Sunday, March 20, 2011

நினைவிருக்கிறதா, அவசர நிலையை?

முப்பது வருடங்களுக்கு மேலாயிற்று...அந்த கொடிய காலங்களின் ஆட்டங்கள் நிகழ்ந்து!!!
அப்போது நான் மாணவன் . திடீரென்று அந்த செய்தி வந்தது. 'அவசர நிலை பிரகடனம்'....! அப்படி என்றால் என்னவென்பதே பலருக்கு தெரியாது. இதற்கு முன் ஒரு போரின்போது இது அறிவிக்கப்பட்டதாக சிலர் சொன்னார்கள். தேர்தல் முறைகேடுகளால், இந்திராகாந்தி பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை , நாட்டுக்கே ஆபத்து என்று திரித்து, அவசர நிலை பிரகடனம் செய்தார் அம்மையார்! அப்போதைய ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியான பக்ருதீன் அலி அகமது இந்த சட்டத்தையும், பின்னால் வந்த பல அவசர சட்டங்களுக்கும் மறுப்பேதும் சொல்லாமல் கையெழுத்து போட்டு தள்ளிக்கொண்டிருந்தார்! என்ன ஏது என்று புரிவதற்குள் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டனர். ஆயிரக் கணக்கான தொண்டர்களும் சிறையில்.. பலர் தலைமறைவானார்கள்! அப்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி. காங்கிரசுக்கு எதிரான நிலை. தலைவர்கள் பலர் தமிழகத்தில் தலைமறைவாக தஞ்சம் புகுந்தனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் கோவை பேரூரில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்தார் என்றெல்லாம் நண்பர்கள் சொன்னார்கள்! போராட்டங்கள் தடை செய்யப்பட்டன. வீராதி வீர சூராதி சூர தொழிற்சங்க தலைவர்கள் எல்லோரும் கப்சிப். நேரத்துக்கு ரயில்கள் ஓடின...காலை பத்து மணிக்கெல்லாம் அவரவர் சீட்டில் அரசு ஊழியர்கள் பவ்யமாக அமர்ந்தனர்! யாரை வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உதைக்கலாம், கைது செய்யலாம், சித்ரவதை செய்யலாம், கொலை கூட செய்யலாம் என்ற நிலை உருவானது. அடக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்பட்டன. எதிர்த்து குரல் கொடுத்த பெரும் தலைவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபளானி, மொரார்ஜி, சரண்சிங் போன்ற தலைவர்கள் எந்த காரணமும் இன்றி கைது செய்யப்பட்டனர். பல அமைப்புக்கள் தடை செய்யப்பட்டன. ஆர்.எஸ் .எஸ். இவற்றில் ஒன்று. சில கட்சிகள் எதிர்த்து குரல் கொடுத்தன..மார்க்சிஸ்ட் கட்சியும் திமுகவினரும் இதில் அடங்குவர். இவர்களின் தலைவர்களும் தொழிற்சங்க வாதிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்களை முடக்கிய சட்டமான 'மிசா'வையே பலர் பின்னாளில் பட்டமாக அணிந்து கொண்டனர்.

இந்த கொடிய அடக்குமுறைக்கு ஒரு பட்டுக்குஞ்சலம் கட்டினர் இந்திரா காந்தியும் அவருடைய ஆலோசகர்களும்...இருபதம்ச திட்டம் என்ற பெயரில்! நாட்டு நலனுக்கு என்று இருபது திட்டங்களை அறிவித்து இருபத்தி நாலு மணிநேரமும் இதன் பஜனை பாடினார்கள். ‘Be Indian, Buy Indian’ என்பது இதில் ஒன்று. இதன்படி அந்நிய பொருட்களுக்கு தடை என்ற வதந்தி கிளம்பியது. அப்போது கடத்தல் என்பது பெரும் தொழில் அல்லவா! அந்நிய வாட்சுகள், அந்நிய டேப் ரிக்கார்டர்கள் என்று இந்தியாவுக்கு கடத்தப்பட்ட பொருட்கள்தான் பரவலாக நம் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த செய்தி கேட்டதும் அனைவரும் இவற்றை வீட்டுக்குள் மறைத்து வைத்த காமெடிகளும் நடந்தன. திடீரென்று ஒரு வதந்தி கிளம்பும்...'மேம்பாலத்துல கஸ்டம்ஸ் செக்கிங் பண்ணி பாரீன் வாட்சுகளை பிடிக்கிறாங்களாம்' என்று...அவ்வளவுதான்...அனைவரும் தத்தமது சீக்கோ, ரீக்கோ வாட்சுகளை உள்ளாடைக்குள் மறைத்து வைக்காத குறையாய் ஒளித்து வைத்து நடமாடுவார்கள்!

கோமாளி இளவரசனைப் போல் சஞ்சய் காந்தியின் கொடூரங்கள் பிரபலமாயின. குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை பலவந்தமாக குடிசைவாசிகள் மீது பிரயோகப்படுத்தினார். தில்லியை அழகுபடுத்துகிறேன் பேர்வழி என்று துர்க்மான் கேட் குடிசைகள் மீது புல்டோசர்களை ஏவினார். அவசர நிலையை கேலி செய்து எடுக்கப்பட்ட 'கிச்சா குர்சி கா' படத்தின் நெகடிவ்களை கைப்பற்றி கொளுத்தினார். காங்கிரஸ்காரர்களின் அட்டகாசம் அதிகரித்தது...தங்களுக்கு வேண்டாதவர்களை உள்ளே தூக்கி போட அவசர நிலை அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக ஆயிற்று! கல்லூரி விடுதிகளுக்குள்ளும் காவல் துறை நுழைந்தது. புரட்சிகர சிந்தனை மிக்க மாணவர்கள் இழுத்து செல்லப்பட்டனர்.கேரளத்தில் ராஜன் என்ற மாணவன் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று வரை அவன் உடலுக்கு என்ன ஆயிற்று என்ற தகவல் இல்லை. எதிர்ப்பு குரல் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் காவல் நிலையங்களில் தொங்க விடப்பட்டு உதைக்கப்பட்டனர்..உருளைக்கட்டை சிகிச்சைகள் செய்யப்பட்டு நடக்க முடியாதவர்கள் ஆனவர் பலர். இயல்பாகவே ஆதரவுக்குரல் கொடுப்பவர்களும் உருவாயினர். 'இந்திராதான் இந்தியா' என்ற டி.கே.பருவாவின் புகழ் பெற்ற ஜால்ரா வார்த்தையை சிரமேற்க்கொண்டு தமிழகத்தில் இலக்கியங்கள் உருவாகின. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட இந்திராவின் மக்கள் தொடர்பாளராகவே மாறி, இந்தோ சோவியத் கழகம் சார்பில் பல கருத்தரங்கங்கள் நடத்தியது. இன்றும் நினைவிருக்கிறது...முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு இருபதம்ச திட்டத்தின் புகழ் பாடும்போது சொன்ன வரி...காஷ்மீர் ஆப்பிளை இங்கே இருப்பவனும் வாங்கி திங்க பயன்படுகிறது இந்த திட்டம் என்று. ஒரு இழவும் புரியவில்லை அப்போதும் இப்போதும்! வினோபா பாவே, அன்னை தெரசா, குஷ்வந்த் சிங் போன்றவர்கள் பகிரங்கமாக அவசர நிலையை ஆதரித்தனர் என்று சொல்வார்கள். எம்.எப்.உசைன் என்ற ஓவியரின் அடிவருடித்தனம் உச்சமானது. அவர் இந்திராவை ஒரு துர்கையாக சித்தரித்து ஒரு மாபெரும் ஓவியத்தை காட்சிக்கு வைத்தார்.

பத்திரிக்கை தணிக்கை அப்போது கொடி கட்டி பறந்தது. ஹிந்து போன்ற பத்திரிகைகள் கப்சிப் ஆயின. எதிர்ப்புக்குரல் இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக் போன்ற பத்திரிகைகளில் இருந்து மட்டும் வந்தன. அதிகாரிகளுக்கு ஒரு செய்தி பிடிக்கவில்லை என்றால் நீக்கப்பட்ட பின்புதான் அச்சுக்கு போயின. அப்போதைய பத்திரிகைகளில் பல பத்திகள் காலியாகவும் வெள்ளையாகவும் இருப்பதை பார்க்கலாம். துக்ளக்குக்கு பயங்கர டிமாண்டு, பல பக்கங்கள் வெள்ளையாய் இருந்தும்! ஒரு இதழில் எம்ஜியார் நடித்த 'சர்வாதிகாரி' படத்தின் வசனங்களை பல பக்கங்களுக்கு அச்சடித்திருந்தார் சோ! வானொலியை திருப்பினால் எப்போதும் 'இருபதம்ச திட்டம்...ஆஹா...இது இந்திராவின் சட்டம்...ஓஹோ' என்ற கண்றாவி பாட்டை கேட்க வேண்டியது தலைவிதியானது! திரைப்படத் தணிக்கைகளும் தடைகளும் இன்னும் பிரபலம். குடிப்பது போன்ற காட்சிகளும், வன்முறைச்சண்டைகளும் கத்திரிக்கு பலியாயின. அரசை விமர்சிப்பது போல காட்சிகள் வந்தால் அம்போதான்! திரைப்பட பிரபலங்களை பந்தாடினர் அதிகாரிகளும் மந்திரிகளும்.

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி ஒரு நாள் பிரகடனப்படுத்தப்பட்டது! பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின், முரசொலி மாறன் போன்றவர்கள் உள்ளே! மக்கள் மத்தியில் குமுறல்கள் உருவாகத் தொடங்கின. நான் அப்போது சென்னை மாநிலக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். சிறையில் சிட்டிபாபு அடித்து கொல்லப்பட்டார் என்று தகவல் பரவியது. அவரது உடல் திருவல்லிக்கேணியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு குழுமிய மக்களின் உணர்வுகள் இன்றும் பசுமையாக மனதில் பதிந்திருக்கிறது!
சிறைக் கொடுமைகள் பற்றிய பல தகவல்கள் பரவின. அதே நேரத்தில் முரசொலி அடியார் போன்ற சிலர் சிறை ஒரு உல்லாசக்கூடம் என்பது போன்ற தகவல்களையும் பரப்பினர். ஜால்ரா அடித்துக்கொண்டிருந்த பொதுவுடமைக்கட்சியில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் வரத்தொடங்கின. அதில் முக்கியமானவரான ராஜேஸ்வர ராவுக்கு மாநிலக்கல்லூரி மாணவர்கள் சார்பாக நாங்கள் மாலை அணிவித்தோம். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரவேண்டுமல்லவா. 1977ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை கண்டது. இந்திரா, சஞ்சய் போன்றவர்கள் கூட அவர்கள் தொகுதியில் தோற்றனர்! மக்களும் சகஜ நிலைக்கு திரும்பினர்!

அப்போது ஒரு நாள் ஜனாதிபதி இறந்ததால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒரு மனிதரின் மறைவுக்கு மாணவர்கள் மத்தியில் அப்படி ஒரு மகிழ்ச்சி ஆரவாரம் எழும்பியதை நான் பிறகெப்போதும் கண்டதில்லை!

20 comments:

mohamed rafi said...
This comment has been removed by the author.
MUTHU MOORTHY said...

Sir.. Very very nice article. Very useful to me and youngsters like me. We are not aware of those things. Please post more articles like this. So, we could know about the past of our country. Please don't stop posting. I could come to know all the hell things happened in Indian political history. Thank you very much sir... :)

Natarajan said...

Jeeva,

Those were the most turbulent times of India...the period showed what an illiterate leadership filled with arrogance can do to a young democracy. It was a nightmare and vividly remeber the happenings. The opposition was so feeble but the silent anger amongst people took care of it when it came to polls and re-directed the course of history in the correct way. If MISA(Maintenance of Internal Security Act) wasn't imposed in 1975, the historical course of India would have been totally different. Ms. Gandhi might still be alive.

Uday Shankar said...

Dear Jeeva,

For India those were the Dark Dreaded Days of Democracy. The emergency mornings had us all exposed to blank spaces in newspapers. Press freedom was snatched away. I was in BHU doing my graduation. I still vividly remember the day when Kallu, the hostel sweeper, got the scissors on his vas deferens when he went for his hydrocele operation. It was a blotch on the freedom of the country which was got with lots of sacrifice.

For me it was a shock as I had completed reading Ayn Rand’s Fountainhead just one year before emergency was clamped. My friend David had motivated me to read it. As an undergraduate student the book left behind in me an indelible grasp of what was individual freedom and the goodness of free thinking. My outlook of democracy changed with the reading of her rest of her books. The emergency came as a rude shock for me within a year of reading Ayn Rand. During the Dark days, Indian Express stood like the Rock of Gibraltar unfazed and Ramnath Goenka has to be remembered for his stiff fight. Jayaprakash Narayan emerged from the rubbles of the shattered freedom during the emergency and became an icon in no time. I still remember reading his tabloid ‘Everymans’.

Thanks for giving me a chance to go back in history.

P.Uday Shankar

Salem New Modern film makers said...

நிறைய பேருக்கு நெருக்கடி நிலை பற்றி தெரியாது. நீங்கள் எழுதியிருப்பது , அக்கொடூரத்தை தெளிவாக புரிய வைக்கிறது. நன்றி ஜீவா சார்.

Danny said...

Informative sir...

பாலா.R said...

ஜீவா சார்,
மேலே இருக்கிற படத்தில் அந்த ரெண்டாவது 'கார்டூன்' ரெம்ப பேமஸ்.

J.S.Anarkali said...

தங்களது பதிவு அருமை.. கோவையில் அவசரநிலை இன் பொது இருந்த சுழலைப் பற்றி தங்கள் எழுதிருக்கலாம்.. வானம்பாடி இயக்கத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்பு அந்த காலத்தில் எப்படி இருந்தது என்று தங்கள் பார்வையில் அறிய விரும்புகிறேன். அது என்னும் பல அறிய செய்திகளை தரும் என நம்புகிறேன்.

அனார்கலி ஜே. எஸ்

கார்த்திக் said...

Dear Sir,
I am Karthikeyan from Pudukkottai. Friend of your FB friend Chandramohan. I like the article.

பாரதசாரி said...

அருமையான பகிர்வுக்கு முதற்கண் நன்றி. கொஞ்சம் இடைவெளி அதிகமாகிவிட்டதோ? விரைவில் ஔத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.

சிவகுமாரன் said...

நினைவு படுத்தியதற்கு நன்றி, இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது. அப்பது எனக்கு 10 வயது. என் சித்தப்பா தி.மு.க காரர். இரவோடு இரவாக அள்ளிக் கொண்டு போனார்கள். என் சித்தப்பா பிள்ளைகள் சித்தி இவர்களின் கதறல்கள் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது.

அடி வாங்கிய திமுகவினரே பின்னர் " நேருவின் மகளே வருக , "நிலையான ஆட்சி தருக" என்று துதி பாடினர்.

உலக சினிமா ரசிகன் said...

மிசாவில் வங்கிய அடியை வெகு சுலபமாக திமுக மறந்தது....மறைத்தது.

துக்ளக் அன்று துணிந்து பணியாற்றியது.அந்த சோ இன்று எங்கே?

ஜீவா சார்...இன்றுதான் உங்கள் வலைப்பக்கத்துக்கு வந்தேன்.
ஜூலை 4ம்தேதி உங்களுக்கு நடக்கும் பாராட்டு விழாவுக்கு
வந்து பெருமை சேர்த்து கொள்கிறேன்.

பாலகிருஷ்ணன் said...

emergency நாட்களில் நான் பல்லடத்தில் பணிபுரிந்தேன். அப்போது ஆபிஸ்க்கு 'கட்' அடித்து 'ரெயின்போ' தியேட்டரில் படம் பார்த்தது நினைவுக்கு வந்தது.

idleman said...

அருமையான பதிவு ஜீவா சார்!!

Shanmugam Balamurugan said...

ஒரு நல்ல பதிவு. இந்திராகாந்தியின் மிசா நெருக்கடி நிலையின் கொடூரங்களை நினைவு கொள்வது. எதிர் காலத்தில் அது போன்ற ஒரு பாதிப்புக்கு எதிரான சனநாயக கடமையாற்ற உதவும்.சிறப்பு.

pvr said...

அப்போது திரு. மு.க. அண்ணா சாலையில் பஸ்களை நிறுத்தி, எமெர்ஜென்சிக்கெதிரான துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தார் என்று கேள்விப்பட்டு, அவருடைய துணிச்சலில் வியந்து, அவருடைய வீட்டுக்குப் போனேன். இப்ப நாம் பார்க்கும் கருணாநிதி வேறு ஒருவர்...

ஜீவா சார், நீங்கள் அருமையாக பதிவு செய்து விட்டீர்கள். ஒரு பெரிய தொடராகவே நீங்கள் எழுதலாம்.

Vellupillai said...

பல அதிகாரிகள் தங்களின் சுய வெறுப்பு,விருப்பங்களைத் நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி,,,தணித்துக் கொண்டனர் ? என்பது உண்மை !
இந்திராவுக்கு,,பல பாடங்களைக் கற்றுக் கொடுத்ததும்,,,அந்த நெருக்கடி நிலைதான்,,
அந்த நிலையினை சொன்ன விதம் அழகு ! ஜீவாண்ணா

jagannathan rangan said...

Nice article jeeva. I Was doing my SSLC that time. I knew some of my classmates father attached with Dmk suffered a lot. Nightmares

Subasree Mohan said...

Very informative.

Subasree Mohan said...

Very informative.