Tuesday, January 5, 2016

ஜனவரி 6 சர்வதேச வேட்டி தினமாமே!



நான் 13 வயதிலேயே வேட்டி கட்ட துவங்கிவிட்டேன்.

18 வயது இருக்கும்போது, ஒரு கல்யாணத்திற்கு நாகர்கோவில் கிளம்பினேன். பஸ் பயணம். வேட்டி கட்டிக்கொண்டு கிளம்பிய என்னை பார்த்து என் தந்தைக்கு கடும் கோபம் வந்துவிட்டது. ஒரு பி.ஏ .படிக்கிற  பையன் பேண்ட் போடாமல் வேட்டி கட்டிக்கொண்டு பயணிப்பதா, அதுவும் சொந்த ஊருக்கு என்று கடும் கோபம். வழக்கம்போல அவர் பேச்சை கேட்காமல் புறப்பட்டு சென்று நாகர்கோவிலில் வேட்டியில் சுற்றிக்கொண்டு இருந்தேன்.

கல்லூரிக்கு ஒரே ஒரு நாள் வேட்டி கட்டிக்கொண்டு சென்று, அதை உருவி விட்டு என் நண்பர்கள் செய்த கலாட்டாவினால், பின்னர் அந்த பழக்கம்  தொடரவில்லை.

பின்னர் வேட்டி நெசவுக்கு புகழ் பெற்ற நாகர்கோவில் வடசேரியில் எனக்கு பெண்ணும் பார்த்து அங்கேயே திருமணமும் செய்து வைத்தனர். திருமண மேடையில்  பட்டுவேட்டி கட்டவில்லை... சுயமரியாதை திருமணம். சாதாரண கைத்தறி வேட்டிதான். இன்றுவரை என் இடுப்பில் பட்டு ஏறவில்லை .

எனக்கு லுங்கி பிடிக்காது...பெரும்பாலும் சாயவேட்டியைதான் வீட்டில் உடுத்துவது . நரசிம்மா (மோகன்லால் அந்த  படத்தில் கலர் கலராக வேட்டிகளை உடுத்துவார்) வேட்டி நம்ம பேவரிட்.

சமீப காலங்களில் வேட்டிக்கு அளிக்கப்படும் ஊடக விளம்பரங்கள் என்னை பிரமிக்க வைக்கின்றன. ஜிப், வெல்க்ரோ, பாக்கெட் என்று அசர அடிக்கின்றனர். சமீப காலங்களில் துக்க வீடுகளில் கூட, துணிமணிகள் வழங்கும் சடங்குகளில், பிராண்டட்  வேட்டி பார்சல்களை  பார்க்கிறேன்.


என்னிடமும் கூட ஒரு பிராண்டட் வேட்டி சட்டை இருக்கிறது. என்னுடைய தேசிய விருதுக்கு பிறகு நடந்த பாராட்டு கூட்டங்களில் ஒன்று, கோவை சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் நடைபெற்றபோது , ஒரு நினைவுப்பரிசையும் வழங்கினார்கள். வீட்டில் வந்து பிரித்தபோது இருந்தது ராம்ராஜ் வேட்டியும் சட்டையும்...நான் அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கு இணையேயில்லை. நிச்சயம் அந்த விலை கொடுத்து வாங்க எனக்கு மனம் வராது!

5 comments:

பாலகிருஷ்ணன் said...

எனக்கும் வேட்டி கட்ட ஆசை. ஆனால் இடுப்பில் (இருந்தாதானே) நிற்காது

Sridharan Balaraman said...

அதுக்கும் ராமராஜ்ல பெல்ட் விக்கறாங்க!

Anonymous said...

bale!

sathyan iyer said...

Looking great in tradional wear. Even i like to wear it at home on holidays. Feel amazing & proud.

Vellupillai said...

சகாயத்தால் கிடைத்த சகாய விளம்பரம் ! - வேட்டிக்கு,,,,!