Thursday, November 3, 2011

நூலகங்கள்!


அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற போகிறார்கள் என்ற செய்தி பலரின் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறது. பல கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன!! நூலகம்..எவ்வளவு அழகான வார்த்தை!!!! எனது டியூஷன் மாஸ்டரும், என் தந்தையின் நண்பருமான பஷீர் அவர்கள் என்னை விரல் பிடித்து கோவை மத்திய நூலகத்திற்கு அழைத்து சென்று குழந்தைகள் பகுதியில் அமர வைத்தது இன்றும் நினைவிருக்கிறது. காமிக்ஸ் புத்தகங்களுடன் தொடங்கிய தொடர்பு பின்னர் நான் வளர வளர விரிவடைந்தது. சிதம்பரம் பூங்கா அருகில் இருந்த அந்த நூலகம் பின்னர் ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.. இந்த கட்டிடத்தில் அருங்காட்சியகம் வந்து, பின்னர் குண்டு வெடிப்பு விசாரணை நீதிமன்றமாகவும் மாறி, இப்போது பூட்டி கிடக்கிறது!!!

கிக்கானி பள்ளியில் ஆறாவது வகுப்பில் சேர்ந்தபோது பள்ளியில் என்னை எதுவும் கவரவில்லை, நூலகத்தை தவிர. விளையாட்டுகளில் ஈடுபாடு இல்லாததால் மதிய இடை வேளைகளிலும் கூட நூலகமே கதியாயிற்று. காலையில் எட்டரை மணிக்கே நூலக வாசலில் காத்து கிடப்பேன். எனக்காக நூலகர் நடராஜன் அந்நேரத்திற்க்கே சைக்கிளை மிதித்து கொண்டு வருவார். பள்ளியில் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே படித்து வந்த எனக்கு தமிழின் கதவுகளை பள்ளி நூலகம் திறந்து விட்டது.

பல மாலை நேரங்களில் டவுன்ஹால் மாடியில் இருந்த புராதான நூலகம் எனது வாசஸ்தலமானது. யாராவது படியேறி வந்தாலே..திம் திம் என்று நூலகமே அதிரும்!!!! மேசைகளில் படிப்பது போல பாவனை செய்துகொண்டு தூங்குபவர்கள் திடுக்கென விழித்து எழும் சூழ்நிலைகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. இன்று அங்கு நூலகம் இல்லை. பல இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்ற அந்த நூறாண்டு கடந்த மண்டபம் இன்று நகர்மன்ற கூட்டங்கள் நடக்கும் கூடமாகிவிட்டது.

மணிக்கூண்டை தெரியாத கோவைவாசிகள் இருக்க முடியாது. அங்கும் வெறும் செய்தித் தாள்களுக்கு மட்டுமே ஒரு நூலகம் இருந்தது. ஒரே பேப்பரை பல பாகங்களாக்கி பெருசுகள் படித்துக்கொண்டிருப்பார்கள். இன்று மணிக்கூண்டு இருக்கிறது, அதனுடன் ஒட்டியே கழிப்பறைகளும் இருக்கின்றன. நூலகம் மட்டும் இல்லை!

கோவை அரசினர் கல்லூரியில் சேர்ந்தவுடன் நான் விஜயம் செய்த முதல் இடம்....யூகித்திருப்பீர்கள்....அங்குதான்! அங்கு நூலகத்தினுள் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. நமக்கு வேண்டிய புத்தகத்தை கேட்லாக்கை பார்த்து , தேர்ந்தெடுத்து, நூலகரிடம் சொன்னால் அவர் எடுத்து வைப்பார். 'பில்கிரிம்ஸ் பிராக்ரஸ்' புத்தகத்தை நான் கேட்டவுடன், வெறுப்பாக பார்த்து, இரண்டு நாட்களுக்கு பிறகு கொடுத்தார், 'படிக்கவா, பந்தா பண்ணவா' என்ற கேள்வியுடன். பின்னர் அவரும் எனது நலம் விரும்பியானார் என்பது காலத்தின் கட்டாயம்!

சென்னை மாநிலக்கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் நூலகங்களின் பிரம்மாண்டம் என்னை வசீகரித்தது! அண்ணா சாலை நூலகத்தில், கிரேக்க அரசியல் தத்துவ நூலை தேடி சென்றபோது, பின்னர் இதே வளாகத்தில் எனது நூல் ஒரு நாள் வெளியிடப்படும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டேன். பிரிட்டிஷ் கவுன்சில் நூலகமும் அமெரிக்கன் நூலகமும் பிரம்மிப்பூட்டின. அமெரிக்கன் நூலகம் எனக்கு மிகவும் பிடித்த இடமானது. குளிரூட்டப்பட்ட வளாகம், அதிசயமாய் தெரிந்த வீடியோ கேசட்கள், அதன் குடிநீர் குழாய்களும் கூட மனதை கவர்ந்தன. திரைப்படம், கவிதை சார்ந்த நூல்களை அதிகமாய் படித்தது இங்குதான். சென்னை பல்கலைக்கழக நூலகமும் அண்ணா சாலை நூலகம் போலத்தான் இருந்தது. காதலர்களுக்கான இருட்டு மூலைகள், இடம் மாறிக்கிடக்கும் புத்தகங்கள் , எங்கேயாவது குருட்டாம்போக்கில் தென்படும் பொக்கிஷங்கள் என்று ஒரு மாயத்தன்மை நிறைந்த இடம். கன்னிமாரா நூலகம் அப்படி இருந்ததில்லை. அதுவும் ஒரு அற்புதச்சுரங்கம். அதன் சிறப்பு அதன் வளாகமும். அருங்காட்சியகமும் , மியூசியம் தியேட்டரும் ரசிகனுக்கு கூடுதல் பரிசுகள்!

ஏனோ மாநிலக்கல்லூரி நூலகம் என்னை கவரவில்லை. மாறாக எங்கள் விக்டோரியா விடுதி நூலகம் எனது இரண்டாவது விடுதி அறையாக மாறிப்போனது. பகுதி நேர நூலகராக அங்கு பணி புரிந்த பால்ராஜை, காக்காய் பிடித்து, பல நூல்களை மாதக்கணக்கில் என் அறையில் வைத்து படிக்கும் ஏற்பாடை செய்து கொண்டேன்.! அவற்றில் ஒன்று எஸ்.கிருஷ்ணசாமி எழுதிய 'இந்தியன் பிலிம் '! திருவல்லிக்கேணியில் இன்னொரு நூலகத்தை கண்டு பிடித்தேன். அது 'ஹிந்து' பத்திரிக்கை நிறுவனர் கஸ்தூரி அய்யங்கார் பெயரை கொண்டிருந்தது. பெரும்பாலும் ஹிந்து நிறுவனத்திற்கு வந்த நூல்களை இங்கு பொது மக்களுக்கு பயன் பெரும் வகையில் வைத்திருந்தனர். வழக்கம் போல அந்த நூலகரும் என் நண்பரானார்! அரிய நூல்களை தந்து உதவினார்!

கல்லூரி வாழ்க்கையில் ஏமாற்றம் தந்த நூலகம் கோவை சட்டக்கல்லூரி நூலகம்தான். நாங்கள்தான் கல்லூரிக்கே முதல் செட். ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கியது கல்லூரி. எந்த வசதிகளும் இல்லை. விளையாட்டுகளுக்கு நிதி ஒதுக்க்கப்பட்டு விளையாட்டு சாதனங்கள் எல்லாம் வாங்கப்பட்டன. ஆனால் நூலகம் இல்லை. நூலகம் வேண்டி மனுக்கள் அனுப்பினோம். விசாரணைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வந்தார். பெட்டிஷன் பார்ட்டிகளான நாங்கள் மூவரும் அவர் முன் நின்று வீராவேசத்துடன் இது என்ன சட்டக்கல்லூரியா, உடற்பயிற்சிக் கல்லூரியா ..எங்களுக்கு உடனடித்தேவை நூலகம்தான் தவிர பந்துகளும் மட்டைகளும் அல்ல என்று முழங்கினோம். நீதிபதி உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். 'தம்பிகளா, என் இத்தனை வருஷ சர்வீசில் இப்படி சட்டக்கல்லூரி மாணவர்களை பார்த்தில்லையப்பா, இதோ வருகிறது நூலகம்'! என்று ஆணையிட்டு நூலகமும் வந்தது..! ஆனால் நாங்கள் யாரும் உள்ளே எட்டி பார்க்கவில்லை என்பதுதான் விசேஷம். 'ஒரே பார்வையில் முப்பது
கேள்விகள்' என்ற கைடுகள்தானே தானே எங்களுக்கு ஆபாத்பாந்தவர்கள்! வழக்கம் போல நூலகர்தான் நண்பரானார்....பின்னர் மன உபாதைகளால் வேலை நீக்கமும் செய்யப்பட்டார்!!!

நூலகங்கள் என்றாலே, அங்கு வரும் விதவிதமான மனிதர்கள்தாம் நினைவுக்கு வருவார்கள். நிறைய புத்தகங்களை தங்கள் முன் குவித்து வைத்து கொண்டு குறிப்பெடுக்கும் ஆராய்ச்சி மாணவர்கள், எல்லோரும் தேடும் வாரப்பத்திரிகையை, தான் படிக்கும் பேப்பருக்கு கீழ் ஒளித்து வைத்து பாதுகாக்கும் அற்ப ஜீவிகள், தங்களுக்கு வேண்டிய நூலை, வேறொரு செக்சனில் ஒளித்து வைக்கும் கில்லாடிகள், பனியனுக்குள் புத்தகத்தை வைத்து வெளியே கடத்தும் அறிவுத்தாகம் மிக்கவர்கள்,குறட்டை விட்டு தூங்கும் உல்லாசிகள், பெரும்பாலும் கடுகடுப்பை சுமந்து கொண்டிருக்கும் நூலக சிப்பந்திகள், ரெபரென்ஸ் புத்தகங்களில் முக்கிய தாள்களை கிழித்து திருடி செல்லும் பொதுநலவாதிகள், நூல்களில் தங்கள் கருத்தை எழுதி வைப்பவர்கள், பல சமயங்களில் கெட்ட வார்த்தைகளால் இந்த நூலை படிக்க போகிறவர்களை திட்டி எழுதியிருப்பவர்கள், பெண்களின் கவனத்தை கவர மெகா நூல்களை படிப்பது போல நடிப்பவர்கள்......அது ஒரு தனி உலகம்தான்!!!

யோசித்து பார்க்கும்போது மாணவப் பருவத்துடன் நூலகங்களின் தொடர்புகள் அற்றுப் போய்விட்டன என்ற கசப்பான உண்மை இப்போது சுடுகிறது. உண்மை எப்போதும் சுடுவதுதானே!