Tuesday, March 30, 2010

தோல்பாவைகள் இனியும் ஆடும்





பல பழங்கால கலைகளை பற்றி புத்தகங்களில் படித்துத்தான் தெரிந்திருக்கிறோம். நகரச்சூழலில் மட்டுமே வாழ்ந்து வந்ததனால் இழந்தது நிறைய. கணியான் ஆட்டத்தை பள்ளி நாட்களில் எங்கள் ஊர் காளி ஊட்டில்தான் பார்க்க கிடைத்தது. தெருக்கூத்தை நான் முதன் முதலில் பார்த்தது எங்கே என்றால் ஆச்சரியப்படுவீர்கள். எங்கோ கிராமத்தில் அல்ல! சென்னை புரசைவாக்கம் மில்லர்ஸ் ரோடு பவர் மேன்ஷன் வாசலில் இருந்த பேருந்து நிழற்குடையின் கீழ்தான்!! கதகளி ஆட்டத்தை கோவை நகரத்து ஆயுர்வேத நிலையம் ஒன்றில்தான் கோவை ஞானியுடன் பார்த்தேன். இப்படி போய்க்கொண்டிருக்கும் எனது வறண்ட வாழ்க்கையில் சமீபத்தில்தான் முதன் முறையாக தோல்பாவைக்கூத்து என்ற அற்புதக்கலையை நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது. அ.கா.பெருமாள் போன்ற அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் மூலம் இன்னும் சில கலைஞர்கள் குமரி மாவட்டத்தில் வசித்து வருவதாக அறிந்திருக்கிறேன். அங்கிருந்தே கோவைக்கு வந்து ஒரு கலைஞர் ஒரு நிகழ்ச்சியை நிகழ்த்த இருப்பதாக நண்பர்கள் தட்சிணாமூர்த்தி கல்யாணி தம்பதிகள் மூலம் அறிந்தேன்..

'அட்மாஸ்' கோவை நகரத்தின் ஒரு நவீன காபி ஷாப். சுலபத்தில் கண்டுபிடிக்கமுடியாத ஒரு சிறிய சாலையில் இருக்கிறது. அங்குதான் இந்த கூத்து நிகழ்த்த இருப்பதாக அறிந்தேன். நாம் எப்போதுதான் இத்தகைய இடங்களுக்கு செல்வது! புதிய நண்பர்கள் பாலு, பிரபு சகிதம் சென்றேன். அங்கிருந்த வாடிக்கையாளர்களை கண்டு கொஞ்சம் மிரண்டது உண்மைதான். சக்கரை அதிகமாக ஒரு சாயாவை சாலையிலிருந்தே மாஸ்டரிடம் ஆர்டர் கொடுக்கும் ஆசாமியை பிளாக் பாரஸ்ட் கேக்கை நாசுக்காக சுவைத்துக்கொண்டு நீண்ட கோப்பைகளில் குளிர்பானங்களை வைத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் யுவ யுவதிகள் சபையில் விட்டால் எப்படி இருக்கும்! திறந்த வெளியில் மேசைகளுக்கு நடுவில் வீற்றிருக்கும் மரத்தடி துளசி மாடம் அருகில் கட்டப்பட்டு காத்திருந்தது வெள்ளை திரை!

லக்ஷ்மண ராவ் மிக எளிமையான மனிதராய் காட்சி அளித்தார். பல தலைமுறைக்கு முன் மராட்டிய தேசத்திலிருந்து வந்து இப்போது நாட்டின் கடைகோடியில் இருக்கிறார். ஆர்வத்துடன் தன் கையிலிருந்த கோப்பில் இருந்த சான்றிதழ்களை காட்டினார். பெரும்பாலும் உள்ளூர் கழகங்கள் அளித்தவை.. கசங்கிய தாள்கள்..லேமினேட் செய்ய சொன்னேன். தோவாளைக்கு அருகில் உள்ள சிற்றூரில் வசிக்கிறார். நூறு நாட்கள் வேலைத்திட்டத்திற்கு கூலி வேலைக்கு போகிறார், மனைவி சகிதம்.. கால் வயிற்ருக்கஞ்சிதான் உணவு.. அமரவே மறுக்கிறார். அவரை பற்றி குறிப்புக்கள் வந்த கட்டுரைகளையோ நூல்களையோ கேள்விப்பட்டதேயில்லை என்பது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. கலைமாமணி பட்டத்தை கேள்விப்பட்டிருப்பாரோ என்னவோ! அவருடைய தோல்பாவைகளை அவரே வடிவமைத்து வெட்டி, நீர்வண்ணங்களை வஜ்ஜிரம் போன்ற பொருட்கள் கலந்து பூசி தயாரிக்கிறார். திரைக்கு பின் அவரது மனைவி, மகன், குட்டி மகள் அனைவரும் வாத்தியங்களுடன் தயாராக இருக்கிறார்கள். ராமாயணம் போன்ற நிகழ்வுகள் பல இரவுகள் நடக்குமாம்..இன்று பசுமையை காப்பது குறித்து அவரே எழுதிய நாடகம். ஒலிபெருக்கி இல்லை. முன்னுரைக்கு பின் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.

திரையில் விநாயகரின் உருவம் தோன்றிய பிறகு கட்டியங்காரனின் வருகை...லட்சுமண ராவ் என்ற எளிய மனிதன் மாபெரும் கலைஞனாக விஸ்வரூபம் எடுக்கும் நிகழ்வுகளின் ஆரம்பம். வரிசையாக கதாபாத்திரங்கள் தோன்றுகின்றன. மரங்கள், மண்டபங்கள், சோலை வனங்கள் என்று திரையின் ஓரங்களில் காட்சிக்கு ஏற்ப தோன்றி மறைகின்றன. குதிரை மீது மன்னர்கள் வருகின்றனர். கேலிச்சித்திரங்கள் போல தோன்றும் பல வித மனிதர்கள் கூடி பேசுகின்றனர், கேலி செய்கின்றனர், அடித்துக்கொள்கின்றனர். வயிறு வீங்கி பெரிய தொப்புளுடன் கூடிய ஒட்டைப்பல்லன், முன் வழுக்கை விழுந்து பின்னால் காவியேறிய மயிருடன் கூடிய மதினி, பிராமண பாஷை பேசும் அண்ணன் , மரத்தை வெட்டி விற்று திங்க துடிக்கும் தம்பி, ஊர் மக்கள் என்று வித விதமான மனிதர்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை குரல்கள், பேசும் பாணிகள், தனித்தனியாய் துடிக்கும் உடல் பாகங்கள் , வித விதமான நடனங்கள் , பாடல்கள்....சொல்லிக்கொண்டே போகலாம்.

மெதுவாக எழுந்து திரைக்கு பின் செல்கிறேன். அமர்ந்திருக்கும் ராவின் பரபரக்கும் கைகள் படு வேகமாகவும் சாதுர்யமாகவும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.ஒரு கை விரல்களில் சிறு அசைவுகள், பிருஷ்டத்தை ஆட்டும் தடியனின் ஆட்ட வேகத்தை துரிதப்படுத்த, அவனுடன் ஜோடி சேர்ந்து ஆடும் பெண்ணின் இயக்கங்களை இன்னொரு கையின் விரல்கள் ஆட்டுவிக்கின்றன. ஆட்டத்திற்கேற்ப ராவின் குரல் வளைகள் வித விதமான் ஓசைகளை பாவத்துடன் ஒலிக்கின்றன. கால் விரல்கள் ஒரு சிறிய கயிற்றை ஒரு கட்டையுடன் இணைத்து அவ்வப்போது ஒரு பெரும் ஒலியை எழுப்பிக்கொண்டிருக்கின்றன. ஒரு தசாவதானியை இப்போதுதான் பார்க்கிறேன். அவர் குடும்பமே டோலக்கை இசைத்துக்கொண்டு பின் பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றனர்..அவரை சுற்றி தரையில் இறைந்து கிடக்கின்றன...இனி எதிர்காலம் அறியா தோல் பாவைகள்!!!

விளக்குகள் ஒளிர்ந்தன. அந்த கலைஞன் மீண்டும் ஒரு எளிய கிராமவாசியாக மாறி சபைக்கு காட்சியளித்தார். நெகிழ்ந்த நெஞ்சங்களோடு விடை பெற்றோம்...இன்னும் சில நிகழ்ச்சிகளை தட்சிணாவும் யாணியும் 'சிறகுவிரி' சார்பில் ஏற்பாடு செய்யப்போகிறார்கள். அடுத்த நாள் சுமதி நரசிம்மன் வீட்டில் ஒரு நிகழ்ச்சி, பிறகு ஒரு பள்ளியில் நிகழ்ச்சி என்று நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். 'சிறகுவிரி' நிச்சயமாக இந்த கலைஞனையும் கலையையும் கைவிடாது என்ற நம்பிக்கை ஒளிர்ந்தது ..நாமும் துணை நிற்போம்!!

Friday, March 19, 2010

ரசிகன்!


உலகத்திலேயே நம் தென்னிந்தியாவை போல் சினிமா நடிகர் ரசிகர் மன்றங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாக செயல்படுகின்றனவா என்று தெரியாது. எவன் நடிக்க ஆரம்பித்தாலும் ஒரு ரசிகர் நற்பணி மன்ற பேனர் ஒன்று அந்த தியேட்டரில் தொங்குகிறது அவன் படத்துடன்..மற்றும் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஆலோசகர் பெயர்களுடன். இப்போது பிளக்ஸ் அச்சிடும் பணியில் ஈடுபட்டு இருக்கும் என்னை போன்றவர்கள் படும் பாடு தனி கதை.இந்த துக்கடா மன்றங்களுக்கு இந்த ஆரம்ப நிலை நடிகர்களே பைனான்ஸ் செய்கிறார்கள். கொஞ்சம் வளர்ந்த நடிகர்கள் என்றால் உடனே பதிவு எண், மன்றக்கொடி போன்ற காமெடிகளுடன்..முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் அல்லது சிறப்பு காட்சிகளோ உண்டு. பிளாக்கில் விற்பதுதான் இவர்களது முக்கிய சம்பாத்தியம். இப்போதெல்லாம் இவர்களுக்கு போட்டியாக ரோட்டரி சங்கங்கள் போன்ற அமைப்புக்களும் ஈடுபட்டு வருகின்றன.! விஜய், அஜீத், தனுஷ், ஜீவா போன்றவர்களிடம் எதை கண்டு இந்த ரசிகர்கள் மொய்த்து வருகின்றனர் என்றால் புரியவில்லை...சில நடிகர்களை ஜாதி அபிமானத்தோடு கொண்டாடுகின்றனர். தென் மாவட்ட திருமண பிளக்சுகளில் இப்போதெல்லாம் நாடார் வீடென்றால் சரத்குமார், தேவர் என்றால் கார்த்திக், தேவேந்திரர் என்றால் விக்ரம் & பிரசாந்த் (இருவரும் ரத்த உறவுள்ள கசின்ஸ் என்பது நிறைய பேருக்கு தெரியாது) கட்டாயமாக இடம் பெறுகின்றனர். முத்துராமலிங்க தேவரையும் கார்த்திக்கையும் பேனர்களில் ஒன்றாக பார்க்கலாம்!! முதன் முதலில் இங்கு யாருக்கு ரசிகர் மன்றங்கள் அமைந்திருக்கும்? பாகவதர் அபிமானிகளும் சின்னப்பா அபிமானிகளும் இருந்தனர்..ஆனால் மன்றங்கள் இருந்தனவா? ஒரு வேளை எம்ஜியாருக்குத்தான் ஆரம்பித்திருப்பார்களோ! தியோடர் பாஸ்கரன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி போன்ற ஆய்வாளர்களிடம் கூட விசாரித்தேன். ஒரு முன்னாள் கவுன்சிலரிடம் விசாரித்தபோது அவர் சொன்ன ஓர் தகவல் உபயோகமாக இருந்தது. சாமையர் புது வீதியில் பாகவதருக்கு போர்ட் மாட்டி ஒரு மன்றம் இருந்ததாகவும், பின்னர் டி .ஆர்.மகாலிங்கத்துக்கும் அதே ஏரியாவில் ஒன்று அமைக்கப்பட்டதாகவும் சொன்னார். சிவாஜியும் எம்ஜியாரும் சமகாலங்களில் மன்றம் கண்டவர்கள் என்றும் சொன்னார்.

அப்போது மன்றங்களை ரசிகர்களே அமைத்துக்கொண்டனர். நடிகர்கள் அதற்கு பைனான்ஸ் செய்ததில்லை. ரசிகர் மன்ற காட்சிகள், டிக்கட் வாங்கி பிளாக்கில் விற்பது போன்ற வியாபாரங்கள் நுழைந்தவுடன் அரசியலும் தலைமை பீடங்களும் நுழைந்தன. மன்றங்கள் அரசியல் கட்சிகளின் அங்கங்கள் ஆகவும் ஒட்டு வங்கிகளாகவும் மாறின...குறிப்பாக எம்ஜியார், சிவாஜி மன்றங்கள்! கோவையில் மதுரையை போல் எல்லா நடிகர்களுக்கும் மன்றங்கள் இருந்ததில்லை. ஜெமினி கணேசனுக்கு ஒரு மன்றம் இருந்தது.... பள்ளி சிறுவனாக இருந்தபோதே ரசிகர்களின் செயல்பாடுகளை கவனிப்பேன்..எந்த புதிய படம் வருவதாக இருந்தாலும் ரசிகர்கள் எங்கள் கடையில் திரண்டுவிடுவார்கள்...என் தந்தையிடம் படத்தின் ஸ்டில்களை காட்டும்படி கெஞ்சுவார்கள். காட்டியவுடன்..இதை வரையுங்கள், அதை வரையுங்கள் என்று ஆலோசனை தர ஆரம்பித்துவிடுவார்கள். எனக்கு கடுப்பாக இருக்கும்..அப்படி வந்த 'கவுரவம் சிவாஜி மன்ற மறவர்' வேணு என் வாழ்நாள் நண்பர் ஆகிப்போனார்!

வியட்நாம் வீடு படத்திற்கு வாட்சை விற்று ஒரு வீடு செட்டிங்க்சை வண்டியில் வைத்து ஊர்வலமாகப்போன சேகர், இன்றும் சிவாஜிக்கு பேனர் வைக்கிறார், ஒரு முழுநேர கோவில் அர்ச்சகராக இருந்தும். கணபதி சிவாஜி செல்லக்குட்டி எண்பது 'நவரச' பாடல்கள் அடங்கிய சிவாஜி சிடியை தயாரித்து தெரிந்தவர்களுக்கெல்லாம் கொடுக்கிறார். கோவை மேயர் வெங்கடாசலத்திடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்ன செய்தி வியப்பாக இருந்தது. திருவிளையாடல் ரிலீசின்போது சிவன் வேடம் போட்டுக்கொண்டு கழுத்தில் பாம்புடன் ஊர்வலம் போனவர் சாட்சாத் இவர்தானாம்!! இன்னும் இது போல பல பேர். எம்ஜியார் பக்தர்கள் இன்றும் பழைய படங்களுக்கு பேனர் வைத்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடுகிறார்கள். 'உனக்காக நான்' ரிலீசின்போது ஜெமினி ரசிகர்கள் சிவாஜிக்கு இணையாக கட் அவுட் வைக்கவேண்டும் என்று தகராறு செய்தது இன்னும் மறக்க முடியாதது.
யோசித்து பார்க்கும்போது எம்ஜியார் ரசிகர்களாக இருந்தவர்கள் பின்னர் அவரது உதவியால் பெரும் பதவிகளையும் அனுபவித்தனர். சிவாஜி ரசிகர்களுக்கெல்லாம் அவர்களது கட்சியினால் எந்த பிரயோஜனமும் கிடைக்கவில்லை...கோவை குப்புசாமி, ராஜசேகரன் போன்றவர்கள் மட்டும் கொஞ்சம் அதிர்ஷ்டம் செய்தவர்கள்!! ரசிகர்களை வைத்து எம்ஜியார் கட்சி ஆரம்பித்து போன உயரத்தின் கீழ் படியை கூட சிவாஜி ரசிகர் மன்ற கட்சி தொடவில்லை..'என் தமிழ் என் மக்கள் ' என்று ஒரு டப்பா படம் எடுத்ததுதான் மிச்சம்!

நடிகர்களின் முதலமைச்சர் ஆசை இந்த ஜாம்பவான்களிடம் தொடங்கி குஞ்சு குளுவான்களுக்கேல்லாம் பரவி..இன்று ரசிகர் மன்றங்கள் எல்லாம் , தத்தம் தலைவர்களை வருங்கால முதல்வர்களாக கருதி ஆர்ப்பரிக்கின்றன. சமீப காலம் வரை கரை வேட்டிகளுடன் உலவிய விஜயகாந்த் ரசிகர்கள் இன்று சோர்ந்து போயிருக்கின்றனர்.

நான் பார்த்த கேள்விப்பட்ட ரசிகர்கள் பல வகை. கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்த காட்சி இது. அருகருகே இரண்டு வெங்காயக்கடைகள்.ஒன்றின் சுவர் முழுவதும் எம்ஜியார் படங்களின் தினத்தந்தி முழுப்பக்க விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருக்கும். பக்கத்து கடையில் சிவாஜி விளம்பரங்கள். வாடிக்கையாளர்கள் தத்தம் விருப்ப கடைகளில் வெங்காயம் வாங்கலாம். என் ரொம்ப நாள் சந்தேகம் இரண்டு கடைக்கும் உரிமையாளர் ஒருவர்தானோ என்று!! தங்க பட்டறைகளில் தியாகராஜ பாகவதர் படம் கட்டாயமாக மாட்டப்பட்டிருக்கும். பூதப்பாண்டி ஜீவா சிற்றுண்டி நிலையத்தின் உரிமையாளரான என் சித்தப்பா, கடை முழுவதும் சிவாஜி ஸ்டில்களையும் , காலண்டர்களையும் அலங்கரித்து வைத்திருப்பார் . பாதி நேரம் வாடிக்கையாளர்களான எம்ஜியார் ரசிகர்களுடன் சண்டை நடக்கும். தோசைகளும் ரசவடைகளும் காய்ந்து கிடக்கும். என் மூத்த நண்பர் மறைந்த பேராசிரியர் ஆறுமுகம், தன் நாகர்கோவில் வீட்டில் சிவாஜி நடித்த பெரும்பான்மையான படங்களின் வீடியோ காசட்டுகளையும் 16mm பிரதிகளையும் வைத்திருந்தார். அயல் நாடுகளிலிருந்து சேகரிப்புகள்.. அவர் சொல்வது போல சிவாஜி கத்தியால் உப்புமா கிண்டும் 'மருத நாட்டு வீரன்' போன்ற சில சாதாரண படங்களுக்கு கூட நாலைந்து பிரதிகள்! தன் அபிமான இசை அமைப்பாளர்களின் / பாடகர்களின் இசைத்தட்டுக்களை சேகரித்து வைத்து ரசித்துக்கொண்டிருக்கும் அன்பர்கள்...எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பரம பக்தர் கோவை ரவி அவருடைய அனைத்து பாடல்களையும் சேகரித்து வைத்திருக்கிறார்! சங்கீத மேதைகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் பரம ரசிகர்கள் இருக்கிறார்களே. சுஜாதாவை சும்மா பார்க்கவே பெங்களூர் பயணம் செய்த கல்லூரி நண்பர்கள் இருந்திருக்கின்றனர். ஜெயமோகனை கொண்டாடுபவர்கள் இப்போது உண்டு!!

ரசிகர்களை செலுத்துவது எது...அந்த வயதா, இல்லை ஆர்வமா, தன்னை கவர்ந்த ஆளுமை மீதான பற்றா, விடை தெரியாத கேள்விகள்!

Saturday, February 27, 2010

டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்

எப்படி என் தந்தைக்கு அப்படி ஒரு சிந்தனை வந்ததென்ற தெரியவில்லை. ஒன்பதாவது படிக்கும்போதே என்னை சுறுக்கெழுத்து பயில ஒரு பயிற்சி நிலையத்தில் சேர்த்துவிட்டார். அவருடைய நண்பர்களிடம் என் பையன் இப்பவே ஷார்ட்ஹேண்டில் புகுந்து விளையாடுகிறான் என்று சொல்வதற்காகவோ என்னவோ! எலிக்குஞ்சு போல இருப்பேன். ஆர்வம் இருந்தாலும் சக மாணவர்களின் பொறாமை மற்றும் ஏளனப்பார்வை என்னை வாட்டியது. எல்லாம் எனக்கு பெரிசுகள். எனக்கு சுறுக்கெழுத்து மிகவும் பிடித்துவிட்டது. ஆங்கில மொழியின் மீது இருந்த பற்றும் இன்னொரு காரணம். என் ஆசிரியர் ஒரு கறார் பேர்வழி. மலையாள கத்தோலிக்கர். அவருக்கும் அப்போது சின்ன வயதுதான். நேரம் தவறாமை அவரது முக்கிய விதிகளில் ஒன்று. 6 மணி வகுப்புக்கு 5.45க்கு ஆஜராக வேண்டும். 5.46க்கு வந்தாலும் கெட் அவுட்தான். நாளைக்கு வாங்க என்று அனுப்பிவிடுவார். எல்லோரும் அவரை கரித்துக்கொட்டுவார்கள்..ஆனாலும் நகரின் மையப்பகுதியில் இருந்ததாலும் அவருடைய கண்டிப்பு பெற்றோர்களுக்கு பிடித்ததாலும் அங்கு எப்போதும் ஹவுஸ்புல்தான். தட்டச்சு வகுப்புகளுக்கு நமக்கு பிடித்த நேரம் கிடைக்காது. அவர் சொல்லும் நேரம்தான். பெருமழை பொழிவது போல் எந்திரங்களின் சோவென்ற சப்தத்திற்கிடையில் உள்ரூமில் அவர் டிக்டேஷன் கொடுக்கும்போது கவனமாக தொடரவேண்டும். ஹோம் ஒர்க்கிலும் படு கறார். வாரம் ஒரு முறை சுருக்கெழுத்து தியரியில் டெஸ்ட். ஒரு சின்ன தப்பு வந்தாலும் மீண்டும் டெஸ்ட் எழுதிவிட்டுத்தான் அடுத்த பாடம் தொடரப்படும்.

நானோ சின்னப்பையன். ஒரு கட்டத்திற்கு மேல் இந்த கண்டிப்பு தாங்க முடியவில்லை. மெதுவாக வகுப்புகளை கட் அடிக்க ஆரம்பித்தேன். வீட்டிலிருந்து கிளம்ப வேண்டியது. இன்ஸ்டிடியூட்டிற்கு எதிரே உள்ள கோனியம்மன் கோயிலுக்குள் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்து வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு வீடு திரும்புவது வாடிக்கையானது. ஏன் வரவில்லை என்று கேட்கும் ஆசிரியரிடம் பள்ளியில் டெஸ்ட், காய்ச்சல் என்று சொல்லவேண்டியது. ஒரு முறை பள்ளியில் குறைந்த மார்க் வாங்கியவுடன் கண்டித்த என் தந்தையிடம் எல்லாவற்றிற்க்கும் காரணம் சுறுக்கெழுத்துதான் என்று பழியை போட்டு விட்டேன். அன்றோடு சுறுக்கெழுத்து வகுப்புகளுக்கு முழுக்கு. ஆனால் சுறுக்கெழுத்து என்னோடு பசையாக ஒட்டிக்கொண்டது.

பள்ளி இறுதித்தேர்வு முடிந்த கையோடு என்னை மீண்டும் அங்கே சேர்த்துவிட்டார் என் தந்தை. இப்போது கூடவே ஆங்கில தட்டச்சும். கல்லூரி, கம்யூனிஸ்ட் குடும்பத்துக்கே உரிய ருஷ்ய மொழி வகுப்புக்கள், கடையில் ஓவியம் வரைதல், எல்லாவற்றுக்கும் மேலாக விடாமல் சினிமா பார்த்தல் என்ற என்னுடைய அன்றாட அலுவல்களில் தட்டச்சும் சுறுக்கெழுத்தும் சேர்ந்து கொண்டன.

இன்ஸ்டிடியூட்கள் ஒரு தனி உலகம். காலை 6 மணி முதல் ஓயாமல் இயக்கம். ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் 'அட்டையை பார்த்து அடிங்க' என்ற ஆசிரியரின் அசரீரி, ஹால்டா, பேசிட் இயந்திரங்களின் ஓசை, மெக்கானிக்குகளின் பந்தா, டைப்ரைட்டர் விற்பனை பிரதிநிதிகளின் வருகை, தங்கள் நேரத்துக்காக காத்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் என்று எந்நேரமும் கலகலப்பு. இதில் காதல் பறவைகளின் தனி டிராக் வேறு. கையில் சுருட்டிய பேப்பருடனோ நோட்டுப்புத்தகத்துடனோ வரும் பெண்களின் பின்னால் வரும் இளைஞர்கள்.. சிலர் வகுப்புகளில் இதற்காகவே சேர வருவார்கள். அவர்களை ஆசிரியர் சுலபமாக அடையாளம் கண்டு கொண்டு படுத்தும் பாடு இருக்கிறதே…பயங்கர காமடியாக இருக்கும். முதலில் அவர்களுடைய ஆங்கில அறிவை பரிசோதித்து, கேலியும் கிண்டலும் செய்து ஒரு வழியாக்கி ஓடவிட்டுவிடுவார். என்னுடன் படித்த நிறைய பேர் காதல் கணைகளில் சிக்கி தவித்தனர்…சிலர் திருமணம் கூட புரிந்தனர்.
கறுப்பாக, சோடாபுட்டி கண்ணாடியுடன் எலிக்குஞ்சு போல் இருந்த நான் யாரும் சீண்டாததால் தப்பித்து வாழ்ந்தேன்.

தட்டச்சும் சுருக்கெழுத்தும் எனக்கு சரளமாக வந்தன. எந்த சிறு தவறும் இல்லாமல் கீ போர்டை பார்க்காமல் படு வேகமாக நான் டைப் அடிப்பதை பார்க்க ஒரு கூட்டமே கூடும். அதே போல சுறுக்கெழுத்தும். என் ஆசிரியர் என்னை தன் பள்ளியின் சூப்பர் ஸ்டாராக அறிவித்து கொண்டாடத் தொடங்கிவிட்டார். அரசுத் தேர்வு பயிற்சிக்காக என்னை வெளி பள்ளிகளுக்கு தனி பயிற்சிக்காக அனுப்பி வைப்பார். வெவ்வேறு குரல்களுக்கும் ஏற்ற இறக்கங்களுக்கும் தனி கவனம் எடுப்பார். லோயர், ஹையர் என்று இரண்டிலும் முதல் வகுப்பு. 25 வருடங்களாக தமிழ்நாட்டில் யாரும் தேர்வாகவே முடியவில்லை என்று சொல்லப்பட்ட (உண்மையா என்று தெரியவில்லை) லண்டன் சேம்பர் ஆப் காமர்ஸ் தேர்வில் சுறுக்கெழுத்தில் முதலிடம் என்று கலக்கினேன். பல குழுக்கள் நடத்திய தேர்வுகள் எதிலும் சோடை போகவில்லை.

கல்லூரி முதுகலைப்பட்டம் முடித்தவுடன் விளையாட்டாக கோவை ஸ்டேன்ஸ் காபி கம்பெனிக்கு விண்ணப்பித்தேன். சுலபமாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். என் தந்தைக்கு ஒரே மகிழ்ச்சி . ஸ்டேன்ஸ் முதலாளி ஒரு காலத்தில் ஸ்டெனோவாக இருந்தவராம். காலையில் டிக்டேஷன். இரண்டு கடிதங்களை டைப் செய்தேன். மதியம் சாப்பிட்டு வருவதாக சொல்லி வீட்டுக்கு வந்தேன். வேலைக்கு நான் போகமாட்டேன் என்று என் தந்தையிடம் சொன்னேன். காரணம் கேட்டார். யாரோ ஒருவர் டிக்டேட் செய்ய நான் எழுதுவது எனக்கு பிடிக்கவில்லை என்றேன். ஐஏஎஸ் தேர்வுக்கும் தயாராகிக்கொண்டிருந்ததால் என் தந்தை சரியென்று சொல்லிவிட்டார். என் வாழ்க்கையில் நான் வேலைக்கு போன சரித்திர பிரசித்தி பெற்ற அரை நாள் அன்றுதான். ஒரு முறை UPSC ஸ்டெனோகிராபர்ஸ் தேர்வில் அயல்நாட்டு சரவீசுக்கு எழுத்துத்தேர்வில் ஜெயித்து..ஸ்டெனோகிராபி தேர்வுக்கு சென்னைக்கு அழைத்திருந்தனர். நியூ செஞ்சுரி புக் ஹவுசில் இருந்து ஒரு போர்ட்டபிள் எந்திரத்தை இரவல் வாங்கிக்கொண்டு சென்னை சென்றேன். முதலில் சுறுக்கெழுத்து தேர்வு முடிந்தது. அடுத்து அதை தட்டச்சு செய்யவேண்டும். என்னுடைய அசுர வேகம் தாளாமல் தட்டச்சு எந்திரத்திலிருந்து ரிப்பன் தெறித்து வெளியே வந்தது. ஒன்றும் புரியாமல் கொஞ்ச நேரம் விழித்து விட்டு எல்லாவற்றையும் அள்ளி பெட்டியில் திணித்து விட்டு வெளியேறி..எமரால்டு தியேட்டரில் சஞ்சீவ்குமார் நடித்த அர்ஜøன் பண்டிட் பார்க்க போய்விட்டேன்…

என்றுமே ஸ்டெனோ ஆக விரும்பாமல் வெற்றியும் அடைந்து விட்டேன். இப்போதும் எங்கள் இன்ஸ்டிடியூட் இயங்கிக்கொண்டு இருக்கிறது. அந்த பக்கம் போனால் எட்டிப்பார்ப்பேன். அதே வயலட் கலர் இங்க் பேனா, ஒரு பேட், அதே மேஜை, அதே பிட்மேன் புத்தகம், வயதே ஆகாத என் ஆசிரியர் பி.வி.பால் அதே உற்சாகத்துடன் வரவேற்பார். பல சமயங்களில் ஒரு மாணவர் கூட இருப்பதில்லை. சில சமயம் யாராவது ஒரு குட்டிப்பெண் டைப் அடித்துக்கொண்டிருப்பார். உடனே அவளை வரவழைப்பார். .'அப்புறம் அடிக்கலாம்மா.. இங்கே வா..இது யார் தெரியுதா'. என்று ஆரம்பித்து என் சாதனைகளை எடுத்துரைப்பார்.. நெளிந்து கொண்டு கேட்பேன், அந்த பெண்ணின் நிலையும் அதுதான். . அதெல்லாம் ஒரு காலம் என்று மீண்டும் தொடர்வார். 'இவரோட தம்பிங்க கல்யாணசுந்தரம், மணிகண்டன் எல்லோரும் என் சிஷ்யங்க' என்ற ரீதியில் போகும்.. 'சார், இன்னும் ஏன் சார் இதை நடத்திட்டு இருக்கீங்க, ஒரு கம்ப்யூட்டர் சென்டர் ஆரம்பிக்கலாமில்ல' என்ற கேட்டால் பதில் வராது. காலி சேர்களுடன் இருக்கும் தட்டச்சு அறையை ஒரு முறை பார்த்துவிட்டு சத்தமாக சிரிப்பார், எனக்கு நேரம் தவறாமையை போதித்த என் குருநாதர்.

ஒவ்வொரு முறையும் அங்கிருந்து வேதனையோடுதான் வெளியேறுகிறேன்.

Friday, February 5, 2010

எப்பவும் நான் ராஜா!!


விடிந்தால் சென்னைக்கு கல்லூரியில் சேர செல்லவேண்டும்...மாலையில் சிறை அரங்கத்தில் அன்னக்கிளி படத்தின் 58 வது நாள் விழா. சிவகுமார், இளையராஜா என்று பெரிய ஆட்கள் வருகிறார்கள்ஆவலோடு விழாவிற்கு சென்றேன். விழாவுக்கு வந்த கூட்டம் முழுக்க இளையராஜாவுக்கு வந்த கூட்டம். அவருடைய இசை நிகழ்ச்சியும் உண்டு...ஒரு திரைப்படம் வெளியான இந்த குறைந்த நாட்களில் பெரிய ஆள் ஆன அந்த உருவத்தில் சிறிய மனிதனை பார்க்கத்தான் கூட்டம்!
டப்பா படங்களையே வெளியிட்டு வந்த அத்தாணி பாபு இந்த படத்தை வாங்கியிருந்தார். ஸ்டில்களுடன் அந்த படத்தின் பாடல்கள் அடங்கிய ஈபி ரெகார்ட் கவர் ஒன்றையும் கொடுத்தார். வண்ணத்தில் ஒரு கருப்பு மனிதனின் படம்..இசை அமைப்பாளர் என்று வெளியாகியிருந்தது. ஒரு புதிய சகாப்தத்தை படைக்கபோகிறவர் என்ற உணர்வு அப்போது ஏற்படவில்லை. படம் இருதயா தியேட்டரில் வெளியாகி டப்பாவுக்குள் போகும் நிலையில் பாடல்களால் சூடு பிடித்து கிடு கிடு என்று பற்றத்தொடங்கியது...எங்கு பார்த்தாலும் மச்சானை பார்த்தீங்களாதான்!!! படம் ஹிட்..வெற்றிவிழா என்று ஒரே கலக்கல்தான்...மேடையில் பேனர் வரைந்ததற்காக எங்கள் நிறுவனத்திற்கு ஒரு (கேடையம் எதுவும் ஸ்டாக் இல்லாததால்) வாட்ச் பரிசு...இளையராஜா கையால்தான் வாங்குவேன் என்று முதலிலேயே அத்தாணி பாபுவிடம் விண்ணப்பம்..வெள்ளை சட்டையை வெள்ளை பேண்ட்டில் இன் செய்திருந்த அந்த குட்டையான மாமனிதனிடம்..அப்போது அவரை விட குட்டியாயிருந்த இந்த பொடியன் எங்கப்பா சார்பில் இதை வாங்கினான்! மறக்க முடியாத கணங்கள்!!

ஆமாம்..இசையறிவு அப்படி என்னதான் இருந்தது...காலையில் பாடும் ராகம் என்னவோ...என்று தம்பி கேட்டவுடன்...நீளமாக ஆலாபனை செய்து 'பூபாளம்' என்று ராவணன் சொல்லி கேட்டது மட்டும்தான்...எல்லோரையும் போலவே திரைப்பாடல்கள் மட்டுமே இசை ரசனையை கொடுத்தன. டேப் ரிக்கார்டர் அப்போதுதான் பரவிக்கொண்டிருந்தது...மேடைகளில் வணக்கம் பலமுறை சொன்னேன்...என்று தமிழ்ப்பாடலில் சம்பிரதாயமாக ஆரம்பித்து பின்னர் ஷர்மிளியும், யாதோன் கி பாராத்தும், பாபியும் மட்டுமே கேட்கக்கிடைத்த காலம்...! எங்கும் யாவரும் இந்தி பாடல்களையே கேட்டு மகிழ்ந்திருந்தபோது...புறப்பட்டதுதான் ராஜாவின் பயணம்! ஏற்கனவே ஜி.கே.வெங்கடேஷின் பாடல்களை புதிய பாணியில் 'பொண்ணுக்கு தங்க மனசு' போன்ற படங்களில் கேட்டபோது...ஏற்பட்ட சந்தேகம் அவருடைய உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ராஜாவின் பாடல்களை கேட்டபோது தெளிந்தது...பட்டி தொட்டியெல்லாம் மேடையில் கம்யூனிச கானங்களை முழங்கிய பாவலரின் தம்பி என்ற ஹோதா...அதற்க்கு முன்னரே பத்மா சுப்பிரமணியம் குடும்பத்து பெண்கள் வெளியிட்ட தமிழக நாட்டு பாடல்கள் என்ற கேசட்டின் பாடல்கள் அன்னக்கிளியின் மூலத்தை பறைசாற்றின. அந்த கேசட்டும் கவரும் இன்னும் என்னிடம் ராஜாவின் பெயருடன் இருக்கின்றன.

அப்போதும் எம்.எஸ்.வி., கே.வி.எம்., போன்ற இசை அமைப்பாளர்கள் புகழின் உச்சியில் இருந்தாலும்..புதுமுக நடிகர்கள், புதுமுக இயக்குனர்கள் , புதிய பாணி திரைப்படங்கள் என்று கிளம்பி வந்த காலத்தில் உறுதுணையாய் இருந்தது ராஜாவின் இசை. பாமர ரசிகர்கள் கூட பின்னணி இசையின் அனுபவத்தை உணரத்தொடங்கிய காலம். ரீரிக்கார்டிங் சூப்பர் மா என்று யாரை பார்த்தாலும் பேசிக்கொண்டிருந்தது ஒரு ஆச்சரியமான திருப்பம்! பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம் என்று புறப்பட்ட பட்டாளம் இசை இளையராஜா என்ற டைட்டில் கார்டுடந்தான் ஆரம்பித்தனர்..சலீல் சவுத்ரியுடன் ஆரம்பித்த பாலு மகேந்திராவும் இந்த வரிசையில் சேர்ந்தவர்!! ஒரு இசை அமைப்பாளருக்கு கட் அவுட் வைக்கத் தொடங்கியது இவருக்குத்தான். பூஜை, இன்று முதல் விளம்பரங்கள் எல்லாமே நடிகர்களின் படங்களுக்கு ஈடாக இவருடைய போட்டோ, மற்றும் பட்டங்களுடன் வெளியிடத் தொடங்கினர்! இளையராஜாவும் ஒரு சாமியார் தோற்றத்தில் தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார்..கடும் பணிகளுக்கிடையே ஏராளமான படங்களுக்கு பாடல்களையும் பின்னணி இசையையும் தந்தார். எங்கள் கடையில் பேனர் வரையும்போது அவருடைய பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவோம்..இதனால் என் சக சிவாஜி / எம். எஸ்.வி. ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானேன். தியாகம், தீபம் போன்ற படங்கள் வந்தபோது முன்னவர்கள் சமாதானம் ஆனார்கள்.!

ரஜினி, கமல், மைக் மோகன் போன்றவர்களின் படங்களில் இளையராஜா கட்டாயம் ஆனார். ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ராஜாவின் தம்பி கங்கை அமரன் போன்ற அடுத்த தலைமுறையினரின் படங்கள் பாடல்களுக்காகவே ஓடின. பாலசந்தர் போன்ற இயக்குனர்கள் கூட ராஜாவை அணுக நேர்ந்தது அவர்களுக்கே கஷ்டமாக இருந்திருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலமாக இளையராஜா அதிருப்தியாளர்களுக்கு ஒரு புதிய வழி பிறந்தது...அது ரகுமானின் வரவு. பாலசந்தரின் சொந்தப்படமான ரோஜாவுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள இசை அமைப்பாளரான எ.கே.சேகரின் மகனும் விளம்பர ஜிங்கிள்ஸ் இசை அமைப்பாளருமான இந்த இளைஞர் இசை மற்றும் தொழில்நுட்ப கலவைகளை சிறந்த முறையில் உருவாக்கி பெரும் புகழ் பெற ஆரம்பித்தார்...மணிரத்னம், பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்கள் அப்படியே முகாம் மாறினர். ராஜாவுக்கு அப்படியே மாற்றாக தோற்றம் தர ஆரம்பித்தார் ரகுமான். இமேஜ் பில்டிங் , மக்கள் தொடர்பு, எல்லாவற்றிலும் ரகுமான் முன்னிலைபடுத்தப்பட்டார். இவர் பரதேசி கோலம் என்றால் அவர் கார்ப்பரேட் ஸ்டைல்..உடை, சிகையலங்காரம் அனைத்தும் நிபுணர்களாலும் விளம்பர எஜெண்டுகளாலும் முடிவெடுக்கப்பட்டு அவருடைய பயணம் திட்டமிட்டு அமைக்கப்பட்டு இன்று ஆஸ்கார், கிராம்மி வரை சென்று விருதுகளை அள்ளி வருகிறார்.

இளையராஜா, ஒரு முசுடு, கஞ்சன், அல்பம் என்பது போல் ஒரு திட்டமிட்ட சித்தரிப்பு தமிழ் ஊடகங்களில் நிலவி வருகிறது..பலரால் ஒரு கருப்பு தலித் பேர்வழி இவ்வளவு உயரங்களை அடைந்ததை ஜீரணிக்க முடியவில்லை என்றுதான் நான் கருதுகிறேன். அவருடைய இசையை பற்றி ஒரு வரி விமர்சிக்க அருகதை இல்லாதவர்கள் அவருடைய பிற தன்மைகளை கடுமையாக சாடுகிறார்கள். சிலருக்கு அவரை பிராம்மணவாதியாக சித்தரிப்பதில் ஆனந்தம். செம்மங்குடியின் அறையில் உள்ள ஒரே ஒரு புகைப்படம் இளையராஜாவினுடையது என்று ஒரு புலனாய்வாளர் சித்தரிக்கிறார்..ஆயிரக்கணக்கான பாடல்களில் 'கனவு காணும் வாழ்க்கை யாவும்' போன்ற ஒன்றிரெண்டை கண்டுபிடித்து, அவரிடமோ பாலு மகேந்திராவிடமோ கேட்காமல் இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் காப்பியடிக்கப்பட்டவை என்று தீர்ப்பளிக்கிரார்கள் பலர். ஆதாரமில்லாமல் அவர் பேசியதாக எதையோ சொல்லி கடுமையாக சாடுகிறார்கள் சிலர்..ஒட்டுண்ணி எழுத்தாளர்களோ பேட்டி காண வந்த நிருபருக்கு பச்சை தண்ணி கொடுக்க மறுத்த கஞ்சன் என்று புதுக்கதை புனைகிறார்கள். எத்தனை எத்தனை தாக்குதல்கள். என் அபிமான கட்டுரையாளரும் நண்பருமான ஷாஜி கூட அவருடைய குணநலன்களை கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தது ஒரு அதிர்ச்சி..நியாயமான காரணங்களை அவர் கூறினாலும்...மனதுக்கு கஷ்டமாக இருந்தது...என்ன செய்வது...என் மூளைக்குள் எங்கோ ஒரு இளையராஜா ரசிகன் பதுங்கியிருக்கிறானே!.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஆளுக்கு தகுந்த அளவுகோல்களை ஊடகங்கள் வைத்திருக்கின்றனவோ என்பதுதான். பி.ஆர்.வேலைகளில் படு வீக்கான ராஜாவை எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடிப்பவர்கள் பிறரிடம் தாள் பணிந்து நிற்பது காமெடியாக இருக்கிறது. இந்திய திரைப்பட பாடல்கள் ஒப்பீட்டில் ஒரு சாதாரண பாடலான 'ஜெய் ஹோ' இத்தனை விருதுகளை குவிக்கும் அரசியலும் பின்புலமும் , எந்த புலனாய்வு எழுத்தாளர்களாலும் விவாதிக்கப்படுவதில்லை...தேசிய பெருமிதம் தடுக்கும் போலிருக்கிறது. ஒருவருடைய மத நம்பிக்கை மற்றும் செயல்களும் விவாதிக்கப்படும்போது, இன்னொருவரை சவுகரியமாக மறக்கக்கூடிய வசதிகள் இங்கிருக்கின்றன.

சரி எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். 'அதர்மம்' பட பூஜை ஏவிஎம்மில். என் தம்பியின் முதல் படம் என்பதால் போயிருந்தேன். கடும் மழை.. எங்கும் சேறும் சகதியும்...வெள்ளை வெளேர் செருப்பை கழற்றி வைத்துவிட்டு இளையராஜா உள்ளே வந்து வணங்குகிறார். வெளியே வரும்போது நெரிசலில் ஒரு தள்ளு முள்ளு. செருப்பை மாட்ட குனிகிறார். பதட்டப்பட்ட என் நண்பர் ஒருவர் பச்சக் என்று தன் சேற்று காலை செருப்பின் மீது வைக்க..செருப்பு ஒரே கண்றாவியாகிவிட்டது...ராஜாவின் இமேஜ் குறித்து ஒரு வித எண்ணம் கொண்டிருந்த நண்பர் நடுங்கி விட்டார்...வாய் குழற எதோ சொல்ல வந்த அவரை ராஜா சமாதானப்படுத்தி, குனிந்து தேங்கி நின்ற நீரில் செருப்பை அலசி அணிந்து கொண்டு வெளியேறினார்.

அவரை கடைசியாக நேரில் நான் பார்த்தது அப்போதுதான்.

Monday, August 24, 2009

சுற்றுலா போகலாம் வாங்க!

பள்ளி நாட்களில் கல்விச்சுற்றுலா என்பது மறக்க முடியாதது. வாழ்க்கையில் பார்க்கமுடியாத பல விஷயங்களை பள்ளியில் படிக்கும்போது சர்வ சாதாரணமாக பார்த்திருக்கிறோம் என்பது சாதாரண விஷயமா? நம்மில் எத்தனை பேர் சட்டை பொத்தான் தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் போயிருக்கிறீர்கள்? HMT வாட்ச் உருவாகுவதை பார்த்திருக்கிறீர்களா? அட மைசூர் சாண்டல் சோப் தொழிற்ஸாலைக்குள்ளாவது போயிருக்கிறீர்களா? இதையெல்லாம் நான் பள்ளி நாட்களிலேயே சாதித்துவிட்டேன்.

சுற்றுலா குறித்து நோட்டீஸ் போர்டில் பார்த்தவுடனேயே பரபரப்பு தொற்றிக்கொள்ளும்..பணத்தை கட்டி முன்பதிவு செய்யவேண்டும். ஒரு வேளை இடம் கிடைக்காவிட்டால்...? புறப்படும் தினத்தன்று அதிகாலையிலேயே பெட்டியுடன் பள்ளிக்கு ஓடிச்சென்று, டிரைவர் இருக்கைக்கு மிக அருகில், முன்சீட்டை பிடிக்க வேண்டும்..அப்போதுதான் சாலைக்காட்சிகள் நன்றாக காணக்கிட்டலாம்.

பள்ளி சுற்றுலா உண்மையிலேயே ஒரு அற்புதமான அனுபவம். பெற்றோர்களை பிரிந்து இருக்கும் நான்கு நாட்கள். ஆசிரியர்களின் அரவணைப்பு. வகுப்பு தோழர்களுடன் உல்லாசம். ஜூனியர் சீனியர் மாணவர்களுடன் நட்பு..ஓட்டல் சாப்பாடுகள், எல்லாவற்றுக்கும் மேலாக புதுப்புது இடங்கள். சில சிரமங்களும் இருந்தன. குளியல், நம்பர் டூ போதல் போன்ற விஷயங்களுக்கு அந்த சிறு வயது, நம்மை சரியான நேரத்திற்கும் கூட்டத்துடன் அனுசரிக்க கற்று கொடுக்காததால் தடுமாறச்செய்யும்.

பள்ளி சுற்றுலா நினைவுகள் சாகும் வரை கொஞ்சம் கூட மங்காமல் நம்மை தொடர்ந்து வருவது ஒரு அற்புதம். ஒரு முறை நான்கு நாட்களுக்கு செலவுக்கு என் தந்தை கொடுத்த இருபது ரூபாயில் பத்தை தொலைத்துவிட்டேன். அறுபதுகளின் இறுதி ஆண்டுகள். மூன்றாவது நாள், சாப்பிட காசு இல்லை. காரைக்காலில் ஒரு ஓட்டலில் சக மாணவர்களும் ஆசிரியர்களும் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் வாசலில் பிச்சைக்காரனை போல நின்று கொண்டிருக்கிறேன். கையை துடைத்துக்கொண்டு வெளியே வந்த ஆசிரியர், எங்களால் புளியோதரை, நடையன் என்றெல்லாம் அழைக்கப்பட்டவரும், கையில் விரல்களால் ஊசியை போல வலிக்கும்படி கிள்ளக்கூடியவருமான அவர் என்னிடம் ஏண்டா வெளியில் நிற்கிறாய் என்று உறுமுகிறார். பசியும் ஆற்றாமையும் அழுகையாய் வெடிக்கிறது. பணம் தொலைஞ்சு போச்சு சார் என்று கதறுகிறேன். கொடுங்கோலன் என்னை அன்புடன் உள்ளே அழைத்து சென்று நான் சாப்பிட்டு முடிக்கும் வரை உடன் இருந்து பில்லுக்கும் பணம் கொடுத்து விட்டு, என்னிடமும் ஒரு பத்து ரூபாய் தாளை திணிக்கிறார். ஊருக்கு திரும்பியவுடன், பெட்டியை முழுவதும் காலி செய்து பார்க்கும்போது ஒழுகிய தேங்காய் எண்ணையில் ஊறிப்போய் கிடக்கிறது அந்த தொலைந்து போன பத்து ரூபாய்!

அந்த வயதில் பார்த்த இடங்கள்தான் எத்தனை! திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், கல்லணை, தஞ்சை பெரிய கோவில், காரைக்கால், வேளாங்கண்ணி, நாகூர், சென்னையில் மூர் மார்கெட், ரயில் நிலையத்துக்கு அருகே இருந்த மிருகக்காட்சி சாலை, மவுண்ட் ரோட், அங்கேயிருந்த பிரம்மாண்டமான சினிமா பேனர்கள் , என் அபிமான சிவாஜியின் சாந்தி தியேட்டர், மெரீனா பீச், பிற்பாடு நான் படிக்கப்போகும் மாநிலக்கல்லூரி, பெங்களூர், மைசூர், பிருந்தாவனம், HMT வாட்ச் பாக்டரி, சந்தன சோப் தொழிற்சாலை, மாண்டியா சர்க்கரை ஆலை, மதுரை கோவில், அழகர் கோவில், திருப்பரங்குன்றம், நாயக்கர் மஹால்.....அடடே பதினைந்து வயதுக்குள் எத்தனை இடங்கள்!

சரி, உங்களில் எத்தனை பேர் சினிரமா படங்கள் பார்த்திருக்கிறீர்கள்? மூன்று ப்ரோஜெக்டர்கள் வழியாக பிரம்மாண்டமான திரையில் ஒரே உருவமாக , அதாவது மூன்று பாகங்களின் ஒரே உருவமாக காட்டப்படுவதுதான் சினிரமா. இதன் சிறப்பம்சம் துல்லியம் மற்றும் பிரம்மாண்டம். தென்னாட்டில் இரண்டே தியேட்டர்களில் மட்டுமே திரையிட முடியும்..அவை பெங்களூரில் உள்ள கபாலியும் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் பைலட்டும் தான். நான் ஒன்பதாவது படிக்கும்போது பெங்களூர் சுற்றுலாவில் ஒரு சினிரமா படத்தின் போஸ்டர்களை பார்த்தேன். 'The Seven wonders of the World' என்பது படத்தின் பெயர். அப்போதே நான் சினிமாவை ஒரு கலை என்று உணர்ந்த ரசிகன். எப்படியாவது அந்த படத்தை பார்க்காவிட்டால் மண்டை உடைந்துவிடும் என்ற நிலை. பகல் முழுவதும் ஆசிரியர்களை நச்சரித்து..கடைசியில் வெற்றி எனக்கு. இரவுக்காட்சியில் கபாலியின் குளிர்ந்த திரையரங்கில் பிரம்மாண்டமான் திரையில் அந்த படத்தை வாயை பிளந்து அத்தனை மாணவர்களும் பார்த்தோம். அதற்கு பிறகு இந்தியாவில் சினிரமா படங்கள் வரவேயில்லை, அந்த வகைப்படங்களும் அழிந்து போயின!

முதன் முதலாக திரைப்பட ஷூட்டிங்கை பார்த்ததும் பள்ளி சுற்றுலாவில்தான். மகாபலிபுரத்தில் கமலா மூவீசின் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு. கே.பாலசந்தர் இயக்கிக்கொண்டிருக்கிறார். தினத்தந்தி சினிமா செய்திகளை படித்தே தமிழறிஞரான நான், அதன் நாயகன் சிவாஜியை தேடுகிறேன்...என்ன ஏமாற்றம், ஒரு பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்தது சிவகுமாரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும். எல்லா பசங்களும் ஆட்டோகிராப் வாங்க துடித்துக்கொண்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர் எம்.ஆர்.சந்தானம் , வாங்கப்பா, நான் ஆட்டோகிராப் போடுகிறேன் என்று கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்....இந்த படம் வரவேயில்லை. வா ராஜா வாவின் ஷூட்டிங் இன்னொருபுறம். இதை இயக்கிக்கொண்டிருந்தவரோ அருட்செல்வர் ஏபிஎன். குழந்தை பருவத்தில் இதை விட சந்தோஷங்கள் என்ன வேண்டும்!

இப்போது இத்தகைய கல்வி சுற்றுலாக்கள் உள்ளனவா? பெரும்பாலும் இல்லை என்பதே அந்த அதிர்ச்சி தகவல்கள். என் பள்ளி பருவத்தில் நான் பார்த்த இந்த இடங்களை என் குழந்தைகள் பார்த்ததில்லை! நமது பாரம்பரிய பெருமைகள் பள்ளி நாட்களில் குழந்தைகளுக்கு போய் சேர்வதில்லை. இப்போதெல்லாம் கல்வி சுற்றுலா என்பது பல நூறுகள் செலவழித்து, கேளிக்கை பூங்காக்களுக்கு போய் சுகாதாரமற்ற நீர் விளையாட்டுக்களில் ஆட்டம் போடுவதுதான். கொச்சின், பெங்களூர் வரை தாவளம் போட்டிருக்கும் இத்தகைய கேளிக்கை மையங்களின் முகவர்கள் பள்ளி முதல்வர்களை சந்திக்கின்றனர். பெரும் பரிசுகள் கை மாறுகின்றன . முதல்வர்களின் குடும்பத்தினருக்கு வேறு தேதிகளில் அங்கு பெரும் உபசாரங்கள் காத்திருக்கின்றன. ஒரு பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் என்றால், அத்தனை பெரும் வெவ்வேறு தேதிகளில் ஒரே இடத்துக்கு பயணித்து, ஊசிப்போன பிரைட் ரைசையும் தின்று , உடம்பையும் கெடுத்துக்கொண்டு திரும்பி வருகிறார்கள். பயனடைவது இத்தகைய சுற்றுலா தளங்களை கட்டி சம்பாதிப்பவர்களும், இந்த பள்ளி முதல்வர்களும். இழப்பவர்கள் அற்புதமான அனுபவங்களையும் ,பண்பாட்டு செல்வங்களையும் மறுக்கப்பட்ட பாவம் மாணவர்கள்தாம்.

Tuesday, July 28, 2009

இடியட் பாக்ஸ்

அறிவியல் வளர்ந்தாலும் வளர்ந்தது, மூட நம்பிக்கையையும் உரம் போட்டு வளர்க்கின்றனர் சில அறிவியலாளர்கள். தமிழ் டிவி சேனல்களை சொல்கிறேன். எப்பொழுது திரும்பினாலும் திரைப்படம் மற்றும் சீரியல்கள் போக, ஒன்று ரிக்கார்ட் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கின்றனர் அல்லது குரல் வளப்போட்டி நடந்துகொண்டிருக்கின்றது. நீதிபதிகளாக நடிகைகளும் பாடகர்களும் தங்கள் கருத்துக்களை அள்ளி விட்டுக்கொண்டிருக்கின்றனர். கெமிஸ்ட்ரி என்னும் அறிவியல் சொல் அடிக்கடி இங்கு இடம் பெறுகிறது. மற்றபடி பார்த்தால், ஜோதிடர்களும் வைத்தியர்களும் தூள் கிளப்பிக்கொண்டிருக்கின்றனர். பெரிய சேனல்கள் போக, லோக்கல் சேனல்களும் இவர்களை நம்பியே வாழ்கின்றன. எனக்கு இத்தகைய நிகழ்ச்சிகள் மிகவும் பிடிக்கும். கூசாமல் அள்ளி விடும் பொய்கள்தான் எத்தனை இனிமையாக இருக்கின்றன. இவர்கள் பெரும்பாலும் பெயருக்கு முன்னாள் Er. என்று வேறு போட்டுக்கொள்வது விசேஷம். பொறியாளர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டமே வராது போலிருக்கிறது.

ஒரு என்ஜினீயர் ஜோதிடர் கீச்சுக்குரலில் கத்தும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. மழுமழு என்று ஷேவ் செய்த முகம். வழக்கம் போல ஒரு அழகான இளம்பெண். பிரச்சினைகளை முகத்தில் தேக்கிக்கொண்டு கஸ்டமர். மனித உரிமைகள் குறித்த ஒரு மாத இதழ் நடத்துகின்றாராம்.ஒண்ணும் போணியாவதில்லையாம். கீச்சுக்குரல் அலறுகிறது -'நீங்கள் வார இதழின் இடது மேல் மூலையில் ஒரு சரஸ்வதி படம் போடணும். வீணை வாசிக்கிற சரஸ்வதி. ஒரு நீளமான ஓவல் ,புளூ கலரில் இருக்கவேண்டும் , அதுக்குள்ளே இந்த சரஸ்வதி இருக்கவேண்டும். இதை மட்டும் போடுங்க, எங்கேயோ போய் விடுவீங்க...' கஸ்டமர் பாதி தெளிந்துவிடுகிறார். 'சரிங்க, ஒரு அமவுண்ட் சென்னையிலிருந்து வரவேண்டும்...அதுக்கு...' என்று ஒரு கொக்கியை போடுகிறார். 'அட, எல்லாமே சரியாப்போயிடும் என்று சொல்றேன்..., அந்த பணமும் வந்து விடும்...'இதை விட என்ன வேண்டும்? இவர் அடிக்கடி காம்பியர் பெண்ணிடம் ஜோக்கும் அடிப்பார். அவர்களும் லிப்ஸ்டிக் கலையாமல் சிரிப்பார்கள்.

ஒரு தம்பதி இதில் புகழ் பெற்றவர்கள். கணவர் யூல் பிரின்னர் போல் மொட்டை அடித்துக்கொண்டு கோட் அணிந்து கொண்டு எனர்ஜி மருத்துவம் செய்வார். ஒரு அலுமிநியபெட்டியில் பழைய ஜேம்ஸ் பாண்டு காலத்திய உபகரணங்களை வைத்துக்கொண்டு எனர்ஜி ட்ரீட்மென்ட் கொடுப்பார். ஹார்ட் அட்டாக்கால் துடிக்கும் பூவிலங்கு மோகன் அப்படியே ரிவர்சில் குணமடைந்து சிரிக்கும் அந்த விளம்பரம் நினைவிருக்கிறதா?

இவர் மனைவி ஒரு பெயர் மாற்ற நிபுணர். பீல்ட் அவுட் ஆன ஒரு நடிகை இவர் சார்பாக கஸ்டமர்களிடம் கேள்விகள் கேட்பார். இவர் கரும்பலகையில் ஒரு வினாடியில் கேள்வி கேட்டவரின் தலைவிதியையே மாற்றிவிட்டு புன்னகை செய்வார். எல்லாமே எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா...எனர்ஜி ட்ரீட்மென்ட் தோல்வியடைந்தால் கூட அதே கூரைக்குள் பெயரில் ஒரு ஸ்பெல்லிங்கை மாற்றி தப்பித்துவிடலாம் பாருங்கள்.

பெயர் மாற்றம் செய்வது பெரிய வேலைதான். இதில் முன்னோடியான 'சோழ' மன்னர் ஒருவரின் ஆர்ப்பாட்டமான நிகழ்ச்சி ஒரு புறம் என்றால், ஆன்மீக வெளியில் நனைந்தது போல் அமைதியாக தோற்றமளிக்கும் 'பார்மெட் நியூமெராலாஜியின்' தந்தை ஒருபுறம். இசைஞானியே கொஞ்சம் சதை போட்டு பெயர் மாற்ற வந்துவிட்டாரோ என்று யாரையும் ஒரு நிமிடம் தடுமாறச்செய்யும் தோற்றம். டைட்டில் காட்சியிலேயே திருவண்ணாமலை கிரிவலம் வருகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ராசிக்கல் நிபுணர்கள் ஒரு தனி ஜாதி. பெயர்களில் இருந்து வரும் அதிர்வுகள் ஒரு வகை என்றால், இவர்கள் தரும் குட்டி கற்களில் இருந்து வரும் வைப்ரேஷன்கள் ஆளையே புரட்டிப்போட்டுவிடும். படிக்காதவன் படிப்பான். அடங்காப்பிடாரர்கள் சாதுவாகிவிட, உங்கள் வியாபாரம் ஓகோவென்று செழித்தோங்கும். மேலதிகாரிகள் சீட்டிலிருந்து எழுந்து உங்களுக்கு சல்யூட் அடிக்கலாம், எதிரிகள் உங்கள் காலடியில் குழைந்து கிடக்கலாம். ஒரே ஜாலிதான் இந்த மோதிரங்களை அணிந்துகொண்டால். ஒரு காலத்தில் பூசி மெழுகிய தோற்றத்தில் நகைக்கடை அதிபராகவே பல ஜென்மங்களில் பிறந்திருக்கக்கூடிய ஒரு என்ஜினீயர் இதில் கலக்கிக்கொண்டிருந்தார். டிவி பார்த்து எங்கள் உறவினர் ஒருவர் இவர் கடை வாசலில் நின்று அடம் பிடித்து தன இரண்டு மகன்களுக்கும் ராசிக்கல் மோதிரம் வாங்கிச்சென்றார். ரூபாய் ஐம்பதாயிரம் அவுட். மெடிக்கல் சீட்டுக்காகத்தான் இந்த விட்டலாச்சாரியா வேலை. எந்த சீட்டும் கிடைக்கவில்லை என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்கு தெரிந்திருக்கும் . இப்போதும் சில மார்வாடிகளும் சில பட்டுப்புடவை பெண்மணிகளும் இத்தகைய நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

வைத்தியர்களும் ஆன்மீகவாதிகளும் இன்னொரு ரகம். கங்கைக்கரையில் அமர்ந்து அருளுரை வழங்கும் சங்கரரின் கார்பன் காப்பிகளும், சென்னை நகரில் வாழும் சில ஒயிட் & ஒயிட் சாமிகளும் புகுந்து விளையாடுகிறார்கள்.கிறிஸ்துவ பேச்சாளர்கள் பாடவும் செய்கிறார்கள். பூங்காக்களில், ஏற்கனவே பதிவு செய்த பாடல்களுக்கு வாயசைத்து , ஆடவும் செய்கிறார்கள். கண்கொள்ளா காட்சி. ஒரு பெரிய குடும்பத்தின் கடைக்குட்டி பாப்பா கூட கண்ணீர் மல்க 'பாவிகளுக்காக' இறைவனிடம் மன்றாடி அழுகின்றது. தினத்தந்தியில் ஒரு காலத்தில் முழுப்பக்க விளம்பரங்கள் தந்து வாலிப வயோதிக அன்பர்களுக்கு கடாக்ஷம் வழங்கியவர்கள் இப்போது தொலைக்காட்சிகளில் ஆணித்தரமாக ஆதாரங்களை புட்டு புட்டு வைக்கின்றனர். சில நம்பள்கி நிம்பள்கி வைத்தியர்களும் சிறுநீரகம் முதல் புற்று நோய் வரை எதையும் விட்டு வைக்க தயாராகயில்லை. ஒரு கீரையையே பிராண்டாக்கி பிரம்மாண்ட மாளிகையும், ஒட்டகங்களும், யானைகளும், பட்டாடைகளும், கிரீடங்களுமாக ஒரு வைத்தியர் ராஜபோகமாக காட்சியளிக்கிறார். சென்ற வாரம் ஒரு ராஜவைத்தியர் மான்கறி, புலிக்கறி வைத்தியம் செய்வதாக பல லட்சங்களை கறந்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

லோக்கல் சேனல்கள்தான் சூப்பர். ஒரு சாமியார் வருகிறார். கூட அழகிய இளம்பெண்ணிற்க்கு பதிலாக ஒரு ரிட்டயர்டு ஆசிரியர். அவர் இவரிடம் கேள்விகளை கேட்பார். இடை இடையே தொலைபேசி அழைப்புக்கள்.
'சாமி, எனக்கு மூணு நாளா மூச்சுபிடிப்பு...'
'நாளைக்கு ஒரு நாள்...வீதியிலே....லாட்ஜிலே....நம்பர் ரூமிலே இருப்பேன். எழுவத்தி அஞ்சு ரூபா கொண்டு வாங்க. ஒரு பொடி தர்றேன்..சரியாப்போகும்' என்று சீப்பாக விஷயத்தை முடித்துக்கொண்டு தொடர்வார்.
'உங்க பின்னாலே பச்சை ஷர்ட் போட்டுட்டு நிக்கிறானே பையன், நேத்து ஸ்கூலில் ஒரு ஜாமெட்ரி பாக்சை தொலைத்தானே, கிடைச்சுதா' என்று தன் ஞானத்ருஷ்டி பிட்டை தூக்கி நம் மேல் போடுவார்.

இன்னும் ஒரு மந்திரவாதி இங்கு தொலைக்காட்சிகளில் தோன்றுவார். உடனே தெலுங்கு ப்பட மந்திரவாதியை கற்பனை செய்யாதீர்கள் . இவர் ஏதோ வங்கி உத்தியோகஸ்தர் போல தோன்றுவார். சகட்டு மேனிக்கு போன் செய்பவர்களை திட்டுவார். எல்லோரும் இவரை கிண்டல் செய்வதாக எண்ணம்..ரசமணி, மாந்திரீகம், வர்மம், என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே , இவற்றை வைத்து உங்கள் சகல பிரச்சினைகளையும் அடுத்த நாள் மதியத்திற்குள் தீர்த்து வைத்துவிடுவார். பாரத்தை தூக்கி என் மேல் போடுங்கள் என்று இந்த காலத்தில் யார் சொல்வார்கள்?

வாஸ்து நிபுணர்கள், அக்குபங்சர் நிபுணர்களும் தங்கள் பங்குக்கு உங்களுக்கு உதவ காத்துக்கிடக்கின்றனர். சில உள்ளூர் சேனல்களின் சிக்கன நடவடிக்கையால் தொடர்ந்து இரண்டு மூன்று நிபுணர்களுக்கு ஒரே இளம் பெண் காம்பியராக பணி புரிய நேரும்போதுதான் அடப்பாவமே என்று தோன்றுகிறது.

ஒரு வைத்தியர் அடிக்கடி இப்படி நேரலையில் தோன்றுவார். கண், மற்றும் பல் தவிர எதையும் பார்க்கமாட்டார். ஒரு ரிஷியின் பெயரை தனக்கு முன்னாள் சேர்த்துக்கொண்டவர். ஒரு நாள் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..கடும் பல்வலியுடன் ஒரு நேயர் அழைக்கிறார். இவர் சொல்கிறார்,
'அய்யா, இன்று நான் நடத்துவது வேறு நிகழ்ச்சி, இன்று வைத்தியம் பார்ப்பதில்லை, நாளை இதே நேரத்தில் அழையுங்கள், பதிலளிக்கிறேன்.'
ஆம், முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சி. லிங்க் வணிகம். ஆயிரம் ரூபாய் போட்டால் அடுத்த வருடம் நாற்பத்தி ஏழே முக்கால் கோடியும், சில லட்சங்களும் அள்ளித்தரக்கூடிய அற்புத நிகழ்ச்சி. சில பத்திரங்களையும் நமக்கு காட்டுகிறார். சட்டப்படி நடக்கிறதாம்...
ஒரு நாள் அகத்தியர், அடுத்த நாள் சுக்ராச்சாரியார்....டபுள் ஆக்ட்!

இன்னும் பல ஆசாமிகள் இருக்கிறார்கள்...ஆனாலும் இவர்களை நான் கிண்டல் செய்ய மாட்டேன். யார் கண்டது, அடுத்த வருடம் நானே அங்கு அமர்ந்து வாஸ்து வியாபாரமோ மந்திரக்கல் விற்பனையோ நடத்தலாம்.

Tuesday, May 5, 2009

கோவை கபே


தேன் மிட்டாய்தான் நான் ரசித்து உண்ட முதல் இனிப்பு என்று நினைக்கிறேன். கெட்டியாக இருப்பது போன்ற பாவனையுடன் உள்ள தோலைக்கடித்தால் உள்ளே ஜிவ்வென்று பாயும் இனிப்புப்பாகு. இப்போதும் எங்காவது கிடைக்கலாம். ஆனால் அதே ருசி இருக்காது என்று அதன் மீதே சத்தியம் செய்வேன்.

ஒவ்வொரு பள்ளியின் வாசலிலும் இரண்டொரு கிழவிகள் சாக்கை விரித்து, அதன் மீது இலந்தைபழம், இலந்தைவடை என்று அழைக்கப்படும் இடித்து குழைந்த இலங்தையையும் கமர்கட் போன்ற பல்வேறு மிட்டாய்களையும் விற்பார்கள். மாங்காய் பத்தை , பேரிக்காய், ப்ளம்ஸ், சீசனுக்கு தகுந்தாற்போல் கிடைக்கும். நெல்லிக்காய், சில சமயங்களில் சாயமும் சேர்த்து கிடைக்கும். முனிசிபல் பள்ளியாயிருந்தாலும் கான்வென்டாக இருந்தாலும் இது ஒரு பொதுவான காட்சி. நான் கான்வெண்டிலிருந்து கிக்கானி பள்ளிக்கு இடம் பெயர்ந்தபோது புதுப்புது காட்சிகள். கோன் ஐஸ்க்ரீமையே அப்போதுதான் பார்க்கிறேன். அதுவரை கோன் என்பது அட்டையினால் தயாரிக்கப்பட்டது என்றே நினைத்திருந்தேன். எங்கும் கிடைக்காது என்று சொல்லப்பட்ட கணக்கு புத்தகம் வாங்க என் தந்தை தந்த காசு முழுவதும், ஸ்கூல் பின் கதவு அருகில் மதிய இடைவேளையில் கோன் ஐஸாக கரைந்தது. சின்ன வயதில் எங்கள் ஊருக்கு சென்றபோது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த கோவில் பணியாளர்கள் வாங்கி வந்த உண்ட கட்டியை சாப்பிடவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து சாப்பிட்டிருக்கிறேன். கோவில் மடப்பள்ளியில் சமைக்கப்பட்ட இந்த சோறுதான் கோவிலின் கடைநிலை ஊழியர்களான துப்புரவாளர்கள் , வாத்தியம் இசைப்பவர்கள் முதல் அர்ச்சகர்கள் வரை உணவாக திகழும். சில அறிவிலிகள் பிராமணர்களை 'உண்ட கட்டி' என்று அழைக்கும்போது சிரித்துக்கொள்வேன். எந்த கோவிலுக்கு போனாலும் முதலில் பிரசாதக்கடைக்குத்தான் விஜயம். திருப்பதிக்கு போகாவிட்டாலும் சென்று வந்த யாரிடமும் சிறிதும் வெட்கமில்லாமல் லட்டு பிரசாதத்தை கேட்டு வாங்கி தின்பது இன்றும் என் வழக்கம்.

பள்ளி இருந்த இடத்தின் அருகே காமராஜபுரம் என்று ஒரு குடியிருப்பு. பெரும்பாலும் நகரசுத்தி தொழிலாளர்கள் வாழும் பகுதி. பிளாட்பாரத்தில் பெரிய தட்டுக்களில் வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு பாளம் பாளமாக கடும் மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும். எங்கள் வீட்டிலும் மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் இந்த நிறத்தில் அல்ல. மிளகாயும் உப்பும் கலந்து அரைத்த துவையலை, அல்லது மிளகாய்ப்பொடி எண்ணையை தொட்டு வெள்ளை நிறத்தில் தொண்டைக்குள் வெண்ணையை போல் வழுக்கிச்செல்லும். பள்ளியின் வாசலில் எப்போதும் பதநீர் வாரியத்தின் மூன்று சக்கர வண்டி நிற்கும். சில்லென்ற பதநீர் அற்புதமாக இருக்கும்.

வீட்டு வாசல் தேடி வரும் வியாபாரிகள்தான் எத்தனை வகை. ஒரு சதுர கண்ணாடி டப்பாவில் ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய்களை அடுக்கிக்கொண்டு மணியடித்து விற்கும் வியாபாரிகள், பப்ஸ், பப்ஸ் வேஜிடேபில் பப்ஸ் என்று கூவி வருபவர்கள், வடை போண்டா, முறுக்கு வியாபாரிகள், சின்ன சின்ன கலர் உருண்டைகளை தட்டில் வைத்து, லாடு, லாடு, ரவா லாடு என்று அலறுபவர்கள், ஒரு நீள மூங்கில் கழியில் ஜவ்வு மிட்டாயை சுற்றிக்கொண்டு அதன் உச்சியில் கையில் ஜால்ராவை தட்டும் பெண் பொம்மையுடன் வரும் ஜவ்வு மிட்டாய் வியாபாரிகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதுவும் இந்த ஜவ்வு மிட்டாய் வியாபாரிகள் , குழந்தைகள் கைகளில் கடிகாரம், காதுகளில் ஜிமிக்கி என்று அந்த மிட்டாயினாலேயே செய்து கொடுத்துவிடுவார்கள். வண்டியில் சோன் பப்டி வியாபாரம் செய்யும் சிலர், கூடவே ஜவ்வு மிட்டாயையும் கலந்து ஒரு இனிப்பு செய்து கொடுப்பார்கள், அடடா! அமிர்தம்!

ஐஸ் என்றாலே குச்சி ஐஸ்தான். தகரப்பெட்டி போன்ற வண்டியிலும், சைக்கிள் கேரியரிலும் இதன் விற்பனை அமோகமாக இருக்கும். சேமியா ஐஸ், பால் ஐஸ், திராட்சை ஐஸ் என்று பல ருசிகள். பின்னர்தான் ஐஸ்க்ரீம் குச்சி வடிவத்திலும் வந்தன. சாலையில் நிறைய சர்பத் வண்டிகளை பார்க்கலாம். கலர் கலரான திரவங்களை கலந்து சர்பத்கள் கிடைக்கும். மரம் இழைக்கும் உளியைக்கொண்டு ஐஸ் கட்டிகளை இழைத்து குச்சியில் சுற்றி கலர் திரவங்களை தெளித்து கொடுத்தால் பசங்க உறி உறி என்று உறிவார்கள். அதே ஐஸ் துண்டுகளில் மோரீஸ் வாழைபழங்களை அரிந்து போட்டு பழம் போட்ட ஐஸ் என்று ஒரு அலுமினிய கரண்டியையும் போட்டு தருவார்கள். கோவை ஸ்வாமி தியேட்டர் வாசலில்தான் இது பிரசித்தி பெற்றது. இன்று அந்த தியேட்டர் இருந்த இடத்தில் ரத்னா ரெசிடென்சி என்ற ஸ்டார் ஓட்டலும் , வலையப்பட்டி என்ற உயர்தர உணவு விடுதியும் இருக்கின்றன. சர்பத் வண்டிகளின் வடிவம் சிறிது சிறிதாக மாறத்தொடங்கியது. ஒரு பெரிய எவர்சில்வர் அண்டாவில் ஆரஞ்சு சாறு , வண்ணங்கள், ஐஸ் கட்டிகளை கலக்கி வைத்திருப்பார்கள். சர்பத் கேட்பவர்களுக்கு பெரிய டம்ப்ளர்களில் ஊற்றி தருவார்கள். ரோஸ் மில்க் கேட்பவர்களுக்கு அலுமினிய கேன்களில் இருந்து பாலை ஊற்றி, ரோஸ் எசென்சையும் கலந்தால், ரெடி. இந்த வண்டிகளில் சினிமா நடிகர் நடிகைகளின் உருவங்களை பெரிதாக வரைந்து வைத்திருப்பார்கள்.

தியேட்டர் கான்டீன்கள் ஒரு தனி உலகம். இன்றும் சென்ட்ரல் தியேட்டர் கீரைவடையையும் காப்பியையும் பற்றி பேசாத பெருசுகள் அபூர்வம். அவ்வளவு ருசி, பின்னே இங்கு இருந்து தானே அன்னபூர்ணா ஓட்டல்கள் கிளை விரித்ததே. நான் பள்ளி மாணவனாக இருக்கும்போது, பக்கத்தில் இருந்த சென்ட்ரல் தியேட்டரில் , ஜாபர் என்ற புகழ் பெற்ற ஐஸ்க்ரீம் கடை இருந்தது. ஆங்கில படங்கள் மட்டும் திரையிட்ட ரெயின்போ தியேட்டர் காப்பியும் பப்சும் விலை குறைந்தவை, பேராசை அற்றவர்கள் ! ட்ரிங் என்று சோடா கலர் பாட்டில்கள் மீது ஒப்பனர் எழுப்பும் சத்தமும், அஸ்கா பர்பி, தேங்கா பிஸ்கட், தட்ட முறுக்கேய், என்ற ஒலிகளும் தியேட்டர்களுக்கே உரியவை. இதில் தேங்காய் பிஸ்கட் என்பது தேங்காய்க்கே சம்பந்தமில்லாத மைதா, கரும்புச்சர்க்கரை கலவையில் செய்யப்படும் தட்டையான பிஸ்கட். இந்திய சீட்டாவை போல் அழிந்து போன இனங்களில் இதுவும் ஒன்று. ஸ்ரீபதி தியேட்டர் முட்டை போண்டா இன்னொரு புகழ் பெற்ற ஐட்டம். இதன் தயாரிப்பாளரான முத்து, ஸ்ரீபதி முத்து என்றே புகழ் பெற்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

வீதிகளில் இனிப்பு கார வண்டிகள் அதிகமாக காணப்படும். இப்போதைய கார்ப்பரேஷன் கட்டிடத்திற்கு அருகில் பழைய மார்க்கெட் இருந்தது. உள்ளே மீன், பழைய புத்தகங்கள் மார்க்கெட் இருந்தது. வெளியில் சில மலையாள முஸ்லீம்கள் பாலக்காடு அல்வாவை கண்ணாடி வண்டிகளில் வைத்து விற்பார்கள். பெரும் பாளமாக கருஞ்சிவப்பு நிறத்தில் அல்வா கெட்டியாக இருக்கும். சில சிறு வண்ண வித்தியாசத்துடன் தேங்காய் எண்ணை மணம் வீசும் வேறு அல்வாக்களும் பக்கத்தில் இருக்கும். நேந்திரங்காய் சிப்ஸ் அப்போது அங்கு மட்டும்தான் கிடைக்கும். இன்று ஐந்து முக்கில் மட்டும் ஒவ்வொரு முக்கு மூலையிலும் ஒரு கடை, பிரம்மாண்ட அடுப்பில் சிப்ஸ்களை வறுத்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பாய் இரவு நேரத்தில் தன் வண்டியில் அல்வாவும், தேங்காய் பர்பியும் மட்டும் விற்றுக்கொண்டு வருவார். அவர் எப்படா வருவார் என்று ஒரு கோஷ்டியே காத்துக்கொண்டிருக்கும். இஸ்லாமியர் தெருக்களில் காலை நேரத்திலேயே சிலர் வண்டிகளில் வைத்து பாயசம் விற்றுக்கொண்டு வருவார்கள். இந்த வீதிக்கு குடி வந்த புதிதில், ஏக்கத்துடன் இந்த பாயசம் குடிப்பவர்களை பார்த்துக்கொண்டிருப்பேன்.

இப்போது தமிழ்நாட்டின் பொது உணவாக கருதப்படும் பரோட்டா, அப்போது சில இஸ்லாமியர் கடைகளில் மட்டும் கிடைக்கும். சில மத்திய தர வர்க்கத்தினர் அதை சாப்பிடுவதையே கேவலமாக நினைப்பார்கள். எங்கள் வீட்டருகே இருந்த மொம்மது டீ கடையில், சில நாட்களில் காலை டிபன் தயாராகவில்லை என்றால் என் தந்தை பரோட்டா சால்னாவை வாங்கி , மதிய உணவுக்கும் கட்டி கொடுத்துவிடுவார். அந்த கோதுமை பரோட்டாவின் பழுப்பு நிறமும் மொறுமொறுப்பும் மீண்டும் வரமுடியாதவை. எங்கள் பள்ளி, குஜராத்தியரும் பிராமணர்களும் அதிகமாக பயின்ற இடம். மதிய வேளைகளில் நான் பரோட்டாவுடன் இருந்தால் அது அவர்களுக்கெல்லாம் ஒரு அதிசயம். சிலருக்கு பொறாமையும் கூட.

பலகார வண்டிகள் என்றால் உடனே நினைவுக்கு வருவது, ராஜ வீதி, பெரிய கடை வீதி மற்றும் வைசியாள் வீதி. இன்று வண்டிகள் குறைந்தாலும் இங்கு சாப்பிடுபவர்கள் குறையவேயில்லை. கோமுட்டி செட்டியார்கள் இதில் கில்லாடிகள். டைம் டேபிள் வைத்து சாப்பிடுவார்கள். தயிர் வடை, பப்பு ரோட்டா, கரம் மற்றும் கரம் பொரிகள், கச கசா அல்வா, பலாப்பழ அல்வா, புலுசு அடை, ஜவ்வரிசி போண்டா, பணியாரம், இந்த கால பர்கருக்கு தாத்தாவான அந்த காலத்து மசாலா பன், தட்ட முறுக்கு சாண்ட்விச் ,பூசணி விதை பர்பி, கோதி அல்வா, தட்டை முறுக்கு, பால்கோவா , சீம்பால், என்று செம கட்டு கட்டுவார்கள். இரவு நேரங்களில் தேங்காய் பருத்தி பால் என்று ஒரு பானத்தை வண்டியில் வைத்து விற்று வருவார்கள். எங்க ஊர் வெந்தயக்காடி ருசியில் இருக்கும். ஒரு பெரிய பயில்வானின் படத்தை வரைந்து சகல மாலை மரியாதைகளுடன், பீம புஷ்டி அல்வாவை சில மதுரை பார்ட்டிகள் வண்டியில் வைத்து விற்று வருவார்கள். ஒரு அரை கிலோ சாப்பிட்டால் பயில்வான் ஆகி விடலாம் அல்லது பேதியில் போய்விடலாம். சுண்டல் வண்டிகளும், வேக வைத்த, மற்றும் வறுத்த கடலை வண்டிகளும் பிரசித்தம். தினம் ஒரு ஐட்டத்தை தன் பெட்டியில் 'இன்றைய ஸ்பெஷல்' என்று சைக்கிளில் விற்கும் ஒருவரை இந்த பகுதியில் பார்த்திருக்கிறேன்.பாணி பூரியை பிரபலமாக்கியது கூட இங்கிருந்த கந்தசாமி கடைதான். இன்று பரோட்டாவை போல் அதுவும் ஒரு தேசிய பலகாரம். எங்கெங்கு நோக்கினும் ஆண்களும் பெண்களும் பேல்பூரியையும் கட்லேட்டையும் பானிபூரியையும் சரமாரியாக விழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். கோவையை போல் வேறு எங்கும் இப்படி இருப்பதாக தெரியவில்லை. ஒரு முறை கடலூரில் என் நண்பர்களை சந்தித்தபோது தெரிந்த விவரம், அவர்கள் ஒவ்வொரு முறையும் பொருட்காட்சியை எதிர்பார்த்து இருப்பார்களாம். அப்போதுதான் பாணி பூரியை சாப்பிட முடியுமாம். அடப்பாவமே, எங்க ஊருக்கு வாங்கையா, டீக்கடையை கூட பல லட்சத்துக்கு இன்டீரியர் டெகரேட் செய்து வைத்திருப்பார்கள் என்பேன். வெளியூர் போனால் அங்குள்ள சிறப்பு ஐட்டங்கள் என்ன என்று தேடுவதுண்டு. நாஞ்சில் நாடன் மணிவிழாவுக்கு எங்கள் ஊரான நாகர்கோவிலுக்கு போயிருந்தபோது, நண்பர்களுக்கு முந்திரிக்கொத்தும் , வெள்ளை நிற சிலேப்பியும், மட்டிப்பழமும் , நொங்கு சர்பத்தும் அறிமுகப்படுத்தினேன். திருநெல்வேலி அல்வா இல்லாமலா? சென்னையில் படித்த காலங்களில் ரத்னா கபேயின் இட்லி சாம்பாரிலும் ரசமலாயிலும் , எங்கும் கிடைத்த லஸ்ஸியிலும் மூழ்கிக்கிடந்தேன். கேரளா போனால் கறிமீன் எங்கே கிடைக்கும் என்று அலைவேன்.

மலையாளிகள் அதிகமாக இருப்பதால், பழ பஜ்ஜி, அவல் பொறி, குழாய்புட்டு, ஆப்பம் போன்ற வகைகள் அவர்களுடைய டீக்கடைகளிலும் சின்ன ஓட்டல்களிலும் கிடைத்தன. இப்போது அப்படிப்பட்ட ஓட்டல்கள் இருக்கின்றனவா என்றே தெரியவில்லை. இப்போது மைசூர் பாகில் கின்னஸ் ரிக்கார்ட் ஏற்படுத்தியிருக்கும் கிருஷ்ணா ஸ்வீட்சில் அப்போது சுடச்சுட கிடைக்கும் கிச்சடியும், காராபூந்தி போட்ட தயிர்வடையும் பயங்கர புகழ் பெற்றவை. சென்ட்ரல் பிரியாணியும், ஈரானி ஓட்டலும், பழைய பெங்களூர் பிரியாணி ஓட்டலும், விச்வனாதைய்யர் மிட்டாய் கடையும் மித்ர சமாஜும் பழைய நினைவுகள் மட்டுமே. எங்கள் வீதியில் கிடைக்கும் கறிவடையும் , மட்டன் பப்சும் ரம்ஜான் ஸ்பெஷல் என்று வருடம் ஒரு மாதத்திற்கு மட்டுமே கிடைக்கிறது.
கிருஷ்ண விலாசின் பாதாம் அல்வாவும், லக்கி கபேயின் சமோசாவும் டீயும், அதன் புகழ் பெற்ற சப்ளையர் கன்னத்தில் ஸ்பைடர்மேன் போல் விழாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் பென்சிலும் நீங்காத நினைவுகள்.

பழைய தின்பண்டங்கள் அதே இடங்களில் இன்றும் கிடைக்கின்றனவா?
பாம்பே ஆனந்த பவனில் இன்னும் அதே சோன் பப்டி கிடைக்கிறது.
அங்கண்ணன் கடையில் இன்னும் பிரியாணி கிடைக்கிறது.
ஆதித்தன் கடையில் கச கசா அல்வாவும், ஒய் எம் சி எ பக்கத்தில் வாழைப்பழ பஜ்ஜியும் , முரளி ரெஸ்டாரன்ட்டில் சப்பாத்தி சிக்கனும் , ரங்கே கவுடர் வீதி பெரியவர் கடையிலும் ஐந்து முக்கு காவேரி ஐசிலும் அதே ருசியுடன் சோடா சர்பத் கிடைக்கிறது. ரயில் நிலையத்திற்கு எதிரில், சற்று இடம் மாறிய நிலையில் இன்னும் தேவி ஓட்டலில் மங்களூர் பாணி பரோட்டாவும், சிக்கன் கறியும் கிடைக்கிறது. ஸ்டேன்ஸ் பள்ளி அருகில் இருந்த சாலையில் பிளாட்பார டீக்கடையாயிருந்த பர்மா பாய் கடை, இன்று பல கிளைகளுடன் விரிந்து நிற்கிறது. சுப்பு மெஸ் அதே பொலிவுடன் நடைபெறுகிறது. எழுவதுக்கும் அதிகமான ஆண்டுகளை கடந்தும் ராயல் இந்து ரெஸ்டாரன்ட் அப்படியே இருக்கிறது.

இன்னொரு புறம் பீட்சா பர்கர் கடைகளும், அதி நவீன அலங்கார ஓட்டல்களும் , ஐஸ்க்ரீம் பார்லர்களும் தினமும் இந்த வளரும் நகரத்தில் தோன்றிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆட்கள் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.