Tuesday, May 5, 2009

கோவை கபே


தேன் மிட்டாய்தான் நான் ரசித்து உண்ட முதல் இனிப்பு என்று நினைக்கிறேன். கெட்டியாக இருப்பது போன்ற பாவனையுடன் உள்ள தோலைக்கடித்தால் உள்ளே ஜிவ்வென்று பாயும் இனிப்புப்பாகு. இப்போதும் எங்காவது கிடைக்கலாம். ஆனால் அதே ருசி இருக்காது என்று அதன் மீதே சத்தியம் செய்வேன்.

ஒவ்வொரு பள்ளியின் வாசலிலும் இரண்டொரு கிழவிகள் சாக்கை விரித்து, அதன் மீது இலந்தைபழம், இலந்தைவடை என்று அழைக்கப்படும் இடித்து குழைந்த இலங்தையையும் கமர்கட் போன்ற பல்வேறு மிட்டாய்களையும் விற்பார்கள். மாங்காய் பத்தை , பேரிக்காய், ப்ளம்ஸ், சீசனுக்கு தகுந்தாற்போல் கிடைக்கும். நெல்லிக்காய், சில சமயங்களில் சாயமும் சேர்த்து கிடைக்கும். முனிசிபல் பள்ளியாயிருந்தாலும் கான்வென்டாக இருந்தாலும் இது ஒரு பொதுவான காட்சி. நான் கான்வெண்டிலிருந்து கிக்கானி பள்ளிக்கு இடம் பெயர்ந்தபோது புதுப்புது காட்சிகள். கோன் ஐஸ்க்ரீமையே அப்போதுதான் பார்க்கிறேன். அதுவரை கோன் என்பது அட்டையினால் தயாரிக்கப்பட்டது என்றே நினைத்திருந்தேன். எங்கும் கிடைக்காது என்று சொல்லப்பட்ட கணக்கு புத்தகம் வாங்க என் தந்தை தந்த காசு முழுவதும், ஸ்கூல் பின் கதவு அருகில் மதிய இடைவேளையில் கோன் ஐஸாக கரைந்தது. சின்ன வயதில் எங்கள் ஊருக்கு சென்றபோது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த கோவில் பணியாளர்கள் வாங்கி வந்த உண்ட கட்டியை சாப்பிடவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து சாப்பிட்டிருக்கிறேன். கோவில் மடப்பள்ளியில் சமைக்கப்பட்ட இந்த சோறுதான் கோவிலின் கடைநிலை ஊழியர்களான துப்புரவாளர்கள் , வாத்தியம் இசைப்பவர்கள் முதல் அர்ச்சகர்கள் வரை உணவாக திகழும். சில அறிவிலிகள் பிராமணர்களை 'உண்ட கட்டி' என்று அழைக்கும்போது சிரித்துக்கொள்வேன். எந்த கோவிலுக்கு போனாலும் முதலில் பிரசாதக்கடைக்குத்தான் விஜயம். திருப்பதிக்கு போகாவிட்டாலும் சென்று வந்த யாரிடமும் சிறிதும் வெட்கமில்லாமல் லட்டு பிரசாதத்தை கேட்டு வாங்கி தின்பது இன்றும் என் வழக்கம்.

பள்ளி இருந்த இடத்தின் அருகே காமராஜபுரம் என்று ஒரு குடியிருப்பு. பெரும்பாலும் நகரசுத்தி தொழிலாளர்கள் வாழும் பகுதி. பிளாட்பாரத்தில் பெரிய தட்டுக்களில் வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு பாளம் பாளமாக கடும் மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும். எங்கள் வீட்டிலும் மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் இந்த நிறத்தில் அல்ல. மிளகாயும் உப்பும் கலந்து அரைத்த துவையலை, அல்லது மிளகாய்ப்பொடி எண்ணையை தொட்டு வெள்ளை நிறத்தில் தொண்டைக்குள் வெண்ணையை போல் வழுக்கிச்செல்லும். பள்ளியின் வாசலில் எப்போதும் பதநீர் வாரியத்தின் மூன்று சக்கர வண்டி நிற்கும். சில்லென்ற பதநீர் அற்புதமாக இருக்கும்.

வீட்டு வாசல் தேடி வரும் வியாபாரிகள்தான் எத்தனை வகை. ஒரு சதுர கண்ணாடி டப்பாவில் ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய்களை அடுக்கிக்கொண்டு மணியடித்து விற்கும் வியாபாரிகள், பப்ஸ், பப்ஸ் வேஜிடேபில் பப்ஸ் என்று கூவி வருபவர்கள், வடை போண்டா, முறுக்கு வியாபாரிகள், சின்ன சின்ன கலர் உருண்டைகளை தட்டில் வைத்து, லாடு, லாடு, ரவா லாடு என்று அலறுபவர்கள், ஒரு நீள மூங்கில் கழியில் ஜவ்வு மிட்டாயை சுற்றிக்கொண்டு அதன் உச்சியில் கையில் ஜால்ராவை தட்டும் பெண் பொம்மையுடன் வரும் ஜவ்வு மிட்டாய் வியாபாரிகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதுவும் இந்த ஜவ்வு மிட்டாய் வியாபாரிகள் , குழந்தைகள் கைகளில் கடிகாரம், காதுகளில் ஜிமிக்கி என்று அந்த மிட்டாயினாலேயே செய்து கொடுத்துவிடுவார்கள். வண்டியில் சோன் பப்டி வியாபாரம் செய்யும் சிலர், கூடவே ஜவ்வு மிட்டாயையும் கலந்து ஒரு இனிப்பு செய்து கொடுப்பார்கள், அடடா! அமிர்தம்!

ஐஸ் என்றாலே குச்சி ஐஸ்தான். தகரப்பெட்டி போன்ற வண்டியிலும், சைக்கிள் கேரியரிலும் இதன் விற்பனை அமோகமாக இருக்கும். சேமியா ஐஸ், பால் ஐஸ், திராட்சை ஐஸ் என்று பல ருசிகள். பின்னர்தான் ஐஸ்க்ரீம் குச்சி வடிவத்திலும் வந்தன. சாலையில் நிறைய சர்பத் வண்டிகளை பார்க்கலாம். கலர் கலரான திரவங்களை கலந்து சர்பத்கள் கிடைக்கும். மரம் இழைக்கும் உளியைக்கொண்டு ஐஸ் கட்டிகளை இழைத்து குச்சியில் சுற்றி கலர் திரவங்களை தெளித்து கொடுத்தால் பசங்க உறி உறி என்று உறிவார்கள். அதே ஐஸ் துண்டுகளில் மோரீஸ் வாழைபழங்களை அரிந்து போட்டு பழம் போட்ட ஐஸ் என்று ஒரு அலுமினிய கரண்டியையும் போட்டு தருவார்கள். கோவை ஸ்வாமி தியேட்டர் வாசலில்தான் இது பிரசித்தி பெற்றது. இன்று அந்த தியேட்டர் இருந்த இடத்தில் ரத்னா ரெசிடென்சி என்ற ஸ்டார் ஓட்டலும் , வலையப்பட்டி என்ற உயர்தர உணவு விடுதியும் இருக்கின்றன. சர்பத் வண்டிகளின் வடிவம் சிறிது சிறிதாக மாறத்தொடங்கியது. ஒரு பெரிய எவர்சில்வர் அண்டாவில் ஆரஞ்சு சாறு , வண்ணங்கள், ஐஸ் கட்டிகளை கலக்கி வைத்திருப்பார்கள். சர்பத் கேட்பவர்களுக்கு பெரிய டம்ப்ளர்களில் ஊற்றி தருவார்கள். ரோஸ் மில்க் கேட்பவர்களுக்கு அலுமினிய கேன்களில் இருந்து பாலை ஊற்றி, ரோஸ் எசென்சையும் கலந்தால், ரெடி. இந்த வண்டிகளில் சினிமா நடிகர் நடிகைகளின் உருவங்களை பெரிதாக வரைந்து வைத்திருப்பார்கள்.

தியேட்டர் கான்டீன்கள் ஒரு தனி உலகம். இன்றும் சென்ட்ரல் தியேட்டர் கீரைவடையையும் காப்பியையும் பற்றி பேசாத பெருசுகள் அபூர்வம். அவ்வளவு ருசி, பின்னே இங்கு இருந்து தானே அன்னபூர்ணா ஓட்டல்கள் கிளை விரித்ததே. நான் பள்ளி மாணவனாக இருக்கும்போது, பக்கத்தில் இருந்த சென்ட்ரல் தியேட்டரில் , ஜாபர் என்ற புகழ் பெற்ற ஐஸ்க்ரீம் கடை இருந்தது. ஆங்கில படங்கள் மட்டும் திரையிட்ட ரெயின்போ தியேட்டர் காப்பியும் பப்சும் விலை குறைந்தவை, பேராசை அற்றவர்கள் ! ட்ரிங் என்று சோடா கலர் பாட்டில்கள் மீது ஒப்பனர் எழுப்பும் சத்தமும், அஸ்கா பர்பி, தேங்கா பிஸ்கட், தட்ட முறுக்கேய், என்ற ஒலிகளும் தியேட்டர்களுக்கே உரியவை. இதில் தேங்காய் பிஸ்கட் என்பது தேங்காய்க்கே சம்பந்தமில்லாத மைதா, கரும்புச்சர்க்கரை கலவையில் செய்யப்படும் தட்டையான பிஸ்கட். இந்திய சீட்டாவை போல் அழிந்து போன இனங்களில் இதுவும் ஒன்று. ஸ்ரீபதி தியேட்டர் முட்டை போண்டா இன்னொரு புகழ் பெற்ற ஐட்டம். இதன் தயாரிப்பாளரான முத்து, ஸ்ரீபதி முத்து என்றே புகழ் பெற்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

வீதிகளில் இனிப்பு கார வண்டிகள் அதிகமாக காணப்படும். இப்போதைய கார்ப்பரேஷன் கட்டிடத்திற்கு அருகில் பழைய மார்க்கெட் இருந்தது. உள்ளே மீன், பழைய புத்தகங்கள் மார்க்கெட் இருந்தது. வெளியில் சில மலையாள முஸ்லீம்கள் பாலக்காடு அல்வாவை கண்ணாடி வண்டிகளில் வைத்து விற்பார்கள். பெரும் பாளமாக கருஞ்சிவப்பு நிறத்தில் அல்வா கெட்டியாக இருக்கும். சில சிறு வண்ண வித்தியாசத்துடன் தேங்காய் எண்ணை மணம் வீசும் வேறு அல்வாக்களும் பக்கத்தில் இருக்கும். நேந்திரங்காய் சிப்ஸ் அப்போது அங்கு மட்டும்தான் கிடைக்கும். இன்று ஐந்து முக்கில் மட்டும் ஒவ்வொரு முக்கு மூலையிலும் ஒரு கடை, பிரம்மாண்ட அடுப்பில் சிப்ஸ்களை வறுத்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பாய் இரவு நேரத்தில் தன் வண்டியில் அல்வாவும், தேங்காய் பர்பியும் மட்டும் விற்றுக்கொண்டு வருவார். அவர் எப்படா வருவார் என்று ஒரு கோஷ்டியே காத்துக்கொண்டிருக்கும். இஸ்லாமியர் தெருக்களில் காலை நேரத்திலேயே சிலர் வண்டிகளில் வைத்து பாயசம் விற்றுக்கொண்டு வருவார்கள். இந்த வீதிக்கு குடி வந்த புதிதில், ஏக்கத்துடன் இந்த பாயசம் குடிப்பவர்களை பார்த்துக்கொண்டிருப்பேன்.

இப்போது தமிழ்நாட்டின் பொது உணவாக கருதப்படும் பரோட்டா, அப்போது சில இஸ்லாமியர் கடைகளில் மட்டும் கிடைக்கும். சில மத்திய தர வர்க்கத்தினர் அதை சாப்பிடுவதையே கேவலமாக நினைப்பார்கள். எங்கள் வீட்டருகே இருந்த மொம்மது டீ கடையில், சில நாட்களில் காலை டிபன் தயாராகவில்லை என்றால் என் தந்தை பரோட்டா சால்னாவை வாங்கி , மதிய உணவுக்கும் கட்டி கொடுத்துவிடுவார். அந்த கோதுமை பரோட்டாவின் பழுப்பு நிறமும் மொறுமொறுப்பும் மீண்டும் வரமுடியாதவை. எங்கள் பள்ளி, குஜராத்தியரும் பிராமணர்களும் அதிகமாக பயின்ற இடம். மதிய வேளைகளில் நான் பரோட்டாவுடன் இருந்தால் அது அவர்களுக்கெல்லாம் ஒரு அதிசயம். சிலருக்கு பொறாமையும் கூட.

பலகார வண்டிகள் என்றால் உடனே நினைவுக்கு வருவது, ராஜ வீதி, பெரிய கடை வீதி மற்றும் வைசியாள் வீதி. இன்று வண்டிகள் குறைந்தாலும் இங்கு சாப்பிடுபவர்கள் குறையவேயில்லை. கோமுட்டி செட்டியார்கள் இதில் கில்லாடிகள். டைம் டேபிள் வைத்து சாப்பிடுவார்கள். தயிர் வடை, பப்பு ரோட்டா, கரம் மற்றும் கரம் பொரிகள், கச கசா அல்வா, பலாப்பழ அல்வா, புலுசு அடை, ஜவ்வரிசி போண்டா, பணியாரம், இந்த கால பர்கருக்கு தாத்தாவான அந்த காலத்து மசாலா பன், தட்ட முறுக்கு சாண்ட்விச் ,பூசணி விதை பர்பி, கோதி அல்வா, தட்டை முறுக்கு, பால்கோவா , சீம்பால், என்று செம கட்டு கட்டுவார்கள். இரவு நேரங்களில் தேங்காய் பருத்தி பால் என்று ஒரு பானத்தை வண்டியில் வைத்து விற்று வருவார்கள். எங்க ஊர் வெந்தயக்காடி ருசியில் இருக்கும். ஒரு பெரிய பயில்வானின் படத்தை வரைந்து சகல மாலை மரியாதைகளுடன், பீம புஷ்டி அல்வாவை சில மதுரை பார்ட்டிகள் வண்டியில் வைத்து விற்று வருவார்கள். ஒரு அரை கிலோ சாப்பிட்டால் பயில்வான் ஆகி விடலாம் அல்லது பேதியில் போய்விடலாம். சுண்டல் வண்டிகளும், வேக வைத்த, மற்றும் வறுத்த கடலை வண்டிகளும் பிரசித்தம். தினம் ஒரு ஐட்டத்தை தன் பெட்டியில் 'இன்றைய ஸ்பெஷல்' என்று சைக்கிளில் விற்கும் ஒருவரை இந்த பகுதியில் பார்த்திருக்கிறேன்.பாணி பூரியை பிரபலமாக்கியது கூட இங்கிருந்த கந்தசாமி கடைதான். இன்று பரோட்டாவை போல் அதுவும் ஒரு தேசிய பலகாரம். எங்கெங்கு நோக்கினும் ஆண்களும் பெண்களும் பேல்பூரியையும் கட்லேட்டையும் பானிபூரியையும் சரமாரியாக விழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். கோவையை போல் வேறு எங்கும் இப்படி இருப்பதாக தெரியவில்லை. ஒரு முறை கடலூரில் என் நண்பர்களை சந்தித்தபோது தெரிந்த விவரம், அவர்கள் ஒவ்வொரு முறையும் பொருட்காட்சியை எதிர்பார்த்து இருப்பார்களாம். அப்போதுதான் பாணி பூரியை சாப்பிட முடியுமாம். அடப்பாவமே, எங்க ஊருக்கு வாங்கையா, டீக்கடையை கூட பல லட்சத்துக்கு இன்டீரியர் டெகரேட் செய்து வைத்திருப்பார்கள் என்பேன். வெளியூர் போனால் அங்குள்ள சிறப்பு ஐட்டங்கள் என்ன என்று தேடுவதுண்டு. நாஞ்சில் நாடன் மணிவிழாவுக்கு எங்கள் ஊரான நாகர்கோவிலுக்கு போயிருந்தபோது, நண்பர்களுக்கு முந்திரிக்கொத்தும் , வெள்ளை நிற சிலேப்பியும், மட்டிப்பழமும் , நொங்கு சர்பத்தும் அறிமுகப்படுத்தினேன். திருநெல்வேலி அல்வா இல்லாமலா? சென்னையில் படித்த காலங்களில் ரத்னா கபேயின் இட்லி சாம்பாரிலும் ரசமலாயிலும் , எங்கும் கிடைத்த லஸ்ஸியிலும் மூழ்கிக்கிடந்தேன். கேரளா போனால் கறிமீன் எங்கே கிடைக்கும் என்று அலைவேன்.

மலையாளிகள் அதிகமாக இருப்பதால், பழ பஜ்ஜி, அவல் பொறி, குழாய்புட்டு, ஆப்பம் போன்ற வகைகள் அவர்களுடைய டீக்கடைகளிலும் சின்ன ஓட்டல்களிலும் கிடைத்தன. இப்போது அப்படிப்பட்ட ஓட்டல்கள் இருக்கின்றனவா என்றே தெரியவில்லை. இப்போது மைசூர் பாகில் கின்னஸ் ரிக்கார்ட் ஏற்படுத்தியிருக்கும் கிருஷ்ணா ஸ்வீட்சில் அப்போது சுடச்சுட கிடைக்கும் கிச்சடியும், காராபூந்தி போட்ட தயிர்வடையும் பயங்கர புகழ் பெற்றவை. சென்ட்ரல் பிரியாணியும், ஈரானி ஓட்டலும், பழைய பெங்களூர் பிரியாணி ஓட்டலும், விச்வனாதைய்யர் மிட்டாய் கடையும் மித்ர சமாஜும் பழைய நினைவுகள் மட்டுமே. எங்கள் வீதியில் கிடைக்கும் கறிவடையும் , மட்டன் பப்சும் ரம்ஜான் ஸ்பெஷல் என்று வருடம் ஒரு மாதத்திற்கு மட்டுமே கிடைக்கிறது.
கிருஷ்ண விலாசின் பாதாம் அல்வாவும், லக்கி கபேயின் சமோசாவும் டீயும், அதன் புகழ் பெற்ற சப்ளையர் கன்னத்தில் ஸ்பைடர்மேன் போல் விழாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் பென்சிலும் நீங்காத நினைவுகள்.

பழைய தின்பண்டங்கள் அதே இடங்களில் இன்றும் கிடைக்கின்றனவா?
பாம்பே ஆனந்த பவனில் இன்னும் அதே சோன் பப்டி கிடைக்கிறது.
அங்கண்ணன் கடையில் இன்னும் பிரியாணி கிடைக்கிறது.
ஆதித்தன் கடையில் கச கசா அல்வாவும், ஒய் எம் சி எ பக்கத்தில் வாழைப்பழ பஜ்ஜியும் , முரளி ரெஸ்டாரன்ட்டில் சப்பாத்தி சிக்கனும் , ரங்கே கவுடர் வீதி பெரியவர் கடையிலும் ஐந்து முக்கு காவேரி ஐசிலும் அதே ருசியுடன் சோடா சர்பத் கிடைக்கிறது. ரயில் நிலையத்திற்கு எதிரில், சற்று இடம் மாறிய நிலையில் இன்னும் தேவி ஓட்டலில் மங்களூர் பாணி பரோட்டாவும், சிக்கன் கறியும் கிடைக்கிறது. ஸ்டேன்ஸ் பள்ளி அருகில் இருந்த சாலையில் பிளாட்பார டீக்கடையாயிருந்த பர்மா பாய் கடை, இன்று பல கிளைகளுடன் விரிந்து நிற்கிறது. சுப்பு மெஸ் அதே பொலிவுடன் நடைபெறுகிறது. எழுவதுக்கும் அதிகமான ஆண்டுகளை கடந்தும் ராயல் இந்து ரெஸ்டாரன்ட் அப்படியே இருக்கிறது.

இன்னொரு புறம் பீட்சா பர்கர் கடைகளும், அதி நவீன அலங்கார ஓட்டல்களும் , ஐஸ்க்ரீம் பார்லர்களும் தினமும் இந்த வளரும் நகரத்தில் தோன்றிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆட்கள் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

Monday, May 4, 2009

சைக்கிள் நாட்கள்


அவ்வப்போது மனிதனின் கண்டுபிடிப்புக்களை குறித்து ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிடுவேன்.

சைக்கிள் என்றும் என் பிரியத்திற்குரிய விஷயம். இரண்டு சக்கரங்கள், ஒரு பெடல், ஒரு பிரேமை வைத்து என்னமாய் கண்டுபிடித்திருக்கிறான் பாருங்கள். வேஷ்டி கட்டியவன், காலை முன்னால் தூக்கி அமர்கிறான், பேன்ட் போட்டவன் காலை அலேக்காக தூக்கி பின்னால் போடுகிறான். சைக்கிள் ஓட்ட பழகுவதற்கு முன்பே ஒரு குட்டி சைக்கிள் விபத்தில் சிக்கியவன் நான். ஐந்தாம் வகுப்பு விடுமுறையில் பூதப்பாண்டியில் இருந்து திட்டுவிளை செல்லும் பாதையில் என் சித்தப்பாவுக்கு பின்னால் அமர்ந்திருந்தவன், காலை சக்கரத்துக்குள் விட்டுவிட்டேன். இன்றும் அந்த பெரும் காயத்தின் தழும்பு என் காலில் உள்ளது.
பிறகுதான் சைக்கிள் விட கற்றுக் கொண்டேன். அது ஒரு நீண்ட நாள் பயிற்சியாக நீண்டது. பல ஆசிரியர்கள், பல உத்திகள் . இருவது இன்ச் வாடகை சைக்கிள் எடுக்கவேண்டியது, அதை குருநாதர்கள் கையில் ஒப்படைக்கவேன்டியது, அவர்கள் அனுபவித்தது போகத்தான் சிஷ்யனான எனக்கு. நகரின் மத்தியில் நெரிசலான இடத்தில் வாழும் எங்களுக்கு பக்கத்து யூனியன் பள்ளி மைதானமும் சிட்டி முனிசிபல் பள்ளி மைதானமும்தான் பயிற்சி களங்கள். எப்போதும் கால்பந்து விளையாடும் மைதானங்கள் அவை. அப்போது கிரிக்கெட் பைத்தியம் அவ்வளவாக இல்லாத காலம். பசங்கள் கால்பந்து விளையாடாத நேரமாக பார்த்து போகவேண்டும். பின்னால் ஒருவர் சீட்டை பிடித்துக்கொண்டே ஓடிவரும்போது பேலன்சுடன் ஓட்ட இயலும். அவர் விட்டு விட்டார் என்று தெரிந்தால் அவ்வளவுதான் .விழுந்துவிடுவேன். ஆனாலும் பேலன்ஸ் கை வந்தபோது கிடைத்த சந்தோசம் இருக்கிறதே, அதை வர்ணிக்க இயலாது.காலை வேளையில், இளஞ்சூரிய வெயிலில் அகண்ட மைதானத்தில் சைக்கிள் காற்றை கிழித்து பறக்கும் சுகம், விமானப் பயணத்திலும் கிடைக்குமா? சந்தேகம்தான்.

பிறகு அட்வான்ஸ் பயிற்சிகள். குருநாதர் இரண்டு கற்களை ஒரு அரையடி வித்தியாசத்தில் வைத்துவிடுவார். அந்த இடைவெளியில் லாவகமாக செலுத்தவேண்டும். ஒரு சர்க்கஸ் வீரனுக்குரிய பெருமை அதை செய்தால் கிடைக்கலாம். மேலும் டபுள்ஸ், ட்ரிபிள்ஸ், கைகளை விட்டு ஓட்டுதல் போன்ற போஸ்ட் டிப்ளமா பயிற்சிகளையும் கடந்த பின் சாலையில் வெள்ளோட்டம். பல தர வாகனங்களுக்கு இடையில் சைக்கிளை பெருமையுடன் ஓட்டும்போது அடடா என்ன சுகம்.

என் முதல் சைக்கிள் ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போதுதான் கிடைத்தது.செகண்ட் ஹேண்ட் இருவது இன்ச் சைக்கிள். அதை பள்ளிக்கு ஓட்டிச்சென்ற முதல் நாள் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நண்பர்களிடம் அதை காட்டி காட்டி பெருமையில் பூரித்துக்கொண்டு இருந்தேன். அவர்களிடம் பெரும்பாலும் இருந்தது அப்போது புகழ் பெற்றிருந்த பி எஸ் ஏ ஸ்போர்ட்ஸ் சைக்கிள்கள் மற்றும் உறுதியான ராலே, ஹெர்குலெஸ், அம்பர் வகையறாக்கள். என்னிடம் இருந்ததோ ரீபெயிண்ட் செய்த ஒரு டப்பா வண்டி. ஆனாலும் அது ஒரு பொன் குஞ்சு அல்லவா! முதல் நாள் பள்ளி விடும் மணி அடிக்கிறது. பகல் முழுவதும் சைக்கிள் ஞாபகமாகவே இருந்த எனக்கு அது ஒரு விடுதலை சங்கு. பாய்ந்து சைக்கிள் ஸ்டாண்டிற்கு வருகிறேன். வண்டியை தள்ளிக்கொண்டு ரோட்டுக்கு வருகிறேன். அங்கு என் சக மாணவர்கள் டிராபிக் ஒழுங்கு படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சாலையில் வந்துகொண்டிருக்கும் வண்டிகளை நிறுத்தி எங்களுக்கு வழி விடுகிறார்கள். எல்லோரும் என்னையும் என் சைக்கிளையும் பார்ப்பது போல் எனக்கு ஒரு குறுகுறுப்பு. பெடலில் கால் வைக்காமல் தாவி ஒரு டைவ் அடித்து சைக்கிளில் ஏறி பறக்கிறேன். கிக்கானி பள்ளி மாணவர்கள் அனைவரும் என்னை துரத்தி வருவது போன்ற உணர்வு.

பள்ளி நாட்களில் சைக்கிள் ஒரு பெருமையான விஷயம்தான். கொஞ்ச நாட்களில் இருவது இன்ச் சலித்துப்போய் பெரிய சைக்கிள் வேண்டுமென்று என் தந்தையை நச்சரிக்க தொடங்கிவிட்டேன். மீண்டும் ஒரு செகண்ட் ஹேண்ட் ராலே வண்டி வாங்கித்தரப்பட்டது. அப்போது சைக்கிளை அலங்கரித்துவைத்துக்கொள்வது ஒரு பெரிய பேஷன். சிலர் ஹேண்டில் பாரில் நீள நீளமான குஞ்சங்களை இணைத்துக்கொள்வர். பிரேமிலும் குஞ்சங்கள் தொங்கும். டைனமோ திருட்டு போகாமல் இருக்க அதற்க்கு ஒரு சங்கிலி, டூம் விளக்கிற்கு கிழவர்கள் மப்ளர் அணிவது போல் ஒரு துண்டு துணி, சக்கரத்து போர்க் கம்பிகளில் பாசி மணிகள், அலங்காரமான சைட் பெட்டிகள் , விதவிதமான எக்ஸ்ட்ரா பிட்டிங்குகள் , க்ரோம் ப்ளேட்டிங் செய்த மட் கார்டுகள், என்று சிலர் சைக்கிளை அலங்காரமாக வைத்திருப்பார்கள். எங்களது ஆர்ட்ஸ் கடையில் சைக்கிளில் விதவிதமான படங்களை வரைவதற்காகவே நிறைய வாடிக்கையாளர்கள் வருவதுண்டு. எனக்கும் இந்த பைத்தியம் பிடித்தது. எனது சைக்கிள் சைட் பெட்டியில் விதவிதமான ஓவியங்கள் இடம்பெறும். காமிக்ஸ் பாத்திரங்கள், மண்டை ஓடுகள் என்று பள்ளியிலும், பின்னர் அரிவாள் சுத்தியல் போன்ற புரட்சி வடிவங்களும் கல்லூரி நாட்களிலும் இடம் பெற்றன. மிச்ச இடங்களில் விதவிதமான ஸ்டிக்கர்கள் வேறு.

டிவி இல்லாத அந்த நாட்களில் நகர்ப்புற மக்களுக்கு சினிமா முக்கிய பொழுதுபோக்கு.தியேட்டர்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். அப்போது கோவையில் ஒவ்வொரு தியேட்டரிலும் சைக்கிள் டிக்கட் என்று ஒரு பிரிவு இருக்கும். மிதிவண்டிகளை முதல் நாள் இரவே தியேட்டரில் க்யூவில் நிறுத்திவிடுவார்கள். டிக்கட் கொடுக்கும் நேரத்தில் சைக்கிள்களை வரிசையாக தள்ளிக்கொண்டு செல்வார்கள். ராயல் , ராஜா, சென்ட்ரல், ரெயின்போ போன்ற தியேட்டர்களில் சிவாஜி, எம்ஜியார், ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு கிலோமீட்டர் கணக்கில் இந்த சைக்கிள் வரிசை நீண்டிருக்கும். இப்போது இவை எல்லாம் பழைய கதை.

கோவில் திருவிழாக்களை விட்டால் அப்போது இன்னொரு பொழுதுபோக்கு, வீதிகளில் கொஞ்சம் அகலமான இடம் இருந்தால், ஒரு வாரம் விடாமல் சைக்கிள் விடும் சாகசங்கள்தாம். நான் சின்ன பையனாக இருக்கும்போது இத்தகைய சாகசங்களை வாயை பிளந்து கொண்டு பார்த்திருக்கிறேன். பள்ளியை விட்டு வந்தவுடன் பையை தூக்கி எறிந்து விட்டு ஓடிவிடுவேன். சைக்கிள் வீரர் கால்கள் ஏழு நாட்களுக்கு தரையில் படாது என்பதுதான் சிறப்பு. கையை விட்டுவிட்டு ஓட்டுவார், தலைகீழாக ஓட்டுவார், பானைகளில் நீர் எடுத்து ஓட்டிக்கொண்டே குளிப்பார், உடை மாற்றுவார். எப்போது சிறுநீர் மலம் கழிப்பார் என்பது மட்டும் புரியாத புதிர். மாலை நேரங்களில் சினிமா பாடல்களுக்கு சைக்கிளில் இருந்தபடியே நடனம் ஆடுவார், கூடவே ஒரு கவர்ச்சி கன்னியும், காமெடியனும் இருப்பார்கள். 'ஆடப்பிறந்தவளே ஆடிவா...', 'கண்டவர் கண்ணு படும் செல்லாத்தா,'நான் தென்ன மரத்துல குந்தியிருப்பதை சின்ன பாப்பா' போன்ற சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இவர் எப்போது ஆடுவார் என்று அனைவரும் காத்துக்கொண்டிருப்பார்கள். அப்போதுதான் கலெக்ஷனும் தூள் பறக்கும்.

பள்ளி விட்டு வரும்போது, இதே சாகசங்கள் தொடரும். புரூக் பாண்ட் ரோட்டில் மாணவ மாணவியர் நடந்து சென்று கொண்டிருப்பார்கள். சில ஆசிரியர்களும் மெதுவாக சைக்கிளில் போய்க்கொண்டிருப்பார்கள். அவர்கள் பின்னால் சென்று கண கணவென்று மணியடிப்பதும், ஹேண்டில் பாரில் வயிற்றை ஊன்றி நின்று கொண்டு செல்வதும், தலை வாரிக்கொண்டே சைக்கிள் ஓட்டுவதும் மாணவர்களின் முக்கியமான சாதனைகள். அந்த கால கட்டங்களில், நகராட்சி, மற்றும் பஞ்சாயத்துக்களில் சைக்கிளுக்கு வரி கட்டி ஒரு பாஸை பிரேக்கிலோ அல்லது சீட்டுக்கு அடியிலேயோ இணைத்துக்கொள்ளவேண்டும். அது பெரும்பாலும் ஒரு இரும்புத்தகடு. யாரும் இதை ஒழுங்காக கட்ட மாட்டார்கள். திடீரென்று ஒரு வதந்தி கிளம்பும். 'பெரியாஸ்பத்திரி பக்கத்தில், முனிசிபாலிடிகாரன் பாஸ் புடிக்கிறானாம்' என்று யாராவது கிளப்பி விடுவார்கள், அவ்வளவுதான், சைக்கிள் பார்ட்டிகள் அனைவரும் அந்த இடத்தை தவிர்ப்பதற்காக சந்து பொந்துகளுக்குள் புகுந்து பறப்பார்கள்.

கல்லூரியில் என் சைக்கிள் தொலைந்து போன கதையை நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அப்போது சினிமா சொசைட்டி பைத்தியம் பிடித்து ஆட்டியது. ஸ்ரீபதி தியேட்டரில் அரவிந்தனின் 'தம்பு' பார்த்துவிட்டு அங்கிருந்து நாலைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கணபதி வேலன் தியேட்டருக்கு கே.ஜி.ஜியார்ஜின் ' ஸ்வப்னாடனம்' பார்க்க வெயிலில் சைக்கிள் மிதித்த காலங்கள். தொய்ந்து போன பிலிம் சொசைட்டியை புத்தாக்கம் செய்கிறேன் என்று 'சாருலதா' படம் போட, ஒவ்வொரு உறுப்பினர் வீட்டுக்கும் சைக்கிளில் சென்று அறிவித்த காலம்...சட்டக்கல்லூரியில் படிக்கும் வரை சைக்கிள்தான். பின் ஏனோ அதை ஓட்டுவது ஏதோ அவமானகரமான செயல் போல் கோவை நகரத்தில் நிகழ ஆரம்பித்தது. பெரும்பாலும் அனைவரும் மொபெட் அல்லது ஸ்கூட்டர் வாங்க ஆரம்பித்தனர். ஆனாலும் பிற நகரங்களில் சைக்கிள் நீண்ட நாட்கள் கழித்துதான் அழிய ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். கடலூர், விருத்தாச்சலம் போன்ற நகரங்களில் வக்கீல்கள் கோட்டும் கவுனும் அணிந்து சைக்கிளில் பறப்பார்கள். சென்னையில் கூட சென்ற நூற்றாண்டின் இறுதியில் மூக்கையா, சூசைராஜ் போன்ற பெரும் ஓவியர்கள் சர்வ சாதாரணமாக சைக்கிளில் பயணிப்பதை பார்த்திருக்கிறேன். என்ன கொடுமை என்றால், என் தந்தையுடன் சைக்கிளில் பயணம் செய்திருக்கிறேன், தனியாகவும், டபுள்சிலும். ஆனால் என் குழந்தைகள் நான் சைக்கிள் ஓட்டுவதை கூட கண்டதில்லை . இப்போதெல்லாம் எங்கள் சாலைகளில் சைக்கிள்களை அபூர்வமாகத்தான் காணமுடிகிறது. தினமும் , மன நலம் குன்றிய ஒருவர் தன் பழைய சைக்கிளில் ஏராளமான குப்பைகளை மூட்டையாக கட்டிக்கொண்டு , காற்றில்லாத சக்கரங்களை உருட்டிக்கொண்டு இலக்கில்லாமல் சென்று கொண்டிருப்பதை மட்டும் தவறாமல் பார்க்கிறேன்.