நான்
என் வாழ்க்கையில் முதன் முதலாக பார்த்த எழுத்தாளர் ஜெயகாந்தனாகத்த்தான் இருக்கும்.
அடடா என்னவொரு ஆரம்பம்.
கோவையில் நடந்த கலை இலக்கிய பெருமன்றத்தின் முதல் மாநாட்டிற்கு என் தந்தை எப்போதும் போல, குட்டிப்பையனான என்னையும்
அழைத்துச் சென்றிருந்தார். மாநாட்டிற்கான ஓவியப்பணிகளை அவர்தான் செய்திருந்தார். திடீரென்று
மேடைக்கு வந்து நினைவுப்பரிசை பெற்றுச் செல்ல என் தந்தை அழைக்கப்பட்டார். மேடையில் மீசையில்லாத ஜெயகாந்தன் பரிசுக்கோப்பையுடன் காத்திருக்கிறார்.
கசங்கிய ஆடையுடன் இருந்த என் தந்தைக்கு கூச்சமோ கூச்சம் . எல்லோரும் அவரை உற்சாகப்படுத்தி
மேடைக்கு அனுப்புகிறார்கள். தன் ஆதர்ச எழுத்தாளரிடம்
, பெருமையும் வெட்கமும் ஒரு சேர என் தந்தை பரிசு பெற்ற காட்சி இன்றும் நினைவில் இருக்கிறது!
எத்தனையோ
எழுத்தாளர்களை பிறகு சந்தித்து பழகியபோதும்...சிலரை பற்றி மட்டும் இங்கே பதிவிடுகிறேன்.
கு.அழகிரிசாமியும்,
தொ.மு.சி.ரகுநாதனும் என் குழந்தை பருவ நினைவுகளில் வந்து போனவர்கள். மாணவப்பருவத்தில்,
நண்பராகிப்போன எழுத்தாளர் இரவிச்சந்திரனால், சுஜாதாவின் நட்பு கிடைத்தது. அவரது வீட்டிக்கு
சென்று சந்தித்ததும் உண்டு. கோவைக்கு அவர் ஒரு முறை வந்தபோது , நண்பர் மார்ஷல் அவரை
என் வீட்டிற்க்கு அழைத்து வந்தார். கூட்டம் கூடிவிடும் என்பதாலேயே, சுஜாதா காருக்குள்ளேயே இருந்து என்னுடன் பேசிவிட்டு சென்றார்.
ஒரு முறை பெங்களூரில் இரவிச்சந்திரனுடன், ராஜேந்திரகுமாரை சந்தித்து, அவரது ஆபீசில் பொய் சொல்லவைத்து சினிமாவுக்கு
அழைத்து சென்றோம். பின்னர் எனது நல்ல நண்பராகிப்போன எஸ்.சங்கரநாராயணனை பெங்களூரில்தான்
முதன் முதலாக இரவிச்சந்திரனுடன் சந்தித்தேன். மாலனின் அறிமுகமும் திசைகள் நாட்களும்
அப்போது ஆரம்பமாயின. பாலகுமாரனையும் சுப்ரமண்ய ராஜூவையும் சந்தித்து பேசக்கூடிய வாய்ப்புகளும்
அப்போது கிடைத்தன!
எனது
மாணவப்பருவத்தில் கோவையில் நடந்த பல இலக்கிய கூட்டங்களில் தகழி சிவசங்கரன்பிள்ளை, கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்,
அய்யப்ப பணிக்கர், வண்ணநிலவன், பூமணி போன்றவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
என்
மதிப்புக்குரிய எழுத்தாளர்களான சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், வண்ணதாசன், கலாப்ரியா,
இரா.முருகன் , ஜெயமோகன் அனைவருடனும் நெருங்கிப்பழகும் வாய்ப்புகள் பின்னாளில் உருவாயின
.
இந்த
வரிசைகளில் சேராத ஒரு எழுத்தாளருடன் பழகும் வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கிறது. அவர்தான்
பேய்க்கதை மன்னன் நாஞ்சில் பி.டி .சாமி!
எங்கள்
வீட்டுக்கு எதிரில் ஒரு புகழ் பெற்ற கடை இருந்தது. பாட்டு புத்தகங்கள், கேலண்டர்கள்,
படங்கள் வாங்கவேண்டுமென்றால் இங்குதான் வந்தாகவேண்டும். 'மலர்விழி நிலையத்தில்'தான்
பேய்க்கதை மன்னனை சந்தித்தேன். நல்ல உயரம், சுருள் கிராப், ஜெமினி கணேசன் மாதிரி மீசை,
கிரீம் கலர் ஜிப்பா, ஜாலியாக பேசுவார். அவர்
அப்போது புனித அந்தோணியார் படத்திற்க்கு வசனம் எழுதியிருந்தார். மலர்விழி நிலையத்தில்
கதை புத்தக விறபனையில் கொடுக்கல் வாங்கல் உண்டு. பண வசூலுக்கு அடிக்கடி வருவார். கோவையில்
அப்போது பிரபலமாயிருந்த, எனக்கும் நன்கு பழக்கமான 'காதொலி சித்தர்' சாமிகிரி சித்தர் இவருக்கு நட்பானார். இருவரும்
ஒரு திரைப்பட தயாரிப்பில் இறங்கினர். பேய்க்கதை
மன்னர்தான் இயக்குனர்!! படத்தின் பெயர் 'பாடும் பச்சைக்கிளி'. மலர்விழி நிலையத்தின்
சவுந்தரம் அண்ணாச்சிக்கு கொஞ்சம் கலைத்தாகம் உண்டு. வடக்கன்குளத்தில் மாதா கோவில் திருவிழா
நாடகங்களில் வில்லன் வேடத்தில் நடித்து 'சிம்மக்குரலோன்' என்ற பட்டத்தையும் தனக்கு
தானே சூடிக்கொண்டிருந்தவர்!! படத்தில்
அவருக்கும் ஒரு நகைச்சுவை வேடம் தரப்பட்டிருந்தது. கேட்டிருந்தால் எனக்கு கூட ஒரு வாய்ப்பு
கிடைத்திருக்கலாம். கொஞ்ச காலம் இந்த திரைப்பட ஷூட்டிங் அக்கப்போர் ஓடி, ஒரு கட்டத்தில் நின்றும் போய்விட்டது.
பி.டி
.சாமி. அதற்க்கு பிறகு கொஞ்சம் அமைதியாகிவிட்டு
மீண்டும் கதை எழுதுவதில் ஈடுபட்டார்!!
அவர்
இறந்து போன செய்தியையும் பின்னர் அறிந்தேன்.!