அறிவியல் வளர்ந்தாலும் வளர்ந்தது, மூட நம்பிக்கையையும் உரம் போட்டு வளர்க்கின்றனர் சில அறிவியலாளர்கள். தமிழ் டிவி சேனல்களை சொல்கிறேன். எப்பொழுது திரும்பினாலும் திரைப்படம் மற்றும் சீரியல்கள் போக, ஒன்று ரிக்கார்ட் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கின்றனர் அல்லது குரல் வளப்போட்டி நடந்துகொண்டிருக்கின்றது. நீதிபதிகளாக நடிகைகளும் பாடகர்களும் தங்கள் கருத்துக்களை அள்ளி விட்டுக்கொண்டிருக்கின்றனர். கெமிஸ்ட்ரி என்னும் அறிவியல் சொல் அடிக்கடி இங்கு இடம் பெறுகிறது. மற்றபடி பார்த்தால், ஜோதிடர்களும் வைத்தியர்களும் தூள் கிளப்பிக்கொண்டிருக்கின்றனர். பெரிய சேனல்கள் போக, லோக்கல் சேனல்களும் இவர்களை நம்பியே வாழ்கின்றன. எனக்கு இத்தகைய நிகழ்ச்சிகள் மிகவும் பிடிக்கும். கூசாமல் அள்ளி விடும் பொய்கள்தான் எத்தனை இனிமையாக இருக்கின்றன. இவர்கள் பெரும்பாலும் பெயருக்கு முன்னாள் Er. என்று வேறு போட்டுக்கொள்வது விசேஷம். பொறியாளர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டமே வராது போலிருக்கிறது.
ஒரு என்ஜினீயர் ஜோதிடர் கீச்சுக்குரலில் கத்தும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. மழுமழு என்று ஷேவ் செய்த முகம். வழக்கம் போல ஒரு அழகான இளம்பெண். பிரச்சினைகளை முகத்தில் தேக்கிக்கொண்டு கஸ்டமர். மனித உரிமைகள் குறித்த ஒரு மாத இதழ் நடத்துகின்றாராம்.ஒண்ணும் போணியாவதில்லையாம். கீச்சுக்குரல் அலறுகிறது -'நீங்கள் வார இதழின் இடது மேல் மூலையில் ஒரு சரஸ்வதி படம் போடணும். வீணை வாசிக்கிற சரஸ்வதி. ஒரு நீளமான ஓவல் ,புளூ கலரில் இருக்கவேண்டும் , அதுக்குள்ளே இந்த சரஸ்வதி இருக்கவேண்டும். இதை மட்டும் போடுங்க, எங்கேயோ போய் விடுவீங்க...' கஸ்டமர் பாதி தெளிந்துவிடுகிறார். 'சரிங்க, ஒரு அமவுண்ட் சென்னையிலிருந்து வரவேண்டும்...அதுக்கு...' என்று ஒரு கொக்கியை போடுகிறார். 'அட, எல்லாமே சரியாப்போயிடும் என்று சொல்றேன்..., அந்த பணமும் வந்து விடும்...'இதை விட என்ன வேண்டும்? இவர் அடிக்கடி காம்பியர் பெண்ணிடம் ஜோக்கும் அடிப்பார். அவர்களும் லிப்ஸ்டிக் கலையாமல் சிரிப்பார்கள்.
ஒரு தம்பதி இதில் புகழ் பெற்றவர்கள். கணவர் யூல் பிரின்னர் போல் மொட்டை அடித்துக்கொண்டு கோட் அணிந்து கொண்டு எனர்ஜி மருத்துவம் செய்வார். ஒரு அலுமிநியபெட்டியில் பழைய ஜேம்ஸ் பாண்டு காலத்திய உபகரணங்களை வைத்துக்கொண்டு எனர்ஜி ட்ரீட்மென்ட் கொடுப்பார். ஹார்ட் அட்டாக்கால் துடிக்கும் பூவிலங்கு மோகன் அப்படியே ரிவர்சில் குணமடைந்து சிரிக்கும் அந்த விளம்பரம் நினைவிருக்கிறதா?
இவர் மனைவி ஒரு பெயர் மாற்ற நிபுணர். பீல்ட் அவுட் ஆன ஒரு நடிகை இவர் சார்பாக கஸ்டமர்களிடம் கேள்விகள் கேட்பார். இவர் கரும்பலகையில் ஒரு வினாடியில் கேள்வி கேட்டவரின் தலைவிதியையே மாற்றிவிட்டு புன்னகை செய்வார். எல்லாமே எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா...எனர்ஜி ட்ரீட்மென்ட் தோல்வியடைந்தால் கூட அதே கூரைக்குள் பெயரில் ஒரு ஸ்பெல்லிங்கை மாற்றி தப்பித்துவிடலாம் பாருங்கள்.
பெயர் மாற்றம் செய்வது பெரிய வேலைதான். இதில் முன்னோடியான 'சோழ' மன்னர் ஒருவரின் ஆர்ப்பாட்டமான நிகழ்ச்சி ஒரு புறம் என்றால், ஆன்மீக வெளியில் நனைந்தது போல் அமைதியாக தோற்றமளிக்கும் 'பார்மெட் நியூமெராலாஜியின்' தந்தை ஒருபுறம். இசைஞானியே கொஞ்சம் சதை போட்டு பெயர் மாற்ற வந்துவிட்டாரோ என்று யாரையும் ஒரு நிமிடம் தடுமாறச்செய்யும் தோற்றம். டைட்டில் காட்சியிலேயே திருவண்ணாமலை கிரிவலம் வருகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
ராசிக்கல் நிபுணர்கள் ஒரு தனி ஜாதி. பெயர்களில் இருந்து வரும் அதிர்வுகள் ஒரு வகை என்றால், இவர்கள் தரும் குட்டி கற்களில் இருந்து வரும் வைப்ரேஷன்கள் ஆளையே புரட்டிப்போட்டுவிடும். படிக்காதவன் படிப்பான். அடங்காப்பிடாரர்கள் சாதுவாகிவிட, உங்கள் வியாபாரம் ஓகோவென்று செழித்தோங்கும். மேலதிகாரிகள் சீட்டிலிருந்து எழுந்து உங்களுக்கு சல்யூட் அடிக்கலாம், எதிரிகள் உங்கள் காலடியில் குழைந்து கிடக்கலாம். ஒரே ஜாலிதான் இந்த மோதிரங்களை அணிந்துகொண்டால். ஒரு காலத்தில் பூசி மெழுகிய தோற்றத்தில் நகைக்கடை அதிபராகவே பல ஜென்மங்களில் பிறந்திருக்கக்கூடிய ஒரு என்ஜினீயர் இதில் கலக்கிக்கொண்டிருந்தார். டிவி பார்த்து எங்கள் உறவினர் ஒருவர் இவர் கடை வாசலில் நின்று அடம் பிடித்து தன இரண்டு மகன்களுக்கும் ராசிக்கல் மோதிரம் வாங்கிச்சென்றார். ரூபாய் ஐம்பதாயிரம் அவுட். மெடிக்கல் சீட்டுக்காகத்தான் இந்த விட்டலாச்சாரியா வேலை. எந்த சீட்டும் கிடைக்கவில்லை என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்கு தெரிந்திருக்கும் . இப்போதும் சில மார்வாடிகளும் சில பட்டுப்புடவை பெண்மணிகளும் இத்தகைய நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
வைத்தியர்களும் ஆன்மீகவாதிகளும் இன்னொரு ரகம். கங்கைக்கரையில் அமர்ந்து அருளுரை வழங்கும் சங்கரரின் கார்பன் காப்பிகளும், சென்னை நகரில் வாழும் சில ஒயிட் & ஒயிட் சாமிகளும் புகுந்து விளையாடுகிறார்கள்.கிறிஸ்துவ பேச்சாளர்கள் பாடவும் செய்கிறார்கள். பூங்காக்களில், ஏற்கனவே பதிவு செய்த பாடல்களுக்கு வாயசைத்து , ஆடவும் செய்கிறார்கள். கண்கொள்ளா காட்சி. ஒரு பெரிய குடும்பத்தின் கடைக்குட்டி பாப்பா கூட கண்ணீர் மல்க 'பாவிகளுக்காக' இறைவனிடம் மன்றாடி அழுகின்றது. தினத்தந்தியில் ஒரு காலத்தில் முழுப்பக்க விளம்பரங்கள் தந்து வாலிப வயோதிக அன்பர்களுக்கு கடாக்ஷம் வழங்கியவர்கள் இப்போது தொலைக்காட்சிகளில் ஆணித்தரமாக ஆதாரங்களை புட்டு புட்டு வைக்கின்றனர். சில நம்பள்கி நிம்பள்கி வைத்தியர்களும் சிறுநீரகம் முதல் புற்று நோய் வரை எதையும் விட்டு வைக்க தயாராகயில்லை. ஒரு கீரையையே பிராண்டாக்கி பிரம்மாண்ட மாளிகையும், ஒட்டகங்களும், யானைகளும், பட்டாடைகளும், கிரீடங்களுமாக ஒரு வைத்தியர் ராஜபோகமாக காட்சியளிக்கிறார். சென்ற வாரம் ஒரு ராஜவைத்தியர் மான்கறி, புலிக்கறி வைத்தியம் செய்வதாக பல லட்சங்களை கறந்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
லோக்கல் சேனல்கள்தான் சூப்பர். ஒரு சாமியார் வருகிறார். கூட அழகிய இளம்பெண்ணிற்க்கு பதிலாக ஒரு ரிட்டயர்டு ஆசிரியர். அவர் இவரிடம் கேள்விகளை கேட்பார். இடை இடையே தொலைபேசி அழைப்புக்கள்.
'சாமி, எனக்கு மூணு நாளா மூச்சுபிடிப்பு...'
'நாளைக்கு ஒரு நாள்...வீதியிலே....லாட்ஜிலே....நம்பர் ரூமிலே இருப்பேன். எழுவத்தி அஞ்சு ரூபா கொண்டு வாங்க. ஒரு பொடி தர்றேன்..சரியாப்போகும்' என்று சீப்பாக விஷயத்தை முடித்துக்கொண்டு தொடர்வார்.
'உங்க பின்னாலே பச்சை ஷர்ட் போட்டுட்டு நிக்கிறானே பையன், நேத்து ஸ்கூலில் ஒரு ஜாமெட்ரி பாக்சை தொலைத்தானே, கிடைச்சுதா' என்று தன் ஞானத்ருஷ்டி பிட்டை தூக்கி நம் மேல் போடுவார்.
இன்னும் ஒரு மந்திரவாதி இங்கு தொலைக்காட்சிகளில் தோன்றுவார். உடனே தெலுங்கு ப்பட மந்திரவாதியை கற்பனை செய்யாதீர்கள் . இவர் ஏதோ வங்கி உத்தியோகஸ்தர் போல தோன்றுவார். சகட்டு மேனிக்கு போன் செய்பவர்களை திட்டுவார். எல்லோரும் இவரை கிண்டல் செய்வதாக எண்ணம்..ரசமணி, மாந்திரீகம், வர்மம், என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே , இவற்றை வைத்து உங்கள் சகல பிரச்சினைகளையும் அடுத்த நாள் மதியத்திற்குள் தீர்த்து வைத்துவிடுவார். பாரத்தை தூக்கி என் மேல் போடுங்கள் என்று இந்த காலத்தில் யார் சொல்வார்கள்?
வாஸ்து நிபுணர்கள், அக்குபங்சர் நிபுணர்களும் தங்கள் பங்குக்கு உங்களுக்கு உதவ காத்துக்கிடக்கின்றனர். சில உள்ளூர் சேனல்களின் சிக்கன நடவடிக்கையால் தொடர்ந்து இரண்டு மூன்று நிபுணர்களுக்கு ஒரே இளம் பெண் காம்பியராக பணி புரிய நேரும்போதுதான் அடப்பாவமே என்று தோன்றுகிறது.
ஒரு வைத்தியர் அடிக்கடி இப்படி நேரலையில் தோன்றுவார். கண், மற்றும் பல் தவிர எதையும் பார்க்கமாட்டார். ஒரு ரிஷியின் பெயரை தனக்கு முன்னாள் சேர்த்துக்கொண்டவர். ஒரு நாள் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..கடும் பல்வலியுடன் ஒரு நேயர் அழைக்கிறார். இவர் சொல்கிறார்,
'அய்யா, இன்று நான் நடத்துவது வேறு நிகழ்ச்சி, இன்று வைத்தியம் பார்ப்பதில்லை, நாளை இதே நேரத்தில் அழையுங்கள், பதிலளிக்கிறேன்.'
ஆம், முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சி. லிங்க் வணிகம். ஆயிரம் ரூபாய் போட்டால் அடுத்த வருடம் நாற்பத்தி ஏழே முக்கால் கோடியும், சில லட்சங்களும் அள்ளித்தரக்கூடிய அற்புத நிகழ்ச்சி. சில பத்திரங்களையும் நமக்கு காட்டுகிறார். சட்டப்படி நடக்கிறதாம்...
ஒரு நாள் அகத்தியர், அடுத்த நாள் சுக்ராச்சாரியார்....டபுள் ஆக்ட்!
இன்னும் பல ஆசாமிகள் இருக்கிறார்கள்...ஆனாலும் இவர்களை நான் கிண்டல் செய்ய மாட்டேன். யார் கண்டது, அடுத்த வருடம் நானே அங்கு அமர்ந்து வாஸ்து வியாபாரமோ மந்திரக்கல் விற்பனையோ நடத்தலாம்.
Tuesday, July 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
super
ஜீவா ஸார்.. பாக்ஸ் இடியட் இல்ல. நிகழ்ச்சி நடத்துறவங்களும் அதைப் பாக்கிற நாமளும்தான். ஹிஹி.
Dear Jeeva,
I am amazed by the writing skills you have developed over the years in Tamil- nonetheless your mother tongue but having self-studied Tamil without studying it in school or college !!!
Great. I keep reading your blog posts but found some time now to comment.
Keep writing. Your style is lucid and very down to earth and I just like it.
Congrats. All the best.
Your bench mate at school and ever loving
Uday...
மிக சிறப்பான பதிவு தோழரே
மக்களின் சுய சிந்தனைகளை மழுங்கடிக்க செய்வதில் போட்டி போட்டுக்கொண்டு
தொலைக்காட்சி செயல்படுகிறது என்பதை எளிமையாக அழுத்தமான பதிவு இது.
(இனி தொடர்ந்து பதிவு தாங்களிடம் இருந்து வருமா? ரொம்ப நாள் ஆயிற்று...)
சார் ரொம்பப் பொறுமையா இந்த நிகழ்ச்சியெல்லாம் பார்த்து விமர்சித்து இருக்கிறீர்கள்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
மிகவும் பாதிக்கப் பட்டிருப்பீர்கள் போல் இருக்கு சார். அடிக்கடி எழுதுங்கள்.
லோக்கல் சேனல் ஆரம்பிக்க தயாராக இருந்த என் நண்பன் கூறியது "அண்ணா, ரெண்டு ஜோசியக்ரங்கள பிடிச்சா போதும்னா" - எதிர் காலத்துக்கு ஜோசியம் எவ்வாறு உதவுகிறது என்பதை அன்று அறிந்து கொண்டேன்
amazing style,reminds me sujatha ;)
thanks ... had a good laugh! :-D
நீங்களும் நம்மள மாதிரிதானா? தூக்கம் வரலேன்னா எல்லா முக்கிய நிகழ்ச்சிகளையும் பார்த்து நாளும் தெருஞ்சுக்க நினைப்பவர் தானா? ஹா ஹா ஹா!
amazing....
இது உங்கள் கருத்து.
அதை நான் மதிக்கிறேன்
ஆனால் உங்கள் கருத்து தான் என் கருத்தாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்
//யார் கண்டது, அடுத்த வருடம் நானே அங்கு அமர்ந்து வாஸ்து வியாபாரமோ மந்திரக்கல் விற்பனையோ நடத்தலாம்.// ஹா ஹா ஹா!
சமுதாயத்தின் மீது ஏற்படும் சினம் கண்டேன்.சேனல்களுக்கு நம் நாட்டில் அதிக சுதந்திரம் ..... நாம் என்ன சொல்லி திருந்தப் போகிறது....
என் கல்லூரித் தொழர் ஒருவர் சேனலில் வைரக்கல் விளம்பரத்திற்கு வந்தது என் மனதை பாதித்தது.அதன் பிறகு அவர் எழுதியதைக் கூட படிப்பதை நிறுத்தி விட்டேன்..அவர் இப்போது இல்லை இவ்வுலகில்...ஒரு பத்திரிகை ஆசிரியராக அவர் எழுத்து கண்டு பிரமித்தவன்....காசுக்காக தன்னை விற்கும் யாரை சகித்தாலும் தலைவனை சகித்துகொள்ளமுடியவில்லை...வேண்டாமே சுய புராணம்,
நியாயமான உங்கள் கோபம் எனக்கும் பிடித்திருக்கிறது.கோபத்திலும் உங்கள் எழுத்து பரிணமிக்கிறது....
ஆ.பொன்னப்பபிள்ளை
Post a Comment