



முப்பது வருடங்களுக்கு மேலாயிற்று...அந்த கொடிய காலங்களின் ஆட்டங்கள் நிகழ்ந்து!!!
அப்போது நான் மாணவன் . திடீரென்று அந்த செய்தி வந்தது. 'அவசர நிலை பிரகடனம்'....! அப்படி என்றால் என்னவென்பதே பலருக்கு தெரியாது. இதற்கு முன் ஒரு போரின்போது இது அறிவிக்கப்பட்டதாக சிலர் சொன்னார்கள். தேர்தல் முறைகேடுகளால், இந்திராகாந்தி பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை , நாட்டுக்கே ஆபத்து என்று திரித்து, அவசர நிலை பிரகடனம் செய்தார் அம்மையார்! அப்போதைய ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியான பக்ருதீன் அலி அகமது இந்த சட்டத்தையும், பின்னால் வந்த பல அவசர சட்டங்களுக்கும் மறுப்பேதும் சொல்லாமல் கையெழுத்து போட்டு தள்ளிக்கொண்டிருந்தார்! என்ன ஏது என்று புரிவதற்குள் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டனர். ஆயிரக் கணக்கான தொண்டர்களும் சிறையில்.. பலர் தலைமறைவானார்கள்! அப்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி. காங்கிரசுக்கு எதிரான நிலை. தலைவர்கள் பலர் தமிழகத்தில் தலைமறைவாக தஞ்சம் புகுந்தனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் கோவை பேரூரில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்தார் என்றெல்லாம் நண்பர்கள் சொன்னார்கள்! போராட்டங்கள் தடை செய்யப்பட்டன. வீராதி வீர சூராதி சூர தொழிற்சங்க தலைவர்கள் எல்லோரும் கப்சிப். நேரத்துக்கு ரயில்கள் ஓடின...காலை பத்து மணிக்கெல்லாம் அவரவர் சீட்டில் அரசு ஊழியர்கள் பவ்யமாக அமர்ந்தனர்! யாரை வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உதைக்கலாம், கைது செய்யலாம், சித்ரவதை செய்யலாம், கொலை கூட செய்யலாம் என்ற நிலை உருவானது. அடக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்பட்டன. எதிர்த்து குரல் கொடுத்த பெரும் தலைவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபளானி, மொரார்ஜி, சரண்சிங் போன்ற தலைவர்கள் எந்த காரணமும் இன்றி கைது செய்யப்பட்டனர். பல அமைப்புக்கள் தடை செய்யப்பட்டன. ஆர்.எஸ் .எஸ். இவற்றில் ஒன்று. சில கட்சிகள் எதிர்த்து குரல் கொடுத்தன..மார்க்சிஸ்ட் கட்சியும் திமுகவினரும் இதில் அடங்குவர். இவர்களின் தலைவர்களும் தொழிற்சங்க வாதிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்களை முடக்கிய சட்டமான 'மிசா'வையே பலர் பின்னாளில் பட்டமாக அணிந்து கொண்டனர்.
இந்த கொடிய அடக்குமுறைக்கு ஒரு பட்டுக்குஞ்சலம் கட்டினர் இந்திரா காந்தியும் அவருடைய ஆலோசகர்களும்...இருபதம்ச திட்டம் என்ற பெயரில்! நாட்டு நலனுக்கு என்று இருபது திட்டங்களை அறிவித்து இருபத்தி நாலு மணிநேரமும் இதன் பஜனை பாடினார்கள். ‘Be Indian, Buy Indian’ என்பது இதில் ஒன்று. இதன்படி அந்நிய பொருட்களுக்கு தடை என்ற வதந்தி கிளம்பியது. அப்போது கடத்தல் என்பது பெரும் தொழில் அல்லவா! அந்நிய வாட்சுகள், அந்நிய டேப் ரிக்கார்டர்கள் என்று இந்தியாவுக்கு கடத்தப்பட்ட பொருட்கள்தான் பரவலாக நம் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த செய்தி கேட்டதும் அனைவரும் இவற்றை வீட்டுக்குள் மறைத்து வைத்த காமெடிகளும் நடந்தன. திடீரென்று ஒரு வதந்தி கிளம்பும்...'மேம்பாலத்துல கஸ்டம்ஸ் செக்கிங் பண்ணி பாரீன் வாட்சுகளை பிடிக்கிறாங்களாம்' என்று...அவ்வளவுதான்...அனைவரும் தத்தமது சீக்கோ, ரீக்கோ வாட்சுகளை உள்ளாடைக்குள் மறைத்து வைக்காத குறையாய் ஒளித்து வைத்து நடமாடுவார்கள்!
கோமாளி இளவரசனைப் போல் சஞ்சய் காந்தியின் கொடூரங்கள் பிரபலமாயின. குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை பலவந்தமாக குடிசைவாசிகள் மீது பிரயோகப்படுத்தினார். தில்லியை அழகுபடுத்துகிறேன் பேர்வழி என்று துர்க்மான் கேட் குடிசைகள் மீது புல்டோசர்களை ஏவினார். அவசர நிலையை கேலி செய்து எடுக்கப்பட்ட 'கிச்சா குர்சி கா' படத்தின் நெகடிவ்களை கைப்பற்றி கொளுத்தினார். காங்கிரஸ்காரர்களின் அட்டகாசம் அதிகரித்தது...தங்களுக்கு வேண்டாதவர்களை உள்ளே தூக்கி போட அவசர நிலை அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக ஆயிற்று! கல்லூரி விடுதிகளுக்குள்ளும் காவல் துறை நுழைந்தது. புரட்சிகர சிந்தனை மிக்க மாணவர்கள் இழுத்து செல்லப்பட்டனர்.கேரளத்தில் ராஜன் என்ற மாணவன் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று வரை அவன் உடலுக்கு என்ன ஆயிற்று என்ற தகவல் இல்லை. எதிர்ப்பு குரல் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் காவல் நிலையங்களில் தொங்க விடப்பட்டு உதைக்கப்பட்டனர்..உருளைக்கட்டை சிகிச்சைகள் செய்யப்பட்டு நடக்க முடியாதவர்கள் ஆனவர் பலர். இயல்பாகவே ஆதரவுக்குரல் கொடுப்பவர்களும் உருவாயினர். 'இந்திராதான் இந்தியா' என்ற டி.கே.பருவாவின் புகழ் பெற்ற ஜால்ரா வார்த்தையை சிரமேற்க்கொண்டு தமிழகத்தில் இலக்கியங்கள் உருவாகின. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட இந்திராவின் மக்கள் தொடர்பாளராகவே மாறி, இந்தோ சோவியத் கழகம் சார்பில் பல கருத்தரங்கங்கள் நடத்தியது. இன்றும் நினைவிருக்கிறது...முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு இருபதம்ச திட்டத்தின் புகழ் பாடும்போது சொன்ன வரி...காஷ்மீர் ஆப்பிளை இங்கே இருப்பவனும் வாங்கி திங்க பயன்படுகிறது இந்த திட்டம் என்று. ஒரு இழவும் புரியவில்லை அப்போதும் இப்போதும்! வினோபா பாவே, அன்னை தெரசா, குஷ்வந்த் சிங் போன்றவர்கள் பகிரங்கமாக அவசர நிலையை ஆதரித்தனர் என்று சொல்வார்கள். எம்.எப்.உசைன் என்ற ஓவியரின் அடிவருடித்தனம் உச்சமானது. அவர் இந்திராவை ஒரு துர்கையாக சித்தரித்து ஒரு மாபெரும் ஓவியத்தை காட்சிக்கு வைத்தார்.
பத்திரிக்கை தணிக்கை அப்போது கொடி கட்டி பறந்தது. ஹிந்து போன்ற பத்திரிகைகள் கப்சிப் ஆயின. எதிர்ப்புக்குரல் இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக் போன்ற பத்திரிகைகளில் இருந்து மட்டும் வந்தன. அதிகாரிகளுக்கு ஒரு செய்தி பிடிக்கவில்லை என்றால் நீக்கப்பட்ட பின்புதான் அச்சுக்கு போயின. அப்போதைய பத்திரிகைகளில் பல பத்திகள் காலியாகவும் வெள்ளையாகவும் இருப்பதை பார்க்கலாம். துக்ளக்குக்கு பயங்கர டிமாண்டு, பல பக்கங்கள் வெள்ளையாய் இருந்தும்! ஒரு இதழில் எம்ஜியார் நடித்த 'சர்வாதிகாரி' படத்தின் வசனங்களை பல பக்கங்களுக்கு அச்சடித்திருந்தார் சோ! வானொலியை திருப்பினால் எப்போதும் 'இருபதம்ச திட்டம்...ஆஹா...இது இந்திராவின் சட்டம்...ஓஹோ' என்ற கண்றாவி பாட்டை கேட்க வேண்டியது தலைவிதியானது! திரைப்படத் தணிக்கைகளும் தடைகளும் இன்னும் பிரபலம். குடிப்பது போன்ற காட்சிகளும், வன்முறைச்சண்டைகளும் கத்திரிக்கு பலியாயின. அரசை விமர்சிப்பது போல காட்சிகள் வந்தால் அம்போதான்! திரைப்பட பிரபலங்களை பந்தாடினர் அதிகாரிகளும் மந்திரிகளும்.
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி ஒரு நாள் பிரகடனப்படுத்தப்பட்டது! பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின், முரசொலி மாறன் போன்றவர்கள் உள்ளே! மக்கள் மத்தியில் குமுறல்கள் உருவாகத் தொடங்கின. நான் அப்போது சென்னை மாநிலக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். சிறையில் சிட்டிபாபு அடித்து கொல்லப்பட்டார் என்று தகவல் பரவியது. அவரது உடல் திருவல்லிக்கேணியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு குழுமிய மக்களின் உணர்வுகள் இன்றும் பசுமையாக மனதில் பதிந்திருக்கிறது!
சிறைக் கொடுமைகள் பற்றிய பல தகவல்கள் பரவின. அதே நேரத்தில் முரசொலி அடியார் போன்ற சிலர் சிறை ஒரு உல்லாசக்கூடம் என்பது போன்ற தகவல்களையும் பரப்பினர். ஜால்ரா அடித்துக்கொண்டிருந்த பொதுவுடமைக்கட்சியில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் வரத்தொடங்கின. அதில் முக்கியமானவரான ராஜேஸ்வர ராவுக்கு மாநிலக்கல்லூரி மாணவர்கள் சார்பாக நாங்கள் மாலை அணிவித்தோம். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரவேண்டுமல்லவா. 1977ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை கண்டது. இந்திரா, சஞ்சய் போன்றவர்கள் கூட அவர்கள் தொகுதியில் தோற்றனர்! மக்களும் சகஜ நிலைக்கு திரும்பினர்!
அப்போது ஒரு நாள் ஜனாதிபதி இறந்ததால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒரு மனிதரின் மறைவுக்கு மாணவர்கள் மத்தியில் அப்படி ஒரு மகிழ்ச்சி ஆரவாரம் எழும்பியதை நான் பிறகெப்போதும் கண்டதில்லை!