



பல பழங்கால கலைகளை பற்றி புத்தகங்களில் படித்துத்தான் தெரிந்திருக்கிறோம். நகரச்சூழலில் மட்டுமே வாழ்ந்து வந்ததனால் இழந்தது நிறைய. கணியான் ஆட்டத்தை பள்ளி நாட்களில் எங்கள் ஊர் காளி ஊட்டில்தான் பார்க்க கிடைத்தது. தெருக்கூத்தை நான் முதன் முதலில் பார்த்தது எங்கே என்றால் ஆச்சரியப்படுவீர்கள். எங்கோ கிராமத்தில் அல்ல! சென்னை புரசைவாக்கம் மில்லர்ஸ் ரோடு பவர் மேன்ஷன் வாசலில் இருந்த பேருந்து நிழற்குடையின் கீழ்தான்!! கதகளி ஆட்டத்தை கோவை நகரத்து ஆயுர்வேத நிலையம் ஒன்றில்தான் கோவை ஞானியுடன் பார்த்தேன். இப்படி போய்க்கொண்டிருக்கும் எனது வறண்ட வாழ்க்கையில் சமீபத்தில்தான் முதன் முறையாக தோல்பாவைக்கூத்து என்ற அற்புதக்கலையை நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது. அ.கா.பெருமாள் போன்ற அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் மூலம் இன்னும் சில கலைஞர்கள் குமரி மாவட்டத்தில் வசித்து வருவதாக அறிந்திருக்கிறேன். அங்கிருந்தே கோவைக்கு வந்து ஒரு கலைஞர் ஒரு நிகழ்ச்சியை நிகழ்த்த இருப்பதாக நண்பர்கள் தட்சிணாமூர்த்தி கல்யாணி தம்பதிகள் மூலம் அறிந்தேன்..
'அட்மாஸ்' கோவை நகரத்தின் ஒரு நவீன காபி ஷாப். சுலபத்தில் கண்டுபிடிக்கமுடியாத ஒரு சிறிய சாலையில் இருக்கிறது. அங்குதான் இந்த கூத்து நிகழ்த்த இருப்பதாக அறிந்தேன். நாம் எப்போதுதான் இத்தகைய இடங்களுக்கு செல்வது! புதிய நண்பர்கள் பாலு, பிரபு சகிதம் சென்றேன். அங்கிருந்த வாடிக்கையாளர்களை கண்டு கொஞ்சம் மிரண்டது உண்மைதான். சக்கரை அதிகமாக ஒரு சாயாவை சாலையிலிருந்தே மாஸ்டரிடம் ஆர்டர் கொடுக்கும் ஆசாமியை பிளாக் பாரஸ்ட் கேக்கை நாசுக்காக சுவைத்துக்கொண்டு நீண்ட கோப்பைகளில் குளிர்பானங்களை வைத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் யுவ யுவதிகள் சபையில் விட்டால் எப்படி இருக்கும்! திறந்த வெளியில் மேசைகளுக்கு நடுவில் வீற்றிருக்கும் மரத்தடி துளசி மாடம் அருகில் கட்டப்பட்டு காத்திருந்தது வெள்ளை திரை!
லக்ஷ்மண ராவ் மிக எளிமையான மனிதராய் காட்சி அளித்தார். பல தலைமுறைக்கு முன் மராட்டிய தேசத்திலிருந்து வந்து இப்போது நாட்டின் கடைகோடியில் இருக்கிறார். ஆர்வத்துடன் தன் கையிலிருந்த கோப்பில் இருந்த சான்றிதழ்களை காட்டினார். பெரும்பாலும் உள்ளூர் கழகங்கள் அளித்தவை.. கசங்கிய தாள்கள்..லேமினேட் செய்ய சொன்னேன். தோவாளைக்கு அருகில் உள்ள சிற்றூரில் வசிக்கிறார். நூறு நாட்கள் வேலைத்திட்டத்திற்கு கூலி வேலைக்கு போகிறார், மனைவி சகிதம்.. கால் வயிற்ருக்கஞ்சிதான் உணவு.. அமரவே மறுக்கிறார். அவரை பற்றி குறிப்புக்கள் வந்த கட்டுரைகளையோ நூல்களையோ கேள்விப்பட்டதேயில்லை என்பது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. கலைமாமணி பட்டத்தை கேள்விப்பட்டிருப்பாரோ என்னவோ! அவருடைய தோல்பாவைகளை அவரே வடிவமைத்து வெட்டி, நீர்வண்ணங்களை வஜ்ஜிரம் போன்ற பொருட்கள் கலந்து பூசி தயாரிக்கிறார். திரைக்கு பின் அவரது மனைவி, மகன், குட்டி மகள் அனைவரும் வாத்தியங்களுடன் தயாராக இருக்கிறார்கள். ராமாயணம் போன்ற நிகழ்வுகள் பல இரவுகள் நடக்குமாம்..இன்று பசுமையை காப்பது குறித்து அவரே எழுதிய நாடகம். ஒலிபெருக்கி இல்லை. முன்னுரைக்கு பின் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.
திரையில் விநாயகரின் உருவம் தோன்றிய பிறகு கட்டியங்காரனின் வருகை...லட்சுமண ராவ் என்ற எளிய மனிதன் மாபெரும் கலைஞனாக விஸ்வரூபம் எடுக்கும் நிகழ்வுகளின் ஆரம்பம். வரிசையாக கதாபாத்திரங்கள் தோன்றுகின்றன. மரங்கள், மண்டபங்கள், சோலை வனங்கள் என்று திரையின் ஓரங்களில் காட்சிக்கு ஏற்ப தோன்றி மறைகின்றன. குதிரை மீது மன்னர்கள் வருகின்றனர். கேலிச்சித்திரங்கள் போல தோன்றும் பல வித மனிதர்கள் கூடி பேசுகின்றனர், கேலி செய்கின்றனர், அடித்துக்கொள்கின்றனர். வயிறு வீங்கி பெரிய தொப்புளுடன் கூடிய ஒட்டைப்பல்லன், முன் வழுக்கை விழுந்து பின்னால் காவியேறிய மயிருடன் கூடிய மதினி, பிராமண பாஷை பேசும் அண்ணன் , மரத்தை வெட்டி விற்று திங்க துடிக்கும் தம்பி, ஊர் மக்கள் என்று வித விதமான மனிதர்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை குரல்கள், பேசும் பாணிகள், தனித்தனியாய் துடிக்கும் உடல் பாகங்கள் , வித விதமான நடனங்கள் , பாடல்கள்....சொல்லிக்கொண்டே போகலாம்.
மெதுவாக எழுந்து திரைக்கு பின் செல்கிறேன். அமர்ந்திருக்கும் ராவின் பரபரக்கும் கைகள் படு வேகமாகவும் சாதுர்யமாகவும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.ஒரு கை விரல்களில் சிறு அசைவுகள், பிருஷ்டத்தை ஆட்டும் தடியனின் ஆட்ட வேகத்தை துரிதப்படுத்த, அவனுடன் ஜோடி சேர்ந்து ஆடும் பெண்ணின் இயக்கங்களை இன்னொரு கையின் விரல்கள் ஆட்டுவிக்கின்றன. ஆட்டத்திற்கேற்ப ராவின் குரல் வளைகள் வித விதமான் ஓசைகளை பாவத்துடன் ஒலிக்கின்றன. கால் விரல்கள் ஒரு சிறிய கயிற்றை ஒரு கட்டையுடன் இணைத்து அவ்வப்போது ஒரு பெரும் ஒலியை எழுப்பிக்கொண்டிருக்கின்றன. ஒரு தசாவதானியை இப்போதுதான் பார்க்கிறேன். அவர் குடும்பமே டோலக்கை இசைத்துக்கொண்டு பின் பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றனர்..அவரை சுற்றி தரையில் இறைந்து கிடக்கின்றன...இனி எதிர்காலம் அறியா தோல் பாவைகள்!!!
விளக்குகள் ஒளிர்ந்தன. அந்த கலைஞன் மீண்டும் ஒரு எளிய கிராமவாசியாக மாறி சபைக்கு காட்சியளித்தார். நெகிழ்ந்த நெஞ்சங்களோடு விடை பெற்றோம்...இன்னும் சில நிகழ்ச்சிகளை தட்சிணாவும் யாணியும் 'சிறகுவிரி' சார்பில் ஏற்பாடு செய்யப்போகிறார்கள். அடுத்த நாள் சுமதி நரசிம்மன் வீட்டில் ஒரு நிகழ்ச்சி, பிறகு ஒரு பள்ளியில் நிகழ்ச்சி என்று நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். 'சிறகுவிரி' நிச்சயமாக இந்த கலைஞனையும் கலையையும் கைவிடாது என்ற நம்பிக்கை ஒளிர்ந்தது ..நாமும் துணை நிற்போம்!!