Saturday, February 27, 2010

டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்

எப்படி என் தந்தைக்கு அப்படி ஒரு சிந்தனை வந்ததென்ற தெரியவில்லை. ஒன்பதாவது படிக்கும்போதே என்னை சுறுக்கெழுத்து பயில ஒரு பயிற்சி நிலையத்தில் சேர்த்துவிட்டார். அவருடைய நண்பர்களிடம் என் பையன் இப்பவே ஷார்ட்ஹேண்டில் புகுந்து விளையாடுகிறான் என்று சொல்வதற்காகவோ என்னவோ! எலிக்குஞ்சு போல இருப்பேன். ஆர்வம் இருந்தாலும் சக மாணவர்களின் பொறாமை மற்றும் ஏளனப்பார்வை என்னை வாட்டியது. எல்லாம் எனக்கு பெரிசுகள். எனக்கு சுறுக்கெழுத்து மிகவும் பிடித்துவிட்டது. ஆங்கில மொழியின் மீது இருந்த பற்றும் இன்னொரு காரணம். என் ஆசிரியர் ஒரு கறார் பேர்வழி. மலையாள கத்தோலிக்கர். அவருக்கும் அப்போது சின்ன வயதுதான். நேரம் தவறாமை அவரது முக்கிய விதிகளில் ஒன்று. 6 மணி வகுப்புக்கு 5.45க்கு ஆஜராக வேண்டும். 5.46க்கு வந்தாலும் கெட் அவுட்தான். நாளைக்கு வாங்க என்று அனுப்பிவிடுவார். எல்லோரும் அவரை கரித்துக்கொட்டுவார்கள்..ஆனாலும் நகரின் மையப்பகுதியில் இருந்ததாலும் அவருடைய கண்டிப்பு பெற்றோர்களுக்கு பிடித்ததாலும் அங்கு எப்போதும் ஹவுஸ்புல்தான். தட்டச்சு வகுப்புகளுக்கு நமக்கு பிடித்த நேரம் கிடைக்காது. அவர் சொல்லும் நேரம்தான். பெருமழை பொழிவது போல் எந்திரங்களின் சோவென்ற சப்தத்திற்கிடையில் உள்ரூமில் அவர் டிக்டேஷன் கொடுக்கும்போது கவனமாக தொடரவேண்டும். ஹோம் ஒர்க்கிலும் படு கறார். வாரம் ஒரு முறை சுருக்கெழுத்து தியரியில் டெஸ்ட். ஒரு சின்ன தப்பு வந்தாலும் மீண்டும் டெஸ்ட் எழுதிவிட்டுத்தான் அடுத்த பாடம் தொடரப்படும்.

நானோ சின்னப்பையன். ஒரு கட்டத்திற்கு மேல் இந்த கண்டிப்பு தாங்க முடியவில்லை. மெதுவாக வகுப்புகளை கட் அடிக்க ஆரம்பித்தேன். வீட்டிலிருந்து கிளம்ப வேண்டியது. இன்ஸ்டிடியூட்டிற்கு எதிரே உள்ள கோனியம்மன் கோயிலுக்குள் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்து வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு வீடு திரும்புவது வாடிக்கையானது. ஏன் வரவில்லை என்று கேட்கும் ஆசிரியரிடம் பள்ளியில் டெஸ்ட், காய்ச்சல் என்று சொல்லவேண்டியது. ஒரு முறை பள்ளியில் குறைந்த மார்க் வாங்கியவுடன் கண்டித்த என் தந்தையிடம் எல்லாவற்றிற்க்கும் காரணம் சுறுக்கெழுத்துதான் என்று பழியை போட்டு விட்டேன். அன்றோடு சுறுக்கெழுத்து வகுப்புகளுக்கு முழுக்கு. ஆனால் சுறுக்கெழுத்து என்னோடு பசையாக ஒட்டிக்கொண்டது.

பள்ளி இறுதித்தேர்வு முடிந்த கையோடு என்னை மீண்டும் அங்கே சேர்த்துவிட்டார் என் தந்தை. இப்போது கூடவே ஆங்கில தட்டச்சும். கல்லூரி, கம்யூனிஸ்ட் குடும்பத்துக்கே உரிய ருஷ்ய மொழி வகுப்புக்கள், கடையில் ஓவியம் வரைதல், எல்லாவற்றுக்கும் மேலாக விடாமல் சினிமா பார்த்தல் என்ற என்னுடைய அன்றாட அலுவல்களில் தட்டச்சும் சுறுக்கெழுத்தும் சேர்ந்து கொண்டன.

இன்ஸ்டிடியூட்கள் ஒரு தனி உலகம். காலை 6 மணி முதல் ஓயாமல் இயக்கம். ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் 'அட்டையை பார்த்து அடிங்க' என்ற ஆசிரியரின் அசரீரி, ஹால்டா, பேசிட் இயந்திரங்களின் ஓசை, மெக்கானிக்குகளின் பந்தா, டைப்ரைட்டர் விற்பனை பிரதிநிதிகளின் வருகை, தங்கள் நேரத்துக்காக காத்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் என்று எந்நேரமும் கலகலப்பு. இதில் காதல் பறவைகளின் தனி டிராக் வேறு. கையில் சுருட்டிய பேப்பருடனோ நோட்டுப்புத்தகத்துடனோ வரும் பெண்களின் பின்னால் வரும் இளைஞர்கள்.. சிலர் வகுப்புகளில் இதற்காகவே சேர வருவார்கள். அவர்களை ஆசிரியர் சுலபமாக அடையாளம் கண்டு கொண்டு படுத்தும் பாடு இருக்கிறதே…பயங்கர காமடியாக இருக்கும். முதலில் அவர்களுடைய ஆங்கில அறிவை பரிசோதித்து, கேலியும் கிண்டலும் செய்து ஒரு வழியாக்கி ஓடவிட்டுவிடுவார். என்னுடன் படித்த நிறைய பேர் காதல் கணைகளில் சிக்கி தவித்தனர்…சிலர் திருமணம் கூட புரிந்தனர்.
கறுப்பாக, சோடாபுட்டி கண்ணாடியுடன் எலிக்குஞ்சு போல் இருந்த நான் யாரும் சீண்டாததால் தப்பித்து வாழ்ந்தேன்.

தட்டச்சும் சுருக்கெழுத்தும் எனக்கு சரளமாக வந்தன. எந்த சிறு தவறும் இல்லாமல் கீ போர்டை பார்க்காமல் படு வேகமாக நான் டைப் அடிப்பதை பார்க்க ஒரு கூட்டமே கூடும். அதே போல சுறுக்கெழுத்தும். என் ஆசிரியர் என்னை தன் பள்ளியின் சூப்பர் ஸ்டாராக அறிவித்து கொண்டாடத் தொடங்கிவிட்டார். அரசுத் தேர்வு பயிற்சிக்காக என்னை வெளி பள்ளிகளுக்கு தனி பயிற்சிக்காக அனுப்பி வைப்பார். வெவ்வேறு குரல்களுக்கும் ஏற்ற இறக்கங்களுக்கும் தனி கவனம் எடுப்பார். லோயர், ஹையர் என்று இரண்டிலும் முதல் வகுப்பு. 25 வருடங்களாக தமிழ்நாட்டில் யாரும் தேர்வாகவே முடியவில்லை என்று சொல்லப்பட்ட (உண்மையா என்று தெரியவில்லை) லண்டன் சேம்பர் ஆப் காமர்ஸ் தேர்வில் சுறுக்கெழுத்தில் முதலிடம் என்று கலக்கினேன். பல குழுக்கள் நடத்திய தேர்வுகள் எதிலும் சோடை போகவில்லை.

கல்லூரி முதுகலைப்பட்டம் முடித்தவுடன் விளையாட்டாக கோவை ஸ்டேன்ஸ் காபி கம்பெனிக்கு விண்ணப்பித்தேன். சுலபமாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். என் தந்தைக்கு ஒரே மகிழ்ச்சி . ஸ்டேன்ஸ் முதலாளி ஒரு காலத்தில் ஸ்டெனோவாக இருந்தவராம். காலையில் டிக்டேஷன். இரண்டு கடிதங்களை டைப் செய்தேன். மதியம் சாப்பிட்டு வருவதாக சொல்லி வீட்டுக்கு வந்தேன். வேலைக்கு நான் போகமாட்டேன் என்று என் தந்தையிடம் சொன்னேன். காரணம் கேட்டார். யாரோ ஒருவர் டிக்டேட் செய்ய நான் எழுதுவது எனக்கு பிடிக்கவில்லை என்றேன். ஐஏஎஸ் தேர்வுக்கும் தயாராகிக்கொண்டிருந்ததால் என் தந்தை சரியென்று சொல்லிவிட்டார். என் வாழ்க்கையில் நான் வேலைக்கு போன சரித்திர பிரசித்தி பெற்ற அரை நாள் அன்றுதான். ஒரு முறை UPSC ஸ்டெனோகிராபர்ஸ் தேர்வில் அயல்நாட்டு சரவீசுக்கு எழுத்துத்தேர்வில் ஜெயித்து..ஸ்டெனோகிராபி தேர்வுக்கு சென்னைக்கு அழைத்திருந்தனர். நியூ செஞ்சுரி புக் ஹவுசில் இருந்து ஒரு போர்ட்டபிள் எந்திரத்தை இரவல் வாங்கிக்கொண்டு சென்னை சென்றேன். முதலில் சுறுக்கெழுத்து தேர்வு முடிந்தது. அடுத்து அதை தட்டச்சு செய்யவேண்டும். என்னுடைய அசுர வேகம் தாளாமல் தட்டச்சு எந்திரத்திலிருந்து ரிப்பன் தெறித்து வெளியே வந்தது. ஒன்றும் புரியாமல் கொஞ்ச நேரம் விழித்து விட்டு எல்லாவற்றையும் அள்ளி பெட்டியில் திணித்து விட்டு வெளியேறி..எமரால்டு தியேட்டரில் சஞ்சீவ்குமார் நடித்த அர்ஜøன் பண்டிட் பார்க்க போய்விட்டேன்…

என்றுமே ஸ்டெனோ ஆக விரும்பாமல் வெற்றியும் அடைந்து விட்டேன். இப்போதும் எங்கள் இன்ஸ்டிடியூட் இயங்கிக்கொண்டு இருக்கிறது. அந்த பக்கம் போனால் எட்டிப்பார்ப்பேன். அதே வயலட் கலர் இங்க் பேனா, ஒரு பேட், அதே மேஜை, அதே பிட்மேன் புத்தகம், வயதே ஆகாத என் ஆசிரியர் பி.வி.பால் அதே உற்சாகத்துடன் வரவேற்பார். பல சமயங்களில் ஒரு மாணவர் கூட இருப்பதில்லை. சில சமயம் யாராவது ஒரு குட்டிப்பெண் டைப் அடித்துக்கொண்டிருப்பார். உடனே அவளை வரவழைப்பார். .'அப்புறம் அடிக்கலாம்மா.. இங்கே வா..இது யார் தெரியுதா'. என்று ஆரம்பித்து என் சாதனைகளை எடுத்துரைப்பார்.. நெளிந்து கொண்டு கேட்பேன், அந்த பெண்ணின் நிலையும் அதுதான். . அதெல்லாம் ஒரு காலம் என்று மீண்டும் தொடர்வார். 'இவரோட தம்பிங்க கல்யாணசுந்தரம், மணிகண்டன் எல்லோரும் என் சிஷ்யங்க' என்ற ரீதியில் போகும்.. 'சார், இன்னும் ஏன் சார் இதை நடத்திட்டு இருக்கீங்க, ஒரு கம்ப்யூட்டர் சென்டர் ஆரம்பிக்கலாமில்ல' என்ற கேட்டால் பதில் வராது. காலி சேர்களுடன் இருக்கும் தட்டச்சு அறையை ஒரு முறை பார்த்துவிட்டு சத்தமாக சிரிப்பார், எனக்கு நேரம் தவறாமையை போதித்த என் குருநாதர்.

ஒவ்வொரு முறையும் அங்கிருந்து வேதனையோடுதான் வெளியேறுகிறேன்.

25 comments:

போ. மணிவண்ணன் said...

ஜீவாவின் விரல்கள் சையாததுதான் என்ன? தட்டச்சு , சுருக்கெழுத்து , ஓவியம் , விமர்சனம், கட்டுரை , இணையம் , என்று பல தளங்களில் பெற்ற அனுபவங்களில் அழகிய பதிவை இருந்தது உங்கள் சுவையான தகவல்கள். எழுதுகோலை ஆறாவது விரல் என்று அப்துல் ரகுமான் சொன்னதைப் போல உங்கள் விரல்களை வர்ணிக்க புதிய வரிகளை தேடிக்கொண்டு இருக்கிறேன்.உங்களுக்கு நினைவு கூர்தல் அழகாக வெளிப்படுகிறது .தந்தை -பள்ளி- தட்டச்சுநிலயம்-கோனியம்மன் கோவில்-என்று அழகான நாவலின் சில அத்யாயங்கள் படித்த நிறைவு." ஜீவா என்றொரு மானுடன்"ஏன் நண்பன் என்பதில் மகிழ்கிறேன்.உங்கள் நேசத்தின் பாதையில் நடைபோடும் உங்கள் தோழமை போ.மணிவண்ணன்

Prasanna Rajan said...

2000-வது ஆண்டு, அதாவது எனது பத்தாம் வகுப்பு விடுமுறை. எல்லா நண்பர்களும் கம்ப்யூட்டர் கோர்ஸ் போய் கொண்டிருக்க என்னை மட்டும் டைப்ரைட்டிங் க்ளாஸ் அனுப்பினார் என் தந்தை. ஆனால் சொன்னால் நம்ப மாட்டீர்கள். டைப்ரைட்டிங் க்ளாஸில் தான் மிக அழகான தாவணி கட்டிய பெண்கள் இருந்தனர். அதுவும் நான் வகுப்பிற்கு செல்லும் மாலை வேளையில் நானும் ஒரு எட்டு வயது சிறுவனும் மட்டுமே ஆண்கள். மற்ற 16 பேரும் பெண்கள். கடலையைப் போட்டுக் கொண்டே கோட் அடித்தது தான் மிச்சம். என் தந்தை என்னவோ அதை அத்தனை சீரியசாக எடுத்து கொள்ளவில்லை.

அந்த நாட்களை இப்படி நினைவுபடுத்தி தொலைத்து விட்டீர்களே ஜீவா சார்...

PPattian said...

இனிமையான அனுபவம்..

Anonymous said...

:-) azhagu...

karuna said...

உங்கள் அனுபவம் மிகவும் அருமை சார்

guru said...

என்ன சார் என்னோட பழசெல்லாம் கிளறி விட்டுட்டீங்க என் டைப் ரைட்டிங் எல்லாம் ஞாபகத்துக்கு வருது.
சில மனுஷங்க ஏன் காலத்துக்கு தகுந்த மாதிரி மாத்திக்க மாட்டேங்குறாங்க? உங்களையும் என்னையும் மாதிரி

guru said...
This comment has been removed by a blog administrator.
Thenammai Lakshmanan said...

நானும் டைப்ரைட்டிங் லோயர் கல்லூரியிலும்., ஹையரும் ஷார்ட்ஹாண்டும் பின்பும் படித்தேன் ஜீவா ...ஆங்கிலம் ...டைப் ரைட்டிங்க் ரெண்டும் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி ... ஷார்ட்ஹாண்ட்தான் தொடர முடியவில்லை., திருமணம் முடிவாகிவிட்டதால் ....என்னிடமும் பிட்மேன் இருக்கிறது நிறைய நினைவை சுமந்தபடி., சொல்ல முடியாமல் ... பால் போன்ற ஒருவர்தான் நம் நினைவுகளை சுமந்து நமக்கு திருப்பி அளிக்கிறார்கள் ஜீவா...

Bala said...

Pasumai maratha ninaivugal....
wonderful sir.

Bala said...

Pasumai maratha ninaivugal....
wonderful sir.

Chithran Raghunath said...

கடைசி வரியின் வேதனை புரிகிறது.

முன்னொரு காலத்தில் அதிகாலை 5 மணிக்கு எழுந்து ஒரு ரெண்டு மாசம் டைப்ரைட்டிங் போனேன். அதில் ஒரு ”கவிதை” சம்பந்தப்பட்ட ஒரு “குட்டி” மலரும் நினைவும் உண்டு. கிளறிவிட்டுட்டீங்களே.

நல்ல பதிவு ஜீவா!

ISR Selvakumar said...

உங்களைப் பற்றி மேலும் பல விபரங்களை இந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் சொல்லியிருக்கிறது.

சுருட்டிய பேப்பரை கையில் ஏந்தியபடி வந்த அந்த தாவணிப் பெண்களை மீண்டும் ஞபாகப்படுத்திட்டீங்களே ஜீவா!

Venkatramanan said...

ஜீவா!
வழக்கம்போல - சுருக்கெழுத்தைப் பற்றிய ஒரு (சுருக் நறுக்) சொல்லோவியம்!
அட்டகாசம்!

தொடர்புடைய ராகவனின் a-s-d-f-g-f!

அன்புடன்
வெங்கட்ரமணன

Osai Chella said...

oru sirikathaikku ulla athe tharathodu eluthiyirukkireerkal ! arumai anna !

Osai Chella said...

Джива Анна, ваша статья является фантастической. Спасибо

Danny said...
This comment has been removed by the author.
Ponnappan.A said...

ஒரு நூல் வடிவத்திற்குரிய அனைத்தும் நீங்கள் எழுதியவற்றில் நான் காண்கிறேன்.
பூதப்பாண்டியில் தான் அப்பொழுது type writing படிக்க வர வேண்டும்.

Oh! you are a first rank holder in short hand.
A.Ponnappa Pillai

kaanchan said...

தட்டச்சும் சுருக்கெழுத்தும் எனக்கு சரளமாக வந்தன. எந்த சிறு தவறும் இல்லாமல் கீ போர்டை பார்க்காமல் படு வேகமாக நான் டைப் அடிப்பதை பார்க்க ஒரு கூட்டமே கூடும். அதே போல சுறுக்கெழுத்தும். என் ஆசிரியர் என்னை தன் பள்ளியின் சூப்பர் ஸ்டாராக அறிவித்து கொண்டாடத் தொடங்கிவிட்டார். அரசுத் தேர்வு பயிற்சிக்காக என்னை வெளி பள்ளிகளுக்கு தனி பயிற்சிக்காக அனுப்பி வைப்பார். வெவ்வேறு குரல்களுக்கும் ஏற்ற இறக்கங்களுக்கும் தனி கவனம் எடுப்பார். லோயர், ஹையர் என்று இரண்டிலும் முதல் வகுப்பு. 25 வருடங்களாக தமிழ்நாட்டில் யாரும் தேர்வாகவே முடியவில்லை என்று சொல்லப்பட்ட (உண்மையா என்று தெரியவில்லை) லண்டன் சேம்பர் ஆப் காமர்ஸ் தேர்வில் சுறுக்கெழுத்தில் முதலிடம் என்று கலக்கினேன். பல குழுக்கள் நடத்திய தேர்வுகள் எதிலும் சோடை போகவில்லை.........
ரசித்தோம் தங்கள் பதிவுகளை.....
முன்பு தூவிய விதை இன்று “விருட்ஷமாய்”.......
“வாழ்த்துக்கள்”......

ராஜன் said...

Kalakkitteenga Jeeva Sir....

Dr. B N Rajan
@ Dimidth Petkovski

veda class ganesh said...
This comment has been removed by the author.
veda class ganesh said...

எனது கடந்த கால நிகழ்வுகளை rewind செய்துவிட்டீர்கள். அந்த நிகழ்வுகள் நடந்த இடமும், ஊரும், கதாபாத்திரங்களின் பெயர் மட்டுமே வித்தியாசமே தவிர, நினைவலைகளில் மாற்றம் இருக்காது. சிலர் மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைப்பார்களோ என்று இதனை ஒத்துக்கொள்ள மறுப்பார்கள். வேறு சிலரோ, தைரியமாக, உண்மைதானே என்று பரந்த மனதுடன் ஒத்துக்கொள்வார்கள். அந்த வரிசையில் நான் உங்களை பாராட்டுகிறேன். ஏனெனில் நானும் அதில் ஒருவன்.,,,,,,,,,,,,,,,கணேஷ் from abu dhabi

lalli said...

Excellent writing Jeeva Sir..!!

kaanchan said...

இரண்டாம் முறையாக இந்தப் பதிவினைப் படித்திடும் போது ஒரு தனி மகிழ்ச்சி.....

இத்தனை திறமைகளை ஒருங்கே கொண்ட இவர் நான் என்றும் போற்றும் அருமை நண்பர் என்பதினால்....

என்ன எளிமை, புதிய நண்பர் பழைய நண்பர் என்ற பாகுபாடு இன்றி, என்றும் எப்போதும் ஒரே நிலையில்....

தன் பதிவுகளில் தான் ரசித்த அந்த காலக்கட்டத்திற்கான நிகழ்வுகளை நம் மனக்கண்முன் பதிப்பது அவருக்குக் கை வந்த மற்றொரு கலை, அது ஒரு எழுத்தாரக்கான முக்கியத் தகுதி.....

”தன் கையே தனக்கு உதவி”.....
“தூரிகையே ஓவியனுக்கு உதவி”.....
“நம்பிக்கையே நமக்கு உதவி”.....

“அன்றும், இன்றும், என்றும்” தன் திறமையை மட்டுமே மதிக்கப்பட வேண்டி இன்றும் “துடிக்கும் கரங்களாய்” துடிப்புடன் இருக்கும் நண்பரே.....
வெலிவீர் விரைவில்....

Kavitha said...

A wonderful recollection of thoughts!

SENIOR JOURNALIST M RAFI AHMED said...

Jeeva you have brought back the golden memories of childhood days. Yes, I too was a student of a type-writing institute at Raja Street opposite to Viswanatha Iyer sweet shop (now Krishna Sweets). My father used to put me at the institute during summer holidays. I was put in the morning batch wherein I had to attend 6.30 am class. It was a wonderful experience,but I could not take up the exam then. I developed my typewriting skill through my father's Remington Rand typewriter.