Sunday, December 7, 2008
திலகங்கள்
நான் வசிப்பது ஒரு பிசியான சாலையில். அக்கம் பக்கம் கடைகள். பக்கத்து
சந்துகளில்தான் மக்கள் வசிப்பது. நகரின் முக்கியமான சாலை என்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல். இதை தட்டச்சு செய்யும்போது கூட, ஆட்டோவில் இருந்து புஷ்பவனம் குப்புசாமி இறங்கி, பாட்டு புத்தகம் வாங்க எதிர் கடைக்கு போகிறார். ஞாயிறு மட்டும் சாலையில் ஒரு ஆளை பார்க்கமுடியாது. வெடிகுண்டுக்கு முன் எப்போதும் ஊர்வலங்கள், அது இது என்று ஜெ ஜேவென்று இருக்கும். பிறகு போலீஸ் கெடுபிடியினால் அதெல்லாம் இல்லை என்றாகிவிட்டது. தேர்தல் சமயங்கள் விதிவிலக்குகள். பெரிய பெரிய தலைவர்கள் முதல் குண்டு கல்யாணம், ஹாஜா செரீப் வரை கையெடுத்து கும்பிட்டுக்கொண்டு செல்வார்கள். பக்கத்து மைதானங்களில் பொதுக்கூட்டங்கள் நடக்கும். இப்போதெல்லாம் அந்த நேரங்களில் சீரியல்கள் பரபரப்பாக இருப்பதால் பொதுக்கூட்டங்களுக்கு ஆட்கள் வருவதில்லை. கூட்டங்களும் இல்லாமல் போய்விட்டன.
ஒருமுறை சிவாஜி எங்கள் சாலை வழியாக வேனில் பிரச்சாரம் செய்து கொண்டு வருவார் என்று அறிவிக்கப்பட்டது. அன்று ஞாயிறு. சிவாஜி என் உயிர் என்பதால் ஒரே பரபரப்பாக இருந்தேன். மதியம் சாலையில் ஈ காக்கா இல்லை. நடிகர் திலகம் வந்துகொண்டிருக்கிறார் என்று ஒரு மைக் செட் ஆட்டோ கூவிக்கொண்டு பறந்தது.
வாசலுக்கு வந்து காத்திருந்தேன். திறந்த ஜீப்பில் சிவாஜி கும்பிட்டுக்கொண்டே வந்தார். எனக்கு உடலெல்லாம் புல்லரிப்பு. பதைபதைப்புடன் கைகளை தூக்கி ஆட்டுகிறேன். துள்ளி குதிக்கிறேன். (மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் நினைவில் கொள்க)
சிவாஜி கண்டு கொள்ள வேண்டுமே. யாருமே இல்லாத சாலையில் எதையோ பார்த்து கும்பிட்டுக்கொண்டே போகிறார்.
சீ என்றாகிவிட்டது.
அடுத்த வாரம் எம்ஜியார் வருகிறார். அன்று வேலை நாள்தான். எங்கும் ஒரே பரபரப்பு. சாலையெங்கும் மக்கள் காத்திருக்கின்றனர். சந்துகள் சாலையில் சேரும் இடங்களில் பெண்கள் கூட்டம். எம்ஜியாரின் வேன் ஒரு வழியாக வந்தது. சந்து முனை பெண்கள் வரை உற்சாக ஆரவாரம் . அவர் அவர்களை பார்த்து கும்பிட்டார். கடைகளை பார்த்து கையசைத்தார். 'போய்யா, கிழவா' என்று மனதினில் திட்டிக்கொண்டு கடு கடு என்று என் வீட்டு வாசலில் நின்றிருந்த என்னை பார்த்து பெரிதாக சிரித்தார். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஆம். என்னைத்தான் இன்னும் பார்க்கிறார். அசடு வழிந்துகொண்டு இறுக்கமாக கட்டிக்கொண்டிருந்த கைகளை பிரித்து அவரை நோக்கி அசைத்தேன்.
அரை நிஜார் பருவத்தை கடந்தபோதுதான், அரசியலில் எம்ஜியாரின் வெற்றியின் ரகசியமும் சிவாஜியின் தோல்விக்கான காரணங்களும் கொஞ்சம் புரிந்தது.
ஆனாலும் சிவாஜி ரசிகன் என்ற நிலைப்பாட்டிலிருந்து நான் மாறவேயில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
இத்தனை விஷயங்கள் உள்ள நீங்கள் தான் எத்தனை எளிமையாய் இருக்கிறீர்கள்.
பதிவுகள் அனைத்தும் அருமை. I feel very proud to say that I know you.
உண்மை. தனது அன்பால் அனைவரையும் கவர்ந்தவர் எம்.ஜி.ஆர்.
ovvoru adiyum miga azhagagavum arputha magavum irukingrathu
vazhuthukal...
Kk
As smooth and proficient in your writing as in your painting. The picture presented is so clear.
சிவாஜி நடிக்க மறந்து விட்டாரோ !
நடிப்புச் சக்ரவர்த்திக்கு சினிமாவில் மட்டும்தான் நடிக்கத் தெரிந்திருக்கிறது.
சினிமாவில் மட்டுமே நடுத்தவர் சிவீாஜி.
Post a Comment