Friday, March 11, 2011

ஓவியம் வரைந்தால் போதுமா?


நான் முதலில் பார்த்த ஓவிய கண்காட்சி எனது பன்னிரண்டு வயதில். ஆர்.எஸ்.புரம் லேடீஸ் கிளப்பில் யூசுப் புராவும் பிரகாஷ் சந்திராவும் நடத்திய நவீன ஓவிய கண்காட்சி . என்னை விட நான்கு வயது இளைய தம்பியும் நானும் தனியாக சென்றோம். ஒரு ரூபாய் நுழைவு கட்டணம்...அது கூட கையில் இல்லை...திரு திரு என்று நின்று கொண்டிருந்த எங்களை பரிதாபமாக பார்த்த பிரகாஷ்ஜி இலவசமாக அனுமதித்தார். ஆர்வமுடன் பார்த்த எங்களிடம், எப்படி இருக்கின்றன ஓவியங்கள் என்று ஆங்கிலத்தில் வினவினார். 'ஒன்றுமே புரியவில்லை' என்று பதிலளித்த என்னை பார்த்து வெடிச்சிரிப்பு சிரித்தார்...'வயதானால் புரிந்துவிடும்' என்று சொல்லி தட்டிக் கொடுத்தார்!!!

வயதானது...புரிந்துவிட்டதா என்ன?

கல்லூரி பருவத்தில் அதே பிரகாஷ் சந்திராவும் நண்பர்களும் ஆரம்பித்த சித்ரகலா அகாடமியில் மாணவ உறுப்பினராக இணைந்தேன் . ஓரிரு வருடத்தில் செயலாளர், பின் உதவி தலைவர், பின் தலைவர் என பொறுப்புகள் என் தலையில்....அவர்தான் என் நவீன ஓவிய குருவாக திகழ போகிறார் என்று குழந்தை பருவத்தில் நிச்சயமாக நினைத்திருக்க மாட்டேன். எத்தனை எத்தனை ஓவியக்காட்சிகள்...எத்தனை ஓவியர்கள் என் வாழ்க்கை பாதையில் ! நவீன ஓவியங்கள் குறித்து பல அன்பர்கள் 'புரியவில்லை', 'ஏமாற்று வேலை' என்றெல்லாம் விமர்சிக்கும்போது எனக்கு மிகவும் கோபம் வரும். இப்போதெல்லாம் வருவதில்லை என்பது ஒரு நல்ல விஷயம்! ஏனென்றால் எனக்கும் இந்த சந்தேகங்கள் வந்துவிட்டன. ஓவியங்களை ரசிக்கும்போது நான் பார்ப்பவை ஓவியரின் உத்திகள், வண்ணங்களின் பயன்பாடு, ஓவியத்தின் உள்ளடக்கம் மட்டுமே. ஓவியங்கள் பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரு ஊடகம் என்பதில் எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு. அவனை அது தொடவில்லை என்றால் அந்த படைப்பு ஒரு தோல்வி என்றும் திடமாக எண்ணுகிறேன். சில அதி நவீன ஓவியர்களுடன் ஏற்படும் சூடான விவாதங்களில் காரசாரமாக பேசியிருக்கிறேன். ஓவியம் என்பது அவர்களின் சொந்த மன வெளிப்பாடு என்று சொல்லிக்கொண்டு கன்னா பின்னா என்று வரைந்து வைத்த ஓவியர்களிடம்..அப்ப இதை எதுக்கய்யா எங்கள் பார்வைக்கு வைக்கிறீர்கள், உங்கள் வீட்டுக்குள்ளேயே வைக்க வேண்டியதுதானே என்றெல்லாம் சண்டை போட்டிருக்கிறேன். இப்படி ஒரு சண்டையை ஆதிமூலம் அவர்களுடன் போட்டவுடன்தான் என் ஞானக்கண்ணை அவர் திறந்து வைத்தார்! பிறகு திறந்த மனதுடன் நவீன ஓவியங்களை ரசிக்க தொடங்கினேன். அவருடைய மனவெளி ஓவியங்களில் மனதை பறி கொடுத்தேன். மருதுவின் வீச்சுகள் எனக்கு வீரம் கொடுத்தன...கான்வாஸில்!
முப்பத்தி மூன்று வருடங்கள் ஓவிய கண்காட்சி அனுபவங்களுக்கு பிறகும் அரூப ஓவியங்கள் கைகூடாததில் இன்னும் வருத்தம் ஓயவில்லை!!! எது என்னை தடுக்கிறது ?

என் வளர்ப்பு முழுக்க முழுக்க சினிமா பேனர் பின்னணியில். என் தந்தை முறையாக ஓவியம் படித்ததுபோல் நான் பயிலவில்லை.புகைப்படத்தை போல தத்ரூபமாக ஓவியமும் திகழவேண்டும் என்ற பாரம்பரிய மன ஓட்டமே என்னையும் நடத்தி சென்றது. உருவங்களை சிதைத்து புதிய பாணியை உருவாக்கிய பிக்காசோவுக்கு இளமைக்காலம் இப்படித்தானே! பணிக்கர் முதல்வரான பிறகுதானே, சென்னை ஓவியக்கல்லூரியிலிருந்து இத்தகைய கலைஞர்கள் உருவானார்கள்! பிரகாஷ் சந்திரா போன்ற கலைஞர்களின் தொடர்பு என்னை மனமாற்றத்திற்கு உள்ளாக்கியது! சினிமா பேனர்களில் புதிய உத்திகளை கையாள தொடங்கினேன், என் தந்தையின் எதிர்ப்பை மீறி....புது வண்ண க்கலவைகள், பாரம்பரிய வண்ண பூச்சுகளில் மாற்றம் என்று உருவாக்கியபோது அதற்கும் ரசிகர்கள் உருவானார்கள். வேறு வழியில்லை...தந்தை பச்சை கொடி காட்டினார்! ஓவியக் கண்காட்சிகளிலும் முயற்சித்தேன்....முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்!!!

ஓவிய காட்சிகளில் பல வகையான ஓவியங்களை பார்க்கிறேன். என் நண்பர் நெடுஞ்செழியன் எப்போதுமே பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுபவர். உத்திகளில் எப்போதும் அதீத ஈடுபாடு. அசுர உழைப்பாளி. முன்னாள் சென்னை ஓவிய கல்லூரி முதல்வர் பாஸ்கரன் பூனைகளை அதிகம் வரைந்தால் இப்போதைய கும்பகோணம் ஓவியக்கல்லூரி முதல்வர் மனோகரனின் ஓவியங்களில் வித விதமான உயிர்ப்புள்ள ஆடுகள் அதிகமாக மேயும் . ரஞ்சித் துணிகளின் சுருக்கத்தில் ஆழ்ந்து விடுவார். சந்தான கிருஷ்ணனுக்கு கதவுகளின் மீது காதல் . புகைப்படங்கள் எடுத்து அதை அப்படியே தத்ரூபமாக வரைவது இளையராஜா போன்ற இளைய ஓவியர்களின் உத்தி! இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்!!!! தாந்திரீக ஓவியங்கள் என்று ஒரு சப்ஜெக்டை எடுத்து கொண்டு அதில் மிதப்பவர்கள் ஒரு வகையினர். தஞ்சாவூர் ஓவியர்கள், கண்ணாடி ஓவியர்கள், மண்கூஜா ஓவியர்களை எல்லாம் நான் இதில் சேர்க்கவில்லை!!!
Installations என்று ஒரு வகை...ஓவிய அறையின் ஒரு பகுதியை தரை முதல் குறிப்பிட்ட அளவு வரை பொருட்களை வைத்து நிறைக்கும் ஒரு கலை என்று நான் சொன்னால் கொச்சையாக இருக்கும். ஒரு முறை ஒரு ஓவியர் தரையில் பெரிய கான்வாசை விரித்து வைத்து அதில் குழைய குழைய விலை உயர்ந்த வண்ணங்களை பூசி அதன் மேல் உள்ளாடை மட்டும் அணிந்து யோகாசன முத்திரைகள் புரிந்தார்..கான்வாஸின் மீது அவர் கரங்கள், கால்கள், புட்டங்கள் பதிந்த பகுதிகள் ஓவியமாக வெளிப்பட்டன! Newsprint காகிதத்தின் மீது கரியையும் எஞ்சின் ஆயிலையும் குழைத்து பூசி விவான் சுந்தரம் வைத்திருந்த ஓவிய கண்காட்சியையும் பார்த்திருக்கிறேன். நடிகர் சிவகுமார், பழநிசாமியாக இருந்தபோது ஸ்தலத்திலேயே போய் அமர்ந்து வரைந்த ஓவியங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

வடக்கிலிருந்தும் நிறைய ஓவியர்களின் கண்காட்சிகள் இப்போதெல்லாம் காணக்கிடைக்கின்றன. ஓவியங்களை காட்சிக்கு வைப்பதே ஒரு பெரும் வியாபார உத்தியாக கையாண்டு வெற்றி காண்பவர்கள் இருக்கின்றனர். எங்களை போன்றவர்களின் ஓவியங்கள் அதிக பட்சமாக பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கும் . கஸ்தூரி சீனிவாசன் ஓவிய காலரி போன்ற சேவை மனப்பான்மை மிக்கவர்கள் இருப்பதாலேயே எங்களால் ஓவியங்களை காட்சிக்கு வைக்க முடிகிறது. ஆனால் சென்னை போன்ற நகரங்களில் இன்று தனியார் அரங்கங்கள் இரண்டு வாரத்திற்கு ஒன்றரை லட்சம் அளவிற்கு வாடகையே கொடுக்க வேண்டும் என்ற நிலை. அப்போது ஓவியங்களையும் அதிக விலைக்கு விற்க வேண்டும். உடனே வாங்கி விடுவார்களா என்ன? விலை உயர்ந்த அழைப்பிதழ்கள், காக்டெயில் பார்ட்டிகள், ஓவியரின் இமேஜை உயர்த்தும் உடை அலங்காரங்கள், ஆங்கில பத்திரிக்கை பேட்டிகள், விமர்சனங்கள் என்று பல சாமக்கிரியைகள் உண்டு. நல்ல ஓவியர்களுக்கே இந்த நிலை என்றால் அரை வேக்காடு ஆசாமிகள் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்..வடக்கு ஓவியர்களின் ஓவியங்கள் பிரம்மாண்டமான அளவில் பெரும்பாலும் வருகின்றன. பல சமயங்களில் தரமும் இருப்பதில்லை . விலையும் லட்சங்களில் ஓடும். அப்படிஎன்றால் யார்தான் இவற்றை விலைக்கு வாங்குகிறார்கள்?

Buyers அனைவரும் ஓவிய ரசனை மிக்கவர்களா? நிச்சயம் சில சதவிகிதத்தினர் உள்ளனர். அவர்கள் ஓவியங்கள் சில ஆயிரங்களில் கிடைத்தால், நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கும், சொந்த உபயோகத்திற்கும் , தங்கள் நிறுவனங்கள் சார்ந்த கட்டிடங்களில் வைப்பதற்கும் வாங்குவார்கள். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குபவர்கள் யார்? ஓவியங்களை முதலீடாக கருதுபவர்கள்…..
இன்று வாங்கி நாலு வருடம் கழித்து விற்றால் பல மடங்கு போகும் என்று கருதும் வியாபாரிகள். ஒரு உசைன் ஓவியத்தையோ, ஒரு ஆதிமூலம் ஓவியத்தையோ இப்படி வாங்கினால் ஒரு நியாயம் இருக்கும்...ஆனால் இன்று மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து ஓவியர்களின் படைப்புக்களையும் இப்படி விற்க முடியுமா?
பெரும்பாலும் தரமற்ற ஓவியங்களும் இத்தகைய காட்சிகளில் வைக்கிறார்கள். நான் சமீபத்தில் பார்த்த ஒன்றில் குறைந்த விலையே 75,000ல் ஆரம்பித்து ஐந்தரை லட்சம் வரை விலையிட்டு இருக்கிறார்கள். யானையை குருடர்கள் கண்டது போல ரசிப்பவர்களும் உண்டு. நிர்வாணமாக போன அரசனின் இல்லாத உடையை ரசித்தவர்கள் போல இத்தகைய ஓவியங்களை ரசித்து பாராட்டினால்தான் நமக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று பாராட்டி மகிழ்பவர்களும் உண்டு. இத்தகைய களேபரங்களில் ஒரு சில போலி ஓவியர்கள் சத்தமில்லாமல் வறிய ஓவியர்களிடமிருந்து ஓவியங்களை வாங்கி, அதில் தங்கள் கையெழுத்தும் இட்டு காட்சிக்கும் வைத்து விலைக்கும் வைக்கிறார்கள்...புத்திசாலிகள்!
இனி உங்கள் ஏரியாவில் ஓவிய கண்காட்சி நடந்தால் தவறாது சென்று வாருங்கள் நண்பர்களே, குறைந்த விலைக்கு கிடைத்தால் கட்டாயம் ஒரு ஓவியமாவது வாங்கி வையுங்கள்!!!! யார் கண்டது, ஒரு நாள் அது அதிக விலைக்கு போகலாம்!

15 comments:

ஓவியன் said...

நல்ல பதிவு. நானும் எவ்வளவு புரிந்து ரசித்தேன் என்பது தெரியவில்லை..ஹாஹா.ஹா!

Vijay said...

மிகவும் அருமையான பதிவு. ஓவியக் கலை இன்று வளர்ந்து வரும் கலை என்றாலும் பள்ளிகளில் இதன் போதனை மிகக் குறைவு. இதனை சரிசெய்ய தங்கள் குழு நடத்தும் முகாம் போற்றத்தக்கது.

ஒரே ஒரு கருத்துதான் - பெரும்பாலும் நமது ஓவியர்கள் ( தென்னகத்து ) வரையும் படங்களின் அளவு சிறியதாகவே உள்ளது. மேலும் பல கண்காட்சிகளில் மேற்கத்திய ஓவியங்களின் சாயல் மற்றும் நகல் போலவே உள்ளது அவர்களது பாணி. ஆரம்ப நிலையில் அவற்றை பாற்று கற்றுக்கொள்ளும் முறை சரி என்றாலும் போக போக நமக்கென ஒரு தனி பாணி மற்றும் நமது ஊரில் இருக்கும் விடயங்களை வரையும் தைரியம் வர வேண்டும். அப்படி இந்த வருடம் தாங்கள் நடத்திய ஓவியக்கண்காட்சியில் பல தமிழ் நட்டு "subjects" இருந்ததை கண்டு ஆனந்தம் அடைந்தேன்

மேலும் தொடருங்கள்
விஜய்

kaanchan said...

”ஓவியங்கள் பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரு ஊடகம் என்பதில் எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு. அவனை அது தொடவில்லை என்றால் அந்த படைப்பு ஒரு தோல்வி என்றும் திடமாக எண்ணுகிறேன்”
..............
அருமையான பதிவுகள் , வருங்கால ஓவியர்களுக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கும்.
“வாழ்த்துக்கள்” ......

KING HOPES said...

Good one jeeva sir. My first art exhibition was the one you conducted last. Nice experience, looking for more from you.

Ahila said...

உண்மையிலேயே அருமையான பதிவு. நானும் பார்த்துவிட்டு வந்ததனால் சொல்கிறேன். 'அஜந்தா ஆர்ட்' என்று ஒன்றை ஒன்றரை லட்ச ரூபாய்க்கு விலை பேசிவிட்டதாக சொன்னார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஜீவா அவர்கள் கூறியது போல இந்த மாதிரி கலையை புரிந்து கொள்ள நமக்கு வயது போதவில்லையா, இல்லையென்றால் அறிவு வளரவில்லையா. தெரியவில்லை...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிக அருமை ஜீவா.. :))

Natarajan said...

ஜீவா,
நல்ல பதிவு.. உங்களை முதன் முதலில் நேரில் சந்தித்தது ஒரு ஓவிய கண்காட்சியில்தான் என்பது நினைவுக்கு வருகிறது. உங்களுக்கேப் புரியாத வகையில் ஓவியங்கள் இருந்தன என்பது ஆச்சரியப்பட வைக்கும் புதிய தகவல்.
ஓவிய கண்காட்சி கூடங்கள் எனக்கு பிடித்த இடம் ... எல்லாமே புரியணும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் போக வேண்டும்... கண்டிப்பாக எதிர்பாராத அதிசயங்கள் கண்படும் .. சக பார்வையாளர்களின் மதீப்பிடு.. எல்லாம் ரசிக்கும்படி இருக்கும். வாழும் சூழலில் அழகான ஓவியங்கள் இருப்பது மனதிற்கு சுகம் அழிப்பது... பிடித்த புத்தகங்களை சேர்ப்பது போல்! வரும் காலத்தில் பண ஆதாயம் இருக்கும் என்று ஓவியங்களை வாங்குவது என்றால் ஓவியங்களைப் பற்றியும் ஓவியர்களைப் பற்றியும் மதீப்பிடு செய்யத்தக்க நுண்ணறிவு வேண்டும்!

ந. சந்திரக்குமார், சிகாகோ.

Natarajan said...

ஜீவா,
நல்ல பதிவு.. உங்களை முதன் முதலில் நேரில் சந்தித்தது ஒரு ஓவிய கண்காட்சியில்தான் என்பது நினைவுக்கு வருகிறது. உங்களுக்கேப் புரியாத வகையில் ஓவியங்கள் இருந்தன என்பது ஆச்சரியப்பட வைக்கும் புதிய தகவல்.
ஓவிய கண்காட்சி கூடங்கள் எனக்கு பிடித்த இடம் ... எல்லாமே புரியணும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் போக வேண்டும்... கண்டிப்பாக எதிர்பாராத அதிசயங்கள் கண்படும் .. சக பார்வையாளர்களின் மதீப்பிடு.. எல்லாம் ரசிக்கும்படி இருக்கும். வாழும் சூழலில் அழகான ஓவியங்கள் இருப்பது மனதிற்கு சுகம் அழிப்பது... பிடித்த புத்தகங்களை சேர்ப்பது போல்! வரும் காலத்தில் பண ஆதாயம் இருக்கும் என்று ஓவியங்களை வாங்குவது என்றால் ஓவியங்களைப் பற்றியும் ஓவியர்களைப் பற்றியும் மதீப்பிடு செய்யத்தக்க நுண்ணறிவு வேண்டும்!

ந. சந்திரக்குமார், சிகாகோ.

chandra said...

arumai jeeva

தமிழ்ப்பறவை said...

ஜீவா சார். நல்ல பதிவு...சுருக்கமாக, அதே நேரம் அழகாகச் சொல்லிவிட்டீர்கள். ஒரு சொற்பொழிவு கேட்ட உணர்வு. எனது படங்களுக்கு உங்கள் ‘லைக்’ எனக்கு மேலும் ஊக்கமூட்டுகிறது. (முகநூலில் ‘பரணிராஜன்’)

Danny said...

Nice post sir...I thought only cinema was in trouble with the entry of commercial films. The art scenario isn't much different. At least in movies we can go by the word of good reviewers, but in art the buyer goes only by his or her own instincts; this can lead up to untalented artists becoming superstars and the deserving ones left in darkness.

Jayaprakashvel said...

Welcome back sir after a long gap.
I was thinking to talk to ilaiyaraja for his painting that i have seen in Ananda vikatan. They were really like photographs.

As u said in news papers i see many painting exhibitions at some art galleries like hues, jahanghir. I was also wondering that time who will buy it nu. But i never dared to visit a exhibition
Sure hereafter i must see one. Thanks

sumathi narasimhan said...

good one sir, liked the final punch... certain details that you have given are really shocking and enlightening ... a good read...

Vasu Raghav said...

உங்களுடைய கொஞ்சும் தமிழ், தேர்ந்த நடன அழகியின் எழில் அசைவுகளைப்போன்ற எழுத்துக்களின் நளினம், அனுபவங்களின் பதிவு, நேருக்கு நேர் பேசுவதுபோன்ற நட்பான அன்னியோன்யம், வளைந்து நெளிந்து ஓடும் அமைதியான நதியைப்போன்ற நடை இவை அனைத்தும் இரண்டு ஜீவாக்களிடையே ஒரு பெரும் போட்டியை ஏற்படுத்துகின்றன. படிப்பவரின் மனதில் எழுத்தாளர் ஜீவாவா அல்லது ஓவியர் ஜீவாவா, யார் சிறந்தவர் என்ற குழப்பத்தை உண்டாக்குகின்றன.

Artist ANIKARTICK said...

Very interesting Jeeva...And I also copy and post this nice article in my blog...please visit here : anikartick.blogspot.com and I hope you give permission for it...If you don't like this Sure I will remove it...Thanks a lot and keep rock Jeeva...Regards..Artist Anikartick,Chennai