Monday, March 14, 2011
'நாங்க மன்னரும் இல்லே......'
வாங்க! வாங்க !!
டீ கூட சாப்பிடலை ..அதுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் வேஸ்ட்....
அட்டடே.. வாங்க
உக்காருங்க...
எங்க...ஊருக்கா?
இல்ல...ஊரிலிருந்து வர்றேன்....
டிராவல்ஸ் பஸ்ஸா?
இல்லை...ரயிலு..!...
வீடு அதே வீடுதானே?
ஆமா..மாடிலே ஒரு வீடு அங்கே போக்கியத்துக்கு இருக்கு..அருவதாயிரம்...!
அப்படி ஒண்ணும் இல்லையே..
அந்த வீட்டுக்காரம்மா கூட தீப்புடிச்ச மாதிரி இருப்பாங்க....
ஆமா ஆமா...
முடிச்சிரலாமா?
வேண்டாங்க..எனக்கு இது போதும்..ஆயிரத்தி ஐநூறு தான் வாடகை...தனி ஆளுதான்! போதும்!
சார்...இந்த மூட்டைப்பூச்சிக்கு என்ன மருந்து சார் பெஸ்ட்? சனியன் என்ன பண்ணினாலும் போகமாட்டேங்குது..வீட்டுக்காரம்மாவுக்கு விடிய விடிய என்ன வேலைங்குறீங்க...மூட்டைபூச்சியை பிடிக்கவேண்டியது...மக்கிலே தண்ணிலே போடவேண்டியது....நமக்கு பெட்டு வாசல்லதான்...பன்னெண்டு மணியிருக்கும் ..டக்குன்னு எந்திரிச்சி பாக்குறேன்..கழுத்து பூரா மூட்டைபூச்சி...ஏன் கேக்குறீங்க...எஸ்.வி.லாண்டரிலே ஒரு மருந்து அடிச்சாராம்...அறுவது ரூவாயாம்...இன்னைக்கி வாங்கீர வேண்டியதுதான்.
எங்க சார் பில்டிங் எல்லாம் இப்ப கட்ட முடியாது போல...பத்து வருசத்துக்கு முன்னாலே நம்ம ஹோட்டல்காரர் 22 லச்சத்துக்கு வீடு கட்டுனாரு...இப்ப வாடகையே...வருசத்துக்கு 4 லச்சம் வருது....ஹூம்...!
தங்கம் பாருங்க என்ன விலை விக்குது...! நெருங்க முடியுமா? இவரு எப்படி சம்பாரிச்சாருன்னு நினைக்கிறீங்க?
எவரு?
அட அவருதாங்க.....(ஒரு கிசுகிசுப்பு)
பாம்பேக்கு போகவேண்டியது....நல்ல தண்ணியடிக்கனும்... வெள்ளை தோல்காரிங்க கூட கூத்தடிக்கணும்....சேட்டு பொம்பளைங்கள.........டாராமா!!! இங்கேயிருந்து ஒரு கோஷ்டியே கூட போகும்....எல்லாம் அழுக்குபசங்க... ஒருத்தன் பக்கத்திலே போமாட்டான்! குடும்பத்தோட அன்ரிசர்வ் பொட்டிலே வருவானுங்க...பைக்குள்ள தங்க பிஸ்கட் இருக்கும்னு ஒருத்தனுக்கும் தெரியாது. அல்வா மாதிரி பிஸ்கட் இங்க வந்திரும்....ஒரு ஐயாயிரம் கொடுத்தா ஒரு மாசத்துக்கு சந்தோசமா ஆடுவானுங்க....இப்பதான் தங்க கட்டுப்பாடே இல்லையே!!!
சார், அம்பது ரூபா சார் இப்ப, சங்கத்திலே தீர்மானம் போட்டாச்சு.. பாருங்க அட்டை கூட மாட்டியிருக்கேன்.
ஓயாத பேச்சு, சதா இயங்கும் கைகளைப் போல ! சலூன்கள்தான் எப்படிப்பட்ட உலகங்கள்! சிறுவயது முதல் எவ்வளவு தடவைகள் இங்கு விஜயம் செய்திருக்கிறோம். தகர டப்பா சலூன் முதல் ஏசி பந்தா அழகு நிலையம் வரை எவ்வளவு ரகங்கள்...! நம் நாட்டில் ஆணாய் பிறந்த எவருக்கும் மறக்க இயலா உலகம் இந்த சலூன் கடைகள்...தலையை பிடித்து அமுக்கி, வெள்ளை துணி போர்த்தி , உம்மென்று முகமெல்லாம் மயிர்த்துகள்கள் ஊறிக்கிடக்கும் சிறுவர் முகங்கள் முதல் கடு கடு வென்று பீடி நாற்றம் கமழும் முகங்கள் வரை எத்தனை முகங்களை இந்த கடைகள் பார்த்திருக்கும்! உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அலசப்படும் அரங்கம். அனல் வீசும் அரசியல் வாதப் பிரதிவாதங்களை, வரிசையில் இருந்தும் கண்டுக்கப்படாத சிறுவர்களாய் நாம் எத்தனை முறை கேட்டிருப்போம். எத்தனை லோக்கல் கிசுகிசுக்கள் அலசப்பட்டிருக்கும்! சரக்கென்று உயரும் கைகளின் நடுவே அக்குளுக்குள் கத்தி சுரண்டும்போது...இது எப்ப நமக்கு என்று ஆவென்று எங்கும் சிறுவர்கள்...!
எத்தனை விதமான கடைகள்....தரையிலிருந்து ஒரு அடி உயரத்துக்கு மேல், கள்ளிப்பெட்டியினால் உருவாக்கப்பட்ட சிங்கிள் சேர் கடைகள், இயற்கை காட்சிகள், சினிமா போஸ்டர்கள், கவர்ச்சி கன்னிகளின் படங்களுக்கு நடுவே முகம் பார்க்கும் கண்ணாடிகளும் பதிக்கப்பட்ட சுவர்கள், மட்ட ரக பவுடர்களுக்கே உரிய மணம், சலூன்களுக்கே உரிய பிரத்யேக பிராண்டு கிரீம்கள், லோஷன்கள், கத்தியை சாணை பிடிக்க தொங்கும் ஒரு பெல்ட், சடாரென்று உதறப்பட்டு கபக்கென்று போர்த்தப்படும் 'வெள்ளை' சலவை துணிகள், மயிர் துண்டுகளை சேகரிக்க மூலையில் ஒரு டப்பா, கசங்கி கிடக்கும் தினத்தந்தி தாள்கள், நாளை கிழிக்கப்பட்டு கத்தி மீது படர்ந்து கிடக்கும் சோப்பை வழிக்க பயன்படலாம் அவை...., கத்திரிக்கோல், சீப்பு, கடக் கடக் என்று தலையில் பயணம் செய்யும் கிராப் வெட்டி என்று அழியாத கோலங்கள்! இன்று காலங்கள் மாறிய பிறகும் இவையெல்லாம் இன்னும் இருக்கின்றன பெரும்பாலான கடைகளில்.! நான் போகும் கடையில் கிராப் வெட்டிக்கு மின்சார இணைப்பு ஒரு கூடுதல் வசதியாக இப்போது தென்படுகிறது.
இலக்கியங்களில் இவர்களை பற்றி ஏதேனும் குறிப்புகள் உண்டா? நாஞ்சில் நாடன், தோப்பில் முகமது மீரான், நாகராஜன் படைப்புகளில் இவர்களை சந்தித்ததுண்டு. திரைப்படங்களில் அபூர்வம். பழைய 'கடவுளை கண்டேன்' படத்தில் எம்.ஆர்.ராதா பார்பர் ஷாப்காரராக வந்து 'நாங்க மன்னரும் இல்லே, மந்திரி இல்லே, வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்,' என்று பாடலுக்கு நடித்த காட்சி இருக்கிறது. பொய்க்கால் குதிரை, வறுமையின் நிறம் சிவப்பு, கிழக்கே போகும் ரெயில், இது நம்ம ஆளு, மாயக்கண்ணாடி, குசேலன் என்று சில சித்தரிப்புக்கள் இருந்தன. மலையாளப்படங்களில் சீனிவாசன் போன்ற நடிகர்கள் பல படங்களில் இத்தகைய வேடங்களையும் சூழல்களையும் உருவாக்கியிருக்கின்றனர்.
பொருளாதார நிலைகளில் உயர்ந்திருக்கும் சலூன் கடைக்காரர்களையும் சந்தித்திருக்கிறேன். எங்கள் ஏரியாவில் பல கடைகளுக்கும் வீடுகளுக்கும் உரிமையாளர் ஒரு சலூன் அதிபர். காலையில் ஆறு மணிக்கெல்லாம் இவர் கடை திறந்து தொழில் செய்வதை பார்க்கலாம். எனக்கு ஒரு கோடீசுவரன் தான் முடி வெட்டுகிறார் என்று நண்பர்களிடம் விளையாட்டாக சொல்வதுண்டு. இன்று சலூன் கடைகள் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் தொழிற் களமல்ல. அழகு நிலையம் என்ற பெயரில் இன்று பிராமணப் பெண்கள் கூட முடி வெட்டுகின்றனர்! ஏசி வசதிகள், தலை கழுவ வாஷ் பேசின்கள் , டிரையர்கள், முடி வெட்ட ஆயிரக்கணக்கில் என்று சலூன்களில் வசதிகள் பெருகி விட்டாலும்...இன்றும் நான் எங்களது சந்தில் சின்ன கடை வைத்திருக்கும் நண்பருக்காக அவர் கடை வாசலில் காலை ஆறு மணிக்கே காத்து கிடக்கிறேன். ..சைக்கிளில் வந்து அவர் கடையை திறந்து கூட்டி பெருக்கி, இலவச டிவியையும் ஆன் பண்ணி அழைக்கிறார்...
'வாங்க'!!
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
காலத்தை நன்றாக கூர்ந்து கவனித்து வாழ்ந்தவர்களுக்கே இது போல் detail லாக எழுத முடியும் ...:)
அந்த காலத்தில் சம்மர் கிராப் என்ற பெயரில் ஒரு கருவியை வைத்து ஒவ்வொரு முடியாக பிடுங்கும்போது அழாத சிறுவர்களே இருக்க முடியாது. அப்போதெல்லாம் வாத்தியாருக்கு அடுத்தபடி பெரிய விரோதி அந்த சலூன் காரர் தான்.
ஒரு தடவை முடி வெட்டி கொண்டால் மாதம் முழுவதும் பேப்பர் இலவசமாக படிக்கலாம்.
பிடிச்சுருக்கு
அன்பின் ஜீவா
'ஓரம்போ'வை விட்டுட்டீங்களே!
மற்றபடி சுவாரசியமானதொரு நன்விடை தோய்தல்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
kadavulai kanden la nagesh and chandrababu saloon kadai vechu full atrocity pannuvaargal....andha comedykaaga padathai sagichukka vendi irundhuchu in theatre!!! m.r.radha vandhaa maadiri nybagam illa andha padathil!
சின்னப் பையன்களை உட்கார வைக்க சிறு பலகை ஒன்றிருக்கும் .சலூன் கடைக்காரர்கள் குட்டி வைத்தியர்கள் கூட.பேசிக் கொண்டே மருத்துவக் குறிப்புகளை அள்ளி வீசும் ராமச்சந்திரன் இன்னும் இருக்கிறார் இருகூரில்.'மருத்துவர்' என்ற பெயரில் அவரது மகன் ராஜேந்திரனுக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதிப் பெயர் இருந்தது.
சு.வேணுகோபாலின் "திசையெல்லாம் நெருஞ்சி' அருமையான பதிவு சார்.
வா.மு.கோமுவின் ஒரு சிறுகதையிலும் இந்தத் தொழிலாளிகளைப் பற்றிய செய்திகள் உண்டு.
(ஸ்டெப் கட்டிங் வந்த புதிதில் நம் சலூன் கடைக்கர்ரர்களை இளைஞர்கள் போட்டுப் புரட்டியது தனிக் கதையாகலாம்)avainayagan
arumai,idhai padithapin oru kuliyal poda vendum ennendral saloonil irundhu vandha oru anubavam.
Ungal varigal oru cutting ,shaving and colouring seithu porutchelavillamal vantha thripthi tharugiradhu.......
அருமை.
அதுதான் நானும்.
எந்த ஊர் சென்றாலும்
அதே பழகிய கடைகள்..
பழகிய கைகள்.
படித்தேன்.பிரமித்தேன் என்று எழுதினால் இதற்கு முன் ஜீவாவின் எழுத்தை படிக்கவே இல்லை என்று ஆகிவிடும்.....ரசித்தேன்..மிக ரசித்தேன்....இதே அனுபவம் எனக்கும் உண்டே....சின்ன கிராமத்தில் பல கடைகள் இருந்தாலும் மிகப் பொலிவுடன் காட்சி தந்தது சலூன் கடைதான்.கன்னித்தீவு படிக்க தினம் போவது அங்குதான்....மிக மிக அன்பான பேச்சை நான் கேட்டதும் சலூன்கடைகாரரிடம் தான்.....ஒரு நூல் ரெடி.....டீக்கடை அனுபவம் ஒன்றும் வரும் என எதிர் பார்க்கிறேன்.அன்புடன்....பொன்னப்பன்.ஆ 15-03-11
jeeva sir, unga punniyathila mudhal murai oru gents saloonukulla poi vandhen. naanga mannarum illai paatu varadhu hello mr. jamindar padathula.. MRR and Gemini both heroes. nalla padam.
The movie Johnny had Rajnikanth in a saloonkaarar role and Prabhu Deva comes as a hairstylist in Minsara Kanavu...Revived my memory of the various of experiences I had with saloons and hairstylists...Great writing sir...
Super. When I was a child, I would cry and refuse short hair, but my dad will make him cut short. Ore tension
Post a Comment