிமிடம் போயிருக்கும்...நாற்காலி மீது ஒரு பை இருந்தது. மறந்து போயிருப்பார் போல. அவரது எண்ணை அழுத்தினான். 'இந்த எண் உபயோகத்தில் இல்லை' என்ற அறிவிப்பு.

பையை திறந்து பார்த்தான். ஒரு கட்டு அச்சடிக்கப்பட்ட தபால் கார்டுகள்.

படித்தான்...'உத்தரகிரியை பத்திரிகை' என்ற நீத்தார் சடங்கு அறிவிப்பு. கொட்டை  எழுத்தில் கருப்பு நிறத்தில்  மாசிலாமணி என்ற பெயரும்....இப்போது வந்து போனவரின் புகைப்படமும்.

என்னமோ செய்வது போல ஒரு உணர்ச்சி...நாற்காலியை இறுக பற்றிக்கொள்ளவேண்டியிருந்தது.

Thursday, November 3, 2011

நூலகங்கள்!


அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற போகிறார்கள் என்ற செய்தி பலரின் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறது. பல கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன!! நூலகம்..எவ்வளவு அழகான வார்த்தை!!!! எனது டியூஷன் மாஸ்டரும், என் தந்தையின் நண்பருமான பஷீர் அவர்கள் என்னை விரல் பிடித்து கோவை மத்திய நூலகத்திற்கு அழைத்து சென்று குழந்தைகள் பகுதியில் அமர வைத்தது இன்றும் நினைவிருக்கிறது. காமிக்ஸ் புத்தகங்களுடன் தொடங்கிய தொடர்பு பின்னர் நான் வளர வளர விரிவடைந்தது. சிதம்பரம் பூங்கா அருகில் இருந்த அந்த நூலகம் பின்னர் ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.. இந்த கட்டிடத்தில் அருங்காட்சியகம் வந்து, பின்னர் குண்டு வெடிப்பு விசாரணை நீதிமன்றமாகவும் மாறி, இப்போது பூட்டி கிடக்கிறது!!!

கிக்கானி பள்ளியில் ஆறாவது வகுப்பில் சேர்ந்தபோது பள்ளியில் என்னை எதுவும் கவரவில்லை, நூலகத்தை தவிர. விளையாட்டுகளில் ஈடுபாடு இல்லாததால் மதிய இடை வேளைகளிலும் கூட நூலகமே கதியாயிற்று. காலையில் எட்டரை மணிக்கே நூலக வாசலில் காத்து கிடப்பேன். எனக்காக நூலகர் நடராஜன் அந்நேரத்திற்க்கே சைக்கிளை மிதித்து கொண்டு வருவார். பள்ளியில் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே படித்து வந்த எனக்கு தமிழின் கதவுகளை பள்ளி நூலகம் திறந்து விட்டது.

பல மாலை நேரங்களில் டவுன்ஹால் மாடியில் இருந்த புராதான நூலகம் எனது வாசஸ்தலமானது. யாராவது படியேறி வந்தாலே..திம் திம் என்று நூலகமே அதிரும்!!!! மேசைகளில் படிப்பது போல பாவனை செய்துகொண்டு தூங்குபவர்கள் திடுக்கென விழித்து எழும் சூழ்நிலைகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. இன்று அங்கு நூலகம் இல்லை. பல இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்ற அந்த நூறாண்டு கடந்த மண்டபம் இன்று நகர்மன்ற கூட்டங்கள் நடக்கும் கூடமாகிவிட்டது.

மணிக்கூண்டை தெரியாத கோவைவாசிகள் இருக்க முடியாது. அங்கும் வெறும் செய்தித் தாள்களுக்கு மட்டுமே ஒரு நூலகம் இருந்தது. ஒரே பேப்பரை பல பாகங்களாக்கி பெருசுகள் படித்துக்கொண்டிருப்பார்கள். இன்று மணிக்கூண்டு இருக்கிறது, அதனுடன் ஒட்டியே கழிப்பறைகளும் இருக்கின்றன. நூலகம் மட்டும் இல்லை!

கோவை அரசினர் கல்லூரியில் சேர்ந்தவுடன் நான் விஜயம் செய்த முதல் இடம்....யூகித்திருப்பீர்கள்....அங்குதான்! அங்கு நூலகத்தினுள் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. நமக்கு வேண்டிய புத்தகத்தை கேட்லாக்கை பார்த்து , தேர்ந்தெடுத்து, நூலகரிடம் சொன்னால் அவர் எடுத்து வைப்பார். 'பில்கிரிம்ஸ் பிராக்ரஸ்' புத்தகத்தை நான் கேட்டவுடன், வெறுப்பாக பார்த்து, இரண்டு நாட்களுக்கு பிறகு கொடுத்தார், 'படிக்கவா, பந்தா பண்ணவா' என்ற கேள்வியுடன். பின்னர் அவரும் எனது நலம் விரும்பியானார் என்பது காலத்தின் கட்டாயம்!

சென்னை மாநிலக்கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் நூலகங்களின் பிரம்மாண்டம் என்னை வசீகரித்தது! அண்ணா சாலை நூலகத்தில், கிரேக்க அரசியல் தத்துவ நூலை தேடி சென்றபோது, பின்னர் இதே வளாகத்தில் எனது நூல் ஒரு நாள் வெளியிடப்படும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டேன். பிரிட்டிஷ் கவுன்சில் நூலகமும் அமெரிக்கன் நூலகமும் பிரம்மிப்பூட்டின. அமெரிக்கன் நூலகம் எனக்கு மிகவும் பிடித்த இடமானது. குளிரூட்டப்பட்ட வளாகம், அதிசயமாய் தெரிந்த வீடியோ கேசட்கள், அதன் குடிநீர் குழாய்களும் கூட மனதை கவர்ந்தன. திரைப்படம், கவிதை சார்ந்த நூல்களை அதிகமாய் படித்தது இங்குதான். சென்னை பல்கலைக்கழக நூலகமும் அண்ணா சாலை நூலகம் போலத்தான் இருந்தது. காதலர்களுக்கான இருட்டு மூலைகள், இடம் மாறிக்கிடக்கும் புத்தகங்கள் , எங்கேயாவது குருட்டாம்போக்கில் தென்படும் பொக்கிஷங்கள் என்று ஒரு மாயத்தன்மை நிறைந்த இடம். கன்னிமாரா நூலகம் அப்படி இருந்ததில்லை. அதுவும் ஒரு அற்புதச்சுரங்கம். அதன் சிறப்பு அதன் வளாகமும். அருங்காட்சியகமும் , மியூசியம் தியேட்டரும் ரசிகனுக்கு கூடுதல் பரிசுகள்!

ஏனோ மாநிலக்கல்லூரி நூலகம் என்னை கவரவில்லை. மாறாக எங்கள் விக்டோரியா விடுதி நூலகம் எனது இரண்டாவது விடுதி அறையாக மாறிப்போனது. பகுதி நேர நூலகராக அங்கு பணி புரிந்த பால்ராஜை, காக்காய் பிடித்து, பல நூல்களை மாதக்கணக்கில் என் அறையில் வைத்து படிக்கும் ஏற்பாடை செய்து கொண்டேன்.! அவற்றில் ஒன்று எஸ்.கிருஷ்ணசாமி எழுதிய 'இந்தியன் பிலிம் '! திருவல்லிக்கேணியில் இன்னொரு நூலகத்தை கண்டு பிடித்தேன். அது 'ஹிந்து' பத்திரிக்கை நிறுவனர் கஸ்தூரி அய்யங்கார் பெயரை கொண்டிருந்தது. பெரும்பாலும் ஹிந்து நிறுவனத்திற்கு வந்த நூல்களை இங்கு பொது மக்களுக்கு பயன் பெரும் வகையில் வைத்திருந்தனர். வழக்கம் போல அந்த நூலகரும் என் நண்பரானார்! அரிய நூல்களை தந்து உதவினார்!

கல்லூரி வாழ்க்கையில் ஏமாற்றம் தந்த நூலகம் கோவை சட்டக்கல்லூரி நூலகம்தான். நாங்கள்தான் கல்லூரிக்கே முதல் செட். ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கியது கல்லூரி. எந்த வசதிகளும் இல்லை. விளையாட்டுகளுக்கு நிதி ஒதுக்க்கப்பட்டு விளையாட்டு சாதனங்கள் எல்லாம் வாங்கப்பட்டன. ஆனால் நூலகம் இல்லை. நூலகம் வேண்டி மனுக்கள் அனுப்பினோம். விசாரணைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வந்தார். பெட்டிஷன் பார்ட்டிகளான நாங்கள் மூவரும் அவர் முன் நின்று வீராவேசத்துடன் இது என்ன சட்டக்கல்லூரியா, உடற்பயிற்சிக் கல்லூரியா ..எங்களுக்கு உடனடித்தேவை நூலகம்தான் தவிர பந்துகளும் மட்டைகளும் அல்ல என்று முழங்கினோம். நீதிபதி உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். 'தம்பிகளா, என் இத்தனை வருஷ சர்வீசில் இப்படி சட்டக்கல்லூரி மாணவர்களை பார்த்தில்லையப்பா, இதோ வருகிறது நூலகம்'! என்று ஆணையிட்டு நூலகமும் வந்தது..! ஆனால் நாங்கள் யாரும் உள்ளே எட்டி பார்க்கவில்லை என்பதுதான் விசேஷம். 'ஒரே பார்வையில் முப்பது
கேள்விகள்' என்ற கைடுகள்தானே தானே எங்களுக்கு ஆபாத்பாந்தவர்கள்! வழக்கம் போல நூலகர்தான் நண்பரானார்....பின்னர் மன உபாதைகளால் வேலை நீக்கமும் செய்யப்பட்டார்!!!

நூலகங்கள் என்றாலே, அங்கு வரும் விதவிதமான மனிதர்கள்தாம் நினைவுக்கு வருவார்கள். நிறைய புத்தகங்களை தங்கள் முன் குவித்து வைத்து கொண்டு குறிப்பெடுக்கும் ஆராய்ச்சி மாணவர்கள், எல்லோரும் தேடும் வாரப்பத்திரிகையை, தான் படிக்கும் பேப்பருக்கு கீழ் ஒளித்து வைத்து பாதுகாக்கும் அற்ப ஜீவிகள், தங்களுக்கு வேண்டிய நூலை, வேறொரு செக்சனில் ஒளித்து வைக்கும் கில்லாடிகள், பனியனுக்குள் புத்தகத்தை வைத்து வெளியே கடத்தும் அறிவுத்தாகம் மிக்கவர்கள்,குறட்டை விட்டு தூங்கும் உல்லாசிகள், பெரும்பாலும் கடுகடுப்பை சுமந்து கொண்டிருக்கும் நூலக சிப்பந்திகள், ரெபரென்ஸ் புத்தகங்களில் முக்கிய தாள்களை கிழித்து திருடி செல்லும் பொதுநலவாதிகள், நூல்களில் தங்கள் கருத்தை எழுதி வைப்பவர்கள், பல சமயங்களில் கெட்ட வார்த்தைகளால் இந்த நூலை படிக்க போகிறவர்களை திட்டி எழுதியிருப்பவர்கள், பெண்களின் கவனத்தை கவர மெகா நூல்களை படிப்பது போல நடிப்பவர்கள்......அது ஒரு தனி உலகம்தான்!!!

யோசித்து பார்க்கும்போது மாணவப் பருவத்துடன் நூலகங்களின் தொடர்புகள் அற்றுப் போய்விட்டன என்ற கசப்பான உண்மை இப்போது சுடுகிறது. உண்மை எப்போதும் சுடுவதுதானே!

Sunday, March 20, 2011

நினைவிருக்கிறதா, அவசர நிலையை?

முப்பது வருடங்களுக்கு மேலாயிற்று...அந்த கொடிய காலங்களின் ஆட்டங்கள் நிகழ்ந்து!!!
அப்போது நான் மாணவன் . திடீரென்று அந்த செய்தி வந்தது. 'அவசர நிலை பிரகடனம்'....! அப்படி என்றால் என்னவென்பதே பலருக்கு தெரியாது. இதற்கு முன் ஒரு போரின்போது இது அறிவிக்கப்பட்டதாக சிலர் சொன்னார்கள். தேர்தல் முறைகேடுகளால், இந்திராகாந்தி பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை , நாட்டுக்கே ஆபத்து என்று திரித்து, அவசர நிலை பிரகடனம் செய்தார் அம்மையார்! அப்போதைய ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியான பக்ருதீன் அலி அகமது இந்த சட்டத்தையும், பின்னால் வந்த பல அவசர சட்டங்களுக்கும் மறுப்பேதும் சொல்லாமல் கையெழுத்து போட்டு தள்ளிக்கொண்டிருந்தார்! என்ன ஏது என்று புரிவதற்குள் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டனர். ஆயிரக் கணக்கான தொண்டர்களும் சிறையில்.. பலர் தலைமறைவானார்கள்! அப்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி. காங்கிரசுக்கு எதிரான நிலை. தலைவர்கள் பலர் தமிழகத்தில் தலைமறைவாக தஞ்சம் புகுந்தனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் கோவை பேரூரில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்தார் என்றெல்லாம் நண்பர்கள் சொன்னார்கள்! போராட்டங்கள் தடை செய்யப்பட்டன. வீராதி வீர சூராதி சூர தொழிற்சங்க தலைவர்கள் எல்லோரும் கப்சிப். நேரத்துக்கு ரயில்கள் ஓடின...காலை பத்து மணிக்கெல்லாம் அவரவர் சீட்டில் அரசு ஊழியர்கள் பவ்யமாக அமர்ந்தனர்! யாரை வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உதைக்கலாம், கைது செய்யலாம், சித்ரவதை செய்யலாம், கொலை கூட செய்யலாம் என்ற நிலை உருவானது. அடக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்பட்டன. எதிர்த்து குரல் கொடுத்த பெரும் தலைவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபளானி, மொரார்ஜி, சரண்சிங் போன்ற தலைவர்கள் எந்த காரணமும் இன்றி கைது செய்யப்பட்டனர். பல அமைப்புக்கள் தடை செய்யப்பட்டன. ஆர்.எஸ் .எஸ். இவற்றில் ஒன்று. சில கட்சிகள் எதிர்த்து குரல் கொடுத்தன..மார்க்சிஸ்ட் கட்சியும் திமுகவினரும் இதில் அடங்குவர். இவர்களின் தலைவர்களும் தொழிற்சங்க வாதிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்களை முடக்கிய சட்டமான 'மிசா'வையே பலர் பின்னாளில் பட்டமாக அணிந்து கொண்டனர்.

இந்த கொடிய அடக்குமுறைக்கு ஒரு பட்டுக்குஞ்சலம் கட்டினர் இந்திரா காந்தியும் அவருடைய ஆலோசகர்களும்...இருபதம்ச திட்டம் என்ற பெயரில்! நாட்டு நலனுக்கு என்று இருபது திட்டங்களை அறிவித்து இருபத்தி நாலு மணிநேரமும் இதன் பஜனை பாடினார்கள். ‘Be Indian, Buy Indian’ என்பது இதில் ஒன்று. இதன்படி அந்நிய பொருட்களுக்கு தடை என்ற வதந்தி கிளம்பியது. அப்போது கடத்தல் என்பது பெரும் தொழில் அல்லவா! அந்நிய வாட்சுகள், அந்நிய டேப் ரிக்கார்டர்கள் என்று இந்தியாவுக்கு கடத்தப்பட்ட பொருட்கள்தான் பரவலாக நம் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த செய்தி கேட்டதும் அனைவரும் இவற்றை வீட்டுக்குள் மறைத்து வைத்த காமெடிகளும் நடந்தன. திடீரென்று ஒரு வதந்தி கிளம்பும்...'மேம்பாலத்துல கஸ்டம்ஸ் செக்கிங் பண்ணி பாரீன் வாட்சுகளை பிடிக்கிறாங்களாம்' என்று...அவ்வளவுதான்...அனைவரும் தத்தமது சீக்கோ, ரீக்கோ வாட்சுகளை உள்ளாடைக்குள் மறைத்து வைக்காத குறையாய் ஒளித்து வைத்து நடமாடுவார்கள்!

கோமாளி இளவரசனைப் போல் சஞ்சய் காந்தியின் கொடூரங்கள் பிரபலமாயின. குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை பலவந்தமாக குடிசைவாசிகள் மீது பிரயோகப்படுத்தினார். தில்லியை அழகுபடுத்துகிறேன் பேர்வழி என்று துர்க்மான் கேட் குடிசைகள் மீது புல்டோசர்களை ஏவினார். அவசர நிலையை கேலி செய்து எடுக்கப்பட்ட 'கிச்சா குர்சி கா' படத்தின் நெகடிவ்களை கைப்பற்றி கொளுத்தினார். காங்கிரஸ்காரர்களின் அட்டகாசம் அதிகரித்தது...தங்களுக்கு வேண்டாதவர்களை உள்ளே தூக்கி போட அவசர நிலை அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக ஆயிற்று! கல்லூரி விடுதிகளுக்குள்ளும் காவல் துறை நுழைந்தது. புரட்சிகர சிந்தனை மிக்க மாணவர்கள் இழுத்து செல்லப்பட்டனர்.கேரளத்தில் ராஜன் என்ற மாணவன் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று வரை அவன் உடலுக்கு என்ன ஆயிற்று என்ற தகவல் இல்லை. எதிர்ப்பு குரல் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் காவல் நிலையங்களில் தொங்க விடப்பட்டு உதைக்கப்பட்டனர்..உருளைக்கட்டை சிகிச்சைகள் செய்யப்பட்டு நடக்க முடியாதவர்கள் ஆனவர் பலர். இயல்பாகவே ஆதரவுக்குரல் கொடுப்பவர்களும் உருவாயினர். 'இந்திராதான் இந்தியா' என்ற டி.கே.பருவாவின் புகழ் பெற்ற ஜால்ரா வார்த்தையை சிரமேற்க்கொண்டு தமிழகத்தில் இலக்கியங்கள் உருவாகின. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட இந்திராவின் மக்கள் தொடர்பாளராகவே மாறி, இந்தோ சோவியத் கழகம் சார்பில் பல கருத்தரங்கங்கள் நடத்தியது. இன்றும் நினைவிருக்கிறது...முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு இருபதம்ச திட்டத்தின் புகழ் பாடும்போது சொன்ன வரி...காஷ்மீர் ஆப்பிளை இங்கே இருப்பவனும் வாங்கி திங்க பயன்படுகிறது இந்த திட்டம் என்று. ஒரு இழவும் புரியவில்லை அப்போதும் இப்போதும்! வினோபா பாவே, அன்னை தெரசா, குஷ்வந்த் சிங் போன்றவர்கள் பகிரங்கமாக அவசர நிலையை ஆதரித்தனர் என்று சொல்வார்கள். எம்.எப்.உசைன் என்ற ஓவியரின் அடிவருடித்தனம் உச்சமானது. அவர் இந்திராவை ஒரு துர்கையாக சித்தரித்து ஒரு மாபெரும் ஓவியத்தை காட்சிக்கு வைத்தார்.

பத்திரிக்கை தணிக்கை அப்போது கொடி கட்டி பறந்தது. ஹிந்து போன்ற பத்திரிகைகள் கப்சிப் ஆயின. எதிர்ப்புக்குரல் இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக் போன்ற பத்திரிகைகளில் இருந்து மட்டும் வந்தன. அதிகாரிகளுக்கு ஒரு செய்தி பிடிக்கவில்லை என்றால் நீக்கப்பட்ட பின்புதான் அச்சுக்கு போயின. அப்போதைய பத்திரிகைகளில் பல பத்திகள் காலியாகவும் வெள்ளையாகவும் இருப்பதை பார்க்கலாம். துக்ளக்குக்கு பயங்கர டிமாண்டு, பல பக்கங்கள் வெள்ளையாய் இருந்தும்! ஒரு இதழில் எம்ஜியார் நடித்த 'சர்வாதிகாரி' படத்தின் வசனங்களை பல பக்கங்களுக்கு அச்சடித்திருந்தார் சோ! வானொலியை திருப்பினால் எப்போதும் 'இருபதம்ச திட்டம்...ஆஹா...இது இந்திராவின் சட்டம்...ஓஹோ' என்ற கண்றாவி பாட்டை கேட்க வேண்டியது தலைவிதியானது! திரைப்படத் தணிக்கைகளும் தடைகளும் இன்னும் பிரபலம். குடிப்பது போன்ற காட்சிகளும், வன்முறைச்சண்டைகளும் கத்திரிக்கு பலியாயின. அரசை விமர்சிப்பது போல காட்சிகள் வந்தால் அம்போதான்! திரைப்பட பிரபலங்களை பந்தாடினர் அதிகாரிகளும் மந்திரிகளும்.

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி ஒரு நாள் பிரகடனப்படுத்தப்பட்டது! பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின், முரசொலி மாறன் போன்றவர்கள் உள்ளே! மக்கள் மத்தியில் குமுறல்கள் உருவாகத் தொடங்கின. நான் அப்போது சென்னை மாநிலக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். சிறையில் சிட்டிபாபு அடித்து கொல்லப்பட்டார் என்று தகவல் பரவியது. அவரது உடல் திருவல்லிக்கேணியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு குழுமிய மக்களின் உணர்வுகள் இன்றும் பசுமையாக மனதில் பதிந்திருக்கிறது!
சிறைக் கொடுமைகள் பற்றிய பல தகவல்கள் பரவின. அதே நேரத்தில் முரசொலி அடியார் போன்ற சிலர் சிறை ஒரு உல்லாசக்கூடம் என்பது போன்ற தகவல்களையும் பரப்பினர். ஜால்ரா அடித்துக்கொண்டிருந்த பொதுவுடமைக்கட்சியில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் வரத்தொடங்கின. அதில் முக்கியமானவரான ராஜேஸ்வர ராவுக்கு மாநிலக்கல்லூரி மாணவர்கள் சார்பாக நாங்கள் மாலை அணிவித்தோம். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரவேண்டுமல்லவா. 1977ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை கண்டது. இந்திரா, சஞ்சய் போன்றவர்கள் கூட அவர்கள் தொகுதியில் தோற்றனர்! மக்களும் சகஜ நிலைக்கு திரும்பினர்!

அப்போது ஒரு நாள் ஜனாதிபதி இறந்ததால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒரு மனிதரின் மறைவுக்கு மாணவர்கள் மத்தியில் அப்படி ஒரு மகிழ்ச்சி ஆரவாரம் எழும்பியதை நான் பிறகெப்போதும் கண்டதில்லை!