Saturday, September 26, 2015

ஒரு புதிய வழக்கு

நீண்ட நாட்களுக்கு பிறகுதான் அவரது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

'உங்களை பார்க்க வரணுமே... ஒரு அவசர ஜோலியா பேசணும் ' என்றார்.!!!

அடுத்த நாள் மீண்டும் ஒரு அழைப்பு...உங்க கடை மறந்து போச்சே....இங்கே வெரைட்டி ஹால் ரோடில் நின்னுகிட்டு இருக்கேன்.... 10 தடவைக்கு மேல் வந்தவருக்கு வழி மறந்து போனது ஏன் என்று யோசித்துக்கொண்டே வழி சொன்னான். ஒரு வழியாக வந்து சேர்ந்தார். கூட 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண். 100 கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து வருகிறார்கள்.

வந்தவுடன் நேராக விஷயத்துக்கு வந்துவிட்டார்.

'என்ற மாப்பிள்ளை செத்து ஆறு மாசத்துக்கு மேலே ஆச்சுங்க. தவணகிரி பக்கத்திலே ஒரு கவர்மெண்ட் பேக்டரிலெ நல்ல போஸ்ட்ல இருந்தாரு. பொண்ணு இங்கே ஒறம்பரைக்கு வந்திருந்தா. திடீர்னு ஒரு நைட் போன் வருது...இறந்துட்டாரு...பாடியை நாங்க கொண்டு வரணுமா... நீங்க வந்து வாங்கிட்டு போறீங்களான்னு....எனக்கு கையும் காலும் ஓடலே . நீங்களே கொண்டு வாங்கன்னு சொல்லிட்டேன். எப்படி செத்தாரு. ஏன் செத்தாருன்னு ஒண்ணுமே யோசிக்க முடியல. அவங்க ஆபீஸ்லே இருந்து ரெண்டு பேரு வந்து பாடியையும், ஹார்ட் அட்டாக்னு சொல்லி மெடிக்கல் ரிப்போர்ட்டையும் கொடுத்திட்டு போனாங்க. அடுத்த நாளு அடக்கம் பண்ணிட்டோம். அப்படியே அடப்பு , சாங்கியம்னு நாளு போயிருச்சு... இப்ப எட்டு மாசம் ஆச்சுங்க'.

சரி....இப்ப என்ன பிரச்சினை. பேக்டரிலெ இருந்து பணம் வரலையா?

அதெல்லாம் இல்லீங்க... இப்ப எங்களுக்கு ஒரு பெருத்த சந்தேகம் வந்திருக்கு. அவரு யோகா, எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி பாடியை டிரிம்மா வெச்சிருந்தார். அப்படி சாகற ஆளும் இல்லே. அதுதான்......

ஓ ...சின்ன வயசு வேறே....

 வயசு 63 ஆச்சுங்க....பாத்தா தெரியாது...

என்னது? 63ஆ?...இவருக்கே 70 கூட ஆயிருக்காதே என்று மனதுக்குள் ஒரு கேள்விக்குறி.

ஆமாங்க..ரிட்டயர் ஆனதுக்கு அப்புறம் ஏதோ ஒரு உத்தரவு கிடைச்சு அவரை அங்கே வேலைக்கு வெச்சிருந்தாங்க... ரொம்ப திறமையானவர்..

சரி..இப்ப என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?

அவரை யாரோ கொண்ணுருக்கணும் ..அப்படி சாகற ஆள் இல்லீங்க.

இங்கே பாருங்க... இப்ப நீங்க புகார் கொடுத்தாலும் யாரும் கண்டுக்க போறதில்லை... எட்டு மாசமா என்ன செஞ்சிகிட்டு இருந்தீங்கன்னு போலீஸ்ல கேப்பாங்க....இந்த அடைப்பு எல்லாம் யாரும் ஒத்துக்க போறதில்லை. அப்புறம் உங்களுக்கு யார் மேலெ சந்தேகம்?

அவருக்கு ரெண்டு வருஷம் முன்னாலே ரெண்டு பேர் ரிட்டயர் ஆயிருக்காங்க. அவங்களுக்கு இந்த புது வேலைக்கு ஸ்பெஷல் பர்மிஷன் கிடைக்கல. அந்த பொறாமைல இன்னொரு ஆளையும் சேர்த்து வெச்சுகிட்டு இவருக்கு விஷம் வெச்சுட்டாங்க.

அவங்க இவரை விட வயசானவங்கன்னு தெரியுது....இதுக்காக கொலை எல்லாம் செய்வாங்களா ?அவங்க பெயர், அட்ரஸ் எல்லாம் தெரியுமா?

 தெரியாதுங்க.. பின்னே எப்படி அப்படி அடிச்சு சொல்றீங்க?

அவரே சொன்னாருங்க..

 யாரு?

எங்க வீட்டுக்காரர்தாங்க.....முதன் முதலாய் அந்த பெண் பேசினாள்.

இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.... எப்படிங்க?

அது நாங்க சாமிகிட்டே பேசினோம்....அவரும் ஆவியா வந்து சொன்னாரு. விஷம் வெச்சு அப்புறம் அடி அடின்னு அடிச்சு கொன்னாங்களாம். ஆனா அவரும் சாதாரணப்பட்ட ஆள் இல்லீங்க... மூணு பேர்ல ஒருத்தனை அவரே தீத்துக்கட்டிட்டாரு ! பேக்டரிலெ கோடவுன் எரிஞ்சு அந்த ஆள் செத்துப் போயிட்டான். கேசை நடத்துங்க... நான் வந்து கோர்ட்டில் சாட்சி சொல்றேன்னு சொல்லிட்டாரு.

அதெப்படிம்மா சாத்தியம்?

அதெல்லாம் அவரு எப்படியாவது செய்வாருங்க…

நீ சும்மா இரும்மா...சாருக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை கிடையாது.

இங்கே பாருங்கம்மா... நம்பிக்கை... நம்பிக்கை இல்லைங்கிறதை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். நான் சொல்றதை பொறுமையா கேளுங்க. உங்க அப்பா எனக்கு அண்ணன் மாதிரி...ரொம்ப வருஷ பழக்கம். உங்க நல்லதுக்குதான் சொல்றேன். இப்படியெல்லாம் சந்தேகம் வந்திருந்தா அப்பவே நீங்க போலீஸ்ல சொல்லியிருக்கணும்.. இப்ப ஆயிரம் கேள்வி வரும். அப்பவேன்னா தோண்டி எடுத்து பார்த்திருப்பாங்க. இப்ப எட்டு மாசம் கழிச்சு அங்கே என்ன இருக்க போகுது. அவ்வளவு அக்கறையா போலீசு இதையெல்லாம் இவ்வளவு நாளைக்கு அப்புறம் விசாரிப்பாங்கன்னு தோணலை. உங்களுக்கு குழந்தைங்க எத்தனை? அவங்களை படிக்க வைக்கிற வேலையை பாருங்க.

எனக்கு ஒரே பையந்தானுங்க... +2 படிக்கிறான். சார். .

அப்ப எனக்கும் ஒண்ணும் புரியல்ல, இவளுக்கும் விவரம் பத்துல . சொந்தக்காரங்க ரெண்டு கான்ஸ்டபிளும் இருக்காங்க... ஒருத்தனும் ஒண்ணும் சொல்லலை. இப்ப ரெண்டுல ஒண்ணு பாக்கனும்னு இவ சொல்றா. நான்தான் கொஞ்சம் பொறுன்னு சொல்லி உங்க கிட்டே இப்ப கூட்டிட்டு வந்திருக்கேன். சிபிஐ ல புகார் கொடுக்கலாமா?

அதெல்லாம் சினிமால...இங்கே பாருங்கம்மா..இதில இறங்குனீங்கன்னா லட்ச லட்சமா நிறைய செலவாகும், நிறைய அவமானம் காத்திருக்கும்...ஊரு விட்டு ஊரு ஒவ்வொரு வாய்தாவுக்கும் அலையணும். நான் சொல்றதை சொல்லிட்டேன்..பையனை நல்லா படிக்க வையுங்க...அப்புறம் மத்ததை பார்க்கலாம்.

அந்த பெண் ஒன்றும் கேட்பதாக தெரியவில்லை. பெரியவர் வழிக்கு வந்துவிட்டார்.

பாரும்மா...சார் சொல்றதுதான் சரி....எனக்கும் வயசாச்சு...அலையவும் முடியாது . சொல்றதை கேளு...

இவனுக்கும் ஒன்றும் புரியவில்லை....சரி இதுக்கு ஒரு முத்தாய்ப்பு வைத்தாகணும்.

'சரிம்மா....நான் ஒரு யோசனை சொல்றேன். 'மறுபடியும் சாமிகிட்டே பேசுங்க. உங்க வீட்டுக்காரர் கிட்டே சொல்லுங்க. இப்படி தெரிஞ்ச வக்கீல்கிட்டே போய் சொன்னோம். அவரு இப்படி சொன்னாரு...அலைய வேண்டாம்னு சொல்றாரு. நீங்க என்ன சொல்றீங்க... அப்படி பழி வாங்கியே தீரணும்னா ... இறங்குறொம்னு சொல்லுங்க. அவரு என்ன சொல்றாரோ அது படி நடக்கலாம். என்னாலே இந்த கேஸ் நடத்த முடியாது...நான் இப்பல்லாம் கோர்ட்டுக்கு போறதில்லை. உங்களுக்கு வேணும்னா எனக்கு தெரிஞ்ச வக்கீல் யாரையாவது ஏற்பாடு பண்ணித்தரேன்...'

 உங்க வீட்டுக்காரர் என்ன சொன்னார்னு எனக்கு போன்ல சொல்லுங்க....

 இப்போதுதான் அந்த பெண்ணின் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது. பெரியவரும் ஆசுவாசம் அடைந்தார்.

சரி வர்றோம் சார்....ரொம்ப நல்லது'

விடை பெற்றனர்.

ஐந்து நிமிடம் போயிருக்கும்...நாற்காலி மீது ஒரு பை இருந்தது. மறந்து போயிருப்பார் போல. அவரது எண்ணை அழுத்தினான். 'இந்த எண் உபயோகத்தில் இல்லை' என்ற அறிவிப்பு.

பையை திறந்து பார்த்தான். ஒரு கட்டு அச்சடிக்கப்பட்ட தபால் கார்டுகள்.

படித்தான்...'உத்தரகிரியை பத்திரிகை' என்ற நீத்தார் சடங்கு அறிவிப்பு. கொட்டை  எழுத்தில் கருப்பு நிறத்தில்  மாசிலாமணி என்ற பெயரும்....இப்போது வந்து போனவரின் புகைப்படமும்.

என்னமோ செய்வது போல ஒரு உணர்ச்சி...நாற்காலியை இறுக பற்றிக்கொள்ளவேண்டியிருந்தது.

11 comments:

The Prime Designer said...

அருமை சார்

Unknown said...

சரியான சஸ்பென்ஸ்.....படமாகவே முயற்சிக்கலாம்....
:)

Dragon T Jayraj said...

ஜீவா சார் . . சூப்பர் திகில் படத்தை பார்ப்பது
போல் உள்ளது . . . அருமையான உண்மை
. . அதை நீங்கள் வெகு அழகாக உரு வாக்கி
Ullirkal welldone

இரா. பாலா said...

கச்சிதமான வார்த்தைகள். விறுவிறுப்பான மொழி நடை. நல்லாருக்கு...

Sridharan Balaraman said...

அருமை! ஆவிங்க ஃபோன்ல பேசாதவரைக்கும் பிரச்சனை இல்லை!

Sridharan Balaraman said...
This comment has been removed by the author.
Vellupillai said...

கனம் கோர்ட்டார் அவர்களே !,,,,,,,,,,
இதோ குற்றவாளிக்கூண்டிலே நிற்கிற,,,,
என்னய்யா ?
சாட்சிக் கூண்டிலே இருந்து,,,சப்தம் மட்டும் வருது ? ,,,ஆளையே காணோம்யா ?
ஆமா !
மணி என்னாச்சு,,?
12 ஆச்சுங்க,,,
பகல்தானேய்யா !,,
ஏன்யா,,
நீ வேற பயமுறுத்தறே

இரா. சதீஷ் குமார் said...

அவர் சடங்கு பத்திரிக்கைய அவரே போஸ்ட் பண்ண எடுத்து வந்தாரா?! அப்போ அந்தம்மா?

Vijayakrishna Iyengar said...

Super Story Jeeva Sir...

kothai said...

கதையாக இருந்தாலும் சங்கதியில் உண்மைத் தன்மை இருக்கிறது. நல்ல விறுவிறுப்பு ..

பாலகிருஷ்ணன் said...

எதிர்பாராத climax