Tuesday, May 5, 2009
கோவை கபே
தேன் மிட்டாய்தான் நான் ரசித்து உண்ட முதல் இனிப்பு என்று நினைக்கிறேன். கெட்டியாக இருப்பது போன்ற பாவனையுடன் உள்ள தோலைக்கடித்தால் உள்ளே ஜிவ்வென்று பாயும் இனிப்புப்பாகு. இப்போதும் எங்காவது கிடைக்கலாம். ஆனால் அதே ருசி இருக்காது என்று அதன் மீதே சத்தியம் செய்வேன்.
ஒவ்வொரு பள்ளியின் வாசலிலும் இரண்டொரு கிழவிகள் சாக்கை விரித்து, அதன் மீது இலந்தைபழம், இலந்தைவடை என்று அழைக்கப்படும் இடித்து குழைந்த இலங்தையையும் கமர்கட் போன்ற பல்வேறு மிட்டாய்களையும் விற்பார்கள். மாங்காய் பத்தை , பேரிக்காய், ப்ளம்ஸ், சீசனுக்கு தகுந்தாற்போல் கிடைக்கும். நெல்லிக்காய், சில சமயங்களில் சாயமும் சேர்த்து கிடைக்கும். முனிசிபல் பள்ளியாயிருந்தாலும் கான்வென்டாக இருந்தாலும் இது ஒரு பொதுவான காட்சி. நான் கான்வெண்டிலிருந்து கிக்கானி பள்ளிக்கு இடம் பெயர்ந்தபோது புதுப்புது காட்சிகள். கோன் ஐஸ்க்ரீமையே அப்போதுதான் பார்க்கிறேன். அதுவரை கோன் என்பது அட்டையினால் தயாரிக்கப்பட்டது என்றே நினைத்திருந்தேன். எங்கும் கிடைக்காது என்று சொல்லப்பட்ட கணக்கு புத்தகம் வாங்க என் தந்தை தந்த காசு முழுவதும், ஸ்கூல் பின் கதவு அருகில் மதிய இடைவேளையில் கோன் ஐஸாக கரைந்தது. சின்ன வயதில் எங்கள் ஊருக்கு சென்றபோது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த கோவில் பணியாளர்கள் வாங்கி வந்த உண்ட கட்டியை சாப்பிடவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து சாப்பிட்டிருக்கிறேன். கோவில் மடப்பள்ளியில் சமைக்கப்பட்ட இந்த சோறுதான் கோவிலின் கடைநிலை ஊழியர்களான துப்புரவாளர்கள் , வாத்தியம் இசைப்பவர்கள் முதல் அர்ச்சகர்கள் வரை உணவாக திகழும். சில அறிவிலிகள் பிராமணர்களை 'உண்ட கட்டி' என்று அழைக்கும்போது சிரித்துக்கொள்வேன். எந்த கோவிலுக்கு போனாலும் முதலில் பிரசாதக்கடைக்குத்தான் விஜயம். திருப்பதிக்கு போகாவிட்டாலும் சென்று வந்த யாரிடமும் சிறிதும் வெட்கமில்லாமல் லட்டு பிரசாதத்தை கேட்டு வாங்கி தின்பது இன்றும் என் வழக்கம்.
பள்ளி இருந்த இடத்தின் அருகே காமராஜபுரம் என்று ஒரு குடியிருப்பு. பெரும்பாலும் நகரசுத்தி தொழிலாளர்கள் வாழும் பகுதி. பிளாட்பாரத்தில் பெரிய தட்டுக்களில் வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு பாளம் பாளமாக கடும் மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும். எங்கள் வீட்டிலும் மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் இந்த நிறத்தில் அல்ல. மிளகாயும் உப்பும் கலந்து அரைத்த துவையலை, அல்லது மிளகாய்ப்பொடி எண்ணையை தொட்டு வெள்ளை நிறத்தில் தொண்டைக்குள் வெண்ணையை போல் வழுக்கிச்செல்லும். பள்ளியின் வாசலில் எப்போதும் பதநீர் வாரியத்தின் மூன்று சக்கர வண்டி நிற்கும். சில்லென்ற பதநீர் அற்புதமாக இருக்கும்.
வீட்டு வாசல் தேடி வரும் வியாபாரிகள்தான் எத்தனை வகை. ஒரு சதுர கண்ணாடி டப்பாவில் ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய்களை அடுக்கிக்கொண்டு மணியடித்து விற்கும் வியாபாரிகள், பப்ஸ், பப்ஸ் வேஜிடேபில் பப்ஸ் என்று கூவி வருபவர்கள், வடை போண்டா, முறுக்கு வியாபாரிகள், சின்ன சின்ன கலர் உருண்டைகளை தட்டில் வைத்து, லாடு, லாடு, ரவா லாடு என்று அலறுபவர்கள், ஒரு நீள மூங்கில் கழியில் ஜவ்வு மிட்டாயை சுற்றிக்கொண்டு அதன் உச்சியில் கையில் ஜால்ராவை தட்டும் பெண் பொம்மையுடன் வரும் ஜவ்வு மிட்டாய் வியாபாரிகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதுவும் இந்த ஜவ்வு மிட்டாய் வியாபாரிகள் , குழந்தைகள் கைகளில் கடிகாரம், காதுகளில் ஜிமிக்கி என்று அந்த மிட்டாயினாலேயே செய்து கொடுத்துவிடுவார்கள். வண்டியில் சோன் பப்டி வியாபாரம் செய்யும் சிலர், கூடவே ஜவ்வு மிட்டாயையும் கலந்து ஒரு இனிப்பு செய்து கொடுப்பார்கள், அடடா! அமிர்தம்!
ஐஸ் என்றாலே குச்சி ஐஸ்தான். தகரப்பெட்டி போன்ற வண்டியிலும், சைக்கிள் கேரியரிலும் இதன் விற்பனை அமோகமாக இருக்கும். சேமியா ஐஸ், பால் ஐஸ், திராட்சை ஐஸ் என்று பல ருசிகள். பின்னர்தான் ஐஸ்க்ரீம் குச்சி வடிவத்திலும் வந்தன. சாலையில் நிறைய சர்பத் வண்டிகளை பார்க்கலாம். கலர் கலரான திரவங்களை கலந்து சர்பத்கள் கிடைக்கும். மரம் இழைக்கும் உளியைக்கொண்டு ஐஸ் கட்டிகளை இழைத்து குச்சியில் சுற்றி கலர் திரவங்களை தெளித்து கொடுத்தால் பசங்க உறி உறி என்று உறிவார்கள். அதே ஐஸ் துண்டுகளில் மோரீஸ் வாழைபழங்களை அரிந்து போட்டு பழம் போட்ட ஐஸ் என்று ஒரு அலுமினிய கரண்டியையும் போட்டு தருவார்கள். கோவை ஸ்வாமி தியேட்டர் வாசலில்தான் இது பிரசித்தி பெற்றது. இன்று அந்த தியேட்டர் இருந்த இடத்தில் ரத்னா ரெசிடென்சி என்ற ஸ்டார் ஓட்டலும் , வலையப்பட்டி என்ற உயர்தர உணவு விடுதியும் இருக்கின்றன. சர்பத் வண்டிகளின் வடிவம் சிறிது சிறிதாக மாறத்தொடங்கியது. ஒரு பெரிய எவர்சில்வர் அண்டாவில் ஆரஞ்சு சாறு , வண்ணங்கள், ஐஸ் கட்டிகளை கலக்கி வைத்திருப்பார்கள். சர்பத் கேட்பவர்களுக்கு பெரிய டம்ப்ளர்களில் ஊற்றி தருவார்கள். ரோஸ் மில்க் கேட்பவர்களுக்கு அலுமினிய கேன்களில் இருந்து பாலை ஊற்றி, ரோஸ் எசென்சையும் கலந்தால், ரெடி. இந்த வண்டிகளில் சினிமா நடிகர் நடிகைகளின் உருவங்களை பெரிதாக வரைந்து வைத்திருப்பார்கள்.
தியேட்டர் கான்டீன்கள் ஒரு தனி உலகம். இன்றும் சென்ட்ரல் தியேட்டர் கீரைவடையையும் காப்பியையும் பற்றி பேசாத பெருசுகள் அபூர்வம். அவ்வளவு ருசி, பின்னே இங்கு இருந்து தானே அன்னபூர்ணா ஓட்டல்கள் கிளை விரித்ததே. நான் பள்ளி மாணவனாக இருக்கும்போது, பக்கத்தில் இருந்த சென்ட்ரல் தியேட்டரில் , ஜாபர் என்ற புகழ் பெற்ற ஐஸ்க்ரீம் கடை இருந்தது. ஆங்கில படங்கள் மட்டும் திரையிட்ட ரெயின்போ தியேட்டர் காப்பியும் பப்சும் விலை குறைந்தவை, பேராசை அற்றவர்கள் ! ட்ரிங் என்று சோடா கலர் பாட்டில்கள் மீது ஒப்பனர் எழுப்பும் சத்தமும், அஸ்கா பர்பி, தேங்கா பிஸ்கட், தட்ட முறுக்கேய், என்ற ஒலிகளும் தியேட்டர்களுக்கே உரியவை. இதில் தேங்காய் பிஸ்கட் என்பது தேங்காய்க்கே சம்பந்தமில்லாத மைதா, கரும்புச்சர்க்கரை கலவையில் செய்யப்படும் தட்டையான பிஸ்கட். இந்திய சீட்டாவை போல் அழிந்து போன இனங்களில் இதுவும் ஒன்று. ஸ்ரீபதி தியேட்டர் முட்டை போண்டா இன்னொரு புகழ் பெற்ற ஐட்டம். இதன் தயாரிப்பாளரான முத்து, ஸ்ரீபதி முத்து என்றே புகழ் பெற்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
வீதிகளில் இனிப்பு கார வண்டிகள் அதிகமாக காணப்படும். இப்போதைய கார்ப்பரேஷன் கட்டிடத்திற்கு அருகில் பழைய மார்க்கெட் இருந்தது. உள்ளே மீன், பழைய புத்தகங்கள் மார்க்கெட் இருந்தது. வெளியில் சில மலையாள முஸ்லீம்கள் பாலக்காடு அல்வாவை கண்ணாடி வண்டிகளில் வைத்து விற்பார்கள். பெரும் பாளமாக கருஞ்சிவப்பு நிறத்தில் அல்வா கெட்டியாக இருக்கும். சில சிறு வண்ண வித்தியாசத்துடன் தேங்காய் எண்ணை மணம் வீசும் வேறு அல்வாக்களும் பக்கத்தில் இருக்கும். நேந்திரங்காய் சிப்ஸ் அப்போது அங்கு மட்டும்தான் கிடைக்கும். இன்று ஐந்து முக்கில் மட்டும் ஒவ்வொரு முக்கு மூலையிலும் ஒரு கடை, பிரம்மாண்ட அடுப்பில் சிப்ஸ்களை வறுத்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பாய் இரவு நேரத்தில் தன் வண்டியில் அல்வாவும், தேங்காய் பர்பியும் மட்டும் விற்றுக்கொண்டு வருவார். அவர் எப்படா வருவார் என்று ஒரு கோஷ்டியே காத்துக்கொண்டிருக்கும். இஸ்லாமியர் தெருக்களில் காலை நேரத்திலேயே சிலர் வண்டிகளில் வைத்து பாயசம் விற்றுக்கொண்டு வருவார்கள். இந்த வீதிக்கு குடி வந்த புதிதில், ஏக்கத்துடன் இந்த பாயசம் குடிப்பவர்களை பார்த்துக்கொண்டிருப்பேன்.
இப்போது தமிழ்நாட்டின் பொது உணவாக கருதப்படும் பரோட்டா, அப்போது சில இஸ்லாமியர் கடைகளில் மட்டும் கிடைக்கும். சில மத்திய தர வர்க்கத்தினர் அதை சாப்பிடுவதையே கேவலமாக நினைப்பார்கள். எங்கள் வீட்டருகே இருந்த மொம்மது டீ கடையில், சில நாட்களில் காலை டிபன் தயாராகவில்லை என்றால் என் தந்தை பரோட்டா சால்னாவை வாங்கி , மதிய உணவுக்கும் கட்டி கொடுத்துவிடுவார். அந்த கோதுமை பரோட்டாவின் பழுப்பு நிறமும் மொறுமொறுப்பும் மீண்டும் வரமுடியாதவை. எங்கள் பள்ளி, குஜராத்தியரும் பிராமணர்களும் அதிகமாக பயின்ற இடம். மதிய வேளைகளில் நான் பரோட்டாவுடன் இருந்தால் அது அவர்களுக்கெல்லாம் ஒரு அதிசயம். சிலருக்கு பொறாமையும் கூட.
பலகார வண்டிகள் என்றால் உடனே நினைவுக்கு வருவது, ராஜ வீதி, பெரிய கடை வீதி மற்றும் வைசியாள் வீதி. இன்று வண்டிகள் குறைந்தாலும் இங்கு சாப்பிடுபவர்கள் குறையவேயில்லை. கோமுட்டி செட்டியார்கள் இதில் கில்லாடிகள். டைம் டேபிள் வைத்து சாப்பிடுவார்கள். தயிர் வடை, பப்பு ரோட்டா, கரம் மற்றும் கரம் பொரிகள், கச கசா அல்வா, பலாப்பழ அல்வா, புலுசு அடை, ஜவ்வரிசி போண்டா, பணியாரம், இந்த கால பர்கருக்கு தாத்தாவான அந்த காலத்து மசாலா பன், தட்ட முறுக்கு சாண்ட்விச் ,பூசணி விதை பர்பி, கோதி அல்வா, தட்டை முறுக்கு, பால்கோவா , சீம்பால், என்று செம கட்டு கட்டுவார்கள். இரவு நேரங்களில் தேங்காய் பருத்தி பால் என்று ஒரு பானத்தை வண்டியில் வைத்து விற்று வருவார்கள். எங்க ஊர் வெந்தயக்காடி ருசியில் இருக்கும். ஒரு பெரிய பயில்வானின் படத்தை வரைந்து சகல மாலை மரியாதைகளுடன், பீம புஷ்டி அல்வாவை சில மதுரை பார்ட்டிகள் வண்டியில் வைத்து விற்று வருவார்கள். ஒரு அரை கிலோ சாப்பிட்டால் பயில்வான் ஆகி விடலாம் அல்லது பேதியில் போய்விடலாம். சுண்டல் வண்டிகளும், வேக வைத்த, மற்றும் வறுத்த கடலை வண்டிகளும் பிரசித்தம். தினம் ஒரு ஐட்டத்தை தன் பெட்டியில் 'இன்றைய ஸ்பெஷல்' என்று சைக்கிளில் விற்கும் ஒருவரை இந்த பகுதியில் பார்த்திருக்கிறேன்.பாணி பூரியை பிரபலமாக்கியது கூட இங்கிருந்த கந்தசாமி கடைதான். இன்று பரோட்டாவை போல் அதுவும் ஒரு தேசிய பலகாரம். எங்கெங்கு நோக்கினும் ஆண்களும் பெண்களும் பேல்பூரியையும் கட்லேட்டையும் பானிபூரியையும் சரமாரியாக விழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். கோவையை போல் வேறு எங்கும் இப்படி இருப்பதாக தெரியவில்லை. ஒரு முறை கடலூரில் என் நண்பர்களை சந்தித்தபோது தெரிந்த விவரம், அவர்கள் ஒவ்வொரு முறையும் பொருட்காட்சியை எதிர்பார்த்து இருப்பார்களாம். அப்போதுதான் பாணி பூரியை சாப்பிட முடியுமாம். அடப்பாவமே, எங்க ஊருக்கு வாங்கையா, டீக்கடையை கூட பல லட்சத்துக்கு இன்டீரியர் டெகரேட் செய்து வைத்திருப்பார்கள் என்பேன். வெளியூர் போனால் அங்குள்ள சிறப்பு ஐட்டங்கள் என்ன என்று தேடுவதுண்டு. நாஞ்சில் நாடன் மணிவிழாவுக்கு எங்கள் ஊரான நாகர்கோவிலுக்கு போயிருந்தபோது, நண்பர்களுக்கு முந்திரிக்கொத்தும் , வெள்ளை நிற சிலேப்பியும், மட்டிப்பழமும் , நொங்கு சர்பத்தும் அறிமுகப்படுத்தினேன். திருநெல்வேலி அல்வா இல்லாமலா? சென்னையில் படித்த காலங்களில் ரத்னா கபேயின் இட்லி சாம்பாரிலும் ரசமலாயிலும் , எங்கும் கிடைத்த லஸ்ஸியிலும் மூழ்கிக்கிடந்தேன். கேரளா போனால் கறிமீன் எங்கே கிடைக்கும் என்று அலைவேன்.
மலையாளிகள் அதிகமாக இருப்பதால், பழ பஜ்ஜி, அவல் பொறி, குழாய்புட்டு, ஆப்பம் போன்ற வகைகள் அவர்களுடைய டீக்கடைகளிலும் சின்ன ஓட்டல்களிலும் கிடைத்தன. இப்போது அப்படிப்பட்ட ஓட்டல்கள் இருக்கின்றனவா என்றே தெரியவில்லை. இப்போது மைசூர் பாகில் கின்னஸ் ரிக்கார்ட் ஏற்படுத்தியிருக்கும் கிருஷ்ணா ஸ்வீட்சில் அப்போது சுடச்சுட கிடைக்கும் கிச்சடியும், காராபூந்தி போட்ட தயிர்வடையும் பயங்கர புகழ் பெற்றவை. சென்ட்ரல் பிரியாணியும், ஈரானி ஓட்டலும், பழைய பெங்களூர் பிரியாணி ஓட்டலும், விச்வனாதைய்யர் மிட்டாய் கடையும் மித்ர சமாஜும் பழைய நினைவுகள் மட்டுமே. எங்கள் வீதியில் கிடைக்கும் கறிவடையும் , மட்டன் பப்சும் ரம்ஜான் ஸ்பெஷல் என்று வருடம் ஒரு மாதத்திற்கு மட்டுமே கிடைக்கிறது.
கிருஷ்ண விலாசின் பாதாம் அல்வாவும், லக்கி கபேயின் சமோசாவும் டீயும், அதன் புகழ் பெற்ற சப்ளையர் கன்னத்தில் ஸ்பைடர்மேன் போல் விழாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் பென்சிலும் நீங்காத நினைவுகள்.
பழைய தின்பண்டங்கள் அதே இடங்களில் இன்றும் கிடைக்கின்றனவா?
பாம்பே ஆனந்த பவனில் இன்னும் அதே சோன் பப்டி கிடைக்கிறது.
அங்கண்ணன் கடையில் இன்னும் பிரியாணி கிடைக்கிறது.
ஆதித்தன் கடையில் கச கசா அல்வாவும், ஒய் எம் சி எ பக்கத்தில் வாழைப்பழ பஜ்ஜியும் , முரளி ரெஸ்டாரன்ட்டில் சப்பாத்தி சிக்கனும் , ரங்கே கவுடர் வீதி பெரியவர் கடையிலும் ஐந்து முக்கு காவேரி ஐசிலும் அதே ருசியுடன் சோடா சர்பத் கிடைக்கிறது. ரயில் நிலையத்திற்கு எதிரில், சற்று இடம் மாறிய நிலையில் இன்னும் தேவி ஓட்டலில் மங்களூர் பாணி பரோட்டாவும், சிக்கன் கறியும் கிடைக்கிறது. ஸ்டேன்ஸ் பள்ளி அருகில் இருந்த சாலையில் பிளாட்பார டீக்கடையாயிருந்த பர்மா பாய் கடை, இன்று பல கிளைகளுடன் விரிந்து நிற்கிறது. சுப்பு மெஸ் அதே பொலிவுடன் நடைபெறுகிறது. எழுவதுக்கும் அதிகமான ஆண்டுகளை கடந்தும் ராயல் இந்து ரெஸ்டாரன்ட் அப்படியே இருக்கிறது.
இன்னொரு புறம் பீட்சா பர்கர் கடைகளும், அதி நவீன அலங்கார ஓட்டல்களும் , ஐஸ்க்ரீம் பார்லர்களும் தினமும் இந்த வளரும் நகரத்தில் தோன்றிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆட்கள் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
Jeeva Sir,
Really wonderful to read. I can imagine how things could have been wonderful those days. Really our kids miss those tasty stuffs. I am feeling guilty that we have not taken any step to provide them the real taste of our tradition.
Anbu Nanbar Jeeva avargaluku,
iniya pazhya ninaivugalai meendum asaipoda vaitha ungalukku en manamarnth nandri. Nam palli vasalil kidaithathu pondra thuruvia ice inippu R.S.Puram Petrol Bunk arugil kidaikirathu.
Anbudan
Gopalakrishnan.P
அய்யோ சாப்பாட்டு ராமா... (நானும் ராமிதான்)
நானும் தேன்மிட்டாய் ரசிகை. இன்னமும் எங்கே பார்த்தாலும் கூச்சமே இன்றி கை நிறைய வாங்கி விடுவேன்
மற்றபடி பாணி பூரியை பொறுத்தவரை காந்திபுரம் பத்தாவது தெருவில் டிம்பிள் ட்ரெஸ்ஸெஸ் முன்பாக ஒரு குஜ்ஜு அட்டகாசமான பேல்பூரி தயாரித்து தருவர். ஒரு காலத்தில் அங்கே மட்டுமே என் டின்னர் இருத்தது.
மற்றபடி இன்றுவரை அங்கண்ணன் பிரியாணி ஈர்க்கவேயில்லை.
பழைய ருசியை இழந்த்து விட்டது அன்னபூர்ண இட்லி சாம்பார் மற்றும் மசாலா தோசை.
கிராஸ் கட் ரோடில் சம்புர்னா என்ற ஒரு ஹோட்டல் அசைவம அட அடா. ஒரு ட்ரிப் அடிக்கணும் கோயமுத்துருக்கு. அதனுடைய பில் உங்களுக்கும்
அருமையான நினைவுப் பெட்டகம். மேலும் சேர்க்க சில: பேக்கரிகளின் பன் -பட்டர்-ஜாம், சால்ட் பிஸ்கட், ஊட்டி வர்க்கி; தலைமை அஞ்சலகம் அருகே வரிசையாக பலகாரக்கடைகளின் பழ பஜ்ஜி, மெது பக்கோடா, A1 சிப்ப்ஸின் சன்னமான நேந்திரன், பலாப்பழ சிப்ஸ் வகைகள்.
20 வருடங்களுக்கு முன்னெல்லாம் ரோட்டோரம் தரையில் உட்கார்ந்து செய்யும் இட்லி+ஆப்பம் கடைகளில் சாப்பிட்டிருக்கிறீர்களா?
ஆனாலும் தேன் மிட்டாய்... தேனேதான்.
தலைவரே! காலையில வந்தவுடனே ஊர் ஞாபகத்தை கொண்டு வந்திட்டீங்களே! ஆர்.கே. பானிபூரி முதலாளியின் மகள் என் க்ளாஸ்மேட்! நீங்க சொன்ன பல விஷயங்கள் இன்றும் நீங்கா நினைவுதான்! அடுத்தமுறை கோயம்புத்தூர் வரும்போது நிச்சயம் தங்களை சந்திக்க வேண்டும்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
நிஜமாகவே வாழ்ந்திருக்கிறீர்கள் ஜீவா சார். கோவையை கரைத்துக் ’குடித்திருக்கிறீர்கள்’. நல்ல பதிவு.
கொஞ்சநாள் முன்பு நான் எழுதினது இது: http://inru.wordpress.com/2009/02/02/candies/
hello jeeva excellent
I think you forgot coconut balls and puffs at chinthamani canteen
Regards
Ramki
அன்புள்ள ஜீவா
இந்த இடுகையினை பிரிண்ட் எடுத்துக்கொண்டு வீட்டில் பெற்றோரிடம் வாசித்துக் காட்டினேன் (இருவரும் கிட்டத்தட்ட 40 வருடங்கள் கோவையில் வாழ்ந்தவர்கள்!) இதில் கிட்டத்தட்ட பாதிக்கடைகள் அவர்களுக்குத் தெரிந்திருந்தது (ஒவ்வொரு கடைப் பெயரையும் வாசிக்கும்போது அவர்கள் கண்களில் கண்களில் மின்னிய பிரகாசம்..!) அதிலும் எங்கப்பாவிற்கு ஒன்றிரண்டைத் தவிர அனைத்துக் கடைகளுமே ஞாபகம் இருந்தது! அவர்கள் ஒரு சுவாரசியமானதொரு தகவல் சொன்னார்கள் - நாங்கள் கோவை சிவானந்தா காலனியில் பதினெட்டு வருடங்கள் குடியிருந்தோம்! (84-2002) எங்கள் வீட்டருகில் 'மிலிட்டரி மாமா' என்ற தண்டபாணி மாமா இருந்தார். அவரின் மகன் சாமிநாதன் என்கிற சந்துருவின் நண்பர் திரு என்பவருக்குச் சொந்தமானதுதான் 'கிருஷ்ண விலாஸ்' என்பது! (ஆர்.எஸ்.புரம் ப்ரியா குஞ்சு கல்யாண மண்டபத்தில் நடந்த இவரது திருமணத்திற்கு நாங்கள் சென்றிருக்கிறோம்!) நல்லதொரு நினைவுக் 'கோவை'! தொடரும் உங்கள் எழுத்துக்களைக் காண மகிழ்ச்சியாயுள்ளது! நிச்சயம் தொடர்ந்து எழுதுங்கள்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
தேங்காய் பிஸ்கட்-இன் தற்போதைய அவதாரம் 'Nice Time' (Britannia) or Nice (True) :-) ... இன்றும் CIT / பீளமேடு ஏரியா bakery-களில் முந்தைய தேங்காய் பிஸ்கட் கிடைக்கும் என்று நினைக்கிறேன் .. ? :-)
நன்றி நண்பர்களே, குறிப்பாக வெங்கட்ரமணன் அவர்களுக்கு.
உங்கள் நினைவு பதிவுகள் மிக அருமை. கோவைவாசிகளை பின்னோக்கி இழுத்துச் சென்றது. பல விஷயங்கள் நான் என் தந்தை மற்றும் சகோதரிகள் மூலம் கேள்வி பட்டது பல நானே ருசித்து பார்த்து. பல வருடங்கள் முன்பு என் மாமி ஹைதராபாதிலிருந்து வந்தவர் கூறியது நினவு வந்தது " உங்க கோயமுத்தூர்ல யாரும் வீட்ல சமைக்க மாட்டீங்களா? எல்லா ஹோட்டல், கடைகளிலேயும் இவ்வளவு கூட்டம் " . உங்க நடையில் சில இடங்களில் சுஜாதா எட்டி பார்கிராறே!. கோபு சார் , ஆர. எச் . புறத்தில் எந்த பெட்ரோல் பங்க் என சொல்லவும் தயவு செய்து. பம்பாய் மிட்டாய், சோன் பப்டி , நினைவுகளில் மட்டுமே உள்ளன . கே.கே. புதூர் மணி கடை பேல் பூரி இன்னம் வாரம் ஒரு முறையாவது உண்டு. சொன்னர்ப்போல அன்னபூர்ணா போர் அடிக்கிறது, மைசூர்பாக் திகட்டுகிறது, ஏ ௧ சிப்ஸ் கடை, பல வருடங்கள் முன்பு காலனியில் இப்போ உள்ள கடைக்கு எதிரே மிக சிறிய கடையாக இருந்தது. அப்பவே ரொம்ப பிரபலம். ஆனா நேந்தரம் சிப்ஸ் மட்டும் அதே ருசி , அதே மெல்லிசு, இன்று வரை. நன்றி ஜீவா சார்,
Narration Can't be better than this! Uncle I am really wondering one thing here, How can you remember all these things!!
ஜீவா சார். ஊரைப்பத்தி நீங்க சொல்லியிருக்கும் இடங்களை விடவும், பள்ளி, அருகில் தரையில் விரிக்கப்பட்டிருக்கும் கடைகள்...அங்கே சீசனுக்கு ஏற்றாற்போல் அலங்கரிக்கும் மிட்டாய்... அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க.
padichathe athelam saptamathiri iruku sir,gr8
அடடா.....கொசுவத்தி சுத்த விட்டுடீங்க பாசு.......
நீங்க சொல்லி இருக்கற சில இடங்கள்ல இன்னும் சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்கிறேன் :)
சாப்பாடு விசயத்தை இவ்வளவு விலாவாரியாக, அதே சமயம், மிக மிக நேர்த்தியாக எழுத முடியும் என்று நிரூபித்ததற்கு பாராட்டுகள் :-)
பழைய நினைவுகளை (முக்கியமாக பள்ளி சார்ந்த) அசை போட வாய்ப்பளித்ததற்கு நன்றி, நண்பரே. (சென்னை) திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப் பள்ளியில் படித்தேன்.
நான் கோவை ஜிசிடி கல்லூரியில் (82-86) படித்ததால், நீங்கள் குறிப்பிட்ட அயிட்டங்களில் சிலவற்றை ருசித்ததுண்டு !
திருவல்லிக்கேணி ரத்னா கபேயைத் தான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன் ? அந்த "உலகப் புகழ்" சாம்பார் இன்றும் அதே ருசியில் கிடைக்கிறது. ஆனால், ஒரு பிளேட் இட்லி சாம்பார் 18 ரூபாய்.
அன்புடன்
பாலா
http://balaji_ammu.blogspot.com
ஓவியர் ஜீவா,
என்னுடைய நண்பரின் பரிந்துரையின் பேரில் உங்களை நான் 'சுவாரஸ்யப் பதிவராக' எனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். அதைக்காண இங்கு செல்லவும்:
http://thittivaasal.blogspot.com/2009/07/blog-post.html
நன்றிகள் பல...
கிருஷ்ண பிரபு, சென்னை.
அருமையான நினைவுப் பெட்டகம். பழைய நினைவுகளை அசை போட வாய்ப்பளித்ததற்கு நன்றி, நண்பரே.
//ஆங்கில படங்கள் மட்டும் திரையிட்ட ரெயின்போ தியேட்டர் காப்பியும் பப்சும் விலை குறைந்தவை, பேராசை அற்றவர்கள்//
ஜீவா உங்களுக்கு இவ்வளவு அருமையா எழுதக்கூடதெரியுமா ??
வொண்டர்புல்
//தேன் மிட்டாய்தான் நான் ரசித்து உண்ட முதல் இனிப்பு என்று நினைக்கிறேன். கெட்டியாக இருப்பது போன்ற பாவனையுடன் உள்ள தோலைக்கடித்தால் உள்ளே ஜிவ்வென்று பாயும் இனிப்புப்பாகு//
சின்னப்பிள்ளையா இருக்கும் போது இது எல்லாம் ஸ்கூல் கிட்ட விக்கும்
ஆனா வாங்கி சாப்பிட்டதேயில்லை
ஜீவாஅப்பா அம்மா வாங்க அனுமதித்ததேயில்லை ஆனால் தோழி ஒருமுறை வாங்கிக் கொடுத்தாள்
அருமையாய் இருக்கும் ஆண்பிள்ளைகள் என்றால் எல்லாமே அனுபவிக்க உரிமை பெற்றவர்கள் என நினைத்த காலம் ஒன்று உண்டு
அட கடவுளே கோவையின் இன்ச் பை இன்ச் சுற்றி அனுபவித்துச் சாப்பிட்டு இருக்கிறீர்களே ஜீவா கொடுத்து வைத்த ஆள்தான் என் கணவர் கோவையிலேபடித்து வளர்ந்தவ்ர் உங்கள் இந்த இஷுவைப் படித்துவிட்டால் எடு கோவைக்கு ஒரு டிக்கெட்டுன்னு கிளம்பிடுவார்
Super post... Missing CBE :'(
நள்ளிரவு வண்டியில் விற்று வரும் குல்பி ஐஸ் ....மறக்க முடியுமா !
Dear Jeevanandam,
I am just reminded of my olden days at Coimbatore 1962 to 1981. Mishtan at Raja Street, Jaya Vilas at Subramania Mudaliar street ( now Dr Anjeneyalu of Maruthi Hospitals ) Ideal Cafe, DB Road KR Bakery at DB Road, Hotel Aroma at Lawly Road Corner etc
I have visited all these places in Coimbatore recently in Jan 2011
Memorable and unforgettable days
Rajagopal
aaha apdiye oru roundu poi ellathaiyum sapdanum pola irukku..!!!
Jeeva Sir,you brought back my childhood memories..i have also taken a printout for my family and friends...would be wonderful if you could get this published in THE HINDU with an english translation..to know how great was Coimbatore in the culinary world.Fondly remember the JAFFARCO SPECIAL ice cream from Jafars, Parottas from Devi,kutchi ice from Bala(near Stanes gate...now ice kachang at Residency), stick jow from Stanes canteen, then muttais (which my daughter still loves and we have to hunt for them) biriyani from BBH, JUKE BOX FROM lUCKY cAFE,SWEET AND SOUR FROM RAINBOW cHINESE),FALOODA from Annapooorna, paper roast from Gowri Shanker,pop corn at Central theatre, 10ps state ice cream...the list is endless...thank you sir
இப்படி ஒரு பகர்வை நான் வேறெங்கையும் படிச்சதில்லை...சூப்பர்..!!!
சுக்ரவார் பேட்டை ஏரியாவில் பெண்மணிகள் தங்கள் சிறிய இல்லத்தின் முன் இரவு வேளைகளில் தயாரிக்கும் சட்டி புட்டு( பெரிய இட்லி ),இனிப்பு ஆப்பம்,தொட்டு கொள்ள
கத்திரிக்கா,தேங்காய் சட்னி பெரிய மர தட்டில் வைத்து கொடுப்பார்கள் ,காசும் அதே தட்டில் தான் வைத்து வாங்கி கொள்வார்கள் ;அந்த சுவை;இன்று அந்த இடங்களில் அந்த சுவைக்காக அலைவது உண்டு ;சாம்பார் வந்து கத்தரிக்கா சட்னியை அழித்து விட்டது .
Post a Comment