Friday, February 5, 2010
எப்பவும் நான் ராஜா!!
விடிந்தால் சென்னைக்கு கல்லூரியில் சேர செல்லவேண்டும்...மாலையில் சிறை அரங்கத்தில் அன்னக்கிளி படத்தின் 58 வது நாள் விழா. சிவகுமார், இளையராஜா என்று பெரிய ஆட்கள் வருகிறார்கள்ஆவலோடு விழாவிற்கு சென்றேன். விழாவுக்கு வந்த கூட்டம் முழுக்க இளையராஜாவுக்கு வந்த கூட்டம். அவருடைய இசை நிகழ்ச்சியும் உண்டு...ஒரு திரைப்படம் வெளியான இந்த குறைந்த நாட்களில் பெரிய ஆள் ஆன அந்த உருவத்தில் சிறிய மனிதனை பார்க்கத்தான் கூட்டம்!
டப்பா படங்களையே வெளியிட்டு வந்த அத்தாணி பாபு இந்த படத்தை வாங்கியிருந்தார். ஸ்டில்களுடன் அந்த படத்தின் பாடல்கள் அடங்கிய ஈபி ரெகார்ட் கவர் ஒன்றையும் கொடுத்தார். வண்ணத்தில் ஒரு கருப்பு மனிதனின் படம்..இசை அமைப்பாளர் என்று வெளியாகியிருந்தது. ஒரு புதிய சகாப்தத்தை படைக்கபோகிறவர் என்ற உணர்வு அப்போது ஏற்படவில்லை. படம் இருதயா தியேட்டரில் வெளியாகி டப்பாவுக்குள் போகும் நிலையில் பாடல்களால் சூடு பிடித்து கிடு கிடு என்று பற்றத்தொடங்கியது...எங்கு பார்த்தாலும் மச்சானை பார்த்தீங்களாதான்!!! படம் ஹிட்..வெற்றிவிழா என்று ஒரே கலக்கல்தான்...மேடையில் பேனர் வரைந்ததற்காக எங்கள் நிறுவனத்திற்கு ஒரு (கேடையம் எதுவும் ஸ்டாக் இல்லாததால்) வாட்ச் பரிசு...இளையராஜா கையால்தான் வாங்குவேன் என்று முதலிலேயே அத்தாணி பாபுவிடம் விண்ணப்பம்..வெள்ளை சட்டையை வெள்ளை பேண்ட்டில் இன் செய்திருந்த அந்த குட்டையான மாமனிதனிடம்..அப்போது அவரை விட குட்டியாயிருந்த இந்த பொடியன் எங்கப்பா சார்பில் இதை வாங்கினான்! மறக்க முடியாத கணங்கள்!!
ஆமாம்..இசையறிவு அப்படி என்னதான் இருந்தது...காலையில் பாடும் ராகம் என்னவோ...என்று தம்பி கேட்டவுடன்...நீளமாக ஆலாபனை செய்து 'பூபாளம்' என்று ராவணன் சொல்லி கேட்டது மட்டும்தான்...எல்லோரையும் போலவே திரைப்பாடல்கள் மட்டுமே இசை ரசனையை கொடுத்தன. டேப் ரிக்கார்டர் அப்போதுதான் பரவிக்கொண்டிருந்தது...மேடைகளில் வணக்கம் பலமுறை சொன்னேன்...என்று தமிழ்ப்பாடலில் சம்பிரதாயமாக ஆரம்பித்து பின்னர் ஷர்மிளியும், யாதோன் கி பாராத்தும், பாபியும் மட்டுமே கேட்கக்கிடைத்த காலம்...! எங்கும் யாவரும் இந்தி பாடல்களையே கேட்டு மகிழ்ந்திருந்தபோது...புறப்பட்டதுதான் ராஜாவின் பயணம்! ஏற்கனவே ஜி.கே.வெங்கடேஷின் பாடல்களை புதிய பாணியில் 'பொண்ணுக்கு தங்க மனசு' போன்ற படங்களில் கேட்டபோது...ஏற்பட்ட சந்தேகம் அவருடைய உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ராஜாவின் பாடல்களை கேட்டபோது தெளிந்தது...பட்டி தொட்டியெல்லாம் மேடையில் கம்யூனிச கானங்களை முழங்கிய பாவலரின் தம்பி என்ற ஹோதா...அதற்க்கு முன்னரே பத்மா சுப்பிரமணியம் குடும்பத்து பெண்கள் வெளியிட்ட தமிழக நாட்டு பாடல்கள் என்ற கேசட்டின் பாடல்கள் அன்னக்கிளியின் மூலத்தை பறைசாற்றின. அந்த கேசட்டும் கவரும் இன்னும் என்னிடம் ராஜாவின் பெயருடன் இருக்கின்றன.
அப்போதும் எம்.எஸ்.வி., கே.வி.எம்., போன்ற இசை அமைப்பாளர்கள் புகழின் உச்சியில் இருந்தாலும்..புதுமுக நடிகர்கள், புதுமுக இயக்குனர்கள் , புதிய பாணி திரைப்படங்கள் என்று கிளம்பி வந்த காலத்தில் உறுதுணையாய் இருந்தது ராஜாவின் இசை. பாமர ரசிகர்கள் கூட பின்னணி இசையின் அனுபவத்தை உணரத்தொடங்கிய காலம். ரீரிக்கார்டிங் சூப்பர் மா என்று யாரை பார்த்தாலும் பேசிக்கொண்டிருந்தது ஒரு ஆச்சரியமான திருப்பம்! பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம் என்று புறப்பட்ட பட்டாளம் இசை இளையராஜா என்ற டைட்டில் கார்டுடந்தான் ஆரம்பித்தனர்..சலீல் சவுத்ரியுடன் ஆரம்பித்த பாலு மகேந்திராவும் இந்த வரிசையில் சேர்ந்தவர்!! ஒரு இசை அமைப்பாளருக்கு கட் அவுட் வைக்கத் தொடங்கியது இவருக்குத்தான். பூஜை, இன்று முதல் விளம்பரங்கள் எல்லாமே நடிகர்களின் படங்களுக்கு ஈடாக இவருடைய போட்டோ, மற்றும் பட்டங்களுடன் வெளியிடத் தொடங்கினர்! இளையராஜாவும் ஒரு சாமியார் தோற்றத்தில் தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார்..கடும் பணிகளுக்கிடையே ஏராளமான படங்களுக்கு பாடல்களையும் பின்னணி இசையையும் தந்தார். எங்கள் கடையில் பேனர் வரையும்போது அவருடைய பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவோம்..இதனால் என் சக சிவாஜி / எம். எஸ்.வி. ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானேன். தியாகம், தீபம் போன்ற படங்கள் வந்தபோது முன்னவர்கள் சமாதானம் ஆனார்கள்.!
ரஜினி, கமல், மைக் மோகன் போன்றவர்களின் படங்களில் இளையராஜா கட்டாயம் ஆனார். ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ராஜாவின் தம்பி கங்கை அமரன் போன்ற அடுத்த தலைமுறையினரின் படங்கள் பாடல்களுக்காகவே ஓடின. பாலசந்தர் போன்ற இயக்குனர்கள் கூட ராஜாவை அணுக நேர்ந்தது அவர்களுக்கே கஷ்டமாக இருந்திருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலமாக இளையராஜா அதிருப்தியாளர்களுக்கு ஒரு புதிய வழி பிறந்தது...அது ரகுமானின் வரவு. பாலசந்தரின் சொந்தப்படமான ரோஜாவுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள இசை அமைப்பாளரான எ.கே.சேகரின் மகனும் விளம்பர ஜிங்கிள்ஸ் இசை அமைப்பாளருமான இந்த இளைஞர் இசை மற்றும் தொழில்நுட்ப கலவைகளை சிறந்த முறையில் உருவாக்கி பெரும் புகழ் பெற ஆரம்பித்தார்...மணிரத்னம், பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்கள் அப்படியே முகாம் மாறினர். ராஜாவுக்கு அப்படியே மாற்றாக தோற்றம் தர ஆரம்பித்தார் ரகுமான். இமேஜ் பில்டிங் , மக்கள் தொடர்பு, எல்லாவற்றிலும் ரகுமான் முன்னிலைபடுத்தப்பட்டார். இவர் பரதேசி கோலம் என்றால் அவர் கார்ப்பரேட் ஸ்டைல்..உடை, சிகையலங்காரம் அனைத்தும் நிபுணர்களாலும் விளம்பர எஜெண்டுகளாலும் முடிவெடுக்கப்பட்டு அவருடைய பயணம் திட்டமிட்டு அமைக்கப்பட்டு இன்று ஆஸ்கார், கிராம்மி வரை சென்று விருதுகளை அள்ளி வருகிறார்.
இளையராஜா, ஒரு முசுடு, கஞ்சன், அல்பம் என்பது போல் ஒரு திட்டமிட்ட சித்தரிப்பு தமிழ் ஊடகங்களில் நிலவி வருகிறது..பலரால் ஒரு கருப்பு தலித் பேர்வழி இவ்வளவு உயரங்களை அடைந்ததை ஜீரணிக்க முடியவில்லை என்றுதான் நான் கருதுகிறேன். அவருடைய இசையை பற்றி ஒரு வரி விமர்சிக்க அருகதை இல்லாதவர்கள் அவருடைய பிற தன்மைகளை கடுமையாக சாடுகிறார்கள். சிலருக்கு அவரை பிராம்மணவாதியாக சித்தரிப்பதில் ஆனந்தம். செம்மங்குடியின் அறையில் உள்ள ஒரே ஒரு புகைப்படம் இளையராஜாவினுடையது என்று ஒரு புலனாய்வாளர் சித்தரிக்கிறார்..ஆயிரக்கணக்கான பாடல்களில் 'கனவு காணும் வாழ்க்கை யாவும்' போன்ற ஒன்றிரெண்டை கண்டுபிடித்து, அவரிடமோ பாலு மகேந்திராவிடமோ கேட்காமல் இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் காப்பியடிக்கப்பட்டவை என்று தீர்ப்பளிக்கிரார்கள் பலர். ஆதாரமில்லாமல் அவர் பேசியதாக எதையோ சொல்லி கடுமையாக சாடுகிறார்கள் சிலர்..ஒட்டுண்ணி எழுத்தாளர்களோ பேட்டி காண வந்த நிருபருக்கு பச்சை தண்ணி கொடுக்க மறுத்த கஞ்சன் என்று புதுக்கதை புனைகிறார்கள். எத்தனை எத்தனை தாக்குதல்கள். என் அபிமான கட்டுரையாளரும் நண்பருமான ஷாஜி கூட அவருடைய குணநலன்களை கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தது ஒரு அதிர்ச்சி..நியாயமான காரணங்களை அவர் கூறினாலும்...மனதுக்கு கஷ்டமாக இருந்தது...என்ன செய்வது...என் மூளைக்குள் எங்கோ ஒரு இளையராஜா ரசிகன் பதுங்கியிருக்கிறானே!.
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஆளுக்கு தகுந்த அளவுகோல்களை ஊடகங்கள் வைத்திருக்கின்றனவோ என்பதுதான். பி.ஆர்.வேலைகளில் படு வீக்கான ராஜாவை எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடிப்பவர்கள் பிறரிடம் தாள் பணிந்து நிற்பது காமெடியாக இருக்கிறது. இந்திய திரைப்பட பாடல்கள் ஒப்பீட்டில் ஒரு சாதாரண பாடலான 'ஜெய் ஹோ' இத்தனை விருதுகளை குவிக்கும் அரசியலும் பின்புலமும் , எந்த புலனாய்வு எழுத்தாளர்களாலும் விவாதிக்கப்படுவதில்லை...தேசிய பெருமிதம் தடுக்கும் போலிருக்கிறது. ஒருவருடைய மத நம்பிக்கை மற்றும் செயல்களும் விவாதிக்கப்படும்போது, இன்னொருவரை சவுகரியமாக மறக்கக்கூடிய வசதிகள் இங்கிருக்கின்றன.
சரி எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். 'அதர்மம்' பட பூஜை ஏவிஎம்மில். என் தம்பியின் முதல் படம் என்பதால் போயிருந்தேன். கடும் மழை.. எங்கும் சேறும் சகதியும்...வெள்ளை வெளேர் செருப்பை கழற்றி வைத்துவிட்டு இளையராஜா உள்ளே வந்து வணங்குகிறார். வெளியே வரும்போது நெரிசலில் ஒரு தள்ளு முள்ளு. செருப்பை மாட்ட குனிகிறார். பதட்டப்பட்ட என் நண்பர் ஒருவர் பச்சக் என்று தன் சேற்று காலை செருப்பின் மீது வைக்க..செருப்பு ஒரே கண்றாவியாகிவிட்டது...ராஜாவின் இமேஜ் குறித்து ஒரு வித எண்ணம் கொண்டிருந்த நண்பர் நடுங்கி விட்டார்...வாய் குழற எதோ சொல்ல வந்த அவரை ராஜா சமாதானப்படுத்தி, குனிந்து தேங்கி நின்ற நீரில் செருப்பை அலசி அணிந்து கொண்டு வெளியேறினார்.
அவரை கடைசியாக நேரில் நான் பார்த்தது அப்போதுதான்.
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
அருமையான கட்டுரை ஜீவா...
எத்தனை திட்டமிட்ட பரப்புரைகள் இருந்தாலும் இளையராஜாவின் மெட்டுக்களுக்கு 'தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும்...'
அவர் இனிமுதல் திரைபாடல்களுக்கு இசை அமைப்பதை விடுத்து சிம்போனி, திருவாசகம் போன்று இசையில் முயற்ச்சிகள் எடுக்க வேண்டும். அதையே அவரிடம் எதிர்பார்க்கிறேன்.. பின்னணி இசையில் அவரை மிஞ்ச யாரும் இல்லை என்பது என் கருத்து...
அன்புள்ள ஜீவா அவர்களுக்கு, நான் உங்களை ஓர்குட் மூலம் ராஜா ரசிகராய் அறிந்துள்ளேன். நானும் ஒரு தீவிர ராஜா ரசிகன் தான். ஆனால் என்னவோ இந்த ஜாதி த்வேஷத்தையும், மத புலம்பல்களையும் கேட்கும் போது எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை.
செம்மங்குடி வீட்டில் இருக்கும் ஒரே புகைப்படம் என்ற பெருமை ராஜாவுக்கே கூட இருக்கும். அவர் பிராமணர் என்பதால் அல்ல, ஆனால் ஒரு இசை மேதை என்பதால். இதை ஏன் வசதியாக மறந்து விடுகிறார்கள் என்று எனக்கு புரிந்ததே இல்லை.
பாலசந்தர் எம்.எஸ்.வியோடு இருந்தது அவர் பிராமணர் என்பதற்காகவா? அல்லது ரஹ்மான் ஒரு பிராமணர் என்பதற்காகவா அவரை முன்னிறுத்தினார்கள்?
ராஜாவுக்கு எவ்வளவோ மேன்மையான அடையாளங்கள் இருக்கும் போது அவர் ஒரு தலித் என்று அடையாளப்படுத்தும் இந்த முயற்சி தேவையற்றது.
நான் ஒரு பிராமண வகுப்பை சேர்ந்தவன் தான். ஆனால் நான் இளையராஜாவை கடவுளுக்கு அடுத்ததாகவே நினைக்கிறேன். என் மாதிரி எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.
அதனால் இது ஒரு பிராமண சதி என்பது போல் சித்தரிக்கப்படுவது அநாகரிகமானது, அனாவசியமனதும் கூட.
ஒவ்வொருத்தருக்கும் இருந்த கருத்து வேறுபாடே காரணமேயன்றி வேறேதும் காரணமாக எனக்குத் தோன்றவில்லை.
ரஹ்மானின் எழுச்சியை என்னாலும் ஜீரணிக்க முடியாமல் இருந்தாலும் அதற்கு போகிறவர் வருபவர் மீதெல்லாம் பழி போடும் அளவுக்கு நான் போவதில்லை.
உங்கள் சித்திரங்களை ரசித்த அளவுக்கு உங்கள் எழுத்தின் நிறத்தை என்னால் ரசிக்க முடியவில்லை.
//எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஆளுக்கு தகுந்த அளவுகோல்களை ஊடகங்கள் வைத்திருக்கின்றனவோ என்பதுதான்//
Thats true JEEVA
A nice review abt genius JV.
நாராயணன்,
இதை எதிர்பார்த்தேன்..சாதி பெயர்கள் வந்ததால் இதை சொல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் சொல்வது போல் எம்.எஸ்.வியும் ரகுமானும் பிராமணர்கள் அல்ல என்று நானும் அறிவேன்.. நான் பிராமணர்களையும் எங்கும் இந்த கட்டுரையில் குற்றம் சாட்டியதாக தெரியவில்லை. சாதி காழ்புணர்ச்சி அனைத்து சாதிகளிடமும் இருக்கிறது என்பதுதான் நான் சுட்டிக்காட்ட விரும்பியது! உண்மை கசக்கத்தான் செய்யும்..! இது உங்களுக்கு ஏன் வலிக்க வேண்டும் என்று புரியவில்லை!!! மீண்டும் ஒரு முறை படியுங்கள்...தவறாக இருந்தால் திருத்திக்கொள்கிறேன்.!
ஜெய் ஹோ ஏன் சாதாரண பாடலானது என்று புரியவில்லை. பதிவை சுத்தமாக ஏற்காவிட்டாலும் , ரசித்தேன். உங்கள் பழைய நினைவுகளுக்காக (மட்டும்).
இத்தனை நாள் வாழ்ந்ததில் இளையராஜாவின் இசையை கழித்துவிட்டுப்பார்த்தால் வாழ்க்கை ஒன்றுமே இல்லை என்றுதான் தோன்றும். அந்த அளவுக்கு அன்றாட வாழ்வில் இரண்டற கலந்துவிட்டிருக்கிறது.
நல்ல பதிவு ஜீவா.
ஜீவாசார் உங்கள் கட்டுரை என்னை உசுப்பிவிட்டது..மன்னிக்கவும் கொஞ்சம் நீள்மான கமெண்ட்
நான் மிகவும் மதிக்கும் இசை விமர்சகரான ஷாஜி அவர் தொடர் எழுதிவரும் உயிர்மை இதழில் கடந்த மாதம் இளையராஜாவைப்பற்றி தன் கோபத்தை அல்லது வெறுப்பை வெளிப்படுத்துவதை போல ஒருகட்டுரையை எழுதியிருந்தார். அந்த கட்டுரையை படித்த அடுத்த கணமே ஷாஜியின் மேல் வைத்திருந்த மதிப்பு தலைகீழாக மாறிவிட்டது.இது வரை அவர் எழுதிய விமர்சனங்கள் அனைத்துமே எழுத்தாளனின் பார்வையில் அல்லது விமர்சகனின் பார்வையில் தான் அறிந்த விஷ்யத்தை பலருக்கும் கடத்தும் பாவனையில் எழுதப்பட்டிருக்கும்.மேற்பட்ட எந்த கட்டுரையிலும் தனிப்பட்ட ஒருவரை தாக்குக்கிற த்வனியோ அல்லது கிண்டலடிக்கும் பாவனையிலோ அது எழுதப்பட்டிருக்காது.ஆனால் இளையராஜாவை பற்ரிய கட்டுரையில்மட்டும் அவர் ஒரு தற்குறி என்பதாகவும் அதிகமாக பெருமை அடித்துக்கொள்பவர் என்பது போலவும் காப்பியடிக்கிறார் என்பது போலவும் எழுதி உடன் இளையராஜாவின் தற்கொலைபடைகள் என்பது போலவும் சிலரை சகட்டுமேனிக்கு கிண்டலடித்திருக்கிறார். உண்மையில் இதை ஷாஜிதான் எழுதினாராஅல்லது வேறுயாரேனும் இடைசெருகலாக தங்கள் கைவரிசைகளை நீட்டிவிட்டார்களா என்பது தெரியவில்லை. அப்படி அதை ஒரிஜினலாக ஷாஜி யே எழுதியிருந்தால் அவரை அசட்டு விமர்சகர் என்றோ அல்லது தமிழ் இசைகுறித்தும் தமிழ் வாழ்வுகுறித்தும் அக்கறயில்லாத வழக்கமான ஒரு வழவழ குழகுழ மல்லு மனிதர் என்றும் மதிப்பிட விரும்புகிறேன். நெருஞ்சிமுள் குத்த வயக்காடுகளில் ஆடுமாடுமேய்த்த தமிழர்களால் மட்டுமே அறிய முடியும் இளையராஜாவின் பங்களிப்பு என்ன என்பதை.அவர் அளித்தது எம் நிலத்தின் இசை. அது இன்றோடு காற்றில்கேட்டு நாளையோடு நம்மைவிட்டு போகிற சத்த ஒருங்கிணைப்புகளின் இசைஅல்ல. இசைய்யை வெறும் ராகங்களால் அளக்கதெரிந்த ரசனைகளை விட கடந்தது அவர் உருவாக்கிய ஸ்வரக்கோர்வைகள்.விருதுகள் அத்ன் காலைசுற்றும் நாய்குட்டிகள். மதிப்பீடுகளைகுலைக்கும் இன்றைய கலாச்சாரத்தின் இசைக்குமுன் இளையராஜாவின் மனிதவிழுமியங்களை உள்ளடக்கிய இசை தோற்றுபோனால் அத்ற்காக நாம் மகிழத்தான் வேண்டும் ஏனென்றால காலத்தின் சுழற்சி கிளாசிக்குகளை மட்டுமே காப்பாற்றும் என்பதை நாம் நன்கு அறிவோம்.
மற்றபடி அவர் காட்டுமனிதர். ஒருகிராமத்துமனிதர் அதுவும் தாழ்த்தப்ப்ட்ட வகுப்பை சார்ந்த வசதிவாய்ப்புகளற்ற குடும்பத்தைச்சேர்ந்தவர் அவர் செய்யும் தவறுகள் வரலாற்றின் அல்லது காலம்காலமாக அவரை ஒடுக்கிவந்த சுத்தம் நாகாரீகம் என்ற போர்வையில் அவரை ஒடுக்கி வந்த திமிர்பிடித்த அதிகாரவர்க்கத்தினரின் தவறே ஒழிய அது அவருடைய தவறல்ல.
திரு ஷாஜி அவர்களுக்கு
இதுநாள் வரை மலையாளத்தில் சிந்தித்து தமிழுக்காக எழுதி பேர் பார்த்தது போதும்.முடிந்தால் தமிழ் இசை பற்றி தெரிந்துவிட்டு எழுதுங்கள்..தமிழ்நாட்டில் ஏதாவது ஒருகுடிசைவீட்டில் கூழ்குடித்துவிட்டு வந்து அவரது இசைய்யை பற்றி பேசுங்கள் .தமிழர் வாழ்வில் தாலாட்டு ஒப்பாரி நலங்கு என பல வாழ்வியல் இசைகள் இருக்கின்றன . இதையெல்லாம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.இதற்கெல்லாம் இசையறிவில் என்ன இடம் என்றும் தெரிவியுங்கள். மற்றபடி அவர் உண்மைபேசினா5ரா பொய்பேசினாரா என தீர்மானிக்கும் அல்லது வேவுபார்க்கும் மூன்றாம்தர விமர்சனத்தை இனியும் தொடராதிருப்பீர் என நம்புகிறேன்
சாரி ஜீவா சார் கொஞ்சம் அதிகம் இடம் எடுத்துக்கொண்டேன்
நல்ல பதிவு ஜீவா சார். இளையராஜாவின் மீது எத்தனை பேர் என்ன களங்கங்கள் சொன்னாலும் அவரது இசை அவற்றை தூக்கி எறிந்துவிடும். நாமென்ன பேச!
நான் கே.பி. கிருஷ்ணகுமார். உடுமலை. (தற்போது திருப்பூர்) ஜனனியுடன் ஒருமுறை உங்களை சந்தித்திருக்கிறேன்!
ஒரு சிறு திருத்தம்: கட்டுரையின் கடைசி வரியை நீக்கிவிடுங்கள். ப்ளீஸ்...
அருமையான பதிவு ஜீவா சார்..
ராஜா மீது தனிப்பட்ட தாக்குதல்கள் செய்து தன வக்கிரங்களுக்கு வடிகால் தேடும் 'ஒட்டுண்ணி' எழுத்தாளர்களின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது. ராஜாவின் இசை பற்றி பேச எந்த தகுதியும் இல்லாத 'ஜென்மங்கள்' அவர்கள். இசையையும் தாண்டி அவரது சொந்த வாழ்க்கை , கோபதாபங்களை குறை செய்தே ஒரு கும்பல் 'பிழைத்து வருகிறது' .
இவர்கள் ராஜ மீது வைக்கும் 'குற்ற சாட்டுகளை' படித்தால் ஒரு பக்கம் கோபமும் ஒரு பக்கம் சிரிப்பும் தான் வருகிறது.
நண்பர் நாராயணன் அவர்களுக்கு ..ஜீவா எந்த ஜாதியையும் மையப்படுத்தி பேசவில்லை. எனது பிராமண நண்பர்கள் பலருக்கும் ராஜா மீது அளவற்ற அபிமானம் உண்டு.. ஒரு நண்பர் மற்ற இசை அமைப்பாளர்களின் பாடல் கேட்டாலே சானலை மாற்றி விடுவார்.
அவர் சொல்வதில் இருக்கும் உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.. ராஜாவை வீழ்த்த எய்யப்பட்ட அஸ்திரங்களில் எய்தவர்களே வியக்கும்படி இலக்கை அடைந்த ஒரு அஸ்திரம் தான் 'ரஹ்மான்' (ரஹ்மானின் Agentகள் அவரை எங்கு வேண்டுமோ அங்கு தூக்கி செல்கிறார்கள்.. ராஜா இதனை திறமையுடன் ஒண்ணுமில்லாத பயல்களின் அர்ச்சனையை கேட்டுக்கொண்டு வாழ நேர்ந்தது இசை உலகின் அவலம் தான்...
//சிலருக்கு அவரை பிராம்மணவாதியாக சித்தரிப்பதில் ஆனந்தம். செம்மங்குடியின் அறையில் உள்ள ஒரே ஒரு புகைப்படம் இளையராஜாவினுடையது என்று ஒரு புலனாய்வாளர் சித்தரிக்கிறார்..//
மேற்கோளிட்ட வார்த்தைகள் தான் நான் எழுதியதற்கு காரணம். செம்மங்குடியோடு ராஜாவை சம்பந்தப்படுத்தினால் நண்பர் ஜீவாவுக்கு ஏன் உறுத்த வேண்டும் என்பதே என் கேள்வி. அவர் என்னையே மறுபடியும் கேள்வி கேட்டால் எப்படி.
சரி, பிராமணவாதம் என்றால் என்ன? பிராமணவாதி எனப்படுபவர் யார்? அப்படியே முதலியார்வாதி, செட்டியார்வாதம் என்றெல்லாம் உண்டா என்பதையும் விளக்கினால் நன்றாக இருக்கும்.
ராஜாவுக்கு ராஜா என்ற அடையாளமே போதும் என்பதே என் வாதம். அவருடைய இசையே அவருடைய அடையாளம். அதைத்தான் ஜீவாவும் சொல்ல வருகிறார் என்பதையும் நானறிவேன். ஆனால் சில அநாவசிய நகையாடல் இருந்ததால் அதைச் சுட்டிக் காட்ட வேண்டியதாகி விட்டது.
ராஜா வைரமுத்துவை ஒதுக்கியதர்க்கும் ஜாதி தான் காரணமா? . பாரதிராஜா கூடத் தான் ராஜாவைப் பிரிந்தார். அதற்க்கும் ஜாதி தான் காரணமா? எல்லாத்திலும் ஜாதியை பார்ப்பதை விட வேண்டும் என்பதே என் தரப்பு. மற்ற எவ்வளவோ காரணங்களும் இருக்கலாம் என்பதையே நான் வலியுறுத்துகிறேன்.
நண்பர் சந்திரா மற்றும் ஜீவா அவர்களுக்கு நன்றி.
அன்பு நண்பர் நாராயணன்
ஒரு உதாரணம் சொல்கிறேன்..
ராஜா 'பெரியார்' படத்திற்கு இசை அமைக்கவில்லை என்பதால் அவரை ஒரு துரோகி போல் சித்தரித்த 'புரட்சிக்காரர்கள்' முதல் அனைவருக்கும் ராஜா பற்றிய எண்ணம் என்ன தெரியுமா ?
"ராஜா ஒரு தலித். அவர் என்ன பிராமணன் போல் நடந்து கொள்வது ".
இன்னொரு பக்கம்
(மன்னிக்கவும்!) நீங்கள் சார்ந்திருக்கும் பிராமண சாதியை சேர்ந்த புகழ் பெற்ற ஒரு பத்திரிக்கை யில் 'நாயகன்' பட விமர்சனத்தில் ராஜாவின் இசை பற்றி வந்த விமர்சனம் படித்திருப்பீர்கள்.
இவை அனைத்துக்கும் ஒரே பின்னணி தான்.
அது அவரது ஜாதி..
இது கூட என் கருத்து தான்.. என்னளவிற்கு கூட ஜீவா அவர்கள் ஜாதி பற்றி எழுதவில்லை..
என் எழுத்து உங்களுக்கு கசக்கலாம் ..ஏனெனில் அது உண்மை.
//சிலருக்கு அவரை பிராம்மணவாதியாக சித்தரிப்பதில் ஆனந்தம். செம்மங்குடியின் அறையில் உள்ள ஒரே ஒரு புகைப்படம் இளையராஜாவினுடையது என்று ஒரு புலனாய்வாளர் சித்தரிக்கிறார்..//
மேற்கோளிட்ட வார்த்தைகள் தான் நான் எழுதியதற்கு காரணம். செம்மங்குடியோடு ராஜாவை சம்பந்தப்படுத்தினால் நண்பர் ஜீவாவுக்கு ஏன் உறுத்த வேண்டும் என்பதே என் கேள்வி. அவர் என்னையே மறுபடியும் கேள்வி கேட்டால் எப்படி.//
திரு நாராயணன்,
இந்த உறுத்தல் எனக்கு ஏற்பட்டதில்லை..சாரு நிவேதிதாவுக்கு ஏற்பட்டது..அதற்கு நான் கண்டனம் தெரிவித்திருக்கிறேன் என்பது உங்களை சென்றடையவில்லை என்பது என் எழுத்துக்கு கிடைத்த தோல்வியாககருதுகிறேன்.
சந்திரா, ஆனந்த விகடனை ஒரு பிராமண பத்திரிகை என்று சொல்வதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். 20 வருடங்கள் விகடனைப் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். திரை விமர்சனம் செய்வதற்கு ஒரு குழு இருக்கிறது. அதில் இருப்பவர்கள் சில சமயம் ராஜாவின் இசையை குறைத்து மதிப்பிட்டு இருக்கலாம். அதற்காக விகடனே ராஜா எதிரி என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர். எனக்குத் தெரிந்து சிம்பொனி இசைத்து விட்டு திரும்பிய ராஜாவுக்கு ஜூனியர் விகடன் தான் மிகப்பெரிய கவரேஜ் கொடுத்தது. எவ்வளவோ திரைப்படங்களுக்கு ராஜாவை மையப்படுத்தியே விமர்சனம் எழுதியதும் இதே விகடன் தான். இன்றும் ராஜாவுக்கு அடிக்கடி பக்கம் ஒதுக்குவதும் இதே விகடன் தான்.
உண்மை என்னவெனில் 80-களில் இளையராஜாவைப் புகழ்ந்து புகழ்ந்து ஓய்ந்து விட்டன பத்திரிகைகள் என்பது தான் உண்மை. //இளையராஜாவே காணாமல் போய் விடுவார்// என்றால் என்ன அர்த்தம்? உயர்ந்த ஒரு விஷயத்தைத் தான் இப்படிச் சொல்ல முடியும். கமல் நடிப்பில் சிவாஜியே காணமல் போய் விடுவார் என்றால் என்ன அர்த்தம்? சிவாஜி தான் இருப்பதிலேயே சிறந்த நடிகர், அவர் கூட காணாமல் போகிறார் என்று சொல்வது ஒரு வகை சொல்லாடல். ஒரு விஷயத்தை பாராட்டும் போது இருப்பதிலேயே சிறந்ததோடு ஒப்பிட்டுத் தான் அதையும் விட இது சிறந்தது என்று சொல்ல முடியும். அது ஒரு வித பாராட்டு தானே தவிர சிவாஜி இந்த விமர்சனத்தால் குறைந்து விடவில்லை. மாறாக கமல் தான் உயர்த்தப்படுகிறார் . அதே போலத் தான் அந்த விமர்சனத்தையும் பார்க்க வேண்டும்.
சில காலமாக ஆனந்த விகடனும், (பல காலமாக) ஜூனியர் விகடனும் தரம் தாழ்ந்து போன படியால் நான் அவைகளைத் தொடுவதில்லை. இருந்தாலும் இப்படி எல்லாவற்றையும் ஜாதியுடன் சேர்த்தே பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. சில பேர் அப்படி இருந்தால் இருந்து விட்டு போகட்டும். நாம் அப்படி இருக்க வேண்டாமே.
ஜீவா சார், நீங்கள் சாருவை கிண்டல் செய்வதற்காக அந்த வாக்கியத்தை எழுதியிருப்பதை இப்போது புரிந்து கொள்கிறேன். அதனால் என் பதிவும் அவரை நோக்கியே என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ப.ஜீவானந்தம் அவர்களின் பரம்பரைக்கே உரித்தான பாணியில் ஆணித்தரமாக உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி !!!
dear jeeva sir very nice article with your own Stamp :)
I would very much to undestand what is written here... But, I don't understand this language. So, I only can say I I like the image, and let a flying kiss for you, artist and friend!
மிகப்பிடித்த பதிவு....
ஓவியம் கலக்கல் சார்...(எனது கிறுக்கலும் இங்கே... http://thamizhparavai.blogspot.com/2008/08/blog-post.html)
ராஜாவுடன் நீங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பதிவில் போட்டிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்...
அவரைப் பற்றி எதுவும் பேச வேண்டாம்...
ராஜா நம்மை அவரைப் பற்றிப் பேசுவதற்கு நேரமில்லாமல் இசையால் நிரப்பி இருக்கிறார்...
காதுகளின் வேலையே ஓயாத போது, வாய்க்கு ஏன் வேலை கொடுக்க வேண்டும்...
மொத்தம் நாலாயிரத்துச் சொச்சம் பாடல்களாம்...1500க்கூடத் தாண்டியதில்லை...இந்த வருசத்துக்குள் இதுவரை அவர் இசையமைத்த அனைத்துப் பாடல்களையும் கேட்டுவிட வேண்டும்...
ராஜாவின் ஜாதி இசை மட்டுமே.. மற்றவர்களுக்கு அது தொழில்..
@நாராயணன்.
ராஜாவுக்கு எவ்வளவோ மேன்மையான அடையாளங்கள் இருக்கும் போது அவர் ஒரு தலித் என்று அடையாளப்படுத்தும் இந்த முயற்சி தேவையற்றது.///
மற்ற அடையாளங்கள் மேன்மையானவை என்றால், தலித் என்ற அடையாளம் தாழ்ந்தது என சொல்ல வருகிறீர்களா? காலம் காலமாக காலில் செருப்பு போடக்கூட அனுமது மறுக்கப்பட்ட, முடமாக்கப்பட்ட ஒரு சமூகத்தில் மிகுந்த வீரியத்துடன் ஒரு கலைஞன் புறப்படும் போது அவனின் சமூகத்தால் அவன் அடையாளப்படுத்தப்படுவது தவறாகாது. அது நியாயமும் கூட. ஏனெனில் அடிமையாக்கப்பட்ட சமூகத்தினருக்கு இளையராஜாவின் வளர்ச்சி ஒரு டானிக். இதையெல்லாம் புரிந்துகொள்ளாது, நீங்கள் திரு.ஜீவா அவர்களின் சாதிய சார்பில்லாத எழுத்தை சாடியிருப்பது வரவேற்கத்தக்கதாக இல்லை. ஜெய்ஹோ என்ற மிகச்சாதரண பாடல் மாபெரும் புகழ் பெற்றதற்கு காரணம் ஊடகங்களின் 'ஊதிவிடும்' தன்மைதான்!!! மேலும் ரெஹ்மானைப் போல் பிறரை 'அட்ஜஸ்ட்' செய்து போகும் ஒரு நல்ல தன்மை ராஜாவிடம் இல்லையென்பது என் அனுமானம். ராஜாவிடம் அந்த தன்மை இருந்திருந்தால் அவர் ரெஹ்மானைவிட பல மைல்கள் உயரத்தில் இருந்திருப்பார்!! "ஹவ் டு நேம் இட்" ஒன்று பத்தாதா அதுக்கு?? மணிரத்னம், பாரதிராஜா போன்றோர் ராஜாவை புறக்கணித்ததற்கு காரணம், அவர்களுக்கு ராஜாவை விட வைரமுத்து தேவையாய் இருந்தார் என்பது கூட காரணமாக இருக்கலாம். நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது! மற்றபடி இளையராஜாவின் இசைக்கு அடிமையாய் இருந்தாலும் கூட, எனக்கு இளையராஜா என்ற தனிமனிதனுக்கு கலைஞர்களுக்கே உள்ள தலைக்கனம் கொஞ்சம் அதிகமோ எனத் தோண்றத்தான் செய்கிறது!
@ஜீவா
அருமையான கட்டுரை அண்ணே. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.
தலித்தோ, பிராமணனோ இரண்டுமே மேன்மையான அடையாளங்கள் அல்ல , காரணம் அவை பிறப்பால் வருவன. பிறந்த பின் என்ன செய்தோம் என்பதே மேன்மைக்கு அடையாளங்கள். ஜாதீய அடையாளங்கள் என்றுமே மேன்மையைத் தராது, தந்ததில்லை. அதுவே என் வார்த்தைகளுக்கு அர்த்தம்.
அருமையான பதிவு. என்றும் இளையராஜாவை ரசிப்பவர்களில் நானும் ஒருவன்
அருமையான பதிவு ,ஆரோக்கியமான விவாதங்கள் !! படித்தேன், மகிழ்ந்தேன் !!
நீங்கள் தானே பொடியன்.....சற்று நெருடலாக இருந்தது.(Third person ல் எழுதப்பட்டிருக்கிறது)எழுத ஆரம்பித்தது first person-ல்
”அலைகள் ஓய்வதில்லை” கடுக்கரையில் எஙக வீட்டிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. இளைய ராஜாவின் சகோதரர் பாஸ்கரிடம்,பாரதி ராஜா விடம் பேசிய அனுபவம் என்க்கு உண்டு
உங்கள் அனுபவம் அழகாக ஒரு நாவலுக்கே உரித்ததாக இருக்கிறது. எழுத்திலும் நீங்க ஒரு ராஜாவே.
ஆ.பொன்னப்ப பிள்ளை
என்னுடைய நீண்டநாள் ஆதங்கங்களை தீர்த்துவைத்ததது இந்த பதிவு நன்றி
ஜீவா சார், உங்கள் படைப்புக்களை ஒரு சக மாணவஒவியனாய் எனது கல்லூரி நாட்களில் (GCT CBE 1979-84) ரசித்திருக்கிறேன். இன்னும் ‘Dream’ என்ற தலைப்பில் தாங்கள் வரைந்த Colour Painting என் நினைவில் நிற்கிறது. நெடுநாள் கழித்து தற்செயலாய் தங்கள் எழுத்தோவியம்...அருமை. முயற்சி தொடர்க.
-Jenson Fernando B.E., Mumbai Off-shore.
Post a Comment