Friday, December 5, 2008

இரவிசந்திரன்


என் வாழ்க்கையில் ரொமான்சுக்கு இடம் இருந்ததில்லை. சிறு வயதிலேயே ஒரு சினிக் ஆக பரிமாணித்துவிட்டேன். எல்லாமே நண்பர்கள்தான். கல்லூரி வாழ்க்கையின்போது நண்பர் சந்திரகுமார் அவசரமாக கூப்பிட்டார்-'விஜயா பதிப்பகத்திற்க்கு இரவிச்சந்திரன் வந்திருக்கிறார். போய் பார்க்கலாம்'. இரவி அப்போது தமிழில் பரபரப்பான எழுத்தாளராக உருவாகியிருந்தார். நகைச்சுவையும், சரளமும் கலந்த எழுத்து. சுஜாதாவின் வலது கரம், நேரடி சிஷ்யன் என்றெல்லாம் பேச்சு. விஜயா பதிப்பகம் அப்போது ஒரு பலசரக்கு கடை. அண்ணாச்சி ஒரு மூலையில் புத்தகங்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தார். இரவியை சந்தித்தோம். எங்களை விட நாலைந்து வயது அதிகம். குள்ள உருவம். சுறுசுற்ப்பான பேச்சு . நட்பு பற்றிக்கொண்டது.

நானும் அவரும் மிக நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். தினமும் விசித்திர வாசகங்கள் அடங்கிய தபால் கார்டுகளை எல்லோருக்கும் அனுப்புவது அவரது வழக்கம். நினைத்தால் பெங்களூர் போவேன். மல்லேஸ்வரத்திலுள்ள அவருடைய அறையில் வாசம். சுஜாதவுடனும் நட்பு. ஒரே லூட்டிதான். ஒரு முறை ஐ.ஏ.எஸ். நுழைவுத்தேர்வு எழுத பெங்களூரை மைய்யமாக தேர்ந்தெடுத்து போனேன். தேர்வு எழுதாமல், அலுவலகத்தில் இருந்த சீனியர் எழுத்தாளர் ராஜேந்திரகுமாரையும் இழுத்துக்கொண்டு சினிமாவுக்கு போனோம். படம் முடிந்தவுடன், இருவரும் பைக்கில் சுஜாதா வீட்டுக்கு போனோம். வழியில் ஒரு சிறு விபத்து. சட்டையெல்லாம் கிழிந்து ரத்தம் ஒழுக வரும் எங்களை பார்த்து சுஜாதா குடும்பமே பதறி விட்டது.

சுவாரசியங்கள் மிகுந்தவர் இரவி. சுப்ரமணிய ராஜூ போன்றவர்களையெல்லாம் அறிமுகம் செய்து வைத்தார். எப்போதும் டை கட்டியிருப்பார் . என்ன வேலை செய்கிறர் என்று யாருக்கும் தெரியாது. தடாலடியாக யாரிடமும் பேசுவார். பயங்கரமாக புளுகுவார். ஒரு நாள் என்னை தேடி எங்கள் அலுவலகத்திற்க்கு வந்தவர், எனது சீனியரிடம் கர்நாடக முதல்வர் குண்டுராவின் பி.ஏ. வந்திருக்கிறேன், ஒரு முக்கியமான விஷயமாக ஜீவாவை பார்க்க சொல்லியிருக்கிறர் என்று அவிழ்த்துவிட, ஒரு கோஷ்டியே என்னை கோர்ட் வளாகம் முழுக்க தேடியது . எனக்கு கல்யாணமான புதிதில் ,ஒரு புதுமுக நடிகையின் புகைப்படத்தை இணைத்து எனக்கு ஒரு வாழ்த்து , அவள் எழுதியதுபோல் அனுப்பியிருந்தார். 'அடுத்த பிறவியிலாவது நம் காதல் வெல்லட்டும்', நல்ல வேளை, இவரது கையெழுத்து என் மனைவிக்கு தெரியும் என்பதால் தப்பித்தேன். இன்னும் சொல்லிக்கொண்டெ போவதற்க்கு நிறைய காமெடிகள் இருக்கின்றன.

ஒரு வழியாக, ஆந்திர பெண் ஒருவருடன் இவருக்கு திருமணம் நிச்சயமானது.மிகவும் நல்ல பெண். அதற்க்கு பிறகு இவரது வாழ்க்கையே மாறிப்போனதன் மர்மம்தான் இன்னும் புரியவில்லை. பொருளாதார நெருக்கடியா இல்லை வேறு ஏதாவதா, யாருக்கும் சொல்லவில்லை, குடிப்பழக்கம் தொற்றிக்கொண்டது. ஊரெல்லாம் கடன், நண்பர்கள் அஞ்சி ஓடினர். ஒரு மனிதன் இவ்வளவு தலைகீழாக மாற முடியுமா என்ற அளவிற்க்கு..ஒரு முறை சென்னை திரைப்படக்கல்லூரி விடுதியில், என் தம்பியை சந்திக்கப் போனவர், கடும் போதையில் நினைவிழந்து விட்டார். என்ன செஇவது என்று அறியாமல், பக்கத்தில் குடியிருந்த எங்கள் எழுத்தாள நண்பர் உஷா சுப்ரமணியத்திடம் சென்று உதவி கேட்டு, கடைசியில் மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர். ஏற்கனவே வெளியான ஒரு சிறுகதையை, மீண்டும் விகடனுக்கு அனுப்பி வைக்க அவர்களும் பிரசுரித்துவிட்டனர். விஷயம் தெரிந்தவுடன், விகடனில் இவரை கட்டம் கட்டி, மீண்டும் இவரது படைப்புகளை பிரசுரிக்கமட்டோம் என்று அறிவித்தும் விட்டனர்.

அவரை கடைசியாக பார்தது, கிழிந்த சட்டையுடன் சாராய மணத்துடன் என்னை பார்க்கவந்தபோதுதான். அவரது ஆசிரியர் கவிஞர் புவியரசுவும் நானும் பணம் கொடுத்து அனுப்பி வைத்தோம். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், கடைசியாக ஹைதராபாத் வீதியொன்றில் இரவியை பார்த்ததாக சொன்னார். பத்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. இரவிச்சந்திரன் உயிரோடு இருந்தால் எப்படியும் ஒரு முறையாவது என்னை பார்க்க வந்திருப்பார் என்பது எனது நம்பிக்கை.

July 2007

4 comments:

ramachandranusha(உஷா) said...

ரவிசந்திரன் தற்கொலை செய்துக் கொண்டார் என்பதை இணையத்தில்தான் படித்தேன்.

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள ஜீவா,

என்னுடைய வலைப்பதிவை பின்பற்றுபவர்களில் புதியதொரு எண்ணிக்கையை கண்டவுடன் 'யாராக இருக்கும்' என்று வந்தேன். (அப்பா! என்னவொரு பெருந்தன்மை).

பிறகுதான் கண்டுகொண்டேன். எண்ணமும் எழுத்தும் குழுவில் இருக்கும் ஜீவா என்று. உடனே முதலில் படித்தது, இரவிசந்திரன் பற்றிய இந்தப் பதிவைத்தான். அவரின் 'இந்திய பாஸ்போர்ட்' சிறுகதைத் தொகுதியை படித்தவுடன் அவரது எழுத்து பிடித்துப் போயிற்று. பிறகு மற்ற சிறுகதைத் தொகுதிகளையும் தேடிப் படித்தேன். இப்படி எழுதின ஆள் எங்கே போய் தொலைந்தாரென்று ரொம்ப நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த போது இணையத்தில் ஒருவர் 'அவர் தற்கொலை செய்து கொண்டார்' என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்தார். பின்பு எழுத்தாளர் சுஜாதாவை ஒரு முறை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது இதைப் பற்றி விசாரித்தேன். அவரும் இரவிசந்திரனின் மரணத்தைப் பற்றி வருத்தத்துடன் உறுதி செய்தார்.

இரவிச்சந்திரனைப் பற்றி எழுதிய பதிவுகள்:

http://pitchaipathiram.blogspot.com/2006/06/blog-post_115114878785476656.html

http://pitchaipathiram.blogspot.com/2006/06/blog-post_115114800031699473.html

மற்ற பதிவுகளையும் படித்து விட்டு பின்னர் எழுதுகிறேன். புகைப்படத்தில் இருப்பவர்களில் யார் இரவிச்சந்திரன் என்பதை தெரிவிக்கவும்.

ஜீவா ஓவியக்கூடம் said...

போட்டோவின் கடைசியில் கையை கட்டிக்கொண்டு நிற்பவர் இரவிச்சந்திரன்.

Chithran Raghunath said...

பல வருடங்களுக்கு முன் “திகைப்பூண்டு” “உதகமண்டலம்” என்ற சிறுகதைகளை எழுதிய ரவிச்சந்திரன்தான் இது என்று நினைக்கிறேன். சரியா?