Friday, April 8, 2016

அவரவர் நியாயம்

பல கிளைகள் கொண்ட உணவு விடுதி அது. இப்போது தேய்பிறை போல…  இரவு 9 மணிக்கு நான் சென்றபோது யாருமே இல்லை, என்னை தவிர.    ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தேன். கேஷியருக்கும் ஒரு மூலையும் மேஜையும் இருந்தன.



30 வயதுக்குள் இருந்த ஒரு பெண் வந்தார். கேஷியரிடம் பார்சல் ஆர்டர் செய்துகொண்டு இருந்தார். மேஜை துடைக்கும் இளைஞன் அந்த பெண் அருகில் சென்று ஏதோ சைகை காட்டி பேச முயன்று கொண்டிருந்தான். பழக்கமானவன் போல என்று நினைத்துக்கொண்டேன். கேஷியரும் இதை கண்டு கொள்ளவில்லை.  என்னிடம் ஆர்டர் எடுத்த இளைஞன் அவனை விரட்ட முயன்றான். 'உள்ளே போடா...' என்று தள்ள முயன்றான். அந்த பெண் முறைத்துக்கொண்டே அந்த கூடத்தின் இன்னொரு மூலையில்  ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டார். இவன் விர்ரென்று தன் குட்டி வண்டியை தள்ளிக்கொண்டு சென்று அந்த பெண்ணருகே நின்று கொண்டு பல்லிளிக்க ஆரம்பித்தான். பெண் இடம் மாறி இந்த மூலைக்கு ஓடி  வந்து இன்னொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கேஷியரிடம் முறையிட ஆரம்பித்தார். மீண்டும் அந்த இளைஞன் உள்ளே விரட்டப்பட்டான்.


 'என்ன சார் நடக்குது இங்கே, எனக்கு பயமா இருக்கு...எப்படி இப்படி ஒருத்தனை வேலைக்கு வெச்சிருக்கீங்க, பெண்கள் எப்படி தைரியமா இங்கே வந்து சாப்பிடமுடியும் ? நான் எப்படி இங்கே மறுபடியும் வருவேன்'


 'இல்லைம்மா, அவன் ஒரு டைப்பு ...ஒண்ணும் பண்ணமாட்டான் ...தைரியமா இருங்க...'


 'என்ன சார் இப்படி சாதாரணமா சொல்றீங்க... அவன் என்கிட்டே வரலையே... அந்த அம்மா கிட்டேதானே வம்பு பண்றான்.. விவரமான டைப்பு தான் போல ....' இது நான்.


 உடனே கேஷியர் அந்த பெண்ணிடம் தப்பித்து என்னிடம் பேச முயன்றார்.


 'சார், இலை எடுக்கவும், டேபிள் துடைக்கவும் ஆட்களே இல்லை . மேனேஜ்மெண்ட்ல இவனை வேலைக்கு வெச்சிட்டாங்க. நாங்க என்ன சார் பண்ண முடியும்.'


 'இதென்ன சார் அநியாயமா இருக்கு... போலீஸ்ல கம்ப்ளையின்ட் கொடுத்தா உங்க ஓட்டல் பேர் என்னாகறது'....இது அந்த பெண்.


 ;அது ஒண்ணுமில்லை சார், சின்ன வயசில கஞ்சா ரொம்ப அடிச்சிட்டான், இப்படி ஆயிட்டான். மத்தியானம்தான் வருவான்... இப்ப போயிருவான்...வேலைக்கு ஆள் கிடைக்கலைன்னா நாங்களும் என்னதான் சார் பண்றது...'


 பில் வந்தது. அவரவர்க்கு ஒவ்வொரு நியாயம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டே வெளியேறினேன்.